Advertisement

மனம் திறந்து ஊக்குவிப்போம்...: டிச. 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

இறைவன் தந்த இனிய வரம் இந்த அழகிய வாழ்க்கை. சில நேரங்களில் சில காரணங்களால் சிலர் மாற்றுத் திறனாளிகளாய் பிறந்துவிடுகின்றனர் அல்லது சில விபத்துகள் அப்படி ஆக்கிவிடுகின்றன. பூச்சியாய் பிறந்தாலும் தளராது பறக்கிறது தட்டானெனும் தன்னிகரற்ற உயிர். தட்டானே எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி சுதந்தர வானில் சுற்றித் திரியும்போது நாமேன் கவலைப் படவேண்டும்? உலகமே போற்றிப்புகழும் ஆற்றல் பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஏன் வருந்தவேண்டும்?

கசந்த வாழ்க்கை அல்ல:கசந்த வாழ்க்கையை வசந்த வாழ்க்கையாய் மாற்றும், மூன்றாம் கையான நம்பிக்கையை மறந்துவிட்டு, அவர்கள் ஏன் வருத்தத்தின் வாசலை தன் நிறுத்தத்தின் வாசலாய் எண்ணிக்கொண்டு துயர்படவேண்டும்? புழுவுக்கு ஆசைப்பட்டு துாண்டில் கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிற மீன்களாய் ஏன் மாறவேண்டும்? மறுப்பேதும் சொல்லாமல், வெறுப்பேதும் கொள்ளவேண்டாம். நம்மையே நாம் நொந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? புறக்கணிப்புகள்கூடப் புரிதல்களோடே செய்யப்படுகின்றன. இருக்கிற இனிய வாழ்வுப்பொழுதுகளில் வெறுக்கிற சொற்களை வேகமாய் வீசுகிற மனிதர்கள் குறித்துக் கவலைவேண்டாம்.

தடையாளக் கற்றுக்கொள்ளுங்கள் :மாற்றுத்திறனாளிகளின் அடையாளம், தடையாளும் அடையாளம். கூர்மையான அலகுகளால் அழகாகக் கொத்துகிற குட்டிக்குருவிகள் கூடத் தங்கள் பசியகற்றும் தானியங்களை நோக்கி, தானே பறக்கும்போது நாம் ஏன் சோகமாய் இருக்கவேண்டும்? எல்லாத் தடைகளையும் வலியோடும் வலிமையோடும் எதிர்கொண்டு முயற்சித்தேரை வடம்பிடித்து இழுப்பவர்களே சாதனை வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். கவலைப்படும்போது நாம் கரையானுக்கு இரையாகிற மரக்கட்டைகளைப் போல் மாறிப்போகிறோம். நம்மையே நாம் நொந்துகொள்ளும்போது, கைதவறிய மூடையிலிருந்து சிதறிப்போகிற சிறுஉருண்டைகள் மாதிரி உதறிப்போகிறது இந்த வாழ்க்கை.

சாதனை மலர்கள் :காத்திருக்கிற சமுதாயத்தின் முன், பூத்திருக்கிற சாதனை மலர்கள் மாற்றுத்திறனாளிகள். சில சாதனைகளால் அவர்கள் வியக்க வைக்கிறார்கள்; சில நேரங்களில் உற்சாகத்தால் அவர்கள் நம்மை இயக்கவைக்கிறார்கள்.நமக்குள் ஏன் இந்தத் தயக்கம்? கொட்டிச் சிதறும் அருவி நீர் குளத்து நீராய் எப்படிக் கட்டிக்கிடக்கச் சம்மதிக்கும்? எப்போதும் பயணப்படுகிறவர்களின் பாதங்களே பக்குவமாயிருக்கும். சென்று கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் நின்றுபோனால் காலம் நம்மைத் தின்றுபோகும். வாளோடு வாழ்வதில்லை வாழ்க்கை; வலிமையோடு வாழ்வதே வாழ்க்கை. உள்ளுக்குள் கொடுக்கோடு நம்மால் எப்படி உற்சாகமாய் இருக்கமுடியும்?
அலைகளோடு அலைகிற மீன்கள் மாதிரிக் கலைகளோடு அலையலாம். பேனா விற்கலாம். நாற்காலிகள், கட்டில்கள் பின்னலாம். ஊதுபத்தி விற்கலாம். மற்றவர்களை ஏமாற்றாமல் நம் திறன் காட்டி உழைத்துப் பிழைக்கும் எந்த உழைப்பும் கேவலமில்லை. ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிபெற்று, மாவட்ட ஆட்சித்தலைவராக மாவட்டத்தையே வழிநடத்தலாம். இரண்டு சூரியன்களை இமைக்குள்ளே இருத்திக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் ஏன் சொல்லவேண்டும்?

ரசித்துச் செய்யுங்கள் :நம் விருப்பம் நம் வாழ்வில் திருப்பம் தரலாம். எனவே செய்கிற எந்த வேலையையும் ரசித்துச் செய்யுங்கள். அந்த வினாடியில் வசித்துச் செய்யுங்கள். நம்மால் எப்படி இதைச் செய்யமுடியும்? என அஞ்சவேண்டாம். பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள். எல்லோருக்குள்ளும் ஏதேதோ ஏமாற்றங்கள் ஆனாலும் மென்று முழுங்கிவிட்டு மெல்லநகர்கிறோம் எல்லோரும். எனவே எதையும் எடுத்துக்கொள்வதில்தான் எல்லாமிருக்கிறது.உலகஅளவில் 20 விழுக்காடு மக்கள் மாற்றுத்திறனாளிகளாய் உள்ளனர். இந்தியாவில் 7 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் சகமனிதர்களிடம் எதிர்பார்ப்பது பொன்னோ பொருளோ அன்று; அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே. அவர்களின் திறன்களை வெளிக்கொணர சிறப்புக்கல்வி தரும் கல்விநிறுவனங்கள் உருவாதல் அவசியம். அறியாமை இருளகற்றி அறிவொளி வீசவைக்கும் வல்லமை கல்விக்கு மட்டுமே உண்டு.விழித்திறன் குறைந்தோர், செவித்திறன் இழந்தோர், வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சிக் குன்றியோர், மூளை நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் ஆட்டிசம் எனும் புறஉலகச்சிந்தனைக்குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்கான தனித்தனியே கல்விமுறைகளும் தனித்தனிக் கல்விநிறுவனங்களும் நம் மாநிலத்தில் உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான பயிற்சியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு தேசிய நிறுவனம், சென்னை முட்டுக்காடு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் 15 ஏக்கரில் செயல்பட்டுவருகிறது. இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரிப்பள்ளி செயல்படுகிறது.

எதிர்நோக்கும் சவால்கள்ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 தேதியை உலக மாற்றுத்திறனாளிகள் தினமாய் கொண்டாடினாலும், இன்னும் அவர்களுக்கான சிரமங்களைச் சமூகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வருத்தம் தரும் உண்மைதான்.பஸ் நிலையங்களில், அவர்களுக்கான சிறப்பறைகள் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டாலும், உயரமான படிக்கட்டுகளை உடைய பேருந்துகளில் அவர்களால் ஏறமுடியாத அவலநிலைதான் இன்னும் உள்ளது.ஆட்டிசம் எனும் புறஉலகச்சிந்தனைக்குறைவு உள்ள நிலையில் இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி தரும் சிறப்பாசிரியர்களைக் கொண்ட சிறப்புப்பள்ளிகள் இன்னும் அதிகமாய் உருவாக்கப்படவேண்டும்.

பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங்லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஸ்டீபன் ஹோக்கிங், 21 வது வயதில் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, கைகால்கள் செயல்இழந்து பேசும்திறனையும் இழந்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கணினியின் உதவியோடு தான் சொல்வதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் திறனை வளர்த்துக்கொண்டார். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர் ஆய்வுகளைக் கைவிடவில்லை. அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு என்ற துறைகளில் இவர் ஆய்வுசெய்து சொல்லியுள்ள ஆய்வுமுடிவுகள் விஞ்ஞானிகளால் முக்கியமானதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகின் ஆய்வறிஞராக அவர் மாறிப்போனார். அவர் எழுதிய 'நேரத்தின் சுருக்க வரலாறு' எனும் நுால் உலகப்புகழ் பெற்றது. அவர் எந்தநிமிடத்திலும் தன் குறைகுறித்து வருந்தியதோ, தன்னை நொந்துகொண்டதோ இல்லை.
உடல் குறையை வென்ற பேராசிரியர், உலகின் அறிஞர்கள் மனதையும் தன் ஈடுஇணையற்ற உழைப்பால் வென்றார். இப்படி ஊனத்தை வென்ற சாதனையாளர்கள் பலர்.

எதுவும் சாத்தியம் :நண்பர்களே நாம் நினைத்தால் எதுவும் சாத்தியம்தான். உடல் தடைகள் நம் உறுதியை உருக்குலைத்துவிடமுடியாது. உள்ளத்தில் ஒளி உண்டானால் நாம் பேசும் சொற்களிலும் ஒளி உண்டாகும். ஒருமுறை மட்டுமே வாழக்கிடைக்கிற இந்த அரிய வாய்ப்பை, நாம் கவலைகளின் கலவைகளால் ஏன் இட்டு நிரப்பவேண்டும். மாற்றுத்திறனாளிகளே! போற்றிப் புகழ்கிறோம், உங்கள் உயர்திறன்களை! சாதனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது; வாருங்கள் தொடங்கலாம்!
-முனைவர் சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி.
99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement