Advertisement

மனக் கதவுகளை திறப்போம்

'கடலைவிட ஆழமானது...காற்றைவிட வேகமானது...மற்றவரால் அறிய முடியாதது...மாறிக்கொண்டே இருப்பது...இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே விடை மனம் என்பது தான். ஒருவரின் உள்ளம், சமூகம், சூழல், ஆன்மிகம் போன்ற அனைத்திலும் சமநிலை பேண உதவுவது மனமேயாகும். ஆனால் இன்றைய சூழலில் உடலும், மனமும் தாமரை இலை நீர் போல பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது. மனித மனம் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத ஒன்றை தேடிக் கொண்டு ஓடுகிறது. மனிதனுக்கு வரும் 90 சதவீத நோய்கள் மன அழுத்தம் காரணமாகவே ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தற்கொலைகளும், தற்கொலை எண்ணங்களும் பெருகி வருவதற்கான காரணம் மனச்சோர்வு என்னும் அரக்கன் தான்.
மென்டல் டார்ச்சர் : 'சூனியம் வைச்சுட்டாங்க, பேய் பிடிச்சிடுச்சு, பயந்த கோளாறு' இவையெல்லாம் கிராமப்புறங்களில் அடிக்கடி கேட்கப்படும் வார்த்தைகள். 'ஸ்டெரஸ் அதிகமாய்டுச்சு, மென்டல் டார்ச்சர் அதிகம்பா' இவை நகரவாசிகளிடம் கேட்கப்படும் வார்த்தைகள். இவையெல்லாம் மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு அவரவர்களின் அனுபவ விளக்கங்கள். எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் போதும், பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் மன அழுத்தம் அதிகரிக்கிறது. மனம் என்பதே எண்ணங்களின் தொகுப்புதானே. அந்த எண்ணங்களில் பிறழ்வு ஏற்படும் போது மனச்சிதைவு ஏற்படுகிறது.
உடல் நடுக்கம் : மனத்தளர்ச்சிக்கு ஆளாகும் நபர் தாழ்வு மனப்பான்மை கொண்டவராய் இருப்பார். நீண்ட நேரம் துாக்கமின்மை கூட, மன அழுத்தத்தின் வெளிப்பாடு தான். சோர்வு, தலைவலி, செரிமானப் பிரச்னை, தனக்குத் தானே பிதற்றல், பதட்டம், உடல் நடுக்கம், இதயம் வேகமாக துடிப்பது, சிறிய பிரச்னைகளுக்கும் அதிகமாக கவலைப்படுதல் இவை யாவும் தீவிரமான மன அழுத்தத்தின் விளைவுகள். தற்கொலை என்பதே ஒரு கோழைத்தனமான செயல் தான். மனம் சார்ந்த கவலைகளால் துன்பப்படும் வேளையில் எடுக்கப்படும் முடிவுகள் நம்மை மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தோருக்கும் பெரிய துன்பத்தை தருகிறது.
வலிகள் இல்லாத வாழ்க்கை : பூட்டினை படைத்த இறைவன் அதற்குரிய சாவியினையும் சேர்த்தே தான் படைத்திருக்கிறார். பிரச்னைகளே நம்மை புதிய பாதைக்கு அழைத்துச் செல்கின்றது. பிரச்னைகள் வாழ்க்கைக்கு வருத்தம் தருவதில்லை, அவை நமக்கு புதிய அர்த்தங்கள் தருபவை. நேற்று போல் இன்று இல்லை, இன்றுபோல் நாளை இல்லை என்பது உண்மை தானே! புதிய கண்டு பிடிப்புகளுக்கு பின்னால் ஓராயிரம் தோல்விகள் இருக்கும். தோல்வி நிலையென நினைத்து வாழ்வை இழக்கலாமா! உளி தொடும் முன்பே வலி என, அழுதால் கற்கள் சிலையாக முடியுமா? வலியில்லாமல் வழியில்லை. பதினேழு முறை படையெடுத்த கஜினி முகமது, சிலந்தி, தேனீக்களின் முயற்சி நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்.
மனம் ஒரு குரங்கு : எவ்வளவு போட்டாலும் நிறையாது மனித மனம் என்பதற்கு முல்லாவின் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. தெருவில் அழுது கொண்டிருந்த முல்லாவைப் பார்த்து ஏன் அழுகிறீர்கள்? என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர், 'போன மாதம் என் 90 வயது தாத்தா இறக்கும் போது என் பெயரில் ஒரு லட்சம் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். போன வாரம் என் சித்தப்பா என் பெயரில் 70 ஆயிரம் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். நேற்று இறந்து போன என் மாமாவும் 50 ஆயிரம் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்' என்று கூறவும், 'நல்ல விஷயம் தானே? பிறகு ஏன் அழுகிறீர்கள்' என்று, கேட்டதற்கு 'இனிமேல் என் பெயரில் சொத்து எழுதி வைக்க யாரும் இல்லையே என்று நினைத்து தான் அழுதேன்' என்றாராம் முல்லா. நாமும் இப்படித்தான் நமக்கு கிடைத்துள்ள வளங்களை எல்லாம் விட்டு, விட்டு அதிருப்தியான மனநிலையில் வாழ்கிறோம்.
புத்துணர்வு தரும் புத்தகங்கள் : மனமிருந்தால் மார்க்கமுண்டு! என்று கூறுவது போல மனதினை சரியான வழியில் கொண்டு செல்ல தியானம் ஒன்றே சரியான தீர்வு. மனச் சோர்வுறும் நேரங்களில் மனதை மடை மாற்றம் செய்யுங்கள். மனதிற்கு புத்துணர்வு தரும் புத்தகங்களை படியுங்கள். புத்தகங்களை நாம் மேலிருந்து கீழ் நோக்கி வாசிக்கிறோம். அவை நம்மை கீழிருந்து மேல் நோக்கி அழைத்து செல்கின்றன. நேர்மறை சிந்தனையாளர்கள் சிக்கல்களை எப்போதும் சவாலாகப் பார்ப்பார்கள். ஆனால், எதிர்மறைச் சிந்தனையாளர்களோ சவால்களைக் கூட சிக்கல்களாக்கிக் கொள்வார்கள். 'ஒரு குடம் பாலில் ஒரு துளிவிஷம்' என்ற, பழைய மொழியை தவிர்த்து 'ஒரு குடம் பாலில் ஒரு துளி தேன்' என்று, நம் சிந்தனையை இனிப்பாக்குவோம். எனவே தான் பாரதி 'நினைவு நல்லது வேண்டும்' என்றான்.தேவையற்ற எண்ணங்களை குப்பைகளாக்கி துாக்கி எறியுங்கள். நமக்கு சலிப்பு தரும் படத்தை மீண்டும் பார்க்க விரும்பாத நாம், ஏன் வாழ்வின் பழைய சோகங்களை மட்டும் மீண்டும், மீண்டும் யோசிக்க வேண்டும்? கடந்த காலம் நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே தவிர பாரமாக இருக்கக் கூடாது. அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம், நீண்ட துாரம் செல்லாது சிபாரிசு, எப்போதும் கூட வருவது நம்பிக்கை மட்டுமே. ஓடாத மானும், போராடாத இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
கவலை காலி; வாழ்க்கை ஜாலி : முயல், ஆமை கதையில் தன்னை விட வலிமையான முயலுடன் வென்ற ஆமையைப் போன்ற மன வலிமை கொள்ள வேண்டும். சோர்வான சமயங்களில் நல்ல இசையைக் கேட்க வேண்டும். பகிர்ந்து கொள்ளப்படும் துன்பம் பாதியாகிறது. பிரச்னைகளால் அல்லாடும் போது நம்மை புரிந்து கொள்கின்ற நண்பர்களிடத்தில் அதற்கான தீர்வினைக் கேட்கலாம். 'கவலைகள் என்னைத் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்' என்று பாரதி கூறியது போல கவலைகளை காலி செய்தால் வாழ்க்கை ஜாலி ஆகும்.
உயரங்களை தாண்டுவோம் : கடந்தவைகள் கடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். உடல் வலி உண்மையானது. ஆனால் மன வலி என்பது நிழலோடு நாம் நடத்தும் யுத்தம். சட்டென்று சிரித்து விடும் குழந்தையின் புன்னகையை நாமும் அணிந்து கொள்வோம். 'கால்கள் இன்றி நட! சிறகுகள் இன்றி பற! மனம் இன்றி நினை! என்ற ஓஷோவின் தத்துவத்தில் இருக்கும் மறை பொருளை உணர்வோம். மனம் என்னும் தோணி பற்றி, மதி என்னும் கோலை ஊன்றி, வையமதில் வாழ்வாங்கு வாழ்வோம். ஒளி மயமான எதிர்காலம் அமைய மனதை வசப்படுத்துவோம். அம்மாவின் மனக்கதவை அன்பு என்னும் பாஸ்வேர்டால், அப்பாவின் மனக்கதவை பாசம் என்ற பாஸ்வேர்டால், ஆசிரியரின் மனக்கதவை பணிவு என்னும் பாஸ்வேர்டால் திறப்போம், வாழ்வின் உயரங்களை தாண்டிக் கொண்டேயிருப்போம், ஆழ்மனம் என்ற வளமான நிலத்தில் நல்ல எண்ணங்களை விதைப்போம்!- ம.ஜெயமேரி, ஆசிரியைக.மடத்துப்பட்டிbharathisanthiya10gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • vijayalakshmi - chennai,இந்தியா

  ஜெயமேரி உங்கள் கட்டுரை க.மடத்துப்பட்டிக்கு பள்ளிக்கு மணிமகுடம் சூட்டியது போல் இருந்தது.அருமை அருமை

 • vijayalakshmi - chennai,இந்தியா

  ஆசிரியர் ஜெயமேரி.உங்கள் படைப்பு மிக அருமை.அதிலும் முல்லா கதை நல்லா இருந்தது.உங்கள் மாணவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்.உங்கள் படைப்பு பெரும் படைப்புகளாக படையெடுக்க என் வாழ்த்துக்கள்.

 • basheerappa - chennai,இந்தியா

  அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  I think this teacher has prepared this long notes for students and the same she has presented here as article. She did not tell any think useful but concluded with passwords for parents and teachers. Every one knew well about his or her mind and how to control it and win over others by love,kind and affection. Only weak minded people have inferiority complex and commit suicide.Every one must have strong will power and superiority complex to win over every thing in the world.Past is past,future is not in our hand and present is in our hand let us do it today and enjoy the fruit of it.When a man or woman is distress and mental worries he or she can not go for Dhiyanam or reading books in order to get peace as per this article.In this case they must have strong will power and ready to face any problem by continuously praying to God and surely He will give His blessings and peace to them forever.When the people are in distress or mentally disturbed how they think about Gajini,honey bees or spiders in order to get comfor and confidence in their lives.Let us not waste our valuable time and energy by such long essays and concentrate our minds by way of prayers and God will help us to over come all our distress, worries and problems and lead our lives with joy and pleasure forever.

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  சூப்பர்......இந்த மாதிரி ஓசியிலேயே உபதேசம் கேட்டு கேட்டு ரெம்ப போர் அடிக்குது, வேற ஏதாச்சும் புதுசா எழுதுங்கள்..... ப்ளீஸ்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement