Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் 45

அன்பு தோழமைகளே நலமா?
நாம் ஒரு தொழிலை தொடங்கி நடத்தும் போது அதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் போவதினால், அடுத்தடுத்து தவறு செய்து, பெரிய அளவில் கையைச் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்புண்டு. தொழில் செய்வது அலுவலகத்தில் வேலை பார்க்கிறமாதிரி அல்ல. தொழிலுக்காக முழுநேரத்தையும், உழைப்பையும் தந்தால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும். நீங்க எளிதாக சொல்லிவிடலாம் எப்படி ஜெயிப்பது என சொன்னால் தானே என்கின்றீர்களா? தொழில்முனைதலில் முக்கிய பங்கு வகிக்கும் வாடிக்கையாளர்கள் குறித்து காணப் போகின்றோம்..
சந்தை பற்றிய ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் அவசியம் தேவை. இல்லையெனில் சரியான நேரத்தில், சரியான வாடிக்கையாளரை சென்றடைய முடியாமல் போய்விடும். சந்தை ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் இருந்தால்தான் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் கணிக்க முடியும்.
சந்தைப்படுத்துதல் என்ற அம்சத்தில் பல பகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது பொருட்கள் , வாடிக்கையாளர்கள்.
பொருட்கள்:
வாடிக்கையாளர் மனதில் பொருள் குறித்து இருக்கும் எதிர்பார்ப்புகளில் ஒன்றைக் கண்டறிந்து அதனை பூர்த்தி செய்யும் பொருளாக நமது பொருளை நிலைப்படுத்தலாம்.
"குறைந்த விலையில் நம்பகமான உழைப்புடன் கூடிய பொருளை வழங்குவோம்" என்று நமது நிலைப்படுத்தல் வாக்கியத்தை அமைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி நமது வர்த்தகத் திட்டத்தை அமைக்கலாம் .
ஒரு குறிப்பிட்ட துறையில் கவனத்தைச் செலுத்தி அதில் தனிச்சிறப்பு மிக்கதாய் இருக்கலாம் .
குறிப்பிட விநியோக வழிகளில் மட்டுமே கிடைக்கும் ஒரு பொருளை முற்றிலும் புதிய விநியோக ஊடகம் மூலம் வழங்குவது ஒரு வித நிலைப்படுத்தலை அளிக்கலாம். இணைய வழி விற்பனைக் கடைகளை இதில் முன்னோடிகளாகச் சொல்லலாம்.
வாடிக்கையாளர்கள்:
வாடிக்கையாளர்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் விஷயம் அவர்கள் நம் பொருட்களை வாங்கி நமக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்பதே. சிலருக்கோ தொழிலைச் சேவையாகமாற்றி, வருபவர்களை உண்மையாகத் திருப்திப்படுத்த முயல்வதாகும்.
பொதுவாக தொழில் முனைவோர்கள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவதில், அல்லது அதிக இலாபம் தரக் கூடிய வாடிக்கையாளர்களைப் பெறுவதில், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதில், அவர்களைத் தொடர்ச்சியாக நுகரச் செய்வதில் கவனம் செலுத்துகின்றார்கள்.
வாடிக்கையாளர்கள் என்று எடுத்துக் கொண்டால் . அவர்களின் பாலினம் , வயது, திருமண நிலை, பணி, வருமானம், பொருளாதார நிலை, இவற்றின் அடிப்படையில் அவர்களைப் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் தங்கியிருக்கும் இடத்தின் அடிப்படையில் அவர்களைப் பகுதிகளாகப் பிரிக்கலாம். கிராமப்புறம், நகர்ப்புறம், குளிர்ப்பிரதேசம், வெப்பப் பிரதேசம், கடலோரப் பகுதி போன்றவை இங்கு முக்கியத்துவம் பெறும்.

வாடிக்கையாளர்களின் தனித்துவமான குணாதிசயங்களின் அடிப்படையிலும் அவர்களின் வாழ்க்கைப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் மூன்று வகையினர்:.
முதலாமவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு அலட்சியம் வந்து விடக்கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.

.அடுத்தவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும்

மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்களுடன் உறவு மேம்பட:
வாடிக்கையாளர்கள் தான் முக்கியமான முதல் என்பதை நாம் பணத்தைவிட முக்கியமாகக் அறியவேண்டும்.
வாடிக்கையாளரிடம நம் அணுகுமுறை சிறப்பானதாக இருக்க வேண்டும் .மனத்தின் வரவேற்பு சரியாக இருந்தால், அவர்கள் முகம் மலரும், அவர்கள் சந்தோஷப்படுவதைக் காணலாம். நமக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்பதை விட வந்தவர்கள் திருப்தியாகப் போக வேண்டும் என்கின்ற எண்ணம் நம் ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும்..
வாடிக்கைக்காரர்களுடன் வாக்குவாதம் என்பதே கூடாது. அதிக அளவு எப்படி ஒருவரை வாங்க வைப்பது என்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு எது தேவையோ அதைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று மனம் விழைய வேண்டும்.. நாம் விற்ற பொருள்களில் மீண்டும் குறை வந்தால், அது இனி வராதது போல் நாம் திருத்திக் கொள்ளவேண்டும். வாடிக்கையாளர் வந்து போனால் நமக்குச் சந்தோஷம் ஏற்படவேண்டும். அவர்களும் சந்தோஷப்பட வேண்டும். இப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.
ஆமாம் சாமிகளிடம் குளிர் காய வேண்டாம்:
நம்மிடம் ஆதாயம் பெறும் நெருங்கிய வட்டத்திடமிருந்து மட்டுமே நாம் கருத்துக்களைக் கேட்போமானால் நமக்கு வெறும் பாராட்டுக்கள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கும் .ஆனால் நம் பொருட்களை குறித்து உண்மையான அபிப்பிராயங்கள் கிடைக்காது. நேர்மையான அதே நேரம் கசப்பான உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நம்மிடமிருந்து எதையும் எதிர்பாராத நபர்களை கொண்டு ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்,
இத்தகைய குழுவிடம் நம் கருத்துக்கள் , உத்திகள் , வரவு செலவு திட்டங்கள் குறித்த பரிசீலனைக்கு கொண்டு செல்லலாம். இந்த பொருளாதார யுகத்தில் புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக நமக்குத் தொழில்ரீதியான அனுகூலங்கள் இருக்கும். பல்வேறு விவாதங்கள் அவசியம், தொழிலில் பெரும் நஷ்டங்களைத் தவிர்க்க இத்தகைய பரிசீலனைகள் அவசியம் .
பரஸ்பர நம்பிக்கை , புதிய கருத்துக்களுக்கு ஒப்புதலளிக்கும் பணிச்சூழலில் வாய்ப்புகள் பிரகாசிக்கும்..அது நடைபெறுமானால் வாய்ப்புகளுக்கு எல்லையே இல்லை.. புதிய வாய்ப்புகள் செயாலக்கம் பெறும் பொழுது வெற்றி நம் கைகளில் என சொல்லவும் வேண்டுமா..
- ஆ. ரோஸ்லின்
9842073219
aaroselinegmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement