Advertisement

அறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்!

கல்விக்கூடம் என்பது, வகுப்பறைகளும், கரும்பலகைகளும், பாடப் புத்தகங்களும், ஆய்வுக் கூடங்களும் மட்டுமே அல்ல. இந்த உலகத்தையும், வாழ்க்கையையும் எப்படி அணுகுவது என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் இடமாகும். அத்தகைய அரும் பணி வகுப்பறைகளிலிருந்து துவங்குகிறது. எனவே தான் தேசத்தின் எதிர் காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது என்கின்றனர். அப்படிப்பட்ட வகுப்பறையை இத்தனை அடி நீளம், இத்தனை அடி அகலம், இத்தனை அடி உயரம் என, கணக்கிடும் அலுவலக இடமாக பார்ப்பதா கற்றல், கற்பித்தல் நடைபெறும் இடமாகப் பார்ப்பதா அல்லது ஆசிரியர் மாணவர் உரையாடல் தளமாக பார்ப்பதா... எப்படி பார்ப்பது சரியாக இருக்கும்? ஆசிரியர் - மாணவர் உரையாடல் தளமாகி, மன ரீதியாக இருவரும் சங்கமமாகும் இடமாக, மனித பண்புகளை உருவாக்கும் இடமாக வகுப்பறைகளை பார்ப்பதே சரியாக இருக்கும். இதில் பெரும் பங்கு வகிப்பவர் ஆசிரியர்களே. எனவே தான் ஆசிரியர்களை தாய், தந்தையர் இடத்தில் வைத்து போற்றுகிறோம். வீட்டில் பெற்றோரே ஆசிரியர், கல்விக் கூடங்களில் ஆசிரியரே பெற்றோர் என கூறி, புளகாங்கிதம் அடைகிறோம்.
மலையின் உயற்சி, மலரின் மாட்சி, நிலத்தின் பொறுமை, துலாக்கோலின் சம நிலை இவற்றின் பண்புகள் அனைத்தும் ஆசிரியருக்கும் பொருந்தும். மாணவருக்கு அகிலத்தை அறிய செய்தவர்கள் ஆசான்களே. அறியாமையை அகற்ற வந்த அகல் விளக்குகளும் ஆசிரியர்களே. ஒழுக்கத்தை போதிப்பதோடு அதன் படி வாழ்ந்து காட்டும் உத்தமர்களும் அவர்களே.
கடமையைக் கற்றுக் கொடுக்கும் கடவுளர்களாக அமைவதோடு அடுத்த தலைமுறையினருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பவரும், சமூக விஞ்ஞானிகளான ஆசிரியர்களே. எனவே தான், 'மாணவருக்கு சிறந்த பாடப்புத்தகம் அவரின் ஆசானே என்பது என் நம்பிக்கை' என்றார் காந்திஜி. அப்படிப்பட்ட ஆசிரியருக்கு, 'புலமை, திறமை, பொலிவு, கனிவு, கண்டிப்பு ஆகிய ஐந்தும் நிச்சயம் தேவை' என்பார் தமிழ் அறிஞர், நெ.து.சுந்தரவடிவேலு. மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டிக்கலாம்; தண்டிக்கலாகாது. சொல்லும் செய்தியை சுவையாக சொல்வதன் மூலம், மாணவர்களின் உள்ளங்களை ஆசிரியர்களால் எளிதில் தொட முடியும். 'தன்னை ஏணியாகவும், தோணியாகவும் பயன்படுத்தி, தன்னை விட தன் மாணவர் உயர் நிலை எய்தும் போது, சிறிதும் பொறாமைப்படாது, பெருமைப்படும் உயரிய உள்ளம் ஆசிரியருக்கு மட்டுமே சொந்தம்' என்பார் பொருளாதார வல்லுனர், கோல்ட்ஸ்மித். விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு ஆசிரியர் வித்தாக புதைந்து கிடக்கிறார். கற்பதும், கற்பிப்பதும் வேலையன்று; அது ஒரு உன்னதமான பணி, தொண்டு, சேவை. கலை பயில் தெளிவும், ஆழங்காற்பட்ட அறிவும், பொறுமையும், புரியச் சொல்லும் சொல் வன்மையும் ஆசிரியருக்கு வேண்டும். ஏட்டுக் கல்வியோடு மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் அனைத்து ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதில் ஆசிரியருக்கு முக்கிய பங்கு உண்டு. 'மாணவர்களின் வாழ்க்கையை செம்மையாக்கல், லட்சிய உருவாக்கத்திற்கு வழிகாட்டல், புரியும் வரை பாடம் சொல்லல். ஆசிரியப் பணி கடமையன்று, பாக்கியம் என கருதல்; இவையே ஆசிரியருக்கான இலக்கணம்' என்றார் முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம். ஆசிரியர்கள் எல்லா காலத்திலும் இருக்கின்றனர். ஆனால், எல்லாக் கால ஆசிரியர்களும் ஒரே மாதிரியான ஆசிரியர்கள் தானா? இல்லை என்ற பதில் வரும் போது, அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. வகுப்பறைகளை கற்றலிடம் என கருதி, புறவுலக அனுபவங்களின் மதிப்பை உணர்த்த தவறி வருகின்றனர்.
வகுப்பறைகளில், ஆசிரியரின் பொதுப்புத்தி, ஆண்டான் - அடிமை மனோபாவத்துடன் கட்டமைக்கப்படுவது ஏற்புடையதல்ல. அதன் மூலம் வகுப்பறைகளை ஒரு வழிப்பாதையாக்கினர், சில ஆசிரியர்கள். மாணவர்கள், கேள்விகள் கேட்டால், 'அதிக பிரசங்கி' என, பட்டம் சூட்டினர். அதையும் மீறி கேள்விகள் கேட்டால், வகுப்பறையை விட்டு அடித்து துரத்தினர். புரியவில்லை என்றால், 'மக்கு!' என்று, 'மகுடம்' சூட்டினர்.
அறிவு அனைவருக்கும் பொது என்றாலும், சிலருக்கு அது சட்டென்றாகும்; சிலருக்கு காலம் தாழ்த்தும். இந்த புரிதலை ஆசிரியர் சிலர் ஏற்க மறுக்கின்றனர். அதுபோன்ற மாணவர்களை, 'உதவாக்கரை, உருப்படமாட்டான்!' என, அவதுாறு உரைக்கின்றனர். புரியும் வரை சொல்வதும், வகுப்பறையை இரு வழிப்போக்காக்குவதும் தானே ஆசிரியத்தனம்!
'அன்புடைமை அதிகாரம் ஆசிரியர் எடுக்கிறார்; கையில் பிரம்புடன்' என, 'ஹைக்கூ' எனப்படும், ஓரிரு சொல் கவிதைகளின் கதாபாத்திரங்களாக சில ஆசிரியர்கள் ஆகியுள்ளனர். அவர்கள், படிக்க வந்த சிறுமியரிடம், 'சில்மிஷம்' செய்கின்றனர். அறைக்குள் வர மறுத்த கள்ளம், கபடமற்ற பிஞ்சு உள்ளங்களை, மதிப்பெண்ணைக் காட்டி, தோல்வி பயம் ஊட்டி, அறைக்குள் அழைத்து, காமக்களியாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பன போன்ற குற்றங்களில் ஈடுபட்டு, ஆசிரிய சமுதாயத்திற்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்துகின்றனர்.
டியூஷன் வகுப்பிற்கு வரவில்லையெனில், கல்விக்கூட வகுப்பறையில், மாணவனை துவம்சம் செய்கிறார் ஒரு ஆசிரியர். வகுப்பறையில், ஜாதி பெயரை சொல்லி, இழிவு படுத்துகிறார் இன்னொரு ஆசிரியர். மதிப்பெண்ணை குறைத்தும் பழிவாங்குகிறார் மற்றொருவர்.
சில்லரைச் செலவிற்கு, 'சீட்டு' நடத்துவதில் நாட்டம் கொள்கின்றனர். பண்டிகைக் காலங்களில் துணி வியாபாரம் செய்து, பள்ளிக்கூடத்தை துணிக்கடையாக்குகின்றனர். ஆசிரியர் சிலரின் இத்தகைய இழிசெயல்களால், மேன்மை மிகு ஆசிரியர் சமூகம் பழிச்சொல்லிற்கு ஆளாகுவதை உணர்தல் வேண்டும்.
ஆசிரியப்பணி என்பது உடல் உழைப்பு சார்ந்ததல்ல; மூளை உழைப்புச் சார்ந்தது. ஆசிரியர் - மாணவர் உறவு, நான்கு சுவர்களுக்குள் மட்டும் நிலவுவதல்ல; வகுப்பறைக்கு வெளியிலும் தொடர வேண்டும்.
மாணவர்களது சுகங்களிலும், துக்கங்களிலும் ஆசிரியர்கள் இதயப் பூர்வமாக பங்கேற்க வேண்டும். தட்டிக் கொடுப்பதும், தைரியம் சொல்வதும் ஆசிரியர்களின் இயல்பாதல் வேண்டும். மாணவர் நிலைக்கு இறங்கி வந்து, தன் ஆன்மாவையே மாணவனிடத்தில் மாற்றியமைக்கும் வல்லமை பொருந்திய உண்மையான ஆசிரியராதல் வேண்டும்.
நல்ல ஆசிரியர், அறிவுத்தேடலில், மாணவருடன் சகபயணியாக வேண்டுமென்ற, முன்னாள் ஜனாதிபதி, நல்லாசிரியர், டாக்டர் ராதாகிருஷ்ணன் கருத்துக்களோடு இசைவு கொள்வோம்.
'என் தந்தையை விட என் ஆசிரியரை அதிகம் நேசிக்கிறேன். ஏனெனில், என் தந்தை இந்த உடலை மட்டும் தந்தார்; என் ஆசிரியரோ அவ்வுடலினுள் ஆன்மாவையே தந்தார்' என்ற, மாவீரன் அலெக்சாண்டரின் கருத்துகளை அசை போடுவோம்.
தினந்தோறும் கற்போம்; உலகியல் அறிவைப் பெறுவோம்; கற்றதையும், பெற்றதையும் என்றும் கற்பிப்போம்.

- முனைவர்.எஸ்.ஸ்ரீகுமார் -
(பேராசிரியர் பணி நிறைவு)
சமூக ஆர்வலர்

இ - மெயில்: tamilsreekumargmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Rajendran Pillai - Chennai,இந்தியா

    முனைவர் ஸ்ரீ குமார் அவர்களுக்கு நன்றி. ஆசிரியர் பற்றிய உயர்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொ ண்டதை நான் வரவேற்கிறேன்.

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    நான் எப்போதும் ஆசிரியர்களையும், எனது குருவையும் நன்றியுடன் நினைப்பவன். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களின் தரம், தற்போது அவ்வாறு நினைக்கும் அளவுக்கு இருக்கின்றனரா என்பது சந்தேகமே. இல்லையென்றால், அவர்களே தங்கள் வாரிசுகளை அரசு பள்ளியில் சேர்க்காமல், தனியார் பள்ளியில் சேர்ப்பது ஏன் ?? (விதிவிலக்குகள் மன்னிக்க). அரசு கல்விக்கூடம் மற்றும் நிறுவனங்கள் என்றாலே, பல்வேறு ஆசிரியர்களுக்கும் / ஊழியருக்கும், அன்னசத்திரம் போல் ஆகிவிட்டது. நிறையபேர் வெட்டியாக சம்பளம் பெறுகின்றனர் என்பது நிதர்சனம்.

  • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும் பாசத்துடனும் மிகுந்த அக்கறைசெலுத்தி இந்தியா என்னும் தேசவளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்தி முன்னேற்றத்திற்கு வழிவகுத்தனர் . பின்னாளில் அரசியலும் துவேஷமும் வேறூன்றி குறிக்கோளும் திசைதிருப்பப்பட்டு எங்குசெல்கின்றோம் என்ற திசையே தெரியாமல் மாணவர்களை கண்கள் கட்டப்பட்டு சுயநலவாதிகளின் கையில் சிக்குண்டு வாழ்ழ்க்கையே ஒரு சவாலாக ஆக்கப்பட்டு அவதிப்படும் நிலையே காணப்படுகின்றது .எல்லாம் காலத்தின் கோலம் போலும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement