Advertisement

சரித்திரம் தனிலே நிற்கின்றார்: எல்.முருகராஜ் -பத்திரிகையாளர்

'ஒருவரின் இறப்பு தான், அவர் வாழ்ந்த வாழ்க்கையை வெளிப்படுத்தும்' என்பர். அவ்வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, ஒரு புதிய சரித்திரத்தையே ஏற்படுத்தி விட்டது.

சென்னை, ராஜாஜி அரங்கத்திற்கு அவரது உடல், காலை, 6:00 மணியளவில் தான் வந்தது. ஆனால், 4:00 மணிக்கெல்லாம், வாட்டும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்; அனைவரது கண்களிலும் கண்ணீர். கண்ணாடி பேழையில் கொண்டு வரப்பட்ட உடல் மீது, ராணுவ வீரர்கள், தேசிய கொடியை போர்த்தி, மரியாதை செலுத்தினர். கண்ணாடி பேழையின் மீதே கொடியை போர்த்தியதும், கீழே இருந்து பார்த்தவர்கள், 'ஜெ., முகம் தெரியவில்லை' என, சத்தமிட்டதும், உடனே கண்ணாடி பேழையின் மூடியை கழற்றி, அவரது உடல் மீது கொடியை போர்த்தினர்; ஜெ., முகம் தெளிவாகவும், தேசியக் கொடி போர்த்தியதால், கம்பீரமாகவும் இருந்தது. விடிவதற்குள் பெண்கள், குழந்தைகள் என, குடும்பம், குடும்பமாக வந்தவர்களின் கூட்டம், பெரிய அளவில் கூடிவிட்டது. ஜெ.,யின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து இருந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் இறுக்கமாக இருந்தனரே தவிர, உருக்கமாக இல்லை; கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.

அவர்களுக்கும் சேர்த்து, பெருங்குரலெடுத்து அழுதவர்கள், பார்வையாளர்களாக வந்த பொதுமக்கள் மற்றும் கட்சியின் சாதாரண தொண்டர்கள் தான். இவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் போல, வெளுத்த வேட்டி, சட்டையுடன் அரங்கிற்கு நேரடியாக வந்தவர்கள் இல்லை. கேள்விப்பட்ட மாத்திரத்தில், வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, தொலை துாரத்தில் இருந்து, வாகன வசதியின்றி, ஓட்டமும், நடையுமாக, அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடியக் கூட நேரமில்லாமல், போலீசிடம் அடி வாங்கி, கூட்டத்தில் சிக்கி, பிதுங்கி, சில வினாடியாவது, 'ஜெ., முகத்தை பார்த்து விட மாட்டோமா...' என, எண்ணி வந்தவர்கள்.அடிக்குரலில், 'அம்மா... எங்கள விட்டு போயிட்டீங்களேம்மா; இனி எங்களுக்கு யார் இருக்காங்க...' என, பெருங்குரலெடுத்த அழுத அழுகையில், அந்த அரங்கமே சோகத்தில் ஆழ்ந்தது.தாலிக்கு தங்கம்; படிக்க கம்ப்யூட்டர்; ஓட்டுவதற்கு சைக்கிள்; உண்பதற்கு குறைந்த விலையில், 'அம்மா' உணவகம் என, லட்சக்கணக்கான தமிழக மக்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும், ஏதோ ஒரு வகையில், அவர் வீற்றிருக்கிறார் என்பதன் அடையாளமே அது.

சில அமைச்சர்கள், படம் எடுத்துக் கொண்டிருந்த, தங்களுக்கு தெரிந்த, புகைப்பட ஊடகத்தினரை போனில் அழைத்து, 'படிக்கட்டுகளில் இருக்கும் நான், சரியாக தெரிகிறேனா...' என, கேட்டனர். 'கூட்டத்தோடு கூட்டமாகத் தான் தெரிகிறீர்...' என்றதும், 'சரி... நான் எதார்த்தமாக போவது போல, மேலே போய், 'மேடத்திடம்' பேசி, ஜெ., உடலருகே சில வினாடிகள் நின்று வருகிறேன்; அதற்குள் படம் எடுத்து விடுங்கள். சக நண்பர்களிடமும் சொல்லுங்கள்' என, சொல்லி, நடத்திய நாடகமும் நடந்தேறியது. ஆனால், அப்படி எந்த நாடகமும் நடத்த தெரியாத, ஜெ.,யின் உண்மை விசுவாசிகள் பலர், திரும்ப கிடைக்காது என்பது தெரிந்தும், தங்கள் செருப்புகளை எங்கேயோ கழற்றி, வீசி விட்டு, 'தெய்வமே!' என, கதறிய படி ஓடி வந்து, கண்ணீர் விட்டு அழுதனர். அவர்கள் இதுவரை எந்த ஊடகத்திலும் வந்ததில்லை; இனி, வரப் போவதும் இல்லை. உணர்வுப்பூர்வமாக வந்தவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக அழுதனர். உண்மையான கண்ணீர் அது! லேசாக மழை பெய்தாலே, அதிக கட்டணம் வாங்கும் ஆட்டோ டிரைவர்கள் பலர், 'கொடுப்பதை கொடுங்கள்' என சொல்லி, ராஜாஜி அரங்கத்திற்குள், வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்களை கொண்டு வந்து சேர்ப்பதும், திரும்ப கொண்டு போய் விடுவதுமாக, தங்களது, ஜெ., அபிமானத்தை வெளிப்படுத்தினர்.

இதே போல, அப்பல்லோ மருத்துவமனை, போயஸ் தோட்டம், பின், ராஜாஜி அரங்கம் என, ஜெ.,யை தொடர்ந்த ஊடகத்தினர் அனைவரது கண்களிலும் காணப்பட்ட சோர்வுக்கு காரணம், துாக்கம் இல்லாததால் ஏற்பட்டதல்ல. மாறாக, 'பிழைத்து விடுவார்' என, எதிர்பார்க்கப்பட்ட துணிச்சலான முதல்வர், இப்படி திடீரென இறந்து விட்டாரே...' என்ற துக்கத்தால் ஏற்பட்டது தான். இருக்கும் போது இருந்த அவரின் மரியாதை, இறந்த பின் இன்னும் கூடியது என்றே சொல்ல வேண்டும். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலவரமான வானிலையை பொருட்படுத்தாது, சரக்கு விமானத்தில், ஒரு ஓரத்தில் சாய்ந்து கூட உட்கார முடியாத ஒரு இருக்கையில் உட்கார்ந்த படி வந்தார். ஜெ.,யின் முகம் தந்த சோகம், அவரை அதற்கு மேல் இருக்க விடாமல் அங்கிருந்து நகர்த்த, ஊடகங்களின் கேமரா கண்களில் சரி வர பதிவாகாமல் சென்று விட்டார். ஆனால், ஆரம்பம் முதலே, மன்னார்குடி கும்பலின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. நேரடி காட்சியில் இருக்கிறோம் என்பதை கூட அறியாமல், அவர்கள் சிரித்த படி இருந்தது அநியாயமாகப்பட்டது. வந்த பிரமுகர்கள் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள, முதல்வர் பன்னீர்செல்வத்தை தேடினர். படிக்கட்டில் ஓரமாக உட்கார்ந்து இருந்தவர், தன்னை நோக்கி வந்தவர்களை, சசிகலாவை பார்க்க செல்லுமாறு, கை காட்டி வழியனுப்பி வைத்தார். சசிகலாவும், வராத கண்ணீரை, 'கர்ச்சீப்'பால் அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தார். அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், இறுதிச் சடங்கின் போது, சந்தனப் பெட்டியில் இருந்த, ஜெ., உடல் மீது தீர்த்தம் தெளித்து விட்டு, தான் அணிந்திருந்த சேலையில் கையை துடைக்காமல், சடங்கு நடத்திய புரோகிதரின் துணியை எட்டிப் பிடித்து, கையை துடைத்துக் கொண்டதைத் தான் பொறுக்க முடியவில்லை.
இ - மெயில்: murugarajdinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

    முருகராஜ் அவர்கள் எப்போதுமே மிகவும் கவனமாக மக்களுக்கு செல்லவேண்டிய விவரங்களையும் ,மற்றும் சமுதாயத்தில் கண்ணுக்கு புலப்படாத முக்கிய விஷயங்களையும் ,கவனம் செல்லாத முக்கிய கிராமங்களிலும் உள்ள சாதனையாளர்களையம் மக்களுக்கு கண்முன் கொண்டு செல்கின்றார் .அவரது பனி மிகவும் பாராட்டத்தக்கது .வாழ்த்துக்கள் .உண்மை நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளது .

  • Manian - Chennai,இந்தியா

    அந்த சின்னம்மா அந்த புரோகிதர் ஒருத்தர்தான் நல்லவருன்னு நெனைசு அவரு துண்டில் தொடையச்சாறு. தீர்த்தம் புன்னியமாக இருக்குமே, கர்சீப்பில் தொடைசா பாவம் வந்திரும், அம்மா கூட செத்துப்போகாணுமோன்னு பயந்தாங்க முருகராஜு. ஒங்க நல்ல மனதிலே அம்மா போன சோகம் இருந்ததாலே இதை பாக்கலை. அவ்ளோதான். விடுங்க சாரு. நாய் வாலுக்கு மட்டை வைச்சு காட முடியுமா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement