Advertisement

உங்களுக்கு சர்க்கரை இருக்கா?

சர்க்கரை நோய் இல்லாத நபர்கள் அரிது என்ற நிலை பொய்யல்ல. நம்நாட்டில் 125 கோடி மக்கள் தொகையில் 6.9 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்மில் நடுத்தர வயது நபர்களில் 12 பேரில் ஒருவருக்கு இந்நோய் உள்ளது. உலகளவில் உயிரிழப்பிற்கான காரணங்களில் சர்க்கரை நோய் 6வது இடத்தில் உள்ளது. இந்நோயினால் இன்று ஆறு நொடிக்கு ஒருவர் உயிரிழக்கிறார். விபத்தின்றி பிற காரணங்களால் கால் இழப்பதில் இந்நோய் முதலிடத்தில் உள்ளது. கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயினால் பாதிக்காத உடல் உறுப்புகளே இல்லை என்பது நம்மில் பலர் அறிந்த உண்மையே. ஆனால் நாம் அறியாதது என்னவென்றால், இந்நோய் நம்மில் 3.6கோடி மக்களுக்கு இன்னும் கண்டறியப்படவில்லை. மற்றொரு 3.6கோடிபேருக்கு சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த கூட்டு தொகையான 7.2 கோடி பேருக்கு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டால், நம்மில் நடுத்தர வயதுடையவர்களில் 9 பேரில் ஒருவருக்கு இந்நோய் உள்ள அவல நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புது பணக்காரர்களின் நோய் : சர்க்கரை நோயை 'புது பணக்காரர்களின் நோய்' எனக் குறிப்பிடலாம். காரணம் மேட்டுக்குடியினர் விழிப்புணர்வால் தங்கள் உடலை முறையான உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியால் பாதுகாத்து கொள்கின்றனர். வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு உழைப்பு அதிகம், உணவு குறைவால் பாதிப்பில்லை. ஆனால் புதிதாக பணம் சம்பாதித்தவர்கள் துாரம் குறைவான இடங்களுக்கு செல்லக்கூட சைக்கிளுக்கு பதிலாக பைக்கை பயன்படுத்துதல், அதிக அசைவ உணவு போன்ற தவறான வாழ்க்கை தர மாற்றங்களால் சர்க்கரை நோய் உருவாகிறது.
ஆரம்பநிலை அறிகுறி : அதிக உடல் எடை, உடலுழைப்பின்மை, 30 வயதிற்கு மேல் குடும்ப பாரம்பரியத்தால் பாதிக்கப்படுவோர், ரத்த அழுத்தம்,கெட்ட கொழுப்புகள், இருதய கோளாறு போன்ற பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு ஆரம்ப நிலை சர்க்கரை நோய் அறிகுறி இருக்கும். அதிக எடையுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் அக்குழந்தையின் தாயார்களில் சினை முட்டை பையில் கட்டிகள் உள்ள பெண்கள் போன்றோருக்கு ஏற்படுகின்றன. சர்க்கரையின் அளவு என்ன சர்க்கரை நோயிற்கான விழிப்புணர்வு பெருகிவரும் நிலையில், நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் ஆரம்ப நிலை அல்லது நடுநிலை சர்க்கரையாகும். ரத்த பரிசோதனையில் கீழ்க்கண்டவாறு சர்க்கரை நிலையை கண்டறியலாம். காலை வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரையானது 110 மி.கிராம்/டி.எல்.,கீழ் இருப்பின் சர்க்கரை நோய் கிடையாது.126 மி.கிராம் /டி.எல்.மேல் இருப்பின் சர்க்கரை நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. 110-=125 மி.கிராம்/டி.எல்.,உள் இருக்க கூடிய சர்க்கரையானது ஆரம்பநிலை அல்லது நடுநிலை சர்க்கரை எனப்படுவதாகும். இதே போன்று காலை உணவு முடித்த 2 மணிநேரம் கழித்து பரிசோதிக்க கூடிய ரத்த சர்க்கரையானது, 140மி.கி.,/டி.எல்., கீழ் இருப்பின்சர்க்கரை நோய் கிடையாது. 200 மி.கி./டி.எல். மேல் இருப்பின் சர்க்கரை நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. 141-=-199 மி.கி.,/ டி.எல். உள் இருக்க கூடிய சர்க்கரை நோயானது ஆரம்ப நிலை அல்லது நடுநிலை சர்க்கரை ஆகும். மேலும் 3 மாதங்களில் ஏற்படும் ரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கங்களை கணக்கில் கொண்டு பரிசோதனை செய்ய கூடிய எச்.பி.ஏ.1சி எனப்படும் சராசரி சர்க்கரையினாலும் இந்நிலையை கண்டறியலாம். ஆரம்பநிலை சர்க்கரை நோயைக் கண்டறிவது மிக அவசியம்.ஏனெனில் இந்நிலையில் உள்ள 20- முதல் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயாளியாக மாறுகின்றனர். இதுமட்டுமின்றி ரத்தகுழாய் அடைப்புகளால் ஏற்படக்கூடிய மாரடைப்பு, பக்கவாதம், கால் ரத்தகுழாய் அடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் பெருமளவில் அதிகரிக்கின்றது.
எளிய வாழ்க்கை முறை : நல்ல செய்தி என்னவென்றால் ஆரம்பநிலை சர்க்கரை நோயை எளிமையான வாழ்க்கை தர மாற்றங்களால் தடுப்பது மட்டுமின்றி, மாரடைப்பு மற்றும் சர்க்கரை நோயின் பின்விளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். இந்நிலை சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதால், உடல் நலன் மட்டுமின்றி மனநலமும் பலப்படும். இந்நிலையை கண்டறிவது நோய்க்கான சிகிச்சைக்கான பணம், நேர செலவு குறைகிறது.வாழ்க்கை தரமாற்றம் என்பது உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் போன்றவை உள்ளடங்கியதாகும். ஆரம்பநிலை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு அதிக உடல் எடை மிக முக்கியமாகும். இதை வாழ்க்கை தர மாற்றத்தால் வெல்ல முடியும். உணவுமுறை மாற்றம் என்பது மூன்று வேளை சாப்பிட வேண்டிய உணவை ஆறு வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும்.உடல் எடை கூடாத வகையில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை சரிவிகிதமாக உண்ணுதல் அவசியம். உடல் எடை மற்றும் ரத்த சர்க்கரையை அதிகரிக்க கூடிய உணவுகளான இனிப்பு வகைகள், மாவுசத்து அதிகமுள்ள பரோட்டோ,கூழ்,களி, பிஸ்கட், சாக்லேட், கேக், பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், பழரசங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் அவசியம். உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடிய ஊறுகாய், அப்பளம், உப்பு மிகுந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். ஆரம்பநிலை சர்க்கரை கட்டுப்பாட்டில் நாம் பின்பற்றவேண்டிய உணவுமுறை கொள்கையானது “விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம்” என்பதே.
ஐந்து நாட்கள் நடைபயிற்சி : வாழ்க்கை தரமாற்றத்தில் இரண்டாவது அம்சமான உடற்பயிற்சியில் எளியது நடைபயிற்சி. மூட்டு தேய்மானம்,இருதய செயலிழப்பு மற்றும் சர்க்கரை நோயினால் கண் விழித்திரை ரத்த கசிவு போன்ற பிரச்னைகள் இல்லாத அனைவரும் செய்ய கூடிய எளிமையான பயிற்சியாகும். ஒரு வாரத்தில் 5 நாட்களுக்கு 30 நிமிடங்களுக்கு குறையாமல் தங்களால் முடிந்த வேகத்தில் நடப்பது போதுமானது. நடைபயிற்சி ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் இருத்தல், உடல் எடை குறைத்தல் மட்டுமின்றி எலும்பு வலிமை, இருதய ஆரோக்கியம், மனச்சோர்வு குறைதல் மற்றும் நல்ல துாக்கத்திற்கு உதவுகிறது.
வாழ்க்கை தரமாற்றத்தில் மூன்றாவது அம்சம் மன ஆரோக்கியம். இதற்கு தெளிவான சிந்தனைகள், காலத்தை வீணாக்காமல் உரிய நேரத்தில் நம் கடமைகளை,வேலைகளை முடித்தல்,நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவழித்தல், உடற்பயிற்சி, நல்ல துாக்கம் மற்றும் புகை, மது தவிர்த்தல் போன்றவை இன்றியமையாதது.மேற்கூறிய அனைத்தையும் மேற்கொண்டால் உடல் எடை 7 முதல் 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஆரம்பநிலை சர்க்கரை மட்டுமின்றி, இருதய பாதிப்பு மற்றும் சர்க்கரை நோயினால் பின் விளைவுகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்வதால் நமது உடல் மற்றும் ஆரோக்கியம் அடைகிறது.
-டாக்டர் சி.ராஜ்குமார்சர்க்கரை நோய் மருத்துவர் தேனி.drcprajnalamhospital.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Kurangu Kuppan - usapuram,இந்தியா

    110-=125 மி.கிராம்/டி.எல், after food, 140மி.கி.,/டி.எல்., கீழ் இருப்பின் சர்க்கரை நோய் கிடையாது. 200 மி.கி./டி.எல். . இந்த அளவுகளை முடிவு செய்தது யார், மருந்து கம்பெனி வியாபாரி தானே.எல்லாம் மருந்து கம்பெனி லாபி பண்ணுகிற வேலை. இவனுகளை ஒழித்தாலே நிம்மதியாக இருக்கும். பிறகு இந்த கால டாக்டர் எல்லாம் பார்க்க வருகின்ற எல்லாரையும் பயமுறுத்தியே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். மேல இருந்து எப்போ கிளம்புன்னு மெசேஜ் வருதோ எல்லாரும் கிளம்ப வேண்டியது இதுலே குட் health என்ன இல்ல bad health இருந்தா என்ன

  • Kurangu Kuppan - usapuram,இந்தியா

    110-=125 மி.கிராம்/டி.எல், after food, 140மி.கி.,/டி.எல்., கீழ் இருப்பின் சர்க்கரை நோய் கிடையாது. 200 மி.கி./டி.எல். . இந்த அளவுகளை முடிவு செய்தது யார், மருந்து கம்பெனி வியாபாரி தானே. எல்லாம் மருந்து கம்பெனி லாபி பண்ணுகிற வேலை இவனுகளை ஒழித்தாலே நிம்மதியாக இருக்கும். பிறகு இந்த கால டாக்டர் எல்லாம் பார்க்க வருகின்ற எல்லாரையும் பயமுறுத்தியே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். மேல இருந்து எப்போ கிளம்புன்னு மெசேஜ் வருதோ எல்லாரும் கிளம்ப வேண்டியது இதுலே குட் health என்ன இல்ல bad health இருந்தா என்ன

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement