Advertisement

சில நாள் சிரமம் ஏற்போம்... சீர்மிகு இந்தியா படைப்போம்!

சிரமம் இன்றி சிகரம் தொட இயலாது. நாம் தற்பொழுது சீர்திருத்தத்திற்கு சிரமப்படுவதில் தவறொன்றும் இல்லை. தாயின் கருவறையில் சிசு வெளிவர, தாய் சிறிது சிரமம் ஏற்க வேண்டும். நல்ல இளைஞர் சமுதாயத்தை உருவாக்க பெற்றோர், ஆசிரியர்கள், உற்றார் உறவினர் சிரமப்பட வேண்டும். சிரமம் இன்றி சிறப்பு கிடையாது. நாடு சுதந்திரம் பெற முன்னோர் சிரமப்படவில்லையா. நாட்டை காக்க நம் சகோதரர்கள் எல்லையில் சிரமப்படவில்லையா.
நம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டுச்சென்று நல்லரசாக, வல்லரசாக மாற்ற நாம் சிறிது சிரமத்தை, நம் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ள வேண்டும்.“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”ஒரு நாட்டிற்கு அழகு என்று ஐந்தினை வள்ளுவர் கூறியுள்ளார். அவை நோய் இல்லாதிருந்தல், செல்வம், விளைபொருள், இன்ப வாழ்வு, நல்ல காவல்.சுதந்திர இந்தியாவில் கறுப்பு பணம் எனும் கொடிய நோய் புரையோடி இன்ப வாழ்வினை அழித்து விட்டது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தது. இதை செய்த மோடி அரசு, நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு நல்ல அரணாகவே காணப்படுகிறது.
சட்டப்பூர்வ பொருளாதாரம் :
கறுப்பு பணம் என்பது அரசிற்கு கணக்கு காட்டாமல், நாம் வைத்திருக்கும் பணம். நம் நாட்டில் சட்டப்பூர்வ பொருளாதாரம், கறுப்பு பொருளாதாரம் என இருவகை உண்டு. சட்டப்பூர்வமான பொருளாதாரத்தில் உற்பத்தி, நுகர்வு, பகிர்வு போன்ற பல பொருளாதார நடவடிக்கைகள் முழுமையும் கணக்கில் கொண்டு வரப்படும். அரசுக்கு உரிய வரி செலுத்தப்படும். சம்பாதித்த பணம் மீண்டும் பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். இதனால் சம்பாதித்தவருக்கோ, நாட்டிற்கோ எந்த பிரச்னையும் கிடையாது.
கறுப்பு பொருளாதாரம்
ஆனால், கறுப்பு பொருளாதாரத்தில் அதன் நடவடிக்கையில் எவ்வித கணக்கும் இருக்காது. வரி செலுத்த மாட்டார்கள். அப்பணம் உற்பத்தி சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக உற்பத்திசாரா தங்கம், வைரம், நிலம், கட்டடங்களில் மட்டுமே முதலீடு செய்வர். இந்த வகை முதலீட்டில் இருந்து எந்த ஒரு வருமானமும் நாட்டிற்கு கிடைக்காது. தற்போது, இந்தியாவில் கறுப்பு பொருளாதார வளர்ச்சி வீதம் சட்டப்பூர்வ பொருளாதார வளர்ச்சி வீதத்தை விட அதிகமாகவும், வேகமாவும் உள்ளது.
சுராஜ் பி.குப்தா அறிக்கையின்படி 1987-, -1988ம் ஆண்டுகளில் கறுப்பு பணத்தின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகம். தற்போது 180 நாடுகளில் உள்ள கறுப்பு பணம் குறித்த புள்ளி விபரங்களில் முதன்மை நாடாக திகழ்வது இந்தியா. நம் நாட்டில் சுதந்திரமாக செலவு செய்ய இயலாத கறுப்பு பணத்தை, வெளிநாடுகளில் வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர்.
2009ம் ஆண்டு 'குளோபல் பைனான்சியல் இன்டெகிரிடிவ் ஸ்டடியின் அறிக்கையின்படி வெளிநாடுகளின் உள்ள இந்திய பணத்தின் மதிப்பு டாலர் 1.4 டிரில்லியன் ஆகும். அதாவது நமது இந்திய ரூபாயில் 70 லட்சம் கோடி. நமது பணம் நமக்கோ, நம் நாட்டிற்கோ பயன்படாமல் வெளிநாட்டு வங்கிகளில் துாங்கிக் கொண்டிருக்கிறது.
நாம் இதனை நம் நாட்டில் தொழில் துறைகளில் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் பயன்படுத்தினால் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவர். உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி கூடும். அன்னிய செலாவணி பெருகும். நாட்டை வல்லரசாக்கலாம்.
காரணம் என்ன கறுப்பு பணம் உருவாக பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானவை அதிக வரிவிதிப்பு வீதம். ஹவாலா சந்தை, ரியல் எஸ்டேட் தொழில், அதிகப்படியான வியாபாரக் கட்டுப்பாடு, கட்சிகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடை, பண வீக்கம், நெகிழ்ச்சியற்ற வரி சார்ந்த சட்டங்கள், நுகர்வோரின் கடமை மற்றும் உரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.நாம் சரியான தகவலை மறைத்து தவறான தகவல் கொடுத்து நமக்கு சாதகமாக செயல்படுவதற்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறோம். அதை தவிர்த்தாலே லஞ்சம் கட்டுப்படுத்தப்படும்.
தீவிரவாதத்திற்கு செல்லும் கறுப்பு பணம் :
கறுப்பு பொருளாதாரத்தால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானது. அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஏழை, பணக்காரர்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாகும். பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி கட்டுக்கடங்காமல் மக்களை வாட்டி வதைக்கும். தீவிரவாத அமைப்புகளுக்கு இக்கறுப்பு பணம் செல்லும்.தீவிரவாத பிரச்னைகளினால் நாட்டில் பல சீர்குலைவுகள் ஏற்படும். சமுதாய திட்டங்களுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்கும் பணம் இன்றி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும்.
கட்டுக்குள் வராத நிலை :
கறுப்பு பொருளாதாரத்தை சட்டப்பூர்வ பொருளாதாரமாக மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக, கறுப்பு பண முதலைகள் மீது வருமான வரி சோதனை நடத்துதல், தங்க பத்திர திட்டத்தை கொண்டு வருதல், தானாக முன்வந்து வருமான கணக்கை காண்பித்தல், அதிக மதிப்புள்ள பணத்தை செல்லாது என அறிவித்தல் ஆகும்.
நம் நாட்டின் பல்வேறு கால கட்டங்களில் கறுப்பு பணம் வைத்திருப்போர் தானாக முன்வந்து வருமான கணக்கை காண்பித்து, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகளினால் கறுப்பு பணம் முழுவதுமாக கட்டுப்படுத்த இயலவில்லை.இச்சூழ்நிலையில் பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் நமது நாட்டு ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, தீவிரவாத அமைப்புகள் மூலம் புழக்கத்தில் விட்டு நம் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டதை தடுக்கவும், ஏற்கனவே, நம் நாட்டில் உள்ள கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், அதிக மதிப்பு கொண்ட 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
இது மோடி அரசு எடுத்த நல்ல முடிவு. அதற்கான அடிப்படை வேலைகளை ஏற்கனவே படிப்படியாக செய்துள்ளது. அனைவருக்கும் ஆதார், வங்கி கணக்கு, பணச்சலுகைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது.
வரி சீர்திருத்தம் வேண்டும்
அதிக வரி விகிதமே வரி ஏய்ப்புக்கு காரணமாகிறது. எனவே, வரி விகிதத்தை குறைத்து அனைவரையும் வரி செலுத்த வைப்பதன் மூலம் அரசின் வருமானம் பெருகும். இதனை அரசு செயல்படுத்த வேண்டும். மக்களும் நம் உரிமை மற்றும் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.புதிய 500,1000, 2000 ரூபாய்களை புழக்கத்தில் விடுவது மீண்டும் பழைய நிலைக்கே இட்டுச்செல்லும் என்ற கருத்தையும் பலர் முன் வைக்கின்றனர். நாம் எவ்வளவு தான் புதிய யுக்திகளை கையாண்டு ரூபாய் அச்சிட்டாலும், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
100,50 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் இருந்தால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வங்கி மூலமாகவோ அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெற்றால் மக்கள் பழகி விடுவர். கறுப்பு பண நடவடிக்கை இருக்காது. இதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.' நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்'நன்மை, தீமையை ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவனே ஆளப்படுவான் என்றார் வள்ளுவர்.
நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த உடனே அறுவை சிகிச்சை செய்வது போல் இந்த அறுவை சிகிச்சை நிகழ்த்தப்பட்டுள்ளது. கால அவகாசம் கொடுத்தால் காரியம் கைகூடாது என்று திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு சில நாட்கள் சிரமமாக இருக்கலாம். பொறுத்து கொண்டால் பாரதம் வலிமைஅடையும். சில நாட்கள் சிரமம் ஏற்போம். சீர்மிகு இந்தியாவை உருவாக்குவோம். --முனைவர் எஸ்.கணேசன் பொருளியல் பேராசிரியர் சிவகாசி. 98650 48554

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement