Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 46

அன்பு தோழமைகளே நலமா ,ஒருநாள் கரிக்கட்டைகள் எல்லாம் தங்களுக்கு ஒரு தலைவனை தேந்தெடுக்க ஒன்று கூடினார்கள். அப்போது சம்பந்தமே இல்லாத 'வைரம்' ஒன்றும் அவர்களுடன் சேர்ந்திருந்தது. அதனை சுற்றியிருந்தவர்கள் "இது கரிகட்டைகளின் கூட்டம் . இங்கு உனக்கு இடமில்லை " என்று அந்த வைரத்தை விரட்டிகொண்டிருந்தார்கள். ஆனால் அதுவோ "ஐயா, நானும் கரிகட்டை தான்" என்று மன்றாடியது. அப்போது அங்கு விவரம் தெரிந்த ஒரு கரிக்கட்டை அந்த கூட்டத்தைப் பார்த்து , "கரிக்கட்டைகளே, நாம் இங்கு கூடியிருப்பது எதற்கு என்றால் ... எப்படி வைரமாக் ஜொலிப்பது என்று தான். அதாவது இதைப்போல.. என்று அந்த வைரத்தைப் பார்த்துச் சொன்னது . இதுவும் இதற்கு முன் நம்மைப் போல ஒரு கரிக்கட்டையாகத் தான் இருந்தது " என்று சொல்ல அனைவரும் ஆச்சரியமாக அதனைப் பார்த்தனர் . நம் அதிர்ஷ்டம் . இப்படிப்பட்ட வைரம் நமக்கு உதாரணமாகக் கிடைத்திருப்பது ! இந்த வைரத்தையே நம்முடைய தலைவனாக்கி , அதன் வழியில் பின்பற்றி நாம் எல்லோரும் இந்த சாதாரண கரிக்கட்டையிலிருந்து வைரமாக மாற முயற்சிப்போம் " என்று கூறியது.

சும்மா வருமா சுகமான வெற்றிஅதுபோல வெற்றி பெற்ற நபர்கள் எத்தகைய பெரிய வெற்றி பெற்றாலும் அதன் பெருமை அவர்களுக்குத் தெரியாது. எப்போதும் போல் அமைதியும் சாந்தமாகவே இருப்பார்கள் . ஏனென்றால் அவர்கள் எப்போதும் தான் ஒரு சாதாரண நபராகவே நினைத்துக கொள்வார்கள் . ஆனால் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்குத் தான் அவர்களின் பெருமையும் திறமையும் தெரிந்து கொண்டு அவர்களை பாராட்டி பேசுவார்கள். வெற்றி மனிதனின் மதிப்பு , அவனை விட மற்றவர்களுக்குத் தான் அதிகம் தெரியும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் முயற்சி செய்தவர்கள்.. வெற்றி என்னங்க அவ்வளவு சாதாரணமாகவா வந்து விடும்..ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . நம் சந்தோஷத்திற்கு, நம் வெற்றிக்கு நாம் தான் பிரயாசை பட்டு உழைக்க வேண்டும். நமக்காக யாராவது உழைத்துத் தருவார்கள் என்று எண்ணி ஏமாந்து விட வேண்டாம் . அப்படி யாராவது உதவி செய்கின்றேன் என்று வரும் பொழுது அவர்களிடத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

தடைகளைத் தாண்ட தயாராகுங்கள்நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும் பொழுது பலவித தடைகளை எதிர்கொள்ள வேண்டும்..“என்னை கேலி செய்தனர் வேகமாக முன்னேறிச் சென்று திரும்பி பார்த்தேன் அவர்கள் அதே இடத்தில் தேங்கி வேறொருவரை கேலி செய்து கொண்டிருக்கின்றனர் “என்னவொரு அர்த்தம் பொதிந்த வாக்கியம். வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களை நோட்டம் இட்டு விமர்சிப்பதே வேலை...நம் நோக்கம் தடம் பதிப்பதே..வாழ்வின் சோகம் மரணம் அல்ல. ஆனால் நாம் வாழும் பொழுதே நம்முள் இருப்பதைச் சாகவிடுவதே மாபெரும் சோகம் என்கிறார் நார்மன் கலின்ஸ் ...பத்தோடு பதினொன்றாய் அத்தோடு நாம் ஒன்றாய் நம் வாழ்வில் எவ்விதத் தடமும் பதிக்காது பிறந்தோம் வளர்ந்தோம் என்று எவ்வித புதிய லட்சியம் இன்றி வாழ்வது சவத்திற்கு சமம் . நமக்குள் இருக்கும் திறமைகளை சாகவிடாமல் உயிர்ப்பிக்க இன்றே அவற்றைப் பட்டியலிடுவோம் ஏதாவது ஒன்றில் தடம் பதிப்போம்.

வளர்ச்சிக்கு தேவை வலிமையான எதிரிகள்..நமக்கான தடைகள் நமக்குள்ளேயே இருக்கின்றன, அவற்றை உடைக்கும் உளிகளாக நம் எதிரிகள் இருக்கிறார்கள் வலிமையான எதிரிகளைத் தேர்ந்தெடுப்பவர்களே வளர்கிறார்கள் .வளமடைகிறார்கள், எதிரிகள் உந்து சக்தியாக இருக்கின்றார்கள் நம் இலக்கை அவர்களே தீர்மானிக்கிறார்கள்..நமக்கு எதிரிகளே இல்லை என்பவர்களுக்கு நண்பர்களும் இருக்க முடியாது, பார்வையாளர் தரத்தை பொறுத்து பேச்சின் தரம் உயரும் நல்ல வாசகர்களுக்காக எழுதும் பொழுது நம்மையறியாமல் நம் எழுத்து கூர்மையாகின்றது..உற்று நோக்கினால் நம் அத்தனை வெற்றியுமே யாரோ ஒருவருக்கு என்னால் முடியும் என நிரூபிக்க நாம் எடுத்த முயற்சிகளே..மிக பெரிய சவால்கள் வரும் பொழுது அவற்றை நாம் வாய்ப்பாக கருத வேண்டும், வெளிப்படையாக பகைவர்களாக இருப்பவர்களை கூட நம்பி விடலாம் ஆனால் நண்பனாக இருந்து கொண்டு உள் வேலை செய்பவர்கள் ஆபத்தானவர்கள்

நம்பலாமா நண்பர்களை...நண்பர்களாக இருப்பவர்கள் அல்லது பணிகளில் நெருங்கி பணி புரிபவர்கள் சில நாட்கள் கழித்து நாமும் இவருடைய நண்பர் தானே, நமக்கும் இப்பணி தெரியும் தானே! என்ன விதத்தில் நாம் குறைந்து விட்டோம் நாமும் இவரை போல் ஆகலாமே அல்லது முதலிடம் பிடிக்கலாமே என்று ரகசியமாக சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்து விடுவது இயல்பே..போட்டியே இல்லாத இடத்தில் வெற்றி பெறுவதில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதில்லை நம்மை விட அறிவானவர்களிடம் ஏதேனும் ஒரு வகையிலாவது விஞ்ச வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டு நம் உழைப்பு தீவிரமடையும் நம்மைச் சுற்றி, நம்மை நோக்கி வரத் துடிக்கும் நோய்க்கிருமிகள் உடலினுள் புகுந்துவிட்டால் உடலிள்ளே வாள், கத்தி ஏந்தி போருக்கு நிற்கும் இரத்தஅணுக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம்மைக் காக்க நமக்குள்ளே ஓர் நண்பன் இரத்த அணுக்களினுள் வெண்குருதி சிறுதுணிக்கையே இத்தொழிலை செய்கின்றது. முதலில் உள்வராமல் தடுக்கும். வந்துவிட்டால் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும். அது போல் தோல்விகள் , அவமானங்கள் , தடைகள் ஏற்படும் பொழுது நாம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையே இரத்த அணுக்களாக நம்மை காக்க வல்லது..

கனிகளை ருசிக்க திறந்த மனம் தேவைஒரு ஞானி ஒரு முறை கூறியதைப் போல உங்கள் மனம் ஒரு பாராசூட்டை போன்றது, அது விரிவடையும் போது தான் வேலை செய்கின்றது அது போல் திறந்த மனதுடன் ரசித்து வேலை செய்யும் பொழுது அதன் கனிகளை ருசிக்க முடியும்.நாம் விலையுயர்ந்த நவீனமான ஆடைகளை அணிந்து வெளித்தோற்றத்தைத் கவர்ச்சியாக மாற்றிக் கொண்டு விட இயலும் , ஆனால் நம்மிடம் பேராசை , பகையுணர்வு வெறுப்பு, சுயநலம், போன்றவை இருந்தால் நாம் யாரையும் கவர்ந்து விட முடியாது..நாம் செயற்கைப் புன்னகையை உதட்டில் தவழவிட்டுக் கொண்டு அழகாக கைகுலுக்க முடியும், இந்த வெளிப்புற வேஷங்களின் மூலம் கனிவு பொங்கும் வசீகர ஆளுமையை வளர்த்துக் கொள்ள இயலாது.. சுயகட்டுப்பாட்டுடன் நேர்மறை பண்புகள் கொண்ட பலமான அடிப்படை இருந்தால் கனிவு பொங்கும் வசீகர ஆளுமையை உருவாக்கி கொள்ள முடியும்..நம் எண்ணங்களும் திட்டங்களும் வரையறுக்கப்படும்போது முடிவுகள் இலக்குகளுக்கு நம்மை அழைத்து செல்லும்..
- ஆ.ரோஸ்லின், aaroselinegmail.com; 9842073219

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement