Advertisement

'பாதஜோதிட'ரான 'ஹலோ' கந்தசாமி

'கண்டிப்பாக ஒரு பயலுக்கும் கடன் கிடையாது. இப்படிக்கு ஹலோ' என்ற வாசகம் தாங்கிய பெயர் பலகையுடன் டீக்கடை நடத்துபவராக இயக்குனர் சசியின் 'பூ' படத்தில் அறிமுகமானவர். இதனாலேயே பெயருக்கு பின் 'ஹலோ' ஒட்டிக் கொண்டது.
'மைனா'வில் ரியல் எஸ்டேட் புரோக்கர், 'வாகைசூடா'வில் சாராயம் காய்ச்சுபவர், 'சாட்டை'யில் 'செவிட்டு' வாத்தியார், 'நிமிர்ந்து நில்'லில் லஞ்சம் வாங்கும் கூட்டம் சட்டத்திலிருந்து
தப்பிக்க சங்கம் துவங்கும் 'கூலிங் கிளாஸ்', 'பாபநாச'த்தில் சினிமா தியேட்டர் 'ஆப்பரேட்டர்', 'ரஜினி முருக'னில் 'பாதஜோதிடர்' என நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் 36 படங்களை கடந்துள்ளார் ராமநாதபுரம் பெருநாழிக்காரரான 'ஹலோ' கந்தசாமி.
* நடிப்பில் ஆர்வம் வந்தது எப்படி?
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம், த.மு.எ.க.ச., மூலம் கலைப்பயணம் துவங்கியது. நாடகங்களில் நடித்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 'ஆப்பரேட்டராக' பணிபுரிந்தேன். நடிப்பிற்கு இடையூறு ஏற்படக்கூடாது என முடிவு செய்து, அந்த அரசுப் பணியை ராஜினாமா செய்தேன்.
* சினிமா வாய்ப்பு கிடைத்தது பற்றி...,
முருகபூபதியின் 'கூத்துப்பட்டறை'யில் நடித்துக்கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் செல்வம் என்பவர் மூலம் இயக்குனர் சசியின் அறிமுகம், 'பூ' பட வாய்ப்பு
கிடைத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. சூரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிந்தவாறே, விடுப்பில் சென்று படங்களில் நடித்தேன். தற்போது அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நடிகனாகிவிட்டேன்.
* சினிமாவை முழு நேர தொழிலாக நம்பி வாழ்வது சாத்தியப்படுமா?
சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சக்கணக்கானோர், கம்பெனிகளில் ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதால், கலைக்காக அர்ப்பணிக்க வேண்டும்; தொடர்ந்து நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும்; நடிகனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்பதை தவிர வேறு லட்சியம் எதுவும் இல்லை. 'ஆட்டைத் துாக்கி குட்டியில் போடுவது; குட்டியைத் துாக்கி ஆட்டில் போடுவது' என்ற பழமொழிக்கேற்ப தன்னம்பிக்கையுடன் எனது பொருளாதாரத்தை சமப்படுத்துகிறேன்.
* உங்கள் நடிப்பில் அதிக வரவேற்பை பெற்ற நகைச்சுவை?
'ரஜினி முருக'னில் பாதஜோதிடர் வேடம்தான். கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரிக்கு கால்களில் 'பாதஜோதிடம்' பார்த்து, '60 நாளில் ஆடிக் காரில் போவீர்கள். 61வது நாளில் உங்கள் வளர்ச்சியை ஊரே வேடிக்கை பார்க்கும்,' என நான் பேசும் வசனத்தை 'யூ டியூப்'பில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம், அக்காட்சியை மக்கள்
நினைவுபடுத்தி மகிழ்கின்றனர்.
* தற்போது கைவசம் உள்ள படங்கள்?
எட்டுப் படங்கள் வெளிவர உள்ளன. விதார்த் கதாநாயகனாக நடித்த 'கிடாயின் கருணை மனு' படத்தில் 'டைட்டில் சாங்'காக நாட்டுப்புற பாடல் பாடியுள்ளேன். அப்படத்தை சர்வதேச
திரைப்பட விழாவிற்கு அனுப்பியுள்ளனர்.
* சினிமாவைத் தாண்டி எதிர்கால திட்டம்?
நான் ஒரு மரபுக் கலைஞன். பள்ளி, கல்லுாரிகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளேன். நாட்டுப்புறக் கலை மற்றும் நடிப்புப் பயிற்சி மையத்தை அருப்புக்கோட்டையில் அமைத்து, கலைகளை பரப்ப திட்டமிட்டுள்ளேன் என்றார்.
-இவரிடம் 'ஹலோ' சொல்ல 90439- 43940.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement