Advertisement

சொந்தமாக ஒரு சொர்க்கம்

சொர்க்கமென்று ஒன்று இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நாம் வாழ்கிற இடத்தையும் வாழ்க்கையையும் சொர்க்கமாக்கிக் கொள்ளலாம். பிறக்கிறபோதே இறைவன் நமக்கு ஒரு சொர்க்கத்தை உறுதிப்படுத்தித் தான் நம்மை இந்த மண்ணுக்கு அனுப்புகிறான்.சொந்தமாக ஒரு சொர்க்கம் செய்ய முடியுமா? என்பதற்கு முடியும் என்று ஒரு பதிலை ராமாயணக் காட்சியொன்று நமக்கு உணர்த்தும். திரிஅருணி என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு சத்தியவிரதன் என்ற ஒரு மகன். கொஞ்சம் துடுக்கு போலிருக்கிறது. வசிஷ்டரின் கோபத்துக்கு ஆளாகவே, தந்தை அவனை காட்டுக்கு அனுப்பிவிடுகிறார். காட்டில் வாழ்கிறபோது அவன் தந்தை மீது சினம் கொண்டிருந்தது, பசுவைக் கொன்றது, பசுக்கறி உண்டது என்று மூன்று பாவங்களைச் செய்ததால் அவனுக்கு திரிசங்கு என்று பெயராயிற்று.திரிசங்கு பாவங்கள் புரிந்தபோதும், பரிவோடு சில நன்மைகளை விசுவாமித்திரரின் மனைவிக்குச் செய்ததால், அவனுக்குச் சொர்க்கம் தர விரும்புகிறார் விசுவாமித்திரர். அவனை அவர் சொர்க்கத்துக்கு அனுப்பியபோது இந்திரன் அவனுக்கு சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கிறான். “இந்திரன் உனக்கு சொர்க்கம் தராமற் போனாலென்ன, நான் உனக்குத் தனியாக ஒரு சொர்க்கம் அமைத்துத் தருகிறேன்” என்று விசுவாமித்திரர் செய்து தந்த சொந்த சொர்க்கம்தான் திரிசங்கு சொர்க்கம்.
மனிதனும், விலங்கும் : விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன. ஆனால் அவை ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதில்லை. நினைத்தது போல இருந்துவிட்டுப் போகும் அவற்றிற்கு உறவுகள் கிடையாது. உரிமைகள் கிடையாது. ஆனால் மனிதர்கள் அவ்வாறல்லர். மனிதர்கள் சேர்ந்து மட்டுமல்ல ஒருவரையொருவர் சார்ந்தும் வாழ்கிறவர்கள். வாழ வேண்டியவர்கள். மனிதர்களுக்குள் உறவுகள் உண்டு, ஒவ்வொருவருக்குமான உரிமைகள் உண்டு. விலங்குகள் இருந்துவிட்டுப் போகும். மனிதர்கள் அவ்வாறல்லர். மனிதர்கள் வாழ்ந்துவிட்டு போகவேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் விடைபெற வேண்டும். முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள், வீடுகளுக்குச் செல்லும்போது 'இவள் என் மனைவி, இவன் என் மகன், இவர் என் தந்தை' என்றெல்லாம் உறவுகளை அறிமுகம் செய்து வைப்பார்கள். இப்போதெல்லாம் 'இது நாங்கள் புதிதாக வாங்கிய எல்.சி.டி. டி.வி., இது ஹோம்தியேட்டர்' என்று உடமைகளை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். முன்பு வாழ்க்கை வசதியாக இருந்தது. இப்போது வசதிகளே வாழ்க்கையாகத் தெரிகிறது. ஏனெனில் நாம் வசதிகளைத்தான் வேண்டுகிறோம் வாழ்க்கையை அல்ல.
வீடும், இல்லமும் : நம்மால் வீட்டைத்தான் கட்ட முடியும். ஆனால் இல்லத்தையும் இல்லறத்தையும் அனுபவிக்க மட்டுமே முடியும். வீட்டைக் கட்டிவிட்டு அதை இல்லமாக்க முடியாதோர் நம்மில் ஏராளம். சார்ந்து வாழ்தல் என்பது மிகப்பெரிதாக நம் வாழ்வில் மூன்று நிலைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது. முதலில் இல்லத்தில் நாம் உறவுகளைச் சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக நாம் பணியாற்றும் அலுவலகம், செய்யும் தொழில் தொடர்பானவர்களைச் சார்ந்து இயங்க வேண்டியிருக்கிறது. மூன்றாவதாக நாம் வாழ்கிற சமூகம் சார்ந்து மக்களோடு இயைந்து போக வேண்டியிருக்கிறது. இம்மூன்று நிலைகளிலும் நம்மோடு இருக்கிறவர்களோடு, வாழ்கிற கலையைக் கற்றுக்கொண்டாலேயே வாழ்க்கை நமக்கு வசப்பட்டுவிடும்.
விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை : குடும்பத்தைப் பொறுத்தவரை நாம் வாழும் இல்லம் சொர்க்கமாவதற்கு விட்டுக்கொடுத்து வாழ்கிற வாழ்க்கைதான் முக்கியமானது. அவரென்ன சொல்வது; நானென்ன கேட்பது என்கிற நஞ்சு நெஞ்சம் நம்மை நரகத்தில் ஆழ்த்திவிடும். விட்டுக்கொடுத்து வாழ்வதைப் போன்று வீட்டு மகிழ்ச்சிக்கு வேறெதுவும் நிகரில்லை. அண்ணாதுரையின் புகழ்மிக்க வாசகங்களில் ஒன்று “விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை” என்பது. உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்குக் காரணமே விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை நம்மிடம் இல்லாதிருப்பது தான். விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகிறவர்கள் தம்மைச் சார்ந்த உறவுகளை இதமாக வைத்திருப்பதோடு தாமும் அவர்களோடு இதமாக உணர்வார்கள். குடும்ப நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கிற வழக்குகளில் பெரும்பான்மையானவை விட்டுக்கொடுக்க மறுக்கிற விவகாரங்களால் தான். நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்து, படிப்பு, பொருளாதாரம், தோற்றப் பொலிவு என்றெல்லாம் எல்லாப் பொருத்தங்களும் பார்த்து முடித்துவைக்கிற மூன்று முடிச்சுகள் தளர்ந்து போக எது காரணம்? விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாததும், 'உனக்கு நான் எந்த வகையில் குறைந்து போய்விட்டேன்' என்கிற இருவரின் அகம்பாவமும் தான். அகம்பாவம் மனதில் குடியேறுகிறபோது அங்கிருக்கிற அன்பெனும் கடவுள் வெளியேறிவிடுகிறான். அன்பு இருக்கிறவரை ஒருவர் மீது ஒருவருக்கு மதிப்பும் இருக்கும்; இல்லற மாண்பும் காக்கப்படும். விட்டுக்கொடுத்து அன்பு பாராட்டினால் நம் இல்லம் கட்டிமுடித்த சொர்க்கமாகிவிடும்.
அலுவலகத்தில் உறவுகள் : குடும்பத்தில், உறவுகளில் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதைப் போல அலுவலகம், தொழிற்சாலைகளிலும் உறவுகள் பேணப்படவேண்டும். மேலிருந்து கீழ்வரை எல்லா நிலைகளிலும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்கிற உணர்வு இருந்தால் தொழிலாளர் உறவு தொடர்ந்திருக்கும். மானுட ஆற்றலிலும் மனப்போக்கிலும் ஒரு சிறந்த நிலை இருக்கிறபோதுதான், தொழிலோடு தேசமும் சிறக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டுமே ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொண்டு உச்சத்தில் இருக்கவேண்டும். அதற்காக, உற்பத்தி தொழில் மேம்பாடு, திறன், லாபம் ஆகிய கோட்பாடுகளில் ஒன்றுக்கொன்று சமரசம் செய்து கொள்ளக்கூடாது. நம் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும், இவற்றிற்கு வெளியே சமூகம் என்கிற பரந்த வெளியொன்று இருக்கிறது. வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்று இயந்திரங்களாகவும் நாம் இயங்க முடியாது. சமூகத்தையும் நாம் சந்திக்க வேண்டும். சமூகம் என்பது வீடு, அலுவலகத்துக்கு வெளியே வேறு விதமான உலகம். சமூகம் நம்மை மதிக்க வேண்டும்; பெருமையுற வேண்டுமென்றால் மிக இன்றியமையாதது, நாம் சமூகத்துக்குப் பயன்படவேண்டும் என்பதுதான். பயன்படுகிறவர்களைத்தான் சமூகம் கொண்டாடுகிறது. “சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்…” என்கிற பாரதி “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்று வேண்டுவார். பயன்பட வாழ்ந்த, வாழ்கிற பெரியோர்களே மண்ணில் புகழோடு விளங்கியிருக்கிறார்கள். “உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல்” என்பது ஓர் உயர்பண்பு. அப்பண்பு இல்லாதவர்கள் “பலகற்றும் அறிவில்லாதவர்கள்” என்று பழிக்கிறார் வள்ளுவர்.
பண்பு நலன்கள் : எளிமையாக, இயல்பாக வாழ்கிறவர்கள், எல்லோரும் எல்லோருடைய இதயத்திலும் எளிதாக இடம்பெற்றுக்கொள்வார்கள். சார்ந்து வாழ்கிற நமது வாழ்க்கை நாம் வாழ்கிற வீட்டிலும், வளர்க்கிற தொழிலிலும் வளையவரும் சமூகத்திலும் எதிர்பார்க்கப்படும். பண்பு நலன்கள் நமக்கு வேண்டும். எதிர்பார்ப்புகளோடும் வாழ்கிற நாள்கள் அனைத்துமே நமக்கு வசந்தமாகும். வசந்தமாகும் அந்த வாழ்க்கை நமது சொர்க்கமாகும். ஒட்டுமொத்தமாக நமக்குத் தொடர்புடைய இடங்களில் நிறைவும், நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறதென்றால் சொந்தமாக நாம் ஒரு சொர்க்கத்தைப் பெற்றுவிட்டோம் என்று பொருள். சொந்தமாக நாம் வாங்கும் இந்த சொர்க்கத்துக்கு நாம் செலவிட வேண்டிய சிறந்த மூலதனம் பணம் அல்ல; நல்ல மனம் தான். பணம் என்பது வானம் வசப்பட நமக்கு உதவலாம். ஆனால் வாழ்க்கை வசப்படுவது நம் மனத்தால் மட்டுமே சாத்தியமாகும். வாழ்க்கையை வசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சொர்க்கம் சொந்தமாகி விடும்.
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement