Advertisement

தேவை ஒரு சங்கப் பலகை

'எழுது கோலும் தெய்வம்என் எழுத்தும் தெய்வம்'என்றார், பாரதியார்.
'படைப்பதினால்என் பேர் இறைவன்' என்றார், கண்ணதாசன்.படைப்பு என்பது அத்தனை அர்த்தம் மிக்கது. படைப்பவனும், படைப்பை திறனாய்வு செய்பவனும் ஒரு அரிச்சந்திர வாய்மையுடன் இருக்க வேண்டும். எழுத்தின் பயணம் உண்மையை நோக்கி பயணிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் முக்கியம். இவை இருக்கிறது என்பதற்காக எதையாவது கிறுக்குவது மக்கள் சமூகத்தை அறிவு விபத்தில் கொண்டு போய் சேர்க்கும். எவர் படைப்பு என்பதற்காகவும், அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று. இலக்கணம் வகுத்த தொல்காப்பியன் என்றாலும், முப்பால் தந்த வள்ளுவன் என்றாலும், காலம் விமர்சித்தே தீரும். ஆனால் அதில் உண்மை உறைந்திருக்க வேண்டும். அவரவர் கருத்தை ஏற்றிக் கூறி, அதற்கும் பலர் ஆமாம் போட்டு, அதையும் பதிப்பித்து அகாடமி விருதுகள் பெறும் என்றால், அது அறிவு சார்ந்த சமூகத்தை சரியான பாதைக்கு இட்டுச் செல்லாது.ஒரு கூட்டத்தில், ஒரு எழுத்தாளர் சிலப்பதிகாரம் எந்த நுாற்றாண்டு என்று கேட்டார். கி.பி., 2ம் நுாற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் என்று எல்லோரும் கூறினர். அனைவரும் கற்றவர்கள். 'இல்லை பத்தாம் நுாற்றாண்டு' என்றார் ஒருவர். 'எப்படி கூறுகிறீர்கள்?' என்றதற்கு 'இளங்கோ ஒரு சமணர். மதுரை சமணர்களின் நாடு. ஞானசம்பந்தர் சமணர்களை தீயிட்டு எரித்தார். அந்த கோபம் சமணத்துறவி இளங்கோவிற்கு இருந்தது. அதனால் கண்ணகி பாத்திரம் மூலம் மதுரையை எரித்து தன் கோபத்தை தணித்துக் கொண்டார்' என்றார். ஞானசம்பந்தர் கி.பி., ஏழாம் நுாற்றாண்டு. இளங்கோ கி.பி. இரண்டாம் நுாற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் கருத்து.
படைப்பின் கால அளவு : ஒரு படைப்பின் கால அளவை அதன் நடை தீர்மானிக்கும். சங்க காலத்தில் இருந்த கரடு முரடான நடை, சங்கம் மருவிய இலக்கியத்தில் இல்லை. அதே ஆசிரியப்பாவை இளங்கோ கையாண்டிருந்தாலும் அது எளிமையாக இருப்பதும், இடை இடையே வெண்பா, விருத்தங்களை அவர் முயன்றிருப்பதும் அந்த கால அளவை தீர்மானிக்க உதவுகின்றன. ஞானசம்பந்தர் பாடலில் விருத்தங்களும், தாழிசைகளும், கலிப்பாக்களும் அமைந்திருப்பது அதன் பிற்பட்ட காலத்தை தீர்மானிக்க உதவுகிறது. தம் கருத்தை ஏற்றுவதும், திறனாய்வு என்ற பெயரில் இலக்கிய கொலை செய்பவர்களும் வளர்ந்து வருவது தமிழுக்கு நல்லதல்ல.முன்பு புலவர்கள் தம் படைப்புகளை சங்க பலகையில் வைக்க வேண்டும். புலவர்கள், கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையேல் அரங்கேற்ற முடியாது. இப்போது அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
யதார்த்த நடை : யதார்த்த நடை என்று கூறி மனித அவயங்களின் சொல்ல கூடாத பெயர்களை பதிவு செய்வதும், சாதாரணமாக மக்கள் பேசும் அசிங்க வார்த்தைகளை எழுத்தாக்குவதும் அதை யதார்த்தம் அல்லது வட்டார வழக்கு என்று பேசுவதும் உள்ளது. இடக்கரடக்கல் என்ற இலக்கணம் தமிழில் இருக்கிறது. சில செயல்பாடுகளை அப்படியே சொல்லக் கூடாது. மறைவிடத்தில் பிரச்னை என்றால் அதற்கு காணாத்தடம் என்ற வழக்கு சொல் இருக்கிறது. வெளிக்கு போய் விட்டு கால் கழுவினோம் என்று தான் கிராமங்களில் சொல்வார்கள். இதுபோல நிறைய வார்த்தைகள் தமிழில் இன்னும் கையாளப்படுகிறது. இதை விடுத்து அதை அப்படியே எழுதுவது அநாகரிகம். கேட்டால் திருவள்ளுவர் கூறியுள்ளார்; கம்பன் மோசமாக சித்தரித்துள்ளார் என்று பேசுவர். இடம் நோக்கி பொருள் கொள்ள மாட்டார்கள்.
எழுத்து ஒரு தவம் : எழுத்தை கவனிக்க வேண்டும் என்ற நிலை போய் என்னை கவனிக்க வேண்டும் என்ற நிலையில் எழுத்துக்கள் அமையக் கூடாது. எழுத்து என்பது ஒரு தவம். தவம் செய்பவர்கள் எப்படி ஒரு நிலையை நோக்கி, கொள்கை மட்டுமே இலக்கு என்ற ரீதியில் தவத்தை தொடர்வர். எழுத்தும் அந்த நிலையில் இருக்க வேண்டும். வாள் முனை சாதிக்காததை பேனா முனை சாதிக்கும் என்பதற்கு உலகில் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன. இரு மன்னர்களுக்கு இடையில் நிகழ இருந்த போரை தடுத்தது ஒளவையின் எழுத்து. வெண்கொற்றக் குடையின் நிழலில் அமர்ந்து கொண்டு அரண்மனை வசதிகளை அனுபவித்து கொண்டு மக்கள் நிலையை அறியாத கிள்ளிவளவனை, வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவரின் எழுத்து மக்களை நோக்கி அவனது கவனத்தை திசை திருப்பியது. தங்களுக்குள் முரண்பாடு கொண்டிருந்த மூவேந்தர்களையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து புரட்சி செய்தது ஒளவையின் எழுத்து.இடித்துரைப்பது, எடுத்துரைப்பது, உற்று நோக்குவது, ஒற்றுமைப்படுத்துவது, மொழிப்பற்றை மூண்டெழச் செய்வது, முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணிப்பது, பண்பாடு பேணுவது, கலாசாரம் காப்பது, உண்மை காதலை உரைப்பது, தாவரங்களை நேசிப்பது, வரலாறுகளை பதிவு செய்வது, அறிவியலில் தெளிவு காண்பது, மெய்ப்பொருள் அறிவது என எழுத்தும் படைப்பும் இந்த மண்ணில் தம்மை அர்ப்பணித்துள்ளன.
வாழ்வியல் : 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலக சகோதரத்துவத்தை ஓங்கி ஒலித்ததால் தான் கணியன் பூங்குன்றன் இன்றும் போற்றப்படுகிறார். ஒப்பனை இல்லாமலும், கற்பனை பவுடர் அப்பாலும் மெய்மை நிலை பெற்றிருப்பதால் தான் சங்க இலக்கியங்கள் என்றும் தமிழரின் வாழ்வியலாக வாழ்கின்றன. எழுத்தில் மெய்த்தன்மை இருந்ததால் தான், இளங்கோவடிகள் தேரா மன்னன் என்று பாண்டியனை நோக்கி கண்ணகி பேசுவதாக படைக்க முடிந்தது.அற இலக்கியங்களில் பெரிதும் ஆளப்பெற்ற அறம் மெய்மை தான். இன்று பலர் மெய்மை மறந்து அல்லது மெய் துறந்து எழுதுவதால் தான் அது திரைப்பட வசனமாகவும், பாடல்களாகவும், கவிதைகளாகவும், வருவதால் தான் ஒரு தலைக்காதல் என்னும் கைக்கிளைகள் பெருகி வக்கிரங்கள் தலைதுாக்க காரணமாகின்றன. தன்னை அடையாளப்படுத்தாமல் தன் எழுத்தை அடையாளப்படுத்தினால் அகிலம் அந்த எழுத்தை அரவணைக்கும். மாறாக எதிர்மறை சிந்தனைகளோடும், தர்க்க நோக்கத்தோடும் ஒரு கதாநாயக மனோபாவத்தோடும், செய்திகளை வரலாற்று குறிப்புகளை படைப்புகளின் கால அளவுகளை தன்னோக்கில் பேசுவது ஒரு வரலாற்று பிழையாகி விடும். நயத்தக்க நாகரிகம் என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.சங்கப் பலகை போன்று புத்தகங்கள், மதிப்பீடுகள் செய்த பின் தான் வெளியிட வேண்டும் என்றால் பல பேர் எழுத்தாளராக முடியாது. யாப்புக் கற்றுக் கவிதை எழுத வேண்டும் என்றால் பலர் கவிஞர்கள் கிடையாது. ஆனால் ஒரு வரன்முறை வேண்டும். திறனாய்வாளர்களின் தராசு முள், ஒரு பக்கம் சாயக் கூடாது. ஒரு பக்கம் என்பது தம் எண்ணங்கள். கால அளவுகள் சரியாக கணிக்கப்படவில்லையேல் அதுவே உண்மை என்று ஆகி விடும். எழுத்துக்கள் உண்மையை நோக்கி பயணிக்க வேண்டும். இப்போது தேவை ஒரு சங்கப் பலகை. யார் மணி கட்டுவது?
- கவிஞர் பொற்கை பாண்டியன்மதுரை. 98651 88773.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • மயன் - coimbatore,இந்தியா

    உண்மை. எனது நீண்டநாளைய ஆதங்கமும் இதுவே. தமிழில் எழுதினாலே கவிதை என்றாகிப்போய்விட்டது. சமூக வலைதளங்களில் வரும் தமிழ்/ஆங்கிலம் (தங்கிலீஷ்) பதிவுகளும், அதற்கான மக்களின் ரசனையும் மிகசிறந்த உதாரணம். தமிழ் வழக்க பயன்பாட்டு சொற்களுக்கே அகராதியை தேடும் காலமாகிப்போயிற்று. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டும் தான் மனமுண்டு என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

  • ponmuthu - chicago,யூ.எஸ்.ஏ

    பிரென்ச் அகாடமி போல ஒரு தமிழ் சங்க பலகை உண்டாக்கி புலவர்களின் எழுத்து முயற்சிகளுக்கு உதவ வேண்டும். இதுவரை உள்ள உண்மைகளுக்கு மாறாக கருத்துக்கள் இல்லாமல் அவற்றை அடிப்படையாக எழுதல் வேண்டும். (உ.ம் ) 'தமிழ் சோறு போடுமா' எனும் ஆய்வு. சுமார் 15-20 குறள்களுக்கு மாறான கருத்து- தமிழனுக்குப் புறம்பான எண்ணத் திணிப்பு. இது செய்வது யார்? நீயும் நானும் மற்ற தமிழ் பிரியர்களும் - பொன் முத்து , அமெரிக்கா வாசகர்.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Nowadays we can not compare the writing of many authors as the reforms of our Tamil language.In cholas,charas and pandiyas periods the pulavagal were respected very much and honoured by kings very much.But the present time who is honouring such people.Nowadays even in schools and colleges the Tamil pundits.,tamil lecturers and tamil professors are not talking proper tamil and using English during their lecture.Then how the Tamil literature improve among this present generation. All parents are running to English language medium schools by paying hefty payments for their children's study ,In cenimas and tamil tv shows no one encouraging our tamil literature and speaking double meaning dialogues and songs with vulgar meanings keeping our language in very low.In the present day generations they don't know the about our tamil literatures. Even the Tamil pattimandrams are only showing in tvs as entertainment programmes but not for promoting our literature.No proper tamil literature programmes find any whare in our places.There is no prominent writers in tamil literature find nowadays.We are only talking about sangkakalam both in writhing and talking but no development in any field of tamil literature. Even this may change if all our people really have true love and affection on our Thai mozhi and encourage our children to read our old great tamI literatures and also tell them effectively and it will give a good result and the present generation will improve more in our literature and they may produce more tamil literature for the future generation.I have more love of my tamil language but could not type in tamil and please forgive me for not writing in tamil.Mannikka Vugiren.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement