Advertisement

புதுக்கவிதைகளில் நிகழ்காலம்

“வேறு எந்த இலக்கிய வடிவத்தையும் விடப் புதுக்கவிதைக்குச் சக்தி அதிகம். மனித ஆன்மாவை அது விரைவாகவும், நெருக்கமாகவும் சென்று தொட முடியும்” எனப் புதுக்கவிதையின் வலிமையைக் குறித்து குறிப்பிடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். புதுக்கவிதை நிகழ்காலத்தை, இன்றைய நடப்பைப் படம்பிடிப்பதாக, பதிவு செய்வதாக விளங்குவதே அதன் ஆற்றலுக்கான அடிப்படைக் காரணம். அதுவே இன்றைய புதுக்கவிதையின் உயிர்ப் பண்பு.அண்மையில் படித்த புதுக்கவிதை,
ஷான் இயற்றிய 'சீதையோடு ஒரு செல்பி'. அக்கவிதை இதோ“தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாள் சீதை.இரண்டாவது டிக் வராத வாட்ஸ்அப் செய்திகளால்நிரம்பி யிருந்தது ராமனின் தொடுதிரை.பாதுகைகளை சுவரெங்கும் ஒட்டியிருந்தான் பரதன்.வாலிக்கு இரங்கல் எழுதிக் கொண்டிருந்தான் சுக்ரீவன்,ராவணன் பறித்துக் கொண்ட செல்பேசியில் இருந்ததுசீதைக்கு நினைவில் நில்லாத ராமனின் எண்.விபீஷணன் தனிச்செய்தி அனுப்பியிருந்தான் ராமனுக்கு,அறுந்த மூக்குடன் டேக் செய்திருந்தாள் சூர்ப்பனகை.'ஆறு மாதங்களுக்கு டீ ஆக்டிவேட்' என்றான் கும்பகர்ணன்.ராமனைப் போல் சுய படமிட்ட போலிக் கணக்கில்சீதைக்கு நட்பு அழைப்பு அனுப்புகிறான் ராவணன்.'எங்கே உருப்படப் போகிறது?' என்று கடந்தாள் மண்டோதரி.அனுமனிடம் இருந்து ராமனுக்கு ஆதாரமாக வருகிறது . அசோகவனப் பின்னணியில் சீதையோடு செல்பி ஒன்று!”பதினைந்தே வரிகளில் சீதை, ராமன், பரதன், சுக்ரீவன், ராவணன், விபீஷணன், சூர்ப்பனகை, கும்பகர்ணன், மண்டோதரி, அனுமன் என்னும் பத்து இதிகாச மாந்தர்களை வரவழைத்து, அவர்களின் எண்ணங்களின், சொற்களின் வாயிலாக இன்றைய நிகழ்காலத்தை அற்புதமாக இக் கவிதையில் பதிவு செய்துள்ளார் கவிஞர்.'தொடர்பு எல்லைக்கு அப்பால்', 'வாட்ஸ் அப்', 'செல் பேசி', 'தனிச்செய்தி', 'டேக்', 'டீ ஆக்டிவேட்', 'நட்பு அழைப்பு', 'செல்பி' என்னும் சொற்கள், இக் கவிதைக்கு நிகழ்கால வண்ணத்தையும் வனப்பையும் சேர்த்து, ராமாயணம் பற்றிய ஒரு மறுவாசிப்பாகக் கவிதையை ஆக்கியுள்ளன. புதுமைப்பித்தன் 'சாப விமோசனம்' என்னும் நீண்ட சிறுகதையில் செய்து காட்டியதை, பதினைந்தே வரிகளால் ஆன இப் புதுக்கவிதையில் திறம்படச் செய்து காட்டியுள்ளார் கவிஞர் ஷான்.
அறநெறி பாடல்
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில்இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ள படி”என்பது ஒளவையாரின் அறநெறிப் பாடல். இது புதுக்கவிஞர் சக்திகனல் கை வண்ணத்தில் மறுகோலம் பூண்டுள்ளது. 'பாட்டியுடன் பேட்டி' என்னும் தலைப்பில் அமைந்த சுவையான அக் கவிதை:“நேற்று மாலைஅருநெல்லிக் கனியுண்டஒளவைப் பாட்டிஎங்களூர்ச் சாவடிநாவல்மரத் தடியில்சுட்ட பழம் பொறுக்கிக் கொண்டிருந்தாள்,நான் கேட்டேன்:'பாட்டி, பாட்டி சாதிகள் எத்தனை?'பாட்டி சொன்னாள்:'சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்மீதி மிச்சம் இல்லாமல் ஊர்நிலத்தைத் தான் சுருட்டிக்கட்டினார் மேல்சாதி, பறிகொடுத்தார் கீழ்சாதிபட்டாவில் உள்ளபடி - நிலப்பட்டாவில் உள்ளபடி!'”இக் கவிதையில் இடம் பெற்றிருக்கும் அருநெல்லிக் கனி, ஒளவைப் பாட்டி, நாவல் மரம், சுட்ட பழம் ஆகியவற்றில் எல்லாம் புதுமை இல்லை. ஆனால், 'சாதிகள் எத்தனை?' என்னும் கவிஞரின் கேள்விக்கு ஒளவைப் பாட்டி தரும் பதில் வித்தியாசமானது; நாட்டு நடப்பைத் தோலுரித்துக் காட்டுவது.- 'மீதி மிச்சம் இல்லாமல் ஊர் நிலத்தைத் தான் சுருட்டிக் கொள்வதை' அம்பலப்படுத்துவது, 'பட்டாங்கில் உள்ள படி' என்பது 'பட்டாவில் உள்ள படி, - நிலப் பட்டாவில் உள்ள படி' என மாற்றம் பெற்றுள்ளது. நில அபகரிப்பு என்னும் நிகழ்காலக் கொடுமை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாரி பற்றிய கவிதை : பாரி கடையெழு வள்ளல்களுள் ஒருவன். முல்லைக் கொடிக்காகக் தான் ஏறி வந்த தேரையே அவன் விட்டுச் சென்றதும், இறங்கி நடந்து சென்றதும் நாம் நன்கு அறிந்தவை. புதுக்கவிஞர் நீலமணி, வள்ளல் பாரியையும் அவனது செயற்பாட்டையும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகுகிறார். அவரது கவிப் பார்வை இதோ:“நடந்தான் பாரிநடந்தான் பாரிநடந்த மக்களின்தோள் மீதேறியசிவிகைச் செல்வர்செலுத்திய வரியால்உருவான தேரைக்கொடிக்கு நிறுத்திமுதல் தடவையாகநடந்தான் பாரி.”பாரி ஏறி வந்த தேர், 'நடந்த மக்களின் தோள் மீது ஏறிய சிவிகைச் செல்வர் செலுத்திய வரியால் உருவானது'. அதனை முல்லைக் கொடிக்கு நிறுத்தி விட்டு, இப்போது தான் வாழ்வில் முதல் முறையாக நடந்தார் பாரி! பொதுவுடைமைச் சிந்தனை கலை நயத்துடன் வெளிப்பட்டிருக்கும் கவிதை இது.
வைரமுத்து கவிதை : கவிப்பேரரசு வைரமுத்து 'தினமலர்' பொங்கல் மலரில் படைத்த நல்லதொரு கவிதை 'அடங்காநல்லுார்' (ஏறு தழுவலுக்கு - ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற ஊர் 'அலங்காநல்லுார்!'). 'போதும்! எங்களை முட்டாதீர்! இதற்கு மேலும் எங்கள் வாலினை முறுக்காதீர்! தயவு செய்து எங்கள் கொம்புகள் மீது அரசியல் சாயம் பூசாதீர்! மூக்கணாங் கயிறுருவி நைலான் கயிறு பூட்டாதீர்!' எனக் காளை இனம் அடுக்கடுக்காக தமிழருக்கு விடுக்கும் வேண்டுகோள்களுடன் தொடங்குகிறது கவிதை. 'சட்டமே, இனியும் தடுத்தால் பூம்பூம் மாடாகி விடுவதன்றி, வேறு வழியில்லை' என உருக்கமாகத் தனது நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும் காளை இனம், தொடர்ந்து தமிழரை நோக்கி, 'உங்களுக்கு ஆகஸ்ட் 15, எங்களுக்கு இன்று தான்! ஆண்டெல்லாம் எங்களை அடிமை கொண்ட மனிதனை ஒரு நாள் வென்றெடுக்கும் வாய்ப்புக்காக வாடி வாசலில் காத்திருக்கிறோம்' என மொழிகின்றது. அயல்நாடுகளில் அதற்குப் பெயர் 'காளைப் போர்'. அன்னைத் தமிழிலோ 'ஏறு தழுவுதல்'. 'ஏறு தழுவுதல்' என்ற தமிழன் எப்படி எங்களைக் காயம் செய்வான்?' எனக் கவிஞர் இக் கவிதையில் காளையின் வாய்மொழியாகத் தொடுத்திருக்கும் வினா பொருள் பொதிந்தது.'தழுவுதல் குற்றமெனில் காதலுமில்லை, காளையுமில்லை அடிமாடு லாபம், பிடிமாடு பாவம் எனில், பிள்ளைக் கறி லாபம், பிள்ளை தழுவுதல் பாவமோ?' எனக் காரசாரமாகக் கேட்கின்றார் கவிஞர். கவிதையின் முடிவில்,“ஒவ்வொன்றாய் இழந்த தமிழா!அன்னம் இழந்தாய்அன்றில் இழந்தாய்சிட்டுக் குருவிகளையும்வானில் தொலைக்கிறாய்கடைசியில் காளையினத்தையும் தொலைத்து விடாதே!”என ஒட்டுமொத்தத் தமிழினத்திற்குக் கவிஞர் விடுத்திருக்கும் எச்சரிக்கை கருத்தில் கொள்ளத்தக்கது. இங்ஙனம் இன்றைய புதுக்கவிதைகள் விமர்சன நோக்கில் நிகழ்காலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதிலும், பதிவு செய்வதிலும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன.
- பேராசிரியர் இரா.மோகன் எழுத்தாளர், மதுரை 94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Achchu - Chennai,இந்தியா

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி பேச மறந்து சிலையாயிருந்தால் பேச மறந்து சிலையாயிருந்தால்அதுதான் தெய்வத்தின் சந்நிதி அதுதான் காதல் சந்நிதி - நினைவில் நீங்காத வரிகள்

  • K G R DOSS - CHENNAI,இந்தியா

    When I forwarded this interesting posting to another forum, a friend of mine, a member of that forum, who is also a good tamil writer, responded with some criticism which is reproduced here for your awareness: என்னைப் பொருத்தவரை ..புதுக் கவிதை என்பது ஒரு கவிதைக் கொலை.. இதை ஒரு கவிதையாகவே எழுதினேன் முன்பு.. புதுக் கவிதை என்றால் என்ன...?? புதிதாய் எழுதினால் புதுக்கவிதையா....? புதிய 'முறையாக" இலக்கணமின்றி எழுதினால் புதுக் கவிதையா..? புதிய சொற்க்களால் "கலப்படம்" செய்தால் புதுக் கவிதையா....? புதிய வழியென "படி இறக்கம்" செய்தால் புதுக் கவிதையா..? புதிய "வரவு" என புரியாமல் எழுதினால் புதுக் கவிதையா..? புதிய "தலைமுறைக்கெனும்" இப் புதுக் கவிதை புலவர்களே... புரியவில்லை எமக்கு இப் புதுக் கவிதை "மோகம்"..... புரிந்திட்டால் எழுதுவேனோ நானும் "ஒரு காலம்"... பாமரருக்கும் புரிய எழுதவேண்டும் என்பது புதுக் கவிதைவாசிகளின் ஒரு 'வெட்டி' வாதம்.. எத்தனையோ சினிமா பாடல்கள் ..கவிதை வடிவில் எழுதப்பட்டு ..எல்லோருக்கும் புரியும்படி எழுதப்பட்டுள்ளன.. இதோ ஒரு உதாரணம்... 'கண்ணுக்கு மை அழகு.. 'கவிதைக்கு பொய் அழகு.. 'அவரைக்கு பூ அழகு.. 'அவருக்கு நான் அழகு... எந்த ஒரு பாமறனும் ..இந்த கவிதை புரியவில்லை என்று சொல்லமுடியாது...புதிதாகவும்..வித்யாசமாய் செய்கிறேன் என்ற போர்வையில் ஷான் போன்றவர்களால் தமிழ் மொழி விரைவில் உருமாறி..கொலை செயப்படும்.. If you like to respond, please mail to the original writer TVK. kyvytv007@yahoo.co.uk

  • ganapati sb - coimbatore,இந்தியா

    ஆர்வக்கோளாறு கவிஞ்சர்களின் புதுக்கவிதைக்கும் அருட்கவிஞ்சர்களின் காவியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அதன் ஆயுள்தான். அவ்வையாரின் கம்பரின் வள்ளுவரின் பாரதியின் வாக்கு காலம் கடந்து நிற்கிறது என்றும் நிற்கும். புதுக்கவிதையின் வரிகள் இப்போது நிச்சயமாக நன்றாக இருக்கிறது ஆனால் கருப்பு வெள்ளை டீவி காயின் தொலைபேசி போல கைபேசி வாட்ஸ்அப் வழக்கொழிந்தால் அதுவும் காணாமல் போகும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement