Advertisement

யாகாவாராயினும் நா காக்க!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுஅதிலும் கூன், குருடு, செவிடு நீங்கிப்பிறத்தல் அதனினும் அரிது
- அவ்வையாரின் வாய்மொழிக்கேற்ப மனிதனையும், விலங்கினையும் பிரித்துக்காட்டுவது பேச்சு மட்டுமே. தன் பெயரை சொல்லவும், நமது சாதனைகள் வெளிப்படவும், பலருடன் தொடர்பு கொள்ளவும் மொழி கண்டிப்பாக வேண்டும். இடம், பொருள், ஏவல் கொண்டு பேசப்படும் பேச்சுக்கள் மட்டுமே நன்மை பயக்கும். மற்றவை நீங்காத துன்பத்தை தரும்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா இனிய உளவாக இன்னாது கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
என்ற குறளுக்கேற்ப, நல்ல சொற்கள் இருக்கும்போது தீய சொற்களை பேசுவது கனியிருக்கும்போது காய் பறிப்பது போன்றதாகும். நண்பர்கள், குடும்பம், சமுதாயம், மேடை என எங்கு பேசினாலும், நேர்மறை கருத்துக்களை கூற வேண்டும். தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம் என்ற கூற்றிற்கு பதில் நம்பிக்கை இல்லாதவர் தோல்வி அடைவார்கள் என பேசுதல் கூடாது. இப்படி நடந்து கொண்டால், 'எனக்கு பிடிக்காது' என்று சொல்வதற்கு பதிலாக எனக்கு பிடித்த மாதிரி நடந்துகொள் என்று கூறலாம்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
மனித இனம் ஒன்றுமட்டுமே உறவுகளுடன் கூடிய சமுதாய வாழ்க்கையை நடத்துகிறது. தனிமனித வாழ்க்கை என்பது இனிமை சேர்க்காது. இன்றைய சூழலில் உறவுகளை தொடர்வது பெரும் சவாலாகவே உள்ளது. உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பது இல்லை. திருமணம் ஆகும்வரை பாசத்துடன் உள்ளோர் பின்னர் மாறிவிடுகின்றனர். சித்தப்பா, பெரியப்பா, பிள்ளைகள் ஒற்றுமையாக இருப்பது வெறும் 20 சதவீதம்தான் இருக்கும். காரணம் நாம்தான். சிறிய தீப்பொறி ஒன்றை ஊதி ஊதிப் பெரிதாக்கும் நமது பேச்சுக்கள்தான் காரணம். பெண்களால் உறவுகளில் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகளை சமாளிக்க, ஆண்கள்படும்பாடு சொல்லிமாளாது.
நாவினாற் சுட்ட வடு
உடலில் ஏற்பட்ட நெருப்புக்காயம் மருந்தினால் ஆறிவிடும். ஆனால் நாவினால் சுடப்பட்ட வடுவானது வாழ்நாள் முழுவதும் இருக்கும். இதில் பாதிக்கப்பட்டோர் இறப்பில்கூட சேராமல் இருக்கின்றனர். ஆழ்ந்த நட்பைக்கூட இந்த புறம்கூறும் பேச்சுக்கள் இழக்க செய்கின்றன. சுத்தமான பாலில் விழுந்த ஒரு துளி விஷம்போல சிலரது பேச்சுக்கள் பல்லாண்டு கால நட்பைக்கூட முறித்துவிடும்.
சொல் இழுக்கு
'வாயிலிருந்து வராத சொற்களுக்கு நீ எஜமான்வந்த சொற்களுக்கு நீ எதிரி'
என்பதற்கேற்ப கவனமுடன் பேச வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது கவனமுடன் உரையாட வேண்டும். இளம்பெண்ணும், நடுத்தர வயதுள்ளவரை (தோற்றத்தில்) பார்த்து, 'இது யார் உங்க மகளா?' என கேட்க, அவரோ 'இல்ல, என் மனைவி' என்பார். 'கொஞ்சம் யோசித்து பேசியிருக்கலாம்' என நினைப்போம். குழந்தைகளை கூட்டிவரும் நபரை பார்த்து 'உங்க பேத்தியா' எனக்கேட்க, 'எனது பிள்ளைகள்' என்பார். கண்டிப்பாக நமது நாக்கில் சனிதான் குடியிருக்கிறது என நினைப்போம். கூர்மையான கத்தி போன்றது நமது பேச்சுக்கள் ஒரு உயிரையும் கொல்லும். நாம் பயன்படுத்துவதை பொறுத்து அமைகிறது.
பணிபுரியும் இடங்களில்
நாம் மென்மையாக பேசுவதன் மூலமே அனைவரையும் ஈர்க்க முடியும். மற்றவர்கள் பேசும்வரை கவனமாகவும், ஆர்வமாகவும் கேட்க வேண்டும். அதன் பின்னரே நமது கருத்துக்களை கூற வேண்டும். அவர் சொல்வது தவறு என்றாலும், வாக்குவாதம் செய்யாமல் நிதானமாக உண்மையாக எடுத்துக்கூற வேண்டும். நமது மேல் அதிகாரி சொல்வது தவறே என்றாலும், அதை நாம் காட்டிக்கொள்ளாமல் பேச வேண்டும். இதன்மூலம் சுமூகமான போக்கை நிலைநிறுத்த முடியும்.
மனைவியிடம் பேசும்போது
வாழ்க்கையின் பெரும்பகுதியாகவும், நம்மில் பாதியாகவும் இருப்பவள் மனைவி. கணவன், மனைவி நல்ல புரிதலான பேச்சு மூலமே குடும்பம் மகிழ்ச்சியாக செல்லும். நல்ல தம்பதிகளால் மட்டுமே சிறந்த குழந்தைகளை வளர்க்க முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சாதுவாக பேசுவதன் மூலமே, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்.மற்றவர்களை பாராட்டியும், வாழ்த்தியும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாகவே புகழ்ச்சியுரைகள் மற்றவர்களை ஈர்க்கும். நல்ல இனிமையான சொற்கள் மட்டுமே நம்மை மாமனிதனாக அடையாளம் காட்டும். செயல்படுத்துவோம். மகிழ்ச்சி அடைவோம்.
கேலியும், கிண்டலும்
நகைச்சுவை என்பது கேட்போரின் மனதை வலிக்கச்செய்யாமல், மனம் விட்டு சிரிக்க வைக்க வேண்டும். மற்றவர்கள் காயப்படுத்தி கேலி செய்வதன் மூலம் சிரிக்க வைக்கக்கூடாது. ஏளனம் செய்து அதாவது உருவம், உயரம், குட்டை, பருமன், மெலிவு இவற்றை வைத்து நகைச்சுவை செய்யக்கூடாது. நகைச்சுவைக்கும், கேலி கிண்டலுக்கும் நுாலிழை வித்தியாசமே உள்ளது.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தனது பாடலில், ''உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்பார். கத்தி, வாள், அம்பு, ஈட்டி, அரிவாள் என்று மற்றொருவர் பதில் சொல்வார். அதெல்லாம் இல்லை. 'நயவஞ்சகரின் நாக்குதான் பயங்கரமான ஆயுதம்' என்பார். தத்துவத்தோடு கூடிய நகைச்சுவையும் காலத்தால் அழியாமல் புகழ்பெறும். ஒரு மனிதன் எதனை காக்கவில்லை என்றாலும், நாவினை காக்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர் முன் அவமானப்பட வேண்டும்.
இன்னாச்சொல் வேண்டாம்
முதல் சந்திப்பின்போதே, வயது, திருமணம், குழந்தைகள், சம்பளம் பற்றி கேட்கும்போது, இதில் ஏதாவது குறை இருந்தால் கண்டிப்பாக அவரின் முகம் வாடிவிடும். துக்கம், அவமான துயரங்கள், கொடூரமான நோய்கள் இவற்றை விசாரிக்கும்போது மேலோட்டமாக பேசுங்கள். தோண்டித் துருவி, புலன் விசாரணை செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். வயது குறைந்தவர்களிடம் ஒருமையில் பேசாமல் பன்மையில் பேசினால், நம் மேல் வைத்திருக்கும் மரியாதை கூடி நமது நட்பை விரும்புவார்கள். பெண்களிடம் கண்களை பார்த்து பேசுவதும், நாகரிகத்தோடும், தெளிவாக பேசினால் நம் மீது மதிப்பு கூடும். பெண்களிடம் சிலேடையாக பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.மூன்றாம் நபர்களை புறம் கூறுவது, அடுத்தவர்களை பற்றி அதிகமாக சிந்திப்பது நமது மனதை குப்பை தொட்டியாக்கிவிடும். வாழ்க்கை துணையிடம் பேசும்போது பாராட்டுவதும், வாழ்த்துவதும் இனிமை சேர்க்கும் குறைகளைவிட்டு நிறைகளை மட்டும் பேசுங்கள். குறைகள் நிறைகளாக மாறி மகிழ்ச்சி பொங்கும்.
இல்லறத்தின் சிறப்பு
நிதானமாகவும், விட்டுக்கொடுப்பதும், ஒருவர் கோபப்படும்போது மற்றொருவர் அமைதி காத்தலும், இனிய இல்லறத்தின் சிறப்புகள். தவறான வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிப்பது, வாழ்க்கை துணையிடம் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
உள்ளத்திலே உண்மையொளி உண்டாயின்வாக்கினிலே தெளிவு உண்டாகும்
என்ற பாரதியின் வரிகளின்படி, மனம் தெளிவாக இருந்தால் மட்டுமே, நாவில் எழும் சொற்கள் தெளிவாக அமையும். புறம், கூறுதல், வஞ்சக எண்ணம், பொய் சொல்லல் மனதில் இருந்தால் தெளிவாக பேச்சு வராது. உளறல்களும், தடுமாற்றமும் நம்மை காட்டிக்கொடுத்துவிடும்.மனித வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, ஒவ்வொரு நாளும் இனிமையாய் அமைய நாவினை கட்டுப்படுத்தி இனிமையான சொற்களை மட்டும் பேசுவோமாக!
- ச.மாரியப்பன்முதுகலை ஆசிரியர்கம்பம். 94869 44264

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • moahmed - nagai ,இந்தியா

  பேசாம ஊமையாக பிறந்து இருக்கலாம்

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  மிக பயனுள்ள நல்ல கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி.

 • Nagaraj - Doha,கத்தார்

  மிகுந்த பயனுள்ள ஆலோசனைகள் நிறைந்த கட்டுரை .

 • சிந்திக்கும் வடிவேலு - Bangalore,இந்தியா

  உண்மை

 • abu lukmaan - trichy,இந்தியா

  ஆசிரியர்க்கு 1) எல்லா உயிர்களும் மனிதனை போல சமுதாய வாழ்க்கை வாழ்கிறது .அதனால் 2) எல்லா உயிர்களுக்கும் மொழி இருக்கிறது.அவைகள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்கின்றன ..மற்ற சொல்ல பட்ட விஷயங்கள் ஓகே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement