Advertisement

குலைத்து விடலாமா குழந்தைக் கனவுகளை

இறைவன் எழுதிய இனிய கவிதைகள் குழந்தைகள். இறைவன் அனுப்பிய அன்பின் துாதுவர்கள் குழந்தைகள். கள்ளம் கபடமற்ற நஞ்சு ஏதுமற்ற பிஞ்சு அறிஞர்கள் குழந்தைகள்.
வினா கேட்காமல், அழைத்துச் செல்லும் விரல்கள் பற்றி, அன்போடு நடப்பவர்கள் குழந்தைகள்.
குழந்தைப் பருவம் அரும்பும் குறும்புகள் நிறைந்த அற்புதமான பருவம். வானிலேறிப் பறவையைப்போல் பறக்கத்துடிக்கிற பருவம். தேனியாய் ஞானியாய் பூவிலும் பாவிலும் இருக்கத்துடிக்கிற பருவம். கசப்பின் இயல்பறியா களிப்பின் பருவம். தட்டான்களுக்குப் பின்னால் புல்செருகி ராக்கெட் தட்டான்களாகப் பறக்கிற பருவம். தீப்பெட்டிப் பெட்டியில் நுால்கட்டி திகட்டாமல் தொலைபேசுகிற பருவம். அந்த இனிய பருவத்தைக் குழந்தைத்தன்மையோடு கழிக்க நாம் அனுமதிக்கிறோமா? தொட்டால் வாடிவிடும் மலர்களைப் போல சுடுசொற்களால் கேட்டால்கூட முகம்வாடிவிடும் வாசமலர்கள். வானிலிருந்து கொட்டும் துாயமழைத்துளிகளைப் போன்றவர்கள் குழந்தைகள். அவர்களைப் பன்னீராக மாற்றுவதும் கண்ணீராக மாற்றுவதும் பெற்றோர்கள்தான். கள்ளம் கபடமற்ற செயல்களால் அவர்கள் குடும்பத்திற்கு ஒளியூட்டுகிறார்கள்.
கொண்டாட வேண்டியவர்கள்

கலீல்ஜிப்ரான் சொல்கிறார் “உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்லர்; அவர்கள் காத்திருக்கும் எதிர்காலவாழ்வின் மகன் மகள்கள். அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை,” என்கிறார். நம்மைப் போல் நாம் அவர்களை உருவாக்க நினைக்கிறோம். அவர்களுக்கும் சுயம் இருக்கிறது என்பதை மறந்து. அவர்களை குறை கூறுபவர்களுக்காக அல்லாமல், நல்ல வாழ்ந்துகாட்டிகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
சொன்ன பேச்சைக் கேட்கும் குழந்தைகளையே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சொன்ன பேச்சைக் கேட்காத குழந்தைகளின் பேச்சை பின்நாளில் இந்த உலகம் உற்றுக்கேட்டுக்கொண்டிருக்கிறது. பாரம் துாக்குகிற அவர்களின் கசந்த வாழ்க்கையை வசந்த வாழ்க்கையாக்குவோம். புழுவுக்கு ஆசைப்பட்டு துாண்டில் கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிற மீன்களாய் இருந்தது போதும். நாம் கொண்டாடவேண்டியது குழந்தைகள் தினத்தை அல்ல; நம் வீட்டுக்குழந்தைகளை! நலங்கெடச் செய்வதா நொறுக்குத்தீனிகள் தின்றுகொண்டே துடுக்குத்தனமாகப் பேசுகிறது என்று குழந்தைகள் மீது குற்றப் பத்திரிக்கை வாசித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களாய் நாம் இருக்கிறோம். படித்திருக்கும் பணியொன்றே அவர்களுக்குப் பிடித்திருக்கும் என்று நாம் பிழையாகப் புரிந்துகொள்கிறோம். குழந்தைகள் நம்மை நச்சரித்துக் கொண்டேயிருப்பதாய் நாம் உச்சரித்துக் கொண்டேயிருக்கிறோம். ஓட்டைக் குடத்தை நாம் ஒரு லாரித் தண்ணீரால் நிரப்ப முயல்கிறோம். வாழ்வெனும் கோப்பை நிரம்பவேண்டுமென்றால், நிரம்பப் படிக்கவேண்டும் என்று சொல்லித்தர மறந்துபோகிறோம். நம்மால் முடியாமல் போனதை நிறைவேற்றும் இயந்திரங்களாய் நாம் அவர்களை நினைக்கத் தொடங்கியதன் விளைவு, அவர்களின் குழந்தைத் தனத்தை நாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம்.

கதைவிரும்பிகள் : குடும்பத்தின் மகிழ்ச்சி குழந்தைகளின் மகிழ்ச்சியில்தான் உள்ளது என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம். தேர்ந்த கதைசொல்லியான பாட்டியின் இடத்தை யார் பதிலீடு செய்ய முடியும்? கதைகேட்காக் குழந்தைகள் எப்படி வாழ்வைக் காவியமாய் கொண்டாடும்?
அவர்களை மூடை துாக்கிகளாக்கி முதுகை வளைக்கும் பள்ளிகள்; எந்த நேரமும் அவர்களைப் படிக்க மட்டுமே சொல்லும் பெற்றோர்கள். நடுவில் கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தைத்
தனத்தை இழந்துகொண்டிருக்கும் குழந்தைகள். ஜன்னலில் பளிச்சிடும் மின்னல் மாதிரி, நம் இன்னலில் மனம் மாற்றி இன்பம் தருபவர்கள் நம் குழந்தைச்செல்வங்கள். அவர்கள் மீது பாரங்களை ஏற்றிய பாவங்களைச் செய்தவர்களாய் நாம் மாறிப்போகக் கூடாது.

விளையாட விடுங்கள் : குழந்தைகளை விளையாட விடுங்கள். அவர்களின் திறன்களுக்குத் திரையிட்டு மறைக்க வேண்டாம். சுமைதாங்கிக் கற்களா அவர்கள்? மதிப்பெண் மண்டபங்களாக்கிவிட்டோம் மழலை மனங்களை. ஓடி விளையாட நேரமற்று பாடி விளையாடவும் நேரமற்று அவர்கள் வீட்டுப்பாடங்களில் விதைக்கப்பட்டு விட்டார்கள். அப்பாவிடமும் அம்மாவிடமும் அவர்கள் கேட்பது அன்பையும் பாசத்தையும்தானே. குற்றச்சாட்டுகளை ஏன் குழந்தைகள் மேல் வைக்கவேண்டும்? நம்மைக் குளிரவைப்பதில் மழையும் மழலையும் ஒன்றுதான். கார்ட்டூன் பொம்மைப் படங்களுக்குள் காலம் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். சலிப்பறைகள் ஆகி
விட்டனவா அவர்களின் வகுப்பறைகள். எப்படி மாற்றப்போகிறோம் இந்த நிலையை?

இயக்க வைப்பவர்கள் : குழந்தைகள் எப்போதும் இயக்கவைப்பவர்கள். எல்லோரையும் இயக்கவைப்பவர்கள். பென்சில் சீவுகிறமாதிரி பெஞ்சில் ஏற்றிச் சீவிக்கொண்டே இருக்கிறோம் அவர்களின் குழந்தைத்தனமான நிமிடங்களை. நம் நினைவெனும் நெடுந்தேரின் ஆதார அச்சுகள் அவர்கள். அவர்கள் சிறகுகள் வீசிப்பறப்பதே சாலச்சிறந்தது. சிதறிப்போகிற சிறுஉருண்டைகள் மாதிரி உதறிப்போகிறது இந்த வாழ்க்கை பலவற்றையும். அவர்களிடம் பேசிக் களிக்கிறப் பெருங்கதைகள் ஆயிரமுண்டு. காத்திருக்கும் வாழ்வு நந்தவனத்தில் பூத்திருக்கும் குழந்தைப்பூக்கள் உன்னதமானவர்கள். ஊசியோடு ஊர்ந்து செல்கிற நுால் மாதிரி ஆசையோடு அம்மையப்பனோடு நகர்ந்து செல்பவர்கள் குட்டிக் குழந்தைகள். நல்லதோர் வீணைகளை நலங்கெடச் செய்வது நல்லதா?அவர்களின் திறன்களை ஆமோதித்து நாம் தரும் சிறு பரிசுகள் கூட அவர்களைச் சீரிய சிந்தனையாளர்களாய் மாற்றிவிடும். சிறுபரிசுகள் தந்து குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்.ஆயுதங்களால் சண்டையிடுவது மட்டும் சண்டையன்று சொற்களும் விற்களாய் தாக்கும் குழந்தைகளின் மெல்லுலகை! எனவே ஏதுமறியாச் சின்னஞ்சிறு குழந்தைகள் முன் சண்டையிடுவதைத் தவிர்த்துவிடுவோம். உதவி, பெரியோரை மதித்தல், மனிதநேயம், தன்னொழுக்கம் போன்றவைகளின் படி வாழக் கற்றுத்தாருங்கள்.

பொறுப்பான பெற்றோர்களாய் : குழந்தைகளை நாம் கக்கத்தில் துாக்கிக்கொண்டே இருப்பதால், சோம்பேறிகளாய் மாற்றிக் கொண்டிருக்கிறோம். விழ அனுமதிக்கும்போதுதான் அது எழப் பழகுகிறது. வெற்றி என்பது வெற்றுச் சொல்லன்று; அதை அடைய வலிகள் பட்டுத்தான் ஆகவேண்டும். வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று புரியவையுங்கள். எல்லா அனுபவங்களையும் அவர்கள் பெற வாய்ப்பளியுங்கள். இழப்பும் இருப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். சகமனிதர்களை நேசிக்கக் கற்றுத்தாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று நன்மைக்கும் தீமைக்கும் அவர்களையே பொறுப்பேற்கச் சொல்லுங்கள். வாழ்வில் நாம் கற்கும் ஏதும் வீணாகாது. அடுத்தடுத்த புள்ளிகளே அழகான நீள்கோடாய் உருமாறுகிறது என்பதைப் புரியவையுங்கள். நாம் நம் குழந்தைகளின் நேரங்களைத் துரத்திக்கொண்டே ஓடுகிறோம். பாவம் அவர்கள் பாலகர்கள். அலைகளோடு அலைகிற மீன்கள் மாதிரி, அவர்கள் கலைகளோடு அலைபவர்கள்! அவர்களுக்குள் கலைத்திறன்கள் கொட்டிக்கிடக்கலாம்; ஆகவே ஊக்கப்படுத்துங்கள் உற்சாகப்படுத்துங்கள். குற்றம் சொல்லாத சுற்றங்கள் குழந்தைகளுக்குத்தான் உண்டு. அரும்பும் குழந்தைப்பருவத்தில் குறும்பும் இருக்கும்.
அவர்களுக்கு மிட்டாய் கொடுத்தது போதும்; மிச்சமிருக்கும் இயற்கையையாவது அப்படியே சேதமில்லாமல் கொடுப்போம். அவர்களுக்கும் குட்டிக் கனவுகள் உண்டு என்று புரிந்துகொண்டு அக்கனவுகளை நனவாக்கத் துணை நிற்போம்.

முனைவர் சௌந்தர மகாதேவன்
தமிழ்ப் பேராசிரியர்
திருநெல்வேலி. 99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement