Advertisement

ஹெக்டே தைரியம் கர்நாடகாவில் யாருக்கும் இல்லை!

'நடந்தாய் வாழி காவிரி' என, சலசலத்து ஓடும் காவிரி நதியின் ஓட்டத்தைப் பற்றி, 2,000 ஆண்டுகளுக்கு முன், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடினார். தமிழகத்தில் இன்று, நேற்றா பாய்கிறது காவிரி... புராண காலத்திலேயே, தமிழகத்தில் ஓடும் காவிரி நதியை புகழ்ந்து பாடல்கள் உள்ளன.

திருவிசநல்லுாரில், மகா முனி ஸ்ரீதா வீட்டின் கிணற்று நீரில், காவிரியோடு, 'கங்கா மாதா!' என, அழைக்கப்படும், கங்கை நதி நீரும் இன்றளவும் தீபாவளியன்று கலப்பதாக கருதுவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள், திருவிசநல்லுாரில் கங்கா ஸ்நானம் செய்கின்றனர்.
அது மட்டுமா, புராண காலத்திலேயே, பூமிக்கு அடியில் கங்கை ஓடி வந்து, காவிரியில் ஸ்நானம் செய்தாளாம். அகத்திய முனி இதை கண்டு வியந்து, கங்கையைக் கேட்ட போது, கங்கா மாதா சொன்னாளாம்... 'அன்றாடம், மக்கள் தங்கள் பாவங்களை கழுவிக் கொள்ள என்னிடம் வந்து ஸ்நானம் செய்து, பாவத்தை போக்கிக் கொள்ளுகின்றனர். என் மீது படியும் பாவங்களை போக்க, நான் எங்கே சென்று குளிப்பது... அதனாலேயே, காவிரியில் குளிக்கிறேன்!' என்று. இப்படிக் கூறுகிறது, காவிரி புராணம்.

காவிரியில் விளைந்த அரிசியை, குருஷேத்திரத்திற்கு அனுப்பி, பாண்டவ, கவுரவ சேனைகளில் மோதும் வீரர்களுக்கு, உணவு படைத்தனராம் சேர, சோழ பாண்டிய மன்னர்கள். அப்படியென்றால், 5,000 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பாய்ந்த காவிரியை, கர்நாடகா தடுத்து நிறுத்துவது நியாயமா...

'காவிரியில் இருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு தர மாட்டேன்' என, கர்நாடகா கூறுவது எவ்வளவு பெரிய பாவம்... இவ்வாறு, 45 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்நாடகா நம்மை வஞ்சித்து வருவது, ஓட்டுகளுக்காகவே. பா.ஜ.,வும் இதற்கு விதி விலக்கல்ல. ஒவ்வொரு, பருவ காலத்திலும், குறிப்பாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், பஞ்ச பூதங்களில் ஒன்றான, நீர் கிடைப்பதால், காவிரி பெருக்கெடுத்தோடி, தமிழகத்தை வளமாக்க முயலாமல், வஞ்சிப்பது எவ்வளவு பெரிய கொடுமை... ஒவ்வொரு முறையும், தண்ணீருக்காக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, நீரை விடச் சொல்வது, கர்நாடகத்திற்குத் தான் கேவலம்.

'காவிரி நதி நீர் ஆணையம் அமைத்து, ஆண்டுக்கு, 250 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு கொடுங்கள்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், 'தர மாட்டேன்!' என, தேசிய ஒருமைப் பாட்டையே குலைத்தவர், குத்து படத்தின் நாயகி நடிகை ரம்யாவின், தாத்தா,
எஸ்.எம்.கிருஷ்ணா. காரணம், கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சி; மத்தியில் இந்திரா ஆட்சி; தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி. 32 லோக்சபா இடங்களையும், 110 சட்டசபை தொகுதிகளையும், காங்கிரசுக்கு தாரை வார்த்து, 'சர்க்காரியா கமிஷனை திரும்பப் பெற்றால் போதும்!' என, இந்திராவிடம் மன்றாடியதோடு, காவிரி நீருக்காக, உச்சநீதி மன்றத்தில் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார், கருணாநிதி. இன்று, திண்டாடுவது கருணாநிதி அல்ல; டெல்டா மாவட்ட விவசாய மக்கள்.

ஒரு காலத்தில், ரயிலில் போகும் போது, திண்டிவனத்தை தாண்டினால், கண்ணுக்கெட்டிய துாரம் வரை, பச்சைப் பசேல் என, வயல்கள் காட்சியளிக்கும். ஆனால் இன்று, இளம் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், '110 விதியின் கீழ், இதை செய்யலாமா; அதை செய்யலாமா' என, அரசுக்கு சவால் விடுவதோடு, இலங்கை தமிழர்களுக்காகவும், இடையிடையே கண்ணீர் விடுகிறார், கருணாநிதி.

தேசம், தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு பற்றி வாய் கிழியப் பேசும் காங்கிரஸ்காரர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கூட மதிப்பதில்லை. கர்நாடகாவில், முதலில் மதிக்காதவர், எஸ்.எம்.கிருஷ்ணா. கேரளாவில், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர், உம்மன் சாண்டி. காங்கிரஸ் காரர்களே மதிக்காததால், பாலாற்றில் நம்மைக் கேட்காமலே, அணையை உயர்த்தி விட்டார், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு கங்கையும், சத்ய சாய் பாபா வழங்கிய, கிருஷ்ணா கால்வாயும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சென்ற பின், அவையும் சென்று விட்டன.

கர்நாடகாவில், 1,100 கன்னட சங்கங்கள், இன்று அந்த மாநிலத்தையே, தலை கீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.தமிழக டெல்டா விவசாயி, வாடி வதங்கிப் போயுள்ள நிலத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அரிதாரம் பூசிய கன்னட நடிகைகள், 'காவிரி நம்முடையது. அதிலிருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்' என கொக்கரிக்கின்றனர். இவர்களை, கோடம்பாக்கத்து பக்கமே, நம்மவர்கள் வர விடக் கூடாது; செய்வரா...மிகச் சிறிய, நகரமாயிருந்த பெங்களூரை, வடக்கே எலஹங்கா வனப்பகுதி வரை, 20 மாடிகள் உயரத்திற்கு பிளாட்டுகள் கட்டி, அங்கு கழிப்பறைக்கு கூட, காவிரி நீரை சப்ளை செய்கின்றனர். தெற்கே, ஜெய நகர், ஜே.பி., நகர் தாண்டி, பல உயரமான குடியிருப்புகள். அங்கெல்லாம், இருபது மாடி கழிப்பறையிலும், காவிரி நீர். விஸ்வேஸ்வரய்யா, கிருஷ்ண ராஜ சாகர் கட்டிய பின், பெங்களூருக்கும், மைசூருக்கும் நீர் போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது போதுமானதாக இல்லையாம். இப்படித் தான், ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கபினி என, பல அணைகளை கர்நாடகம் கட்டிய போது, திராவிட கட்சிகள் ஏமாந்து போய் பின்னாளில், கோர்ட் - கேஸ் என, அலைய ஆரம்பித்து, இப்போது விழிக்கின்றன.

ஒரு சமயம், ஜனதா கட்சி தலைவர், மறைந்த சந்திரசேகர், கன்னியாகுமரியிலிருந்து, டில்லி வரை காங்கிரசை எதிர்த்து பாத யாத்திரை செய்தார். அவர், தஞ்சை வந்த போது, வறண்ட பூமியை விவசாயிகள் காட்டினர். அதை பார்த்து நெஞ்சம் பதறிய சந்திரசேகர், திருச்சியிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்து, தன் கட்சியை சேர்ந்த முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேயிடம் கூற, ஹெக்டே உடனே, யாரிடமும் கேட்காமல், கிருஷ்ண ராஜ சாகரிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீரை திறந்து விட்டார்; அப்போதும், வட்டாள் நாகராஜ் சத்தம் போட்டார். ஹெக்டே, அதை பொருட்படுத்தவில்லை. இப்படி, நிலைமையை புரிந்து கொள்ளும் தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போது யாருமே இல்லை.

ஓட்டு ஒன்று தான் முக்கியம். தண்ணீரைக் காட்டி ஓட்டு; தலித்துகளைக் காட்டி ஓட்டு; பசுக்களைக் காட்டி ஓட்டு; இன்னொரு, இனத்தாரை கேவலமாக திட்டி ஓட்டு. பாகிஸ்தானோடும், வங்கதேசத்துடனும் நதி நீரை சத்தமின்றி பகிர்ந்து கொள்ளுகிறோம்; ஆனால்,
மாநிலங்களுடன் முடியவில்லை. காவிரிக்காக, உயிரை விடும் கர்நாடகா, கோவா மாநிலத்திடமும் மல்லு கட்டுகிறது. மஹாதயி எனும் சிறிய நதியில், கோவா, அணை கட்டக் கூடாதாம். இஸ்லாமாபாத்தை விட பெங்களூரு மோசமாகி விட்டது. தமிழக பதிவு எண் கொண்ட காரில் போகவே பயமாக இருக்கிறது. தெருவில் உறவினர்களுடன், தமிழில் உரக்கப் பேசி நடக்க பயமாக இருக்கிறது.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவிரி பிரச்னை முடிய போவதில்லை. அடுத்த, ஜூலை மற்றும் ஆகஸ்டிலும் நிகழும்; இருக்கவே இருக்கிறது, உச்ச நீதிமன்றம்!
மீண்டும் அங்கே சந்திப்போம்!
இ-மெயில்: bsr--43yahoo.com
பா.சி.ராமச்சந்திரன்
- மூத்த பத்திரிகையாளர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய அளவு தண்ணீரை கொடுத்து விட்டு மீதமுள்ள நீரை கொண்டு தனது தேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஹெக்டே போல அவர்கள் அடுத்தவர் பற்றியும் சிந்திக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை இந்த விஷயத்தில் கர்நாடகம் மதிக்காததை போல 50 % மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் 69 % இட ஒதுக்கீடை தமிழகம் செயல் படுத்துகிறது . கர்னாடக அரசியலால் தமிழக டெல்டா விவசாயிகள் பலரின் நீராதாரமும் தமிழக அரசியலால் படிக்கவிரும்பும் ஏழ்மையான பலரின் உயர்கல்வி கனவும் பாதிக்கப்பட்டுள்ளது.

 • annaidhesam - karur,இந்தியா

  சர்க்காரியா கமிஷனை திரும்பப் பெற்றால் போதும்' என, இந்திராவிடம் மன்றாடியதோடு, காவிரி நீருக்காக, உச்சநீதி மன்றத்தில் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார், கருணாநிதி. இதை போன்ற உண்மை விளக்கும் உரத்த சிந்தனை ..அனைவரிடமும் சேர வேண்டும்..

 • Vijay - Chennai,இந்தியா

  அருமையான பதிவு. ஆதாரங்களுடன் பதிவு செய்யும் எந்த ஒரு விஷயமும் மதிப்பு மிக்கது. எள் அளவு தவறு இருந்தாலும் சொல்ல வரும் கருத்தின் மதிப்பை அது கூர் மழுங்க செய்துவிடும். ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷம் சேர்ந்தார் போல வீணாக்கும். கருத்தை மறுக்கிறேன் என தவறாக எண்ணவேண்டாம். கீழ்கண்ட தகவல் உண்மையா என சரி பார்க்கவும். காவிரியில் விளைந்த அரிசியை, குருஷேத்திரத்திற்கு அனுப்பி, பாண்டவ, கவுரவ சேனைகளில் மோதும் வீரர்களுக்கு, உணவு படைத்தனராம் சேர, சோழ பாண்டிய மன்னர்கள். -

 • Emperor SR - Ooty,இந்தியா

  மிக சிறந்த உண்மைகளை உரைக்கும் கட்டுரை. எப்போதுமே Bengaluru மக்கள் தொகையில் தமிழர்கள் அதிக பங்கு வகித்து வருகின்றனர். பெங்களூரு முன்னேற்றத்திற்கும் மற்ற மாநிலத்தாரோடு தமிழர்களின் பங்களிப்பு மிகவும் உள்ளது. இன்றளவும் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. அரசியல்வியாதிகளே பிரித்து சூழ்ச்சி செய்கின்றனர். சிறிய நகராயிருந்த பெங்களூரை எந்த வரம்பு திட்டமிடலுமின்றி பெருநகராகி அனைத்திற்கும் காவேரி நீரை நம்பி உள்ளது கர்நாடக அரசியல் கயவர்களின் கோமாளித்தனம். இப்படி பல்வேறு வரலாற்று பிழைகளை சுயநலத்திற்கு குடும்பநலத்திற்கும் புரிந்த கருணாநிதி என்னமோ உத்தம அரசியல்வாதிபோல் கூப்பாடு போடுவது அனைத்தும் மக்களை முட்டாளாக்குவதற்கே . தமிழக மக்கள் அவரையும் அவர் கட்சியையும் இனிமேல் எப்போதும் புறக்கணித்து தண்டிக்க வேண்டும். தெய்வம் நின்று கொல்லும்.

 • S. Rajan - Auckland,நியூ சிலாந்து

  excellent article

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  இந்த அரசியல்வாதிகள் செய்யும் பாவம் பார்த்துண்டே இருங்கோ ஒருநாள் காவிரி பொங்கி பிரவாகமாய வந்துடுவாள். தண்ணியிருக்கு கோபம் வந்தால் வெள்ளம் பெருக்கெடுக்கும். காற்றுக்கு கோபம் வந்தால் புயல் வரும். வானத்துக்கு கோபம் வந்தால் வெடித்து சிதறும். அக்கினிக்கு கோபம் வந்தால் அனைத்தும் எரிஞ்சு சாம்பல் ஆவும். இந்தவாக்கு நான் சொல்லலீங்க்கா ஆன்றோர் வாக்கு

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  இந்த கட்டுரையிலிருந்து கர்நாடகா முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேயின் தைரியம் தெரியுது. அதேநேரத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் சுய ரூபமும் தெரிகிறது. அவர் 'சர்க்காரியா கமிஷனை திரும்பப் பெற்றால் போதும்' என, இந்திராவிடம் மன்றாடியதோடு, காவிரி நீருக்காக, உச்சநீதி மன்றத்தில் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார், கருணாநிதி. இன்று, திண்டாடுவது கருணாநிதி அல்ல டெல்டா மாவட்ட விவசாய மக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement