Advertisement

அம்மா என்றால் அன்பு: இன்று அன்னை சாரதாதேவி பிறந்த நாள்

எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு தான் மனம் துாய்மை பெறுகிறது,' இது சாரதா தேவியாரின் கருத்து.மனம் துாய்மை வேண்டும் என நினைப்பவர்கள் தவங்களை மேற்கொள்ளத்தான் வேண்டும்; இது தவிர வேறு வழியில்லை.'அகத்துாய்மை வாய்மையால் அமையும்' என்பது திருவள்ளுவர் கருத்து.'நிஷ்காம கர்மம்(கர்ம யோகம்)செய்வதன் மூலம் தான் மனத்துாய்மை பெற முடியும்,' என்று அத்வைத வேதம் கூறுகிறது.

சாரதாதேவியார் குறிப்பிடும் தவம் என்பது, பரந்த பொருளில் வாய்மை போன்ற ஒழுக்கங்கள், ஜபம், தியானம் போன்ற ஆத்மசாதனைகள் அனைத்தை யும் குறிக்கிறது.விவேகம், வைராக்கியம், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது ஆகியவற்றின் துணைகொண்டு நாம் எவ்
வளவு அதிகமாக தெய்வச்சிந்தனையில் ஈடுபட முடியுமோ, அவ்வளவு அதிகமாக ஈடுபட வேண்டும். மனம் தெய்வச்சிந்தனையில் ஒன்றுமளவுக்கு மனமும் அடங்கும்.

மனதை அடக்கும் வழிஒரு நாளைக்கு 20 ஆயிரம் தடவை இறைவன் திருநாமத்தை ஜபம்செய்வதை வைத்து கொண்டால், மனம் அடங்கும் என்று சாரதா தேவியார் கூறியுள்ளார். இதை செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? நம்மில் பெரும்பாலானவர்கள், உண்மையான ஆன்மிகத்தை வெறும் பேச்சுக்குத் தான் வைத்து கொண்டிருக்கிறோமே தவிர, உண்மையில் வைத்து கொள்ளவில்லை.இறைவனின் கிருபை இருந்தால் முடியாதது தான் எது?விதி வழி மதி செல்லும் என்று பொதுவாக சொல்வது வழக்கம். இறைவன் அருளால் விதியையும் வெல்ல முடியும். மதியையும் வெல்ல முடியும்.ஒருவன் இறைவனிடம் சரண் புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற்றப்படுகின்றன. இப்படிப்பட்ட மனிதனின் தலையெழுத்தை விதியே தன் கரங்களால் துடைத்து விடுகிறது என்று சாரதா
தேவியார் கூறியுள்ளார்.மனதில் ஆசைகள் அதிகமாக அதிகமாக மன அமைதி குறையும். மனதில் அமைதி அதிகமாக அதிகமாக ஆசைகள் குறையும்.

தியாகத்தால் மன அமைதி:ஒழுக்கநெறியும் தவமும் உடையவர்கள் மன அமைதியுடன் வாழ்கிறார்கள். தியாகத்தால் மன அமைதி கிடைக்கும் என பகவத் கீதை கூறுகிறது. இறைவன் திருவடியை அடைவதன் மூலமாக தான் மன அமைதியை பெற முடியும் என திருக்குறள் தெரிவிக்கிறது.இதை சாரதாதேவியார், 'உனக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றத்தை பார்க்காதே' என்கிறார். சாரதா தேவி, 1911 மார்ச் 12ம் தேதி காலை மதுரை வந்தார். அப்போதைய நகரசபைத் தலைவர் வீட்டில் தங்கியுள்ளார். தற்போதுஅந்த வீடு மதுரை தெப்பக்குளம் காமராஜர்சாலை 145 எண்ணில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலில் சாரதா தேவியார் தரிசனம் செய்தார். பொற்றாமரைக்குளத்தில் நீராடினார்; அகல் விளக்குகள் ஏற்றி கரைகளில் வைத்துள்ளார்.

இறைவனின் அற்புத லீலைகள்:திருமலை நாயக்கர் மகால், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், அதன் நடுவிலுள்ள மைய மண்டபம் ஆகிய இடங்களுக்கும் அவர்தன்னுடன் வந்தவர்களுடன் சென்று பார்த்து மெய் சிலிர்த்துள்ளார். தெப்பக்குளத்தையும், அதன் மைய மண்டபத்தையும் பார்த்து, ''ஆகா! இறைவன் தான் இங்கு என்னென்ன அற்புத லீலைகள்செய்திருக்கிறான்,'' என பிரமிப்புடன் கூறியுள்ளார்.தற்போது சகோதரி விவேதிதையின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அவருக்கு சாரதாதேவியார் எழுதிய கடிதம் பின் வருமாறு உள்ளது: இந்த பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பான இறைவன், தன் மகிமையை தானே இசைத்து கொண்டிருக்கிறார். ஆரம்பமும், முடிவும் இல்லாததும், தொடர்ந்து எப்போதும் இருப்பது மாகிய அந்தச் சங்கீதத்தையே இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளிலும் நீ கேட்கிறாய். மரங்களும், மலைகளும்,பறவைகளும் அவரது புகழை பாடி கொண்டிருக்கின்றன. இறைவனின் திருநாமமும், லீலைகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அவை எவ்வளவு இனிமை நிறைந்தவையாக இருக்கின்றன, என குறிப்பிட்டுள்ளார்.

உபதேசங்கள்மேகத்தை கலைத்து அடித்து செல்கிறது காற்று. அது போன்று இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வது, மனதை சூழ்ந்திருக்கும் உலகப்பற்றாகிய மேகத்தை ஓட்டி விடுகிறது. இறைவனின் நாமத்தை ஜபம் செய்வதால் நீங்கள் ஆன்மிக உண்மைகள் அனைத்தையும் உணர்ந்து கொள்வீர்கள். மனம் அமைதியாக இல்லாவிட்டாலும் கூட, நீங்கள் ஓர் இடத்தில் அமர்ந்து இறைவன் நாமத்தை பத்து லட்சம் முறை ஜபம் செய்யலாம். ஆனால் இறைவனின் அருள்இல்லாமல் எதுவும் கிடைக்காது. இறைவன் நாமத்தை ஜபம் செய்வதால் மனிதன் துாய்மையானவன் ஆகிறான். ஆதலால் இறைவன் நாமத்தை நினைத்து கொண்டிருங்கள். ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை கைவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் ஜபமும், தியானமும் செய்வதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.மனம் ஒருமுகப்படா விட்டாலும் கூட, இறைவன் நாமத்தை ஜபம் செய்வதை விட்டு விட வேண்டாம். உங்கள் கடமைகளை செய்யுங்கள். இறைவன் நாமத்தை ஜபம் செய்யும் போதே, மனம் தானாகவே ஒருமுகப்படும். காற்று தான் விளக்கின் சுடரை ஆடச் செய்கிறது. அதுபோல நம்மிடம் உள்ள பாவனைகளும் ஆசைகளும் தான் நம் மனதை அமைதியாக்குகின்றன. ஜபம் செய்வது வாழ்க்கை பிரச்னைகளை தீர்ப்பதற்கு சுலபமானதும், மேலானதுமான வழியாகும். ஒரு முறையாவது உண்மையில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

அன்பு பாராட்டுவோம்:இடைவிடாமல் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவன், இறைவன் அருளால் பக்தி பெறுகிறான். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரந்திருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்கள் மீது தன் கருணையை பொழிவான். சாரதா தேவியார் பிறந்த இந்நாளில் அவர் வழி நடப்போம். அன்பு பாராட்டு வோம். வாழ்வில் உயர்வோம்.
சுவாமி கமலாத்மானந்தர்
தலைவர்,
ராமகிருஷ்ண மடம் மதுரை. 0452-268 0224

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

    அன்னையின் - சாரதா தேவியின் பிறந்த நாள் 20 டிசம்பர் அல்ல. 22 டிசம்பர் 1853 ஆகும். தினமலர் ஆசிரியர் மற்றும் எடிட்டோரியல் குழுவினர் கவனிக்க வேண்டுகின்றேன். ஆதாரம் " ஸ்ரீ சாரதா தேவி வாழ்க்கையும் உபதேசங்களும் " - ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தால் வெளியிடப்பட்டது. (வாசகரின் இந்த சந்தேகம் குறி்த்து, மதுரை, ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் விசாரித்தபோது, அன்னை சாரதாதேவியின் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் இன்று, டிசம்பர் 20ம் தேதி ஜெயந்திவிழா, நாடு முழுவதும் கொண்டாடப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது)

  • Vignesh Rajan - chennai,இந்தியா

    ஜெய் ஸ்ரீ சாராதம்மா...வாழ்க வாழ்கவே உன் புகழ் வளர்க வளர்கவே.....என்றும் உன் ஆசிர்வாதம் வேண்டும் உன் தொண்டன்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement