Advertisement

கல்வி, மருத்துவம் மறுப்பதும் மனித உரிமை மீறலே : டிச.10 சர்வ தேச மனித உரிமைகள் தினம்

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களான அனைத்து நாடுகளாலும், 1948 டிச., 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டது. அது முதல் இந்த தினம் சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இச்சட்டத்தின் அடிப்படை தத்துவமே, சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். 68வது மனித உரிமைகள் தினம் கொண்டாடும் இந்நாளில், இந்த நோக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா, என ஆராய வேண்டும்.
நாட்டில் சுகாதாரம் எப்படி
நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம், சுகாதார தரங்களின் அடிப்படையில் அந்த நாட்டை பற்றிய தோற்றம் உலகத்தில் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொத்த வருவாயில் 1.2 சதவீதம் மட்டுமே சுகாதாரத்திற்கு செலவழிக்கப்படும் போது, முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா போன்றவை ஆறு சதவீதம் வரை செலவிடுகின்றன. சுகாதாரத்தில் 188 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 143 வது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நம்மை விட பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இலங்கை, லிபியா கூட நுாறு இடங்களுக்குள் உள்ளன.
சமமான மருத்துவ வசதி
நோயாளிகள் நம்பிச் செல்லும் அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றி இனி பார்ப்போம். இந்திய கல்வி முறையை போல இந்திய மருத்துவ வசதியும் சமமானதாக இல்லை. பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் ஒரு புறம், அரசு மருத்துவமனைகளான ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரி அரசு மருத்துவமனைகள் மறுபுறம் உள்ளன. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் இருக்கிறதா என்றால் சந்தேகம் தான். ஒவ்வொரு ஆண்டும் உள், வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், டாக்டர்கள், நர்ஸ்களின் எண்ணிக்கை அதற்கேற்ப அதிகரிக்கப்படவில்லை.
உடல் உறுப்பு தானத்தில் முதலிடம்
கடந்த வாரம் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறும் உடல் உறுப்புகள் தானத்தில், இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்தது. மேலும் உடல் தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் மதுரையிலிருந்து சென்னைக்கு மூன்று மணி நேரத்தில் சென்றது போன்ற செய்திகள் வெளியாவது உண்டு. இதில் எத்தனை உறுப்புகள், அரசு மருத்துவமனைகளிலுள்ள ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது என்றால் குறைவு தான். அரசு மருத்துவமனைகளில் சென்னை தவிர பிற அரசு மருத்துவமனைகளில் உறுப்புகளை பெறவோ, தேவைப்படுவோருக்கு பொருத்தவோ வசதிகள் இல்லாத நிலையுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் விபத்துக்களில் மூளைச்சாவு அடைந்தோர் பலர் வரும் நிலையில் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் தர விரும்பினால் கூட, அதற்கு தேவையான வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லாத நிலையுள்ளது. ஆனால் சின்னஞ்சிறிய தனியார் மருத்துவமனைகள் கூட, உடல் உறுப்புகளை தானமாக பெற்று பிற தனியார் மருத்துவ மனையில் உள்ள பணக்கார நோயாளிகளுக்கு அவற்றை வழங்குகின்றன. கடந்த எட்டாண்டுகளில், 850க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் அறிந்திருந்தாலும் அதன் பலன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு கிடைக்காத நிலையுள்ளது.
தொடரும் குழந்தைகள் திருட்டு
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடப்படுவதும், டாக்டர்கள் இல்லாததால் அவசர நோயாளிகள் உயிர் இழப்பதும் தொடர் கதையாக உள்ளது. அரசு மருத்துவமனைக்கும் நமக்கும் தொடர்பு இல்லை என நினைக்கக் கூடாது. ஒருவர் வாகன விபத்தில் எதிர்பாராமல் சிக்கியோ அல்லது மாரடைப்பால் நினைவை இழந்தால் அவரை மீட்பவர்களுக்கு அவர் பெரிய அரசியல்வாதி என்றோ, அதிகாரி என்றோ, நீதித்துறையை சேர்ந்தவர் என்றோ, பெரிய பணக்காரர் என்றோ தெரியாது. அவர் உயிரை காக்க அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தான் கொண்டு போவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் நிலை
அரசு கல்வி நிறுவனங்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. மாணவர்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியையும், அதற்கு தேவையான தண்ணீரையும் அரசு வழங்க வேண்டும் என 2014ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 2019ம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறைவேற்றுகிறோம் என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறுகிறது. ஒரு புறம் மெட்ரிக், சி.பி.எஸ்.சி., மற்றும் பன்னாட்டு கல்வி முறை, மறு புறம் சமச்சீர் கல்வி முறை. உலகில் நாகரிகம் வளர்ச்சியடைந்த எந்த நாட்டிலும் அதன் குடிமக்கள் இரண்டு விதமாக கல்வி முறையோ இரண்டு விதமாக மருத்துவ முறைகளோ, மக்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப வழங்கப்படுவது இல்லை.
எவை மனித உரிமை மீறல்
மனித உரிமை மீறல் என்பதன் பொருள் ஒவ்வொரு நாளும் விரிவடைந்து கொண்டே வருகிறது. சட்ட விரோத காவலில் வைக்கப்படுவது, தாக்கப்படுவது, காவலில் கொலை செய்யப்படுவது, சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது மட்டுமின்றி போலீஸ் துறையினர் விடுமுறையின்றி தொடர்ந்து பணி செய்ய வைக்கப்படுவது, அதிகாரம் படைத்தோரின் சட்ட புறம்பான உத்தரவிற்கு பணிய மறுத்தால் பணியிட மாற்றம் செய்யப்படுவது அவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலும் மனித உரிமை மீறல்களே.
அடிப்படை கல்வியும் உரிமையே
உச்சநீதிமன்றம் பல்வேறு உரிமைகளை மனித உரிமைகள் என தீர்ப்பளித்துள்ளது. வனங்களையும் வன விலங்குகளையும் பாதுகாப்பது, பெண்களுக்கு சம உரிமைகள், குழந்தைகள் உழைப்பை சுரண்டுவதை தடுப்பது, குழந்தைகளுக்கான கல்வி அடிப்படை உரிமை, மருத்துவ வசதி பெறும் உரிமை, குழந்தைகள் திருமணத்தை தடுப்பது, நிம்மதியாக துாங்குவதற்கான உரிமை, இலவசமாக சட்ட உதவி பெறுவது, அரசு அதிகாரிகளின் அலட்சியமான கவனக்குறைவான நடவடிக்கைகளுக்கு எதிராக இழப்பீடு பெறுவது, விரைவான வழக்கு விசாரணை, ஜாதிய பாகுபாடுக்கு எதிராக சமத்துவமாக நடத்தப்படுவதற்கான உரிமை, ஜாதி மறுப்பு திருமணம் ஆகியவை மனித உரிமைகளில் அடங்கும்.
அரசின் தொண்டல்ல; கடமை
மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கும் நாடுகள் மட்டுமே சர்வதேச நாடுகளால் மரியாதையுடன் பார்க்கப்படுவது. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றை நிறைவு செய்வது அரசின் தொண்டல்ல; கடமை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மனித உரிமைகளை பாதுகாக்க மாநில, தேசிய மனித உரிமை கமிஷன்கள் செயல்படுகின்றன. கொத்தடிமை முறை, குழந்தை திருமணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறைவாசிகளின் உரிமைகள் போன்ற உரிமைகளை காக்க யார் வேண்டுமானாலும் கமிஷனில் மனு கொடுக்கலாம். மனித மீறல் நிகழ்ந்து ஓராண்டுக்கு பின் புகார் கொடுத்தாலோ அல்லது நீதிமன்றத்தின் முன்பு விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக புகார் கொடுத்தாலோ அது கமிஷனால் விசாரணைக்கு ஏற்கப்படாது. நாமும் மற்றவர்களின் மனித உரிமைகளை மீறாமல் செயல்படுவோம் என உறுதி ஏற்போம்.
முனைவர் ஆர்.அழகுமணிவழக்கறிஞர், மதுரை98421 77806

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement