Advertisement

வறுமை ஒழிய வளம் பெருகும்

'கொடிது கொடிதுவறுமை கொடிதுஅதனினும் கொடிதுஇளமையில் வறுமை' என்றார் அவ்வையார்.ஒவ்வொரு ஆண்டும் அக்., 17ல் 'உலக வறுமை ஒழிப்பு' நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
'ஏதாவது ஒரு இடத்தில் வறுமையில் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது' என்கிறார் பிரான்சை சேர்ந்த ஜோசப் ரென்சிக்கி.

வறுமை வரலாறு:

இவரது சிறு வயது போராட்டத்தின் விளைவுதான் 'உலக வறுமை ஒழிப்பு' தினம். முதன் முதலில் 1987 ஆம் ஆண்டு அக்., 17ல் பிரான்ஸ் பாரிஸ் நகரில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டது.
பசி, வறுமை, வன்முறை, பயம் முதலியவற்றிற்கு பலியானவரை கவுரவிக்கும் வகையில் 10,000 பேர் 'டொர்கேட்ராவின்' மனித உரிமை மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்று கூடினர். ஐ.நா.,வும் 1992ம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றது.

எது வறுமை:

உணவின்மை மட்டும் வறுமை அல்ல. கல்வியின்மை, உடை, உறைவிடமின்மை, வேலையின்மை, சுகாதாரமின்மை, சமூக ஏற்றத்தாழ்வு, உரிய வருமானமின்மை, போதிய சத்துணவுமின்மை, கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலை என வறுமைக்கு பல பரிமாணங்கள் உள்ளன.
இது இடத்துக்கு இடமும், காலத்திற்கு ஏற்பவும் மாறுகிறது. பொதுவாக சமூகத்தால் உணரப்படக் கூடிய அடிப்படை மனித உரிமை இழப்பே வறுமை ஆகும். இவை உணவு, உடை தங்குமிடம், கல்வி என பொருள் பரிமாணத்தை சார்ந்தவையாகவோ பாலியல் மற்றும் சாதி வேற்றுமை போன்ற பொருள்சார் பரிமாணத்தை சார்ந்தவையாகவோ இருக்கலாம். ஆனால், பொதுவாக உணவின்மையே வறுமை என நம்பப்படுகிறது.நாட்டின் எதிர்கால துாண்களான இன்றைய குழந்தைகள் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. உலகிலேயே வங்கதேசத்தை அடுத்து இந்தியாவில்தான் சரியான சத்தான உணவின்றி வறுமையில் இறக்கும் குழந்தைகள் அதிகம் உள்ளனர்.

இளமையில் வறுமை:

வறுமையில் பலியாகும் குழந்தைகள் என்றால் நமக்கு ஆப்ரிக்க நாடுகள் தான் நினைவில் வரும். ஆனால் நம்நாட்டில் அதைவிட இரண்டு மடங்கு குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர் என்பதே உண்மை.இந்தியாவில் 100க்கு 30 குழந்தைகள், பிறக்கும்போதே எடை குறைவாக பிறக்கின்றன. இதுவே ஆப்ரிக்க நாடுகளில் 100க்கு 16 ஆக தான் உள்ளது. குழந்தை பருவத்தில் ஊட்டப்படும் சத்தான உணவே அவர்களின் பிற்கால வாழ்வில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகிறது. இதை ஒப்பிட்டு பார்க்கும் போது நம் குழந்தைகள் இன்றைய நிலை அதிர்ச்சியாக உள்ளது.

முன்மாதிரி தமிழ்நாடு:

நிறைவான வயிறே தெளிவான சிந்தனைக்கும் வலுவான உடலுக்கும் ஆதாரம். இதை உணர்ந்து, இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு 'மதிய உணவுத் திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவுத் திட்டம், கலவை சாதத் திட்டம் என பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டங்களை பலகாலமாக செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததுடன், படிப்பை பாதியில் நிறுத்துவதும் குறைந்து
வருகிறது.

எது வறுமைக்கோடு :

ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கை தரத்திற்குகீழ் வாழும் மக்களை, ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர் என்கின்றனர்.'ஒரு நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையில் வறுமையை போக்க முடியவில்லை என்றால் அந்தநாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால் பிரயோசனம் இல்லை' என்கிறார் நெல்சன் மண்டேலா.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இந்த வருமான அளவு நாட்டிற்கு நாடு மாறுபடும். உணவை பொறுத்தவரை நகரில் உள்ள ஒருவர் சராசரியாக 2100 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். கிராமத்தில் 2400 கலோரி சக்தி அளிக்கும் உணவு கிடைக்க வேண்டும்.

இதற்கு கூட வசதி இல்லாதவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்கின்றனர்.
உலக வங்கி தரவுகளின்படி, 14 பில்லியன் மக்கள் மிக வறுமைக்கோட்டின் மிக அடிமட்டத்தில்
வாழ்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமைக்கு காரணங்கள் :

சமய பிரிவினைகள், ஜாதி, சுயசம்பாத்தியத்தில் ஆர்வமின்மை, ஊழல் முதலியன இதற்கான சில காரணிகளாக உள்ளன. இதில் முக்கிய காரணியாக ஊழல் உள்ளது. குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணமாகிறது. வறுமை, ஏற்றத்தாழ்வு நிறைந்த சமுதாயத்தில் வன்முறை குற்றங்களை தவிர்க்க முடியாது. எனவே, வறுமை ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.
கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். தங்கள் வீடுகளில் வறுமை ஒழிந்து வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் அவரவர் தங்களது குழந்தைகளை அவசியம் கல்வி பயில வைக்க வேண்டும்.

பொது வினியோக திட்டத்தை விரிவுபடுத்தி உணவுப்பொருள் தடையின்றி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் ஓரளவு வறுமையை குறைக்க முடியும்.


உதவி செய்வோம் :

'ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்' என்கிறார் வள்ளுவர்.
இதன் பொருள்: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்கு பிற்பட்டதாகும்.

நம் நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் தெரிவது உண்மை. ஆனால் தெரியும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அற்புதங்களை நிகழ்த்தி காட்ட வேண்டியது நமது பொறுப்பு. வறுமையினை
ஒழித்தால்தான் மக்கள் வளமுடன் வாழ முடியும். தேசம் வல்லரசு ஆக முடியும்.
தனி ஒரு சமுதாயம் மட்டும் வளராமல் நாட்டு மக்கள் அனைவரும் வளம் பெற்றால்தான், நாம் வலிமை வாய்ந்த நாடாக மாற முடியும். அப்படிப்பட்ட பார் வியக்கும் பாரதத்தை படைப்பதற்கு நாம் ஒன்றுபடுவோம்; உழைத்திடுவோம்.- முனைவர் மு.தென்னவன் தலைமை ஆசிரியர், மதுரை 98421 95052

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

    எனது கருத்து: நாம் அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் உணவு உண்டால், உலகத்திலிருந்து வறுமை ஒழிந்து போகும்.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    சுய சம்பாத்தியத்தில் ஆர்வமின்மை உண்மைதான். அது சரி அடுத்த இலவசம் என்ன கொடுப்பாங்க/ எப்போ கொடுப்பாங்க ?/

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement