Advertisement

சட்டங்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்

நீண்ட கால பழக்கவழக்கங்கள், வழிமுறைகள், கலாசாரங்கள், பண்பாடுகள் உலக நாடுகளில் சட்டத்திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. உலகத்தில் சட்ட விதிகளை தீர்மானிப்பதில் மத நம்பிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு நாட்டிலும் அங்குள்ள பெரும்பான்மையான மக்களால் அந்தந்த நாட்டு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.இன்று பல நாடுகளில் விசித்திரமான பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவை வேடிக்கையாகவும் உள்ளன.
பிரான்ஸில் நீச்சலடிக்க போகிறீர்களா : ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்யும் வெளிநாட்டவர்களில், 12 பேரில் ஒருவர் வாகனச் சட்ட விதி மீறுதலுக்காக தண்டிக்கப்படுகின்றனர். அங்கு பல வித்தியாசமான சட்டங்கள் அமலில் இருப்பதே காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பிரான்ஸ். நம் நாட்டில் நீச்சல் குளம் உட்பட பொது இடங்களில் குறைந்தளவு உள்ளாடைகள் அணிந்திருந்தால் அனுமதி மறுக்கப்படும். பிரான்சில், பொது நீச்சல் குளத்தில் சுகாதார காரணங்களுக்காக தளர்வான ஆடைகள் அணிந்து குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்கள் தளர்வான அரைகால் சட்டையுடன் குளிக்க முடியாது. ஆனால் அவர்கள் 'ஸ்பீடோ' எனப்படும், உடலுடன் மிக நெருக்கமாக ஒட்டியிருக்கும் உள்ளாடையை பயன்படுத்தி குளிக்கலாம். அத்தகைய உடையை அணிய நீங்கள் தயங்கினால் நீச்சல் குளங்களில் அனுமதி மறுக்கப்படும்.
புறாக்களுக்கு உணவளிக்க தடை : இத்தாலியில் மிதக்கும் நகரம் என அழைக்கப்படும் வெனிஸில் அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் மற்றும் புராதன கட்டடங்கள், வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளது. அங்குள்ள கட்டடங்கள் பழங்கால கட்டடகலை தொழில் நுட்பத்தை கொண்டுள்ளன. இதில் மிக முக்கியமான புனித மார்க் சதுக்கத்தை காண, ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பயணிகள் வருகின்றனர். அக்கட்டடங்களில் மாடப்புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. அவற்றின் கழிவுகள் கட்டடங்களை பாழ்படுத்துவதை தடுக்கும் விதம், அந்நாட்டு அரசு புறாக்களுக்கு உணவளிப்பதை தடை செய்துள்ளது.
ரோட்டில் வாகனங்களை நிறுத்தினால் : ஜெர்மனியின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் பெட்ரோல், டீசல் இன்றி நின்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலைகளில் நடமாடுவோரும் தண்டிக்கப்படுகின்றனர். அதிவேகமாக வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்படும் இந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்தினாலோ, பொது மக்கள் நடந்து சென்றாலோ சாலைவிபத்துக்கள் நடக்கும் என்பதால் இந்த தண்டனை. ஸ்பெயினில் செருப்பு அணிந்து கொண்டு கார் உள்ளிட்ட வாகனம் ஓட்டுவது தவறாகும். செருப்பு அணிந்து வாகனம் ஓட்டும் போது அது பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டரில் சிக்கி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் என்பதால் செருப்பு அணிய தடை செய்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவிக்கின்றனர்.ஸ்பெயினில் நிகழும் வாகன விபத்துக்களுக்கு காரணம் மது போதை தான். போதையில் கார் ஓட்டினால் போலீசார் மூச்சு பரிசோதனை செய்கின்றனர். உடன்1500 யூரோ வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. உட்கொண்ட ஆல்ஹகாலின் அளவை பொறுத்து, மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்டவர் டிரைவிங் லைசென்ைஸ இழப்பது மட்டுமின்றி, 90 நாட்கள் வரை சமூக சேவை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். சைக்கிள் ஓட்டுவோருக்கும் இதே தண்டனை வழங்கப்படுகிறது.இத்தாலியில் வாகனம் ஓட்டினால், நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால், இரண்டு உதிரி மூக்கு கண்ணாடிகள் வைத்து இருக்க வேண்டும். தவறினால் அபராதம் வசூலிக்கப்படும். வாகனம் ஓட்டும் போது ஒரு கண்ணாடி தொலைந்து விட்டாலோ, அல்லது உடைந்து விட்டாலோ மாற்று ஏற்பாடாக, மற்றொரு கண்ணாடி உதவும் என்பது இச்சட்ட விதியின் நோக்கம்.ஏதென்ஸில் தொல்லியல் சிறப்புகளை பாதுகாக்கும் வகையில், அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க, அந்நாட்டு அரசு பொது மக்கள் ைஹஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்த தடை செய்துள்ளது.
சூயிங்கத்திற்கு 'தடா' : ஆசிய நாடுகளிலேயே துாய்மையான சாலைகளுக்கும், நல்ல தரமான குடிநீர் வசதிக்கும் பெயர் பெற்ற, கட்டுப்பாடான நாடான சிங்கப்பூரில் பொது மக்கள் யாரும் சூயிங்கம் மென்று சுவைக்க முடியாது. மீறியவர்கள் தண்டிக்கப்படுவர். அங்குள்ள மின்சார ரயில்களில் பயணிக்கும் பயணிகளில், சிலர் மின்னணு தானியங்கி கதவில் சுவிங்கத்தை மென்று ஒட்டி, அதன் செயல்பாடுகளை முடக்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.அடுக்குமாடி கட்டடங்களில் பயன்படுத்தப்படும் 'லிப்டில்' முறையாக செயல்பட முடியாமல் சுவிங்கத்தை ஒட்டி முடக்கினர். இதையறிந்த அந்நாட்டு பிரதமர், சுவிங்கம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன், பொது மக்கள் பயன்படுத்தவும் தடை செய்தார்.
பணத்தை மிதித்தால்... : சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் தாய்லாந்தில், அந்நாட்டு பணத்தில் மன்னர் படம் அச்சிடப்பட்டுள்ளதால் பணத்தை மிதித்தாலோ, கிழித்தாலோ மன்னரை அவமதித்ததாக கருதப் படுகிறது. தண்டனை நிச்சயம்.மிகவும் முன்னேறிய நாடான அமெரிக்காவில், நெவேடா மாநிலம் புரேக்காவில் ஆண், மீசை வைத்து கொண்டு பெண்ணை பொது இடங்களில் முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் இந்த மரபு உள்ளாட்சிகளில் சட்டமாகியுள்ளது. ஆனால் இச்சட்டத்தின் கீழ், இதுவரை யாரும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு தண்டனைக்குள்ளானது இல்லை.
இரவில் குழாய் திறக்க தடை : சர்வதேச அளவில் சுற்றுலாவிற்கு பிரசித்தி பெற்று விளங்கும் சுவிட்சர்லாந்தில், பல விநோத சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில், இரவு 10:00 மணிக்கு பிறகு கழிப்பறையில் தண்ணீர் திறந்து அதிக ஒலி ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கழிப்பறையில் நீரை திறந்து விடும் போது ஏற்படும் அதிகமான சத்தம், அக்கம் பக்கம் உள்ளவர்களின் அமைதியை கெடுக்கும் என்பதால், இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் புல்வெளியை வெட்டுவது, துணிகள் காயப்போடுவது, கார்களை சுத்தம் செய்வது கூடாது.ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் அழுக்கான மாசு ஏற்படுத்தும் காரை ஓட்டி சென்றால் அபராதம் விதிப்பர். சமூக பொருளாதாரம், தனி மனித மேம்பாட்டில், முன்னிலை வகிக்கும் டென்மார்க்கில், வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க துவங்கும் முன், வாகனத்தின் அடியில் குழந்தைகள் மறைந்துள்ளனரா அல்லது விளையாடிக் கொண்டுள்ளனரா என உறுதி செய்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும்.சட்டங்கள் என்பது மனிதர்களை செம்மைப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும் அந்தந்த சுழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. இது அனைவருக்கும் பொதுவானது அல்ல. நாம் இட்லி சாப்பிடுகிறோம். சப்பாத்தி சுவைக்கிறோம். அவர்கள் பீட்சா, பர்கர் சாப்பிடுகின்றனர். அதுபோன்று தான் சட்டமும். ஆனால் இதையெல்லாம் தாண்டி மனித நேயமும், மனித மாண்பும் மனித உரிமையும் எங்கேயும் எப்போதும் எல்லோருக்கும் பொதுவானது.
ஆர்.காந்திஉயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை.98421 55509

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement