Advertisement

அழகான வாழ்க்கைக்கு அடித்தளம்

பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களிடம், தலையெழுத்தை நிர்ணயிப்பது அழகிய கையெழுத்து தான் என ஆசிரியர்கள் கூறுவதை கேட்டிருக்கலாம். அழகிய கையெழுத்து கொண்ட மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்கள் கிடைக்கும். அழகாக எழுதுவோர் வகுப்பறையிலும் முதலிடம் பெறுகின்றனர். சமூகத்திலும், அலுவலகத்திலும் முன்னுரிமை வழங்கப்படும்.என்ன தான் சிறப்பாக படித்திருந்தாலும் கையெழுத்து சரியில்லை என்றால் மதிப்பெண் குறைந்து விடும். தேர்வுகளில் அழகாக இடம் பெறும் எழுத்துக்கள் அதை திருத்தும் ஆசிரியர்களின் மனங்களை கொள்ளையடிக்கிறது. தவறை கூட அறியாமல் செய்யும் அழகிய கையெழுத்து, அதிக மதிப்பெண்களையும் பெற்றுத்தருகிறது.
பயிற்சியும் முயற்சியும் : இப்போது கூட தங்கள் கையெழுத்தை உரிய பயிற்சியும், முயற்சியும், ஆர்வமும் இருந்தால் அழகாக்க முடியும். மாணவர்களின் கையெழுத்து மேம்பட இன்று அரசு உதவி பெறும் பள்ளி மணவர்களுக்கு தரமான முறையில் இரண்டு, நான்கு கோடு நோட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் குறைபட்டு பாழ்பட்டு கிடக்கும் கையெழுத்தை துாக்கி நிறுத்தி, அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வித்துறை ஆகியவை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்து அதை மாணவர்களுக்கு கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றன.
ஓவியமும் அவசியம் : மாணவர்களிடம் கையெழுத்து மேம்படுவது போல, அவர்களிடம் பாடம் மற்றும் பாடம் சாரா வகையில், படம் வரையும் ஆர்வத்தை அரசு ஏற்படுத்தி வருகிறது. பாடங்களுடன் இணைந்த அறிவியல், கணக்கு பாட படங்கள் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணை பெற்று தருகிறது. அழகிய படங்களை மாணவர்கள் விடைத்தாளில் வரையும் போது, முழுமதிப்பெண் கிடைக்க வாய்ப்பாக அமைகிறது. ஓவிய திறன் மேம்பட அரசு இன்று, பள்ளிகளில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. ஓவிய ஆசிரியர்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
உலக பொது மொழி பேசா மொழி : ஓவியம் என்பது பேசா மொழி மட்டுமல்ல உலக பொது மொழி. மொழி, நாடு, மாநிலம் என வேறுபடலாம். ஓவியம் மட்டும் எல்லா மொழி பேசுபவர்களையும் ஒரே விதமாக உணர வைக்கும். ஆதி மனிதன் ஓவியம் மூலமே வரைந்து காட்டி பிறருடன் தொடர்பு கொண்டான். ஓவியம் எழுத்துக்களின் தாய் என்றழைக்கப்படுகிறது.அனைத்து மொழிகளுக்கும் முன்னோடி ஓவியக்கலை. நிகழ்ச்சிகளை அறிய ஓவியங்கள் துணைபுரிகின்றன. கதையுடன் தொடர்புடைய ஓவியங்கள், மனதில் நிலைத்து நின்று அக்கதைக்கு வலு சேர்க்கின்றன. பத்திரிகை கார்ட்டூன்கள் என்றும் வாசகர்களிடம் செல்வாக்குடன் திகழ்கிறது. புகழ்பெற்றவர்களின் கார்ட்டூன்கள், காலத்தால் அழியாமல் நின்று செய்தி கூறி கொண்டே இருக்கின்றன.
சிந்தனை வளர்க்கும் ஓவியம் : அறிவாற்றல், சிந்தனையும் வளர்த்து கொள்ள ஓவியம் துணை புரிகிறது. மனம், கை, கண் இவை மூன்றும் ஒருமுகமாக செயல்பட வைப்பது ஓவியமே. தொழில் கல்வியில் ஓவியத்தின் பங்கு அதிகம். காதால் கேட்பதை விட கண்ணால் பார்ப்பது மாணவர்களுக்கு நினைவு சக்தியை நிலைநிறுத்தும். வரைவதால், புலன்களின் மீது ஆதிக்கம் ஏற்படுகிறது. தன்னை ஒருமுகப்படுத்தி கொண்டு பொறுமையாகவும், சுத்தமாகவும் இருக்கப் பழகுகிறான். ஓவியத்தில் ஏற்படும் அதீத காதல் பின் நாளில் மிகச் சிறந்த ஓவியராக்கி விடும். இதன் மூலம் பணம் வரும். புகழ் கிடைக்கும். தாய் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்துடன் ஓவியம் அதிகம் தொடர்புடையது.
அழகிய கையெழுத்து : மாணவர்கள் கற்றலை முழுமையாக அடைவதில் அவர்களின் கையெழுத்து முக்கிய பங்காற்றுகிறது. சரியான அளவு, உருமாறாது, போதிய இடைவெளி விட்டு மாணவரை எழுத பயிற்றுவிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். தமிழ், ஆங்கில மொழி கையெழுத்தை மேம்படுத்த தசைப்பயிற்சிகள், செயல்பாடுகள் எழுத்து பயிற்சிகள் அவசியமாகிறது.ஆரம்ப நிலையில் கரும்பலகையில் விருப்பம் போல கோடுகள், வளைவுகள், சுழிகள் போன்றவற்றை கிறுக்க வரைய பழக்க வேண்டும். அன்றாட வாழ்வில் காணப்படும் பொருட்களை எளிய முறையில் வரைய பழகுதல் வேண்டும். நேர்கோடு, படுக்கை கோடு, வளைவுகோடு, சாய்வு கோடு, முக்கோணம், சதுரம் போன்றவைகளை உபகரணங்கள் இன்றி வரைய பழகுதல் நல்லது.
பயிற்சி அவசியம் : குழந்தைகள் எழுதுகோலை சரியான முறையில் உரிய கோணத்தில் கையாள கற்றுத்தர வேண்டும். கையெழுத்து பயிற்சியின் போது குழந்தைகளின் கண் மற்றும் கைகளின் ஒருங்கமைவு மிகவும் அவசியம். எழுத்துக்களின் வடிவங்களை அடியொற்றி எழுத செய்தல், சிறந்த பயிற்சியாக அமையும். வரைதல் பயிற்சியும் கையெழுத்தினை அழகானதாக்கும். அழகான கையெழுத்து என்பது வரமாகும். அதனை பயிற்சி எனும் தவத்தால் பெறலாம். வரியொற்றி எழுதுதல் பார்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல் என்பது எழுத பழகுதலின் முதல் நிலை. வேகத்தை கூட்டி கையெழுத்தை திருத்தமாக எழுத பயிற்றுவித்தல் என்பது இரண்டாம் நிலையாகும். இளம் வயதிலேயே அழகிய கையெழுத்து என்ற நிலைக்கு மாறி விடுதல் எளிது. அழகிய கையெழுத்து பயிற்சி இன்று பரவலாக வரவேற்பை பெற்று வருகிறது. எந்த வயதிலும் கையெழுத்தை திருத்திக் கொண்டு சாதிக்கலாம். எனினும் இளம்வயதிலேயே அழகிய கையெழுத்தின் மீது மோகம் கொள்ள வேண்டும்.
குறையும் எழுத்து பழக்கம் : இன்று பொது மக்களிடம் எழுதும் பழக்கம் வெகுவாக குறைந்து கொண்டுவருகிறது. அலைபேசி வரவு, அதன் அபரிமிதமான வளர்ச்சி எழுதும் வாய்ப்பை குறைத்து விட்டது. எழுதுதல் ஒரு கலையே. முகநுால், குறுந்தகவல் என சுருக்கி கொண்டு வாழ்கிறோம். இதிலிருந்து விடுபட்டு தினமும் சில நிமிடங்களாவது எழுதுவதற்கு ஒதுக்குவோம். இன்று நம்மில் பலரும் பேனாவை தொட்டே பல ஆண்டுகள், பல மாதங்கள் ஆகிறது என்கிறார்கள். பாக்கெட்டில் இருக்கும் பேனா ஒரு கவர்ச்சி பொருளாகவே இருக்கிறது. அழகிய கையெழுத்து அழகான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதில் ஐயம் வேண்டாம்.
வெ.சோ.ராமு, ஆசிரியர்செ.பாறைப்பட்டி98434 06805

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement