Advertisement

மாபெரும் சபையின் மாண்பு காக்கப்பட வேண்டும்!

சுதந்திர இந்தியாவில், 1952ல், முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது; மொழிவாரியாக மாநிலங்கள் அப்போது பிரிக்கப்படவில்லை. அந்தத் தேர்தலில், சென்னை மாகாண சட்டசபையில், 167 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார், டி.பிரகாசம். ஆனால், கவர்னராக இருந்த ஸ்ரீபிரகாசா, 'தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கூட்டணியை ஏற்க முடியாது; ஆட்சி அமைக்க உரிமை அளிக்க முடியாது' என்றார். அதையடுத்து, காங்கிரசை சேர்ந்த, ராஜாஜி முதல்வராகப் பதவி ஏற்றார்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார், டி.பிரகாசம். அவருடன், நாகி ரெட்டி, பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி.டி.ராசன் போன்ற தலைவர்கள், சட்டசபையை நல்ல முறையில் நடத்த வழி வகுத்தனர்.
குலக் கல்வித் திட்டத்தில் எழுந்த சர்ச்சையின் போது, நம்பிக்கை ஓட்டெடுப்பை விரும்பாத ராஜாஜி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்; காமராஜர் முதல்வராக பதவி ஏற்று, கொந்தளிப்பாக இருந்த சட்டசபையை குளிர வைத்தார்; எதிர்க்கட்சிகள் அவருக்கு, சட்டசபை மரபு மாறாமல் ஆதரவு தந்தன. கடந்த, 1956ல், மொழிவாரி மாநில பிரிவினைக்கு பின், 1957ல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் மீண்டும் காமராஜர் முதல்வராக பதவி ஏற்றார். எதிர்க்கட்சி வரிசையில், தி.மு.க., தலைவர் அண்ணாதுரை, காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்க தேவர், கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் போன்றோர், சட்டசபையின் மரபை காப்பதில் கவனத்துடன் இருந்தனர். பத்து ஆண்டுகள் கழித்து, 1967 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மாபெரும் வெற்றி பெற, அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றார். 'காங்கிரஸ் கட்சி இறந்து விட்டது; மீண்டும் அது வராது' என, ஒரு உறுப்பினர் கூறிய போது, அதை கண்டித்த அண்ணாதுரை, 'எந்தக்கட்சியும் மறைந்து விட வேண்டும்; இறந்து விட வேண்டும் என்பது ஜனநாயக பண்பாடு அல்ல' என்றார். ஆனால், அண்ணாதுரையின் மறைவுக்கு பின், தி.மு.க.,வில் அதிகாரப் போட்டிகள் தலைதுாக்கத் துவங்கின. நெடுஞ்செழியன் தான், அண்ணாதுரை மறைவுக்குப் பின், முதல்வராக வருவார் என, எல்லாரும் எண்ணினர். அப்போது, திருச்செங்கோடு லோக்சபா உறுப்பினராக இருந்த, க.அன்பழகன், 'நான், கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக் கொண்டால், என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டார்' என, 1969 மார்ச், 9ல் பேசினார்; கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. கருணாநிதி தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என, தன் ராமாவரம் தோட்டத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு, எம்.ஜி.ஆர்., விருந்து வைத்தார். பின், 1971 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் தனக்கு, 'சுகாதாரத் துறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும்' என, எம்.ஜி.ஆர்., கேட்டார். ஆனால், 'சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டால், அமைச்சர் பதவி தரப்படும்' என, கூறிவிட்டார் கருணாநிதி; அப்போதே, உட்கட்சி பூசல் உயிர் பெறத் துவங்கிவிட்டது.தி.மு.க., பொருளாளராக இருந்த, எம்.ஜி.ஆர்., 'கட்சியின் பொறுப்பாளர்கள், தங்கள் பெயரிலும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வாங்கியுள்ள சொத்துகளுக்கு கணக்கு காட்ட வேண்டும்; அப்படி செய்யாதவர்களை கட்சியை விட்டுத் துாக்கி எறிய வேண்டும்' என, 1972 அக்டோபர், 8ல், சென்னை, ராயப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசினார். இதன் விளைவாக, 1972 அக்., 14ல், கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். எனவே, 1972 அக்., 18ல், அ.தி.மு.க.,வை துவங்கினார், எம்.ஜி.ஆர்., 'மக்களின் ஆதரவை, தி.மு.க., இழந்துவிட்டது. எனவே, கருணாநிதியும், அவர் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்' என, எம்.ஜி.ஆர்., கூறியதும், சபாநாயகர் மதியழகன் ஆதரவு தெரிவித்தார். கடந்த, 1972 டிச., 2, தமிழக சட்டசபையில் மறக்க முடியாத நாள். தி.மு.க., அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்து, எம்.ஜி.ஆரை பேச அழைத்தார், சபாநாயகர் மதியழகன். எம்.ஜி.ஆர்., பேச துவங்கிய போது, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது; எம்.ஜி.ஆர்., பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது, துணை சபாநாயகரான விருதுநகர் ஸ்ரீனிவாசன், சபாநாயகர் அருகில் நாற்காலியைப் போட்டு, சபாநாயகர் மதியழகன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்; மதியழகன், சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஒரே நேரத்தில் இரண்டு சபாநாயகர்கள்... தமிழக சட்டசபை வரலாற்றில் கறுப்பு புள்ளி விழத் துவங்கியது. சபையை விட்டு வெளியேறும் போது, எம்.ஜி.ஆர்., மீதும், மதியழகன் மீதும் வசைமொழியுடன் செருப்புகளும் வீசப்பட்டன. கழக ஆட்சியில், முதன் முதலில் சட்டசபையில் கலகம் துவங்கியது. 'சட்டசபை செத்துவிட்டது' எனக் கூறி வெளியேறினார், எம்.ஜி.ஆர்., கடந்த, 1977 ஜூன் 30ல், தமிழக முதல்வராக பதவியேற்ற, எம்.ஜி.ஆர்., 1987 டிச., 24ல், தன் இறுதி நாள் வரை முதல்வராக இருந்தார். 1988 ஜன., 28ல், தமிழக சட்டசபையில், ஜெ., அணி, ஜா., அணி என, மோதிக் கொண்டன.'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், வி.ஜி.செல்லப்பா, சொர்ணலிங்கம், டி.ஆர்.வெங்கட்ராமன், துரை கிருஷ்ணமூர்த்தி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்' என, சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சட்டசபையில் அறிவித்தார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த ஐந்து காங்., - எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபைக்கு வர, சபையில் இருந்த காங்., - எம்.எல்.ஏ.,க்கள், அந்த ஐந்து பேருடன் மோதிக் கொண்டனர்; சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர், பி.எச்.பாண்டியன். சட்டசபை மீண்டும் கூடிய போது, ஜெயலலிதா ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சாத்துார் ராமச்சந்திரன் உட்பட, 33 பேரை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவிநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்; நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அணி வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். எனவே, சட்டசபையில் ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் மோதிக் கொண்டன; ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். காவல் துறை ஆணையர் வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் சட்டசபைக்குள் நுழைந்து, தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
கடந்த, 1972ல், எம்.ஜி.ஆர்., மீது தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செருப்பு வீசியது போல், 1988ல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொண்டனர்; இலவச இணைப்பாக காங்., - எம்.எல்.ஏ.,க்களும் சேர்ந்து கொண்டனர். கடந்த, 1989 மார்ச், 25ல், அன்றைய முதல்வர் கருணாநிதி, பட்ஜெட் அறிக்கையை படிக்கத் துவங்கிய போது, எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, 'முதல்வர், ஒரு கிரிமினல் குற்றவாளி; அவர் பட்ஜெட் அறிக்கையை படிக்கக் கூடாது. கருணாநிதியின் அமைச்சரவை பதவி விலக வேண்டும்' என்றார்.கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் அறிக்கையை, அ.தி.மு.க.,வினர் பறித்தனர்; தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில் வசைமொழிகள் பாய்ந்தன; பலத்த மோதல் வெடித்தது; சட்டசபையே போர்க்களமாக மாறியது. தலைவிரி கோலமாக, சட்டசபையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா, செய்தியாளர்களிடம் பேசினார். 'முதல்வர் கருணாநிதியும், அவர் அமைச்சர்களும் இழிவாக பேசி, என்னை அடித்துக் கொல்ல முயற்சித்தனர்; கையில் கிடைத்த பொருட்களை என் மீது வீசினர்; துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்தார். கட்சியினர் என்னை காப்பாற்ற முயன்ற போது, என் சேலை கிழிந்துவிட்டது' என்றார்.
மரபுகளும், மாண்புகளும் சட்டசபையில் கழக ஆட்சியில் காணாமல் போய் விட்டன. எதையும் தாங்கும் இதயம் படைத்த தம்பிகள், இதையும் தாங்கத் துவங்கி விட்டனர். எதையும் தாக்கும் இதயம் படைத்த தம்பிகள், தங்களையே தாக்கிக் கொள்ளத் துவங்கி விட்டனர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், 23 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டிருந்த தி.மு.க.,வும், சபை வெளிநடப்பு செய்வதிலேயே ஆர்வம் காட்டியது. 2016 சட்டசபை தேர்தலில் அதிக பலத்துடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும், தி.மு.க., சபை புறக்கணிப்பிலேயே ஆர்வம் காட்டுகிறது. தவறான வழியில் செயல்படும் அரசை தட்டிக் கேட்க, மக்கள் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அந்த உரிமை எதிர்க்கட்சிக்கு உள்ளது... அதை ஆளுங்கட்சியும் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைசிறந்த தலைவர்கள் பலர், எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமர்ந்து, சிறப்புமிகு பணிகளை செய்துள்ளனர். கூச்சல், குழப்பம் போன்றவற்றால், மாபெரும் சபையின் மாண்புகள் சீரழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் கடமை.
- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி -வழக்கறிஞர்
இமெயில்: asussusigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • raja - dharmapuri,இந்தியா

    இதனால் தான் தமிழ்நாட்டின் துரதிருஷ்டமான வருடம் 1967 என்று சொல்ல படுகிறது.

  • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

    மிகநல்ல நினைவூட்டல் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement