Advertisement

அனைவரையும் நேசிப்போம்!

பல மதங்கள் உள்ள நாட்டில் எல்லோரும் இணைந்து வாழ்வது முக்கியம் என்பதை எல்லோரும் விரும்புகிறோம். ஒரு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க குத்துவிளக்கேற்றிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இப்படி சொன்னார்...

''இந்துக்களின் புனிதச்சின்னமான குத்துவிளக்கை, கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமான மெழுகுவர்த்தி கொண்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நான் ஏற்றுவதன் மூலம் தேச ஒற்றுமை நிலை நிறுத்தப்படுகிறது அல்லவா!''. உண்மைதான் அதுதான் தேவை.
ஒரு புதுக்கவிதை இப்படி சொல்கிறது

அப்துல்காதர்
உற்பத்தி செய்யும்
ஊதுபத்திகளை
அந்தோணி பெற்று
வியாபாரம் செய்ய
அருணாசலம் வாங்கி
வீட்டில் ஏற்றும்போது
தேசிய மணம் கமழ்ந்தது!

எல்லோருடைய நல்லெண்ணங்களும் இணைந்து செயல்படும்போதுதான் ஒருமைப்பாடு உருவாகும். எல்லா மதங்களிலும் பொதுப்படையான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன என்பதும், ஏறக்குறைய அவை எல்லாம் ஒரே மாதிரி இருப்பதும் ஆச்சரியம். உதாரணமாக ஒரு சிந்தனையை வரிசைப்படுத்தலாம். யூதர்களின் தோரா மதத்தின் சாராம்சத்தை அறிய ஒரு பக்தர் விரும்பினார். ஒரு ஞானியிடம் கேட்டார், 'உனக்கு எது வெறுப்பானதோ அதை உன் சக மனிதருக்கு செய்யாதே'. யூத மதத்தின் சாரம் மட்டுமல்ல எல்லா மதங்களும் அதை வலியுறுத்துகின்றன.

மதங்கள் சொல்பவை : தாவோயிஸத்தின் ஷாங்கான் இங்பியன் கூறுகிறது 'உன் அண்டை வீட்டானின் லாபத்தை உன் லாபமாக நினை. அவனது நஷ்டத்தை உன் நஷ்டமாக நினை'.
கன்பூஷிய மத நுாலான அனபெட்ஸ் கூறுகிறது, 'பிறர் உனக்கு செய்யக்கூடாது என்று நினைப்பவற்றை நீ பிறருக்கு செய்யாதே'. மகாபாரதம் கூறுகிறது 'பிறர் உனக்கு எதைச்செய்தால் வேதனை என்று நினைக்கிறாயோ அதை நீ பிறருக்கு செய்யாதே'.
புத்தமதம் கூறுகிறது 'எது உன்னை புண்படுத்தும் என்று நினைக்கிறாயோ அதை பிறருக்கு செய்யாதே'
கிறிஸ்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டில் கூறுப்படுவது, 'மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் பிறருக்கு செய்யுங்கள்'
இஸ்லாத்தில் ஹதீஸின் மூலமாக நபிகள் நாயகம் கூறுகிறார், 'உங்களில் எவரும் தாம் விரும்புவதை, தமது சகோதரனுக்கும் கொடுக்காதவரை, அவர் இறை நம்பிக்கையாளர் ஆக மாட்டார்'.

திருவள்ளுவர் கூறுகிறார்

'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறர்கண் செயல்'
தீமை என்று தான் உணர்ந்தவற்றை பிறருக்கும் செய்யாமல் இருப்பதே சிறப்பு.

மன்னிப்பு : இன்னொரு கருத்து 'மன்னிப்பு'. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர் கூறுகிறார், 'பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்'. 'மன்னியுங்கள். மன்னிக்கப்படுவீர்கள்' என்று விவிலியம் கூறுகிறது. எத்தனை முறை மன்னிக்கலாம் என்ற கேள்விக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை என்று வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் ஒருமுறை தாயிப் நகரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரிகளில் சிலர் 'இறைவன் உம்மை நபியாக அனுப்பியதாக கூறுகிறீரே.உம்மை தவிர அவருக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா' என கேலி பேசினர்.
நபிகள் நாயகமோ அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினார். ஆத்திரம் அடைந்த எதிரிகள் அவர் மீது கல் எறிந்தனர். அதையும் அவர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் ரத்தம்
வெளியேறி சோர்வடைந்தார். நபிகளின் நண்பரான 'ஸைத்' அவரை அங்கிருந்து வேறிடத்திற்கு அழைத்துச்சென்றார்.
'உங்களை கல்லால் அடித்தவர்களை சபியுங்கள். அவர்களை தண்டிக்க இறைவனை வேண்டுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.
'ஸைத்! அப்படி பேசாதீர்கள். யாரையும் சபிக்கவோ, தண்டிக்கவோ நான் இந்த உலகத்திற்கு வரவில்லை. அறியாமையால் இத்தவறை செய்கிறார்கள். திருந்துவார்கள்' என்றுக்கூறி அவர் இறைவனிடம் கையேந்தி 'அறியாமையால் தவறு செய்யும் இவர்களை மன்னியும்' என்று வேண்டினார்.

பெரியபுராணத்தில் : சைவ சமயத்தில் பெரியபுராணம் என்ற நுாலில் 63 சிவனடியார்களின் வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சிவனடியார், பகைவனை மன்னித்த வரலாறு வருகிறது. ஒரு மன்னர் சிவபக்தராக இருந்தார். திருநீறு பூசிய சிவனடியார்களை எல்லாம் சிவனாக நினைத்து வணங்கி வழிபடுவார். மக்கள் அவரை 'மெய்ப்பொருள் நாயனார்' என்றனர். பக்கத்து நாட்டை ஆண்ட முத்துநாதன் என்ற அரசன் மெய்ப்பொருள் நாயனாரை போரில் வென்று அவரது நாட்டை கைப்பற்ற விரும்பினான். பலமுறை போர் நடந்தது. முத்துநாதன் தோற்றுக்கொண்டே இருந்தான். அவனது படைபலம் குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். ஏதாவது சூழ்ச்சி செய்தால் தான் அவரை வெல்ல முடியும் என்று திட்டம் போட்டான். மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தியையே தனக்கு சாதகமாக்கி கொண்டான். உடலில் திருநீறு பூசி சிவனடியார் வேடம் தரித்து, கையில் ஒரு புத்தக ஏட்டை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கத்தியை மறைத்து எடுத்துச்சென்றான்.
அரண்மனையை நெருங்கிய முத்துநாதன், அரசனை சந்தித்து 'சைவ சமய நுால் கருத்தை தனியாக ஓத வேண்டும்' என்று கூறி, அழைத்துச் சென்று கத்தியால் குத்தி சாய்த்தான். அச்சமயத்தில் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் ஓடி வந்தான். தனது வாளால் முத்துநாதனை வெட்ட முயன்றான். மெய்ப்பொருள் நாயனார் தடுத்து 'தத்தா! இவர் நம்மவர். சிவனடியார்.
இவருக்கு யாராலும் ஆபத்து வந்துவிடாமல் பாதுகாப்பாக அழைத்துச்சென்று அவரது நாட்டின் எல்லையில் விட்டு வா' என உத்தரவிட்டார்.

புத்தர் காலத்தில் : புத்தர் வாழ்ந்த காலத்தில் அவரை பிடிக்காத ஒருவர் அவரை கடுமையான மொழிகளால் திட்டினார். கூடியிருந்த சீடர்கள் கோபமுற்றனர். ஆனால் புத்தர் அமைதியாக நின்றார். அப்போது ஒரு சீடர் மலர்களை கொண்டு வந்து கொடுத்தார். புத்தர் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். பிறகு கூறினார்,

'இந்த சீடன் கொடுத்த மலர்களை நான் பெற்றுக்கொண்டேன். இப்போது அது என்னுடையதாகிறது. ஆனால் யாரோ என்னை திட்டியதாக சொன்னார்களே. அதனை நான் வாங்கிக்கொள்ளவில்லை. அதனால் அது எனக்குரியது அல்ல' என்றார்.
அவர் பக்குவத்தை கண்டு அவரை பழித்து பேசியவர் 'மன்னியுங்கள்' என்று மண்டியிட்டார். அந்த மகான் மன்னிக்காமல் இருப்பாரா?

காந்தியின் பரிசு : எரவாடா சிறையில் அடைக்க காந்திஜியை அழைத்து வந்தபோது, 'ஸ்மட்ஸ்' என்ற சிறை அதிகாரி, தனது கோபத்தின் உச்சமாக அவரது அடி வயற்றில் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தான். அதை சகித்துக்கொண்டே சிறை அறைக்கு காந்திஜி சென்றார். தண்டனை காலத்தில் நுால் நுாற்றார். செருப்புகளை செய்து, சக கைதிகளுக்கு கொடுத்தார்.
விடுதலை நாளன்று ஒரு ஜோடி செருப்பை சிறை அதிகாரி ஸ்மட்ஸிற்கு பரிசாக அளித்தார் காந்தி. 'பூட்சை கழட்டி விட்டு செருப்பு போட்டு அளவு சரியாக இருக்கிறதா என பாருங்கள்' என்றார். 'எனது கால் அளவு உங்களுக்கு எப்படி தெரியும்' என்று கேட்டார்.
'ஒருமுறை என் அடி வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்தீர்கள். அதன் அடிப்பாகத்தின் தடம் அடிவயிற்றில் பதித்திருந்தது. வேட்டி நுாலால் அளவெடுத்து வைத்திருந்தேன். அந்த அளவில்தான் செய்தேன்' என்றார். அந்த அதிகாரி கண் கலங்கினார். ஒரு மகாத்மாவை சந்தித்தார்.

மதங்களும் மகான்களும்
மக்களுக்கு வழிகாட்டும்போது
மதவெறியர்கள்தான்
மாண்புகளை குலைக்கிறார்கள்
தீவிரவாதத்தின் வேகத்தில்
திணறுகிறது மனிதநேயம்
வெடிப்பவரும் மடிபவரும் யாராயினும் வீழும்
ரத்தம் சிவப்புத்தானே!
செல்லும் வழி எதுவாயினும்
சேருமிடம் ஒன்றுதானே
சொல்லும் மொழி எதுவாயினும்
சுடரும் தெய்வம் ஒன்றுதானே
என்கிறது ஒரு கவிதை
ஆண்டவனை அடையும் வழி, அனைவரையும் நேசிப்பதுதான்!
- முனைவர் இளசை சுந்தரம்
பேச்சாளர், மதுரை
98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement