Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 42

அன்பு தோழமைகளே நலமா, இந்த வாரம் ரசனையுடன் கூடிய அருமையான தொழில் குறித்து காணப் போகின்றோம்.
வாழ்க்கை என்றால் என்ன? முள்ளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேனை வாயினால் வெகு எச்சரிக்கையுடன் உறிஞ்சி விழுங்குவது தான் சற்று எச்சரிக்கைக் குறைவாக வாயை வைத்து உறிஞ்சினாலும் முள் நம் வாயைக் குத்தி வேதனையை உண்டு பண்ணி விடும் . வாழ்க்கை பயணத்தில் எந்தப் பாதையும் கவலை என்னும் முட்புதர்களின்றி மிருதுவானதாக காணப்படவில்லை. அதிலே பள்ளங்களும் , படுகுழிகளும் இருக்கத்தான் செய்கின்றன , ஆனால் அவற்றையெல்லாம் நாம் ஒரே தாண்டாக தாண்டிக் கொண்டே செல்ல வேண்டும் .தாண்டிக் கொண்டு செல்வதென்றால் எப்படி என்று கேட்கின்றீர்களா நாம் அவற்றை பார்த்து சிரித்து விடுவது தாங்க. சிரித்து சிரித்து தான் நம்மை முறியடிக்க வரும் துன்பங்களை முறியடிக்க முடியும்..

துன்பம் வந்தால் சிரிங்க...இறுதி முகலாயப் பேரரசரான பகதுர்ஷாவின் மனதைப் பெரிதும் துன்புறுத்தி அவரை அடிபணியச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்துடன் ஆங்கிலத் தளபதியானவர் பகதுர்ஷாவின் இரு புதல்வர்களைக் கொன்று அவர்களின் இரு தலைகளையும் ஒரு தட்டில் வைத்து மூடி பகதுர்ஷாவுக்கு அன்பளிப்பாக அனுப்பிய பொழுது அதைத் திறந்து பார்த்ததும் பகதுர்ஷா மயங்கி விழுந்து விடவில்லை , கலங்கவில்லை அதற்கு மாறாய் கலகலவென சிரித்தார். இதை கண்டு பெரிதும் வியப்புற்று நின்ற ஊழியரிடம் உன்னுடைய தளபதி என் மனத்தைத் துன்புறுத்துவதற்காக இவ்விதம் செய்துள்ளார் , ஆனால் நானோ அவரை தம் விருப்பத்தில் வெற்றியடைய ஒரு போதும் விட மாட்டேன் என்று கூறி மறுபடியும் சிரித்தார். அவ்விதமே நாமும் நம்மை தோற்கடிக்க வரும் துன்பங்களைக் கண்டு சிரித்து அவற்றைத் தோற்கடிப்போம் அவ்விதம் நாம் செய்யும் பொழுது நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் வெற்றி வீரராக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை...
இந்த வாரம் தொழில்கள் குறித்து பார்ப்போம் என்று சொல்லிவிட்டு வாழ்க்கையை பற்றி சொல்கின்றேனே என யோசிக்க வேண்டாம்..நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையின் முக்கிய அங்கம் உழைப்பு தானே ..அது தான் வாழ்க்கையிலிருந்து ஆரம்பித்துள்ளேன்..

ஆராய்ந்து முடிவெடுங்க...ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு, தொழில் தொடங்குவதற்குத் தேவையான திட்டமிடுதலையும், அதைச்சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுதல் மிக மிக முக்கியம். முதலில் எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
குறுந்தொழிலோ, சிறு தொழிலோ செய்பவர் தன்னை ஓர் உழவருடன் ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும். நிலம், நீர் அனைத்தும் இருந்தாலும் சிறந்த அறுவடையை மனதில் இருத்திக்கொண்டு ஒரு உழவர் கடுமையாக உழைக்கிறார். அதைப் போல் தொழில் முனைவோர் தனது செயல்திறனைப் பயன்படுத்தி இலக்கைக் குறிவைத்து உழைக்க வேண்டும். ஒருவரது உழைப்பைப் பொறுத்தே அறுவடை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

கையில் இருக்க வேண்டிய கலவைநம்முடைய முழுமையான ஈடுபாடு, ஆர்வம், முயற்சி இந்த மூன்றையும் கலவை செய்து கைக்குள் வைத்துக் கொள்வோம்.
அப்புறம் இந்த நினைப்பு எப்பவும் நம்ப மனசில் இருக்க வேண்டும் , அது இது தாங்க..

I AM SPECIAL
I AM IMPORTANT
I AM UNIQUE

நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம்.

தகுதியை வளர்த்துக்குங்க..ஜோயல் வெல்டன் என்ற ஓர் உளவியல் அறிஞர் சீன நாட்டில் விளையும் ஒருவகையான மூங்கிலைப் பற்றிய அருமையான தகவலைத் தருகிறார். பூமிக்கு வெளியில் தலைநீட்டி வெளியில் வருவதற்கு முன் ஐந்தாண்டுகள் அது பூமிக்கு அடியிலேயே இருக்குமாம் , அதாவது அப்படி ஒரு மூங்கில் மரம் இருக்கிறதா இல்லையா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு அது இருக்கும். ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அது வெளிக்கிளம்பி 90 அடிகள் வளருமாம். அதாவது ஆறு வாரங்களில் 90 அடி வளர்வதற்கான தகுதியை அது 5 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் பூமிக்கடியில் வைத்து வளர்த்துக் கொள்கின்றது . அதனால் தான் அவ்வளவு குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அதற்கு சாத்தியமாகின்றது அது போல் நம் ஆற்றல்களை வீணாக்காமல் தொழில்நுட்ப பயிற்சிகள் , அனுபவங்களை பெற்றுக் கொண்டு ஆரம்பிக்கும் தொழில் சிறப்பான வளர்ச்சியை நோக்கி செல்லும் ஐயமில்லை

தன்னிச்சையான முடிவு தேவைநிகழ்ச்சி மேலாண்மையில் (Event Management) பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. திருமணம், குடும்ப விழாக்கள், சமுதாய விழாக்கள், போன்றவற்றிற்கு தேவையான விசயங்களை ஒருங்கிணைத்து சிறப்புற நடத்தி தருவதாகும் . இந்தத் துறையில், 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிறைய தொடர்புகளை உருவாக்குவது, எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளிப்பது, அவர்களது தேவைகளை முடியாது எனச் சொல்லாமல் முடிந்தவரை நிறைவேற்றுவது எனப் பல்வேறு சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அதற்கு நமக்கு இந்தத் துறையில் பேரார்வம் இருக்க வேண்டும் நம் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இந்தத் துறையில் நிறைய வழிகள் இருக்கின்றன.
அதே சமயம், எல்லா வேலைகளையும் நாமே நிர்வகித்துவிட முடியும் என்றும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. ஒவ்வொரு வேலைக்கும் நம்பகமான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும் யோசித்துவைத்திருக்க வேண்டும். தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருத்தல் நலம். தன்னிச்சையாக உடனடியாக முடிவெடுக்கும் இத்தொழில் எப்பொழுதும் இன்முகத்துடனும், நம்பிக்கையுடன் இருப்பது முக்கியம்.

ஏற்பாடு எப்படி இருக்க வேண்டும்?நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை .... அதற்க்கென்று சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு கடைபிடிக்கப்படவேண்டியது அவசியம்.
எந்த ஒரு நிகழ்ச்சியும் திட்டமிடுவதற்கு முன்பு :-
முதலில் பாதக மற்றும் சாதக சூழ்நிலையைப்பற்றி அறிந்துகொள்ளுவது மிக முக்கியம். நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.
காவல்துறை மற்றும் தீ அணைப்புத்துறை போன்றவர்களிடம் நிகழ்ச்சிபற்றி தெரிவித்து முன்கூட்டியே அதற்கான அனுமதி பெறுவது அவசியம்.
முதலுதவி மருத்துவ சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கவேண்டும்
நிகழ்ச்சியானது அரசாங்க மற்றும் சமுதாய விதி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.
இப்படி இன்னும் பல விதி முறைகள் இருப்பதை முழுமையாக அறிந்து அதற்க்கேற்றபடி நிகழ்ச்சியை தயாரித்து திறம்பட வழங்குவது ஒரு சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் அல்லது நிகழ்ச்சி அமைப்பாளரின் கடமையாகும் மேற்கண்டவை திறமையாக கையாளும் பட்சத்தில் நற்பெயருடன் நல்ல லாபமும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை...

- ஆ.ரோஸ்லின்
aaroselinegmail.com
9842073219

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement