Advertisement

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..!

தமிழக கண்மாய்கள், ஊரணிகள், குளம், குட்டைகள், கிணறுகள் ஆகியன வலுவும், வனப்பும், கம்பீரமும் உடைய அணைகளாகவே உருவாக்கப்பட்டவை. இவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் கடலலைகள் போல் நிறைந்து தண்ணீர் தவிப்பை நீக்கி செழிப்பை தந்து வருகின்றன.
காவிரி நீர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மேல் படியை தொட்டால் காவிரி திருச்சி நகரை சூழும். இந்த ஆண்டு தென்தமிழகத்திற்கு இயற்கை யின் ஒப்பற்ற கொடையாம், வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டது. நீராதாரங்கள் அனைத்தும் வற்றி வறண்டு காணப்படுகிறது. வரும் கோடையையும் ஆறு மாதங்களையும் குடிநீர் தட்டுப்பாடின்றி சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி நெஞ்சத்தை நடுங்க வைக்கிறது. நீரின்றி மரக்கன்றுகள், பழக்கன்றுகள் நட முடியவில்லை. நட்ட மரக்கன்றுகளும் துளிர் விட்டு செழித்து வளருவதை பார்க்க முடியவில்லை. நீர் ஆதாரமில்லாத சிறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் கடும் நஷ்டப்பட்டுள்ளனர்.
மண் வாசனை எங்கே?
'நீரின்றி அமையாது உலகு' என வள்ளுவர் கூறினார். கொட்டும் மழையில் தொப்பை தொப்பையாக நனையவில்லை... அட்டைகள் கடித்து ரத்தம் கால்களில் வடியவில்லை... நடுங்கும் குளிரில் வெட வெட என நடுங்கவில்லை... விறகை எரித்து அனலில் குளிர் காய வழியில்லை... வாடைக்காற்று இதமான குளிர் மழையில், ரசித்து ருசித்து சுடச்சுட டீ சாப்பிடவில்லை... மழையில் நனைந்த சகதி நிறைந்த மண் சாலைகளை காண முடியவில்லை... மழை துளி பூமியில் பட்டதும் மண்ணில் இருந்து கிளம்பும் மண் வாசனையை காணவில்லை என்ற நிலை இந்த முறை ஏற்பட்டுள்ளது. அப்படி மழை பெய்தாலும் நீர் நிலைகளில் தண்ணீர் தேக்க வழியில்லாமல் ஆண்டு தோறும் வீணாகி வருகிறது. இனி வரும் காலங்களிலும் மெத்தனமாக இருந்தால் எதிர்காலத்தில் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காத அவலம் ஏற்படும்.அவசியமான ஒரு காரியம்மக்கள் பிரதிநிதிகள் கோலோச்சும் உள்ளாட்சி அமைப்புகளில் கண்டிப்பாக இயற்கை ஆர்வலர்கள் பத்து சதவிகிதம் பணி புரிய சட்டம் இயற்றப்படவில்லை. கிராமங்கள் கிராமங்களாகவே இருக்க தேவையான மண் சாலைகள், பசும்புல் வெளிகள், நீர் தரும் மரங்கள், மேகத்தை ஈர்க்கும் மரங்கள், மண் வாசம் தரும் நுண்ணுயிர்களை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் மிகவும் அவசியம்.'டெங்கு' என்றால் அலறுகின்றோம்,
'புற்றுநோய்' கண்டு கலங்குகின்றோம்.சுற்றுலாத் தலங்களில் உள்ள கழிப்பறைகள், கல்வி கூடங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீரின்றி அல்லல்படும் அவலம் நிறையவே உள்ளது. இந்த வாரம் பெய்யும், அடுத்த வாரம் பெய்யும் என்று நினைத்தே விவசாயிகள் விவசாய பணிகள் ஆரம்பித்தனர். எனினும் தென் மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் விவசாயிகளை ஏமாற்றி விட்டன. ஏன் இந்த நிலை? பருவ நிலை மாற்றம் என்கிறார்கள். வெப்ப சலனம் என்றும் சொல்கிறார்கள்.
காற்று மிக பெரிய அளவில் மாசடைந்து வருகிறது. ஆம்புலன்ஸ் சப்தமும், தண்ணீர் லாரிகளின் சப்தமும் அதிகம் கேட்கின்றன.முன்பெல்லாம் நெல் ஏற்றிய தேனி மாவட்ட லாரிகள் தஞ்சாவூர் போகும். திராட்சை ஏற்றிய லாரிகள் கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும் விரைந்து கொண்டிருக்கும். செப்டம்பர் மாதத்தில், வத்தலக்குண்டு திருச்சி சாலையில் இரவில் லாரிகளில் ஏற்றி கொண்டு வரும் பேரிக்காய் மணம் காற்றில் கலந்து மக்களை மகிழ்விக்கும். இவை எல்லாம் இப்போது எங்கே? பெரியகுளம், நத்தம், சேலம் பகுதிகளில் உற்பத்தியாகி இந்தியா முழுவதும் மண் வீசிய மாம்பழம் மிகவும் குறைந்து விட்டதை காண்கிறோம்.
எங்கே போனது மழை
திண்டுக்கல், மதுரையில் மலர்கள் உற்பத்தி, ஈரோட்டில் மஞ்சள், கரும்பு, வாழை என விவசாய பயிர்கள் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது. விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாத குத்தகை விவசாயிகள், எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து விளை நிலத்தை நேசிப்பவர்கள், அரசின் சலுகைகள் கிடைக்காவிட்டாலும் உழைப்பை நம்பி வியர்வையை சிந்தும் உழைப்பாளிகள், இவர்கள் இன்று மிகவும் நொந்து போய் உள்ளனர்.
1978 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் முழுவதும் மழை. மதுரையில் இருந்து தொண்டி செல்லும் பஸ்சில் பயணித்தேன். அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக பஸ்சில் பயணித்து வந்த மாணவிகள் சிவகங்கையை தாண்டியவுடன் உற்சாகமாய் சந்தோஷ மாய் ஒருவருக்கொருவர் மகிழ்ந்து சப்தமிட்டு கூறியது இன்றும் என கண் முன்னே நிழலாடி வருகிறது. 'எவ்வளவு தண்ணீர்; கண்மாய், ஊரணி நிரம்பியிருக்கும்,' என பேசி கொண்டனர்.
ஒரு சிறுமி, ''தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கண்மாய்களான ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பி இருக்கும்; நாரை பறக்க முடியாத 48 மடை ராஜசிங்கமங்களம் கண்மாய் நிரம்பி இருக்கும்; ஊரணிகள் நிரம்பி இருக்கும்; ஜாலி... ஜாலி,'' என்று கூறியது என் மனதில் பச்சை மரத்தில் அடித்த ஆணி போல் பதிந்து விட்டது.வைகையில் உயிர் நீத்த பெண் அதற்கு அடுத்த ஆண்டு அதே மாதங்கள் அதே மழை பெய்தது. வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதை வேடிக்கை பார்க்க மக்கள் மேம்பாலத்தில் குவிந்தனர். வெள்ளத்தில் தத்தளித்த ஒரு பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி காப்பாற்றும் போது, சேலை நழுவியதால் வெட்கப்பட்ட அப்பெண் ஹெலிகாப்டரை கயிற்றோடு பலமாக இழுத்து வைகையில் விழ வைத்து, உயிர் துறந்த நிகழ்வும் நடந்தது. அவ்வாண்டு வீசிய கடும் புயல் ஆந்திராவை தாக்கியது. பல ஆயிரம் பேர் பலியானார்கள். மறக்க முடியாத மழை, புயல் நாட்கள் அவை. நவம்பர் என்றால் மழை கொட்டோ கொட்டு என கொட்டி தீர்க்கும். நீர் நிலைகள் நிரம்பும். நிலம் செழிக்கும், வளம் கொழிக்கும். கரை புரண்டுடோடிய காவிரி, வைகையின் சரித்திரம் நீர் இல்லாததால் துவண்டு விட்டதே.
நனைய வேண்டும்
மழையில் நனைய வேண்டும், மழையில் மரக்கன்றுகள் நட வேண்டும். ஊரே பசுமையாக வேண்டும். இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க வேண்டும். இயற்கையை, வனங்களை, வன விலங்குகளை காப்பாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், மண்ணை நேசிப்பவர்களும் நிறைய பேசும் இக்கால கட்டத்தில் வட கிழக்குப்பருவ மழை நம் எண்ணங்களை சாகடித்து விட்டது.
ஆம்... இயற்கை பெரியது;
இயற்கையில் உயிர் உள்ளது. பசுமை நிரந்தரம். ஒரு பழத்தின் விதைகள் நுாறு முதல் ஆயிரம் வரை செடிகளை தரும். சில சோலா மரங்களின் விதைகளால் கோடான கோடி லாபம் மனிதனுக்கும், இயற்கைக்கும் கிடைக்கிறது.'நீரின்றி அமையாது உலகு. எனவே சிறிது காலம் இப்பூமியில் வாழப்போகும் நாம் நீர் பெருக, நிலம் செழிக்க, வனம் கொழிக்க, காற்றையும், சுற்றுச்சூழலையும் துாய்மைக்காக களத்தில் இளங்குவோம். மரங்கள் கோடி நடுவோம். நட்டு கொண்டே இருப்போம். அவற்றை முறையாக பாதுகாப்போம். இயற்கை அன்னை ஒரு போதும் நம்மை கை விட மாட்டாள்.- ஏ.பாக்கியசாமிஇயற்கை ஆர்வலர், கொடைக்கானல்99656 04998.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement