Advertisement

ஒரே சூரியன். ஒரே சந்திரன்.. ஒரே சாஸ்திரி! : அக். -2 லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்

அக்டோபர் 2 என்றவுடன் நம் சிந்தனைச் சிறையில் சட்டென மின்னலாய் வந்து மறையும் பெயர் காந்தி. அவர் பாசறையில் சத்தியம், நேர்மை பாடங்களை பயின்றவர்களில் முதலிடம் பெற்றவர் லால்பகதுார் சாஸ்திரி.
இவர் 1904 அக்டோபர் 2-ல் வாரணாசியில் பிறந்தார். சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருந்த போது, நேரிட்ட தந்தை சாரதா பிரசாத்தின் மரணம் தாயார் இராம் துலாரியை உலுக்கியது.குடும்பம் வறுமையில் வாடினாலும், என்றும் வாடாத கல்வியறிவை புகட்ட விரும்பிய தாய் துலாரி, சாஸ்திரியை பள்ளியில் சேர்த்து விட்டார். ஆனால் புத்தகம் வாங்கப் பணமில்லை. புத்தகத்தை இரவல் பெற்று படித்தார். சாஸ்திரியின் வறுமையைச் சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் 38 வயது வரை, தேநீர் அருந்தாமல் இருந்திருக்கிறார்.
தேசப் பணி தெய்வப் பணி : ஒரு முறை காசியில் காந்தியின் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் வெள்ளையர் ஏகாதி பத்தியம், சுதேசி கொள்கைகள் பற்றிய காந்தியின் பேச்சு 11வயது சிறுவன் லால்பகதுாரை காந்தமாய் தேசப் பணிக்கு இழுத்தது.காசி வித்யா பீடம் கல்லுாரியில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் தத்துவப் பாடத்தை விருப்பப் பாடமாக படித்தார். சாஸ்திரியிடம் சைக்கிள் கூட இல்லை. 16 மைல் நடந்தே சென்று படித்தார். கல்லுாரியில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்ற சாஸ்திரி, 1925-ல் சாஸ்திரி பட்டம் பெற்றார்.
கொள்கைத் திறம் : 1927-ல் நாட்டின் ஒவ்வொரு நகரிலுள்ள மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டதும், சாஸ்திரி மாறுவேடத்தில், காவல் துறையின் கண்களை ஏமாற்றி மிர்சாபூர் மணிக்கூண்டில் தேசியக் கொடியைப் பறக்க விட்டார். இதை ஒரு கட்டடத்தின் மாடத்தில் இருந்து கண்ணுற்ற லலிதா தேவி என்ற பெண்மணி சாஸ்திரி மீது காதல் வயப்பட்டார், பின் லலிதா தேவி, லலிதா சாஸ்திரியானார். மணமேடையில் புரோகிதர், 7 கட்டளைகளை லலிதாவுக்கு கூற, சாஸ்திரி தன் மனைவியாகப் போகும் லலிதாதேவி இன்று முதல் கதராடைதான் அணிய வேண்டும் என்று எட்டாவது கட்டளையிட்டார். முதலிரவில் லலிதாதேவி கதராடை அணியாததால் அந்த அறையை விட்டு வெளியேறினார். சாஸ்திரியின் சகோதரி, ஒரு கதர் புடவையை லலிதாவுக்கு வழங்கிய பின்பே, அந்த அறைக்குள் நுழைந்தார். எதற்கும் சலனப்படாத கொள்கைப் பிடிப்பு சாஸ்திரிக்கு மட்டுமே சாத்தியம்.விடுதலைப் போராட்டத்தில் சாஸ்திரி 10 முறை கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் வரை சிறைவாசம் செய்தவர். மகளுக்கு நோய் கடுமையாகியது மகள் இனி பிழைக்க மாட்டாள் என்ற செய்தி சாஸ்திரி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கம்பிகளைத் தட்டி தெரிவிக்கப்பட்டது. செய்தி அறிந்த சாஸ்திரி மகளைப் பார்க்க பரோல் கேட்கவில்லை, ஏனெனில் பரோலுக்கு ஆங்கில அரசின் பல நிபந்தனைகளை ஏற்று கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்க வேண்டும். சாஸ்திரியின் உறுதி வெள்ளையரின் கறுப்பு இதயத்திலும் ஒளி வெளிச்சத்தை பாய்ச்சியது. சிறை அதிகாரிகள் நிபந்தனையற்ற பரோல் வழங்கினர்.
விறுவிறுவென வீடு சென்றார் அங்கே தன் செல்வ மகளைக் கண்டார் உயிரற்ற சடலமாய். மகளின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார், பரோலை இடையே ரத்து செய்துவிட்டு தானாகவே சிறைக்கு சென்றுவிட்டார்.
பதவிகளுக்கு சிறப்பு : 1952-ல் நேருவின் மத்திய அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். ஒரு நாள் வாரணாசியிலிருந்து மொகல்சராய் ரயில் நிலையத்தில் ரயிலைப் பிடிக்க காரில் கிளம்பினார், ரயில்வே அமைச்சர் சாஸ்திரியின் வருகை விஷயத்தை அறிந்த ரயில்வே கார்டு அவர் வரும் வரை ரயிலை தாமதப்படுத்தினார். சாஸ்திரி வந்த பின் ரயில் நகர்ந்தது. ரயில் தாமதத்தை உணர்ந்த சாஸ்திரி தன் வருகைக்காக தாமதப்படுத்திய ரயில்வே கார்டை பணிநீக்கம் செய்தார். அரியலுார் ரயில் விபத்தில் 150 பயணிகள் இறந்த போது பதவியை ராஜினாமா செய்தார். “அரியலுார் பாலத்தை கட்டியவர்கள் வெள்ளையர்கள், பாலம் அரிக்கப்பட்டிருப்பதை அறியாமல் ரயிலை ஓட்டிச் சென்றவர் யாரோ ஒரு டிரைவர். இதற்கு நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று பலரும் கேட்டனர். என்றாலும் விபத்துக்கு சட்டப் பூர்வ பொறுப்பாளி நானே என முடிவு செய்து ராஜினாமா செய்தார்.1962-ல் சாஸ்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது அவசரமாக கோல்கட்டாவிலிருந்து டெல்லி திரும்ப விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரம். அப்பொழுது கோல்கட்டா காவல் கண்காணிப்பாளர், விமான நிலையம் செல்ல உள்துறை அமைச்சர் சாஸ்திரியிடம், தங்களின் கார் முன்னால் அபாய ஒலி எழுப்பும் காவல்துறை வாகனத்தை அனுப்புவதாகவும் இதனால் சாலையில் நெருக்கடி குறைந்து நீங்கள் விரைவில் விமான நிலையத்தை அடையலாம் என்று யோசனை தெரிவித்தார்.
அந்த யோசனையை மறுத்த சாஸ்திரி “உரத்த ஒலி எழுப்பிக் கொண்டு செல்லும் வாகனத்தை மக்கள் பார்க்கும் போது யாரோ மிகப் பெரிய மனிதர் செல்வதாக நினைத்துக் கொள்வர். என்னைக் கண்டவுடன் இவ்வளவு சிறிய மனிதனுக்காகவா? என ஏமாற்றமடைந்து விடுவர்” என்றார். பதவியின் படாடோபத்தை துச்சமாக நினைத்த பரிசுத்தமானவர் சாஸ்திரி.1964-ல் நேரு இறந்த பின்பு, சாஸ்திரியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார் காமராஜர். கதர் குல்லாயுடன் சாதாரண மனிதனாக இருந்த சாஸ்திரிக்கு, பிரதமர் பதவி என்பது தங்க கிரீடமாய்த் தோன்றவில்லை.ஒரு நாள் பிரதமர் சாஸ்திரி வீட்டுக்கு தரமான அரிசியை வாங்கி வந்தார் சாஸ்திரியால் வளர்க்கப்பட்ட ராம்ஸ்வரூப், “ஒரு சாதாரண மனிதனால் இது போன்ற அரிசியை விலை கொடுத்து வாங்க இயலாது, நம் குடும்ப வரவு செலவுக்கு இந்த அரிசி ஒத்து வராது, இந்த அரிசியைக் கொடுத்துவிட்டு நம்மைப் போல் சாதாரண மக்கள் சாப்பிடும் அரிசியை வாங்கி வா” என்றார்.
ஜெய் ஜவான்! ஜெய் கிஸான் : 1965-ல் இந்தியா--பாகிஸ்தான் போரின் போது கோபத்தால் கொந்தளித்த சாஸ்திரி ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்று முழங்கினார். நாட்டு மக்கள் அவரின் பின்னால் அணிவகுக்க இந்தியா போரில் வென்றது. முடிவில் ரஷ்யாவின் தாஷ்கண்டில் இந்தியா--பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கைக்குப் பின் 11.1.1966-ல் மறைந்தார். மரணத்துக்குப் பின், சாஸ்திரி பயன்படுத்திய சிறிய பியட் கார், மாதத் தவணை செலுத்த இயலாத காரணத்தால், கடன் வாங்கப்பட்ட நிறுவனத்திடமே, சாஸ்திரியின் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்டது.காமராஜர் திட்டத்தால் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாஸ்திரி தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “நானும் எனது குடும்பமும் மிகச் சிறிய வீட்டிற்கு இடம் பெயர்கிறோம், காய்கனிகள் மற்றும் பாலின் அளவைக் குறைத்துக் கொண்டோம். நாங்களே துணிகளைத் துவைத்துக் கொள்கிறோம்!” என்று குறிப்பிட்டார்.
“சாஸ்திரியின் வாழ்க்கை - கடந்த கால அதிசயம்!சாஸ்திரியின் நேர்மை -இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு!சாஸ்திரியின் எளிமை, உண்மை - எதிர்கால ஜனநாயகத்திற்கான திறந்த புத்தகம்!-முனைவர். சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர் அருப்புக்கோட்டை, 78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  அவருடைய எதிர்பாராத மறைவும், நேதாஜியின் மறைவு போலவே மர்மமாவே இருக்கு. நேதாஜி குறித்த செய்தி ஒன்றே, சாஸ்திரி அவர்களின் மறைவுக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இத்தனை காலம் ஆகியும், ஒண்ணும் தெரியல.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை வெளியிடாதீர்கள். நல்ல இந்தியர்களின் B.P. விண்ணை நோக்கிப்போகின்றது. இந்த அம்மே என்று கன்று போல் பிளிரும், டயர் தொட்டுக்கும்பிடும் அரசியல்வாதிகளைப்பார்த்து. இந்த உயரிய மனிதர் சொல்லினால் நானும் எனது தங்கையும் அந்த சிறு வயதிலியே திங்கள் இரவு ஒரு நாள் உணவை துறந்தோம் 2 வருடங்களுக்கு. இந்த உயரிய எளிமையான வாழ்க்கை நடத்திய பிரதமர் எந்த நாட்டிலும் எந்த காலத்திலும் கிடைக்க மாட்டார்கள். இவர் செய்த ஒரே தவறு இந்திராவை அமைச்சர் குழுமத்தில் சேர்த்தது. இவரின் இந்தி பரப்பும் கொள்கையால் தமிழ்னாடு “இந்தி எதிர்ப்பில்” திராவிடக்கொள்கையால் தீப்பற்றி எரிந்தது. டாஷ்கெண்டில் அயூப்கான்-முஸ்லிம் பாகிஸ்தான் உத்தரவின் பேரில் தெர்மாஸ் ஃப்ளாஸ்கில் “Heavy Water”(Coolant used in Nuclear Reactors) வைத்து அதை திரு லால் பஹதூர் அவர்கள் தண்ணீர் என்று நினைத்து குடித்ததினால் இறந்தார். முஸ்லிம் பாகிஸ்தான் இன்னும் அதே எண்ண சூழலில் தான் இருக்கின்றது.

 • Shruti Devi - cbe,இந்தியா

  தங்களை போன்ற தலைவர்களை இனி எப்போது காண்போம். தங்களின் எளிமை போற்றுதலுக்கு உரியது .இது போன்ற வாழ்க்கை வாழ்வது சாத்தியமா என்று கூட எண்ணுவார்கள்.

 • raju - madurai,இந்தியா

  தியாகிகளை மறந்து வேடதாரிகளை நம்புகிறோம் நாமும் வேடதாரிகள் ஆனதால.?

 • chennai sivakumar - chennai,இந்தியா

  1965 வரையில் ஆங்கிலமும் ஹிந்தியும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக இருந்தது. அது காலாவதியாகும் போது திரு. சாஸ்திரி அவர்கள் பிரதமராக இருந்தார். அவர் உத்தரவின் பேரிலே ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் IAS போன்ற தேர்வுகளை எழுதலாம் என்று அனுமதித்தார். அதற்க்கு பிறகுதான் ஹிந்தி மூக்கை நுழைக்க ஆரம்பித்தது. அதன் பின் விளைவுகள் எல்லோரும் அறிந்ததே. இன்றும் அது தொடர்கிறது. உலக அரங்கில் நமது அதிகாரிகள் ஆங்கிலத்தில் ஒரு மூலையில் இருக்கிறார்கள். ஆங்கில அறிவு இல்லாததால் பல மொழிகளைக்கொண்ட நமது நாட்டின் வளர்ச்சி நிறையவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவை எல்லாம் இப்போது உள்ள இளைய வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இதனை எழுதுகிறேன்.

 • Senthil Rajan.D - Palladam,இந்தியா

  வாழ்க நீ எம்மான் இந்த வையம் உள்ளவரை ....

 • Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா

  தங்களை போன்ற தலைவர்களை இனி எப்போது காண்போம். தங்களின் எளிமை போற்றுதலுக்கு உரியது .வழிய எம்மான்

 • ARUN - coimbatore,இந்தியா

  அன்றைய தலைவர்கள் வெறும் கனவுலக நாயகர்களாகவே ,இன்றைய தலைமுறைக்கு தெரிவார்கள்.இது போன்ற வாழ்க்கை வாழ்வது சாத்தியமா என்று கூட எண்ணுவார்கள்.

 • Cheenu Meenu - cheenai,இந்தியா

  சாஸ்திரியை போல் இனி ஒரு நேர்மையாளர் இந்திய அரசியலில் உருவாக மாட்டார்.“சாஸ்திரியின் வாழ்க்கை - கடந்த கால அதிசயம் இன்றய போயஸ் கார்டன்/ கோபாலபுரம் போன்ற அரசியல்வாதிகளே தில்லுமுல்லு செய்து பதவியில் அமர்கின்றனர். பின் 5 ஆண்டுகளுக்கு வசூல் வேட்டை தான். சாஸ்திரி 38 வயது வரை, தேநீர் அருந்தாமல் இருந்திருக்கிறார். மோடி ஆதிகாலத்தில் டீ விற்று கஷ்டப்பட்டவர் என்றாலும் இன்றய ஆட்சிக்கு அவர் சரியான பிரதமர் இல்லை. குஜராத்தை ஆண்டதும் இந்தியாவை ஆள்வதும் ஒன்றல்ல

 • Ilangovan - Erode,இந்தியா

  மோடியும் சாஸ்த்ரி போன்றுதான் இருக்கிறார். பாரதி போலவும், சாஸ்த்ரி போலவும், மொரார்ஜி போலவும், முத்துராமலிங்க தேவர்போலவும் பல ஆயிரம் மோடிகள் இன்று நமக்கு தேவை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement