Advertisement

தொலைக்காட்சி தொடர்கள்...நடிப்பு களமல்ல - தொகுப்பாளினி ஜாக்குலின்

சின்னத்திரையில் நடிகையாகி, தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் ஜாக்குலின். சென்னையில் விஷூவல் கம்யூனிகேஷன் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பு, நடிப்பு என இரண்டிலும் முத்திரை பதித்து வரும் தெலுங்கு பெண்ணான இவர் சண்டே ஸ்பெஷலுக்காக...

* அடிக்கடி 'சத்தியமாக' என்ற வார்த்தை உபயோகிக்கிறீர்களே?
பழகி விட்டது. சிறுவயதில் அப்பா வெளியே போகும்போது, இதோ வந்து விடுகிறேன் என்பார்? அப்போது நான் சத்தியமா? என்று கேட்பேன். சத்தியம் என்றால் உண்மை. அது பழகி விட்டது.

* பெண்ணின் பெருமை எப்போது தெரியும்?
அவள் தாயாகும் போது. தாயாகும் போது, அவளுக்கு மட்டும் அல்ல, அவளை சுற்றியுள்ளவர்களுக்கும் அவளின் பெருமை புலப்படும்.

* உலக பார்வையில் பெண் வெற்றி?
பெண் வெற்றி பெற்றால் அறிமுகம் இல்லாதவர்கள் கூட தலையில் துாக்கி வைத்து கொண்டாடுகின்றனர். தோல்வியுற்றால் இகழ்ச்சிக்கு உட்படுத்தப் படுகிறார். திறமையால் மட்டுமே பெண் முன்னேறுகிறாள். அதை நம்பாத சிலர் அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். பெண் வெற்றியை மாற்றி மாற்றி பேசும் சமூகம் இது.

* கவர்ந்த பெண்மணி?
அம்மா. அப்பா இல்லாமல் ஐந்து வயதிலிருந்து என்னை வளர்த்து ஆளாக்கினார். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர்.

* பெண் சுதந்திரம் ஆபத்தானது அல்லவா?
அளவுக்கு அதிகமாக கண்டிக்க கூடாது என்பதையே சுதந்திரம் என்கிறேன். சுதந்திரம் கொடுத்து, அருகில் இருந்து தைரியமும் கொடுக்க வேண்டும்.

* லஞ்சம் எப்போது ஒழியும்?
லஞ்சம் ஒழியாது. சிரிப்பு தான் வருகிறது. சிறிய விஷயத்திலிருந்து, பெரிய விஷயம் வரை ஈசியாக முடிக்கவேண்டும் என்று லஞ்சம் கொடுக்க விழைகிறோம். நம்மையும் சேர்த்து தான். சிலர் லஞ்சத்தை பணமாகவும், வேறு விஷயங்களாகவும் எடுத்து கொள்கின்றனர். தெரிந்த முகம் என்று முன்னுரிமை கொடுப்பதும் கூட லஞ்சம் தான்.

* ரசித்த வரிகள்?
நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் அத்தனையும் பிடிக்கும்.

* வீட்டில் கூறும் அறிவுரை?
அறிவுரையே கிடையாது. அம்மா சொல்வது, ''நல்லது எது? கெட்டது எது? என்று உனக்கு தெரியும். பார்த்து இருந்துக்கோ.'' நான் தான் அம்மாவுக்கு அறிவுரை கூறுவேன்.

* பொதுவாக தொலைகாட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பேச்சு பிழை அதிகரித்துள்ளதே?
பேசும்போது வார்த்தைகள் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதை விட, வார்த்தைகள் தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். நம் சமூகம் தமிழ் பேசுபவர்களை மதிக்காத நிலை உள்ளது. அதனால் தான் ஆங்கில மோகம் கொண்டு தமிழை மறந்து விடுகின்றனர். என்னை பொறுத்தவரை இன்றைய மாணவர்கள் பிளஸ் 2 வரையாவது தமிழில் படிக்க வேண்டும்.

* உறவுகளை தீர்மானிப்பது?
பாசம் தான். பணம் மூலம் வரும் உறவு நீடிக்காது.

* கனவு வருமா?
கனவே காணமாட்டேன். வேலை இருந்தால் அதை முடித்தால் தான் துாக்கம் வரும். அதனால், வேலையை முடித்து விட்டு 'டயர்டில்' நிம்மதியான துாக்கம் வரும்.

* பலம், பலவீனம் என்ன?
நான் பேசினால் எல்லோருக்கும் என்னை பிடிக்கும் அதுதான் என் பலம். எல்லோரிடமும் பழகுவது பலவீனம்.

* பிடித்த நடிகர்?
கமல்ஹாசனை ரொம்ப பிடிக்கும். படம் என்பதை பாடமாக எடுப்பவர். எப்படி யோசிக்கிறார் என்று நம்மையே யோசிக்க வைப்பவர். தற்போது தனுஷ் படங்கள் பிடிக்கும்.

* தொலைகாட்சி தொடர்களில் இனி நடிக்க ஆர்வம் உண்டா?
கிடையாது. அது நடிப்பதற்கான களமும் கிடையாது. தொகுத்து வழங்குவது பிடிக்கும். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், என்றார்.
வாழ்த்த: jacklinelydia1996gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • muthu Rajendran - chennai,இந்தியா

    கவிஞர் ,இயக்குனர் , தொகுப்பாளர் என்பது போன்ற வார்த்தைகள் பொதுவானவை. இவைகளை ஆண்பால் சொற்களாக கருதி கவிதாயினி, தொகுப்பாளினி என்றெல்லாம் சொல்ல, எழுத வேண்டாமே

  • LetsVALUE.org - Democracy,இந்தியா

    Congratulations. best wishes

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement