Advertisement

சுயவேலை சுகவாழ்வு!

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்'- என்றான் பாரதி.
உழைப்பதன், தொழில்புரிவதன் அவசியத்தை வலியுறுத்தவே பாரதி அப்படி பாடினான். இவ்வுலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருமே, வளமாக, அனைத்து வசதிகளுடன் வாழவே ஆசைப்படுகிறோம். அதில் தப்பில்லை. ஆனால், உழைக்காமல் உண்பதில் இன்பம் காணும் எண்ணம் கொண்டு வாழ்வதே பெருங்குற்றமாகும். இப்படிப்பட்ட சிந்தனை படைத்த சோம்பேறி மனிதர்களால் நாட்டுக்கும், வீட்டுக்கும் கடுகளவும் பயனில்லை.
'செய்யும் தொழிலே தெய்வம்' என்று சொல்வார்கள். எந்தத் தொழிலையும் தவறென்று சொல்ல முடியாது. ஆனால், சும்மா இருந்து கொண்டு சோத்துக்கு தண்டமாக வாழும் நடை பிணங்களைத் தான் சமுதாயம் மதிப்பதில்லை. இவர்களைத் தான் நிந்தனை செய்ய வேண்டும் என்று பாரதி சொல்கிறான்.மனிதன் வளமான வாழ்க்கை வாழ வருமானம் முக்கிய தேவையாக இருக்கிறது. சரி வருமானம் எப்படி வரும்? ஏதாவது ஒரு தொழில் செய்தால் வரும். அது, விவசாயம், கைத்தொழில் போன்ற குடும்பத் தொழிலாக இருக்கலாம். அரசுத்துறை பணியாக இருக்கலாம். சுயதொழிலாகக்கூட இருக்கலாம்.
சுயதொழிலின் அவசியம் : இன்றைய நிலையில் நாட்டைச் சுழன்றடிக்கும் பிரச்னை வேலையில்லா திண்டாட்டம் தான். அரசுகள் எத்தனையோ ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டி விட்டது. தொழில்களைப் பெருக்கி, விவசாயத்தை வளர்த்திருக்கிறது. ஆனால், வேலையில்லா திண்டாட்டத்தை எந்த அரசாலும் தீர்க்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் தான். நாட்டின் இன்றைய மக்கள் தொகை 120 கோடி. இது 130 கோடி, 150 கோடி என அதிகரித்துக் கொண்டே போனால் எந்த அரசு, மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும்? எனவே தான் சுயதொழில் ஒன்றை துவங்கி, அதன் மூலம் வரும் வருவாயை வைத்து வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
நன்மைகள் : இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்படும் முன் , சுயதொழில்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்றும் நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் உழவுத்தொழில், கால்நடை வளர்த்தல், குடிசைத் தொழில் செய்தல் என்று பல்வேறு விதமான சுய தொழில்கள் செய்வதிலே ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக படித்தவர்கள் அரசுத்துறைகளில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அரசுப்பணிகள் நிலையானவை. நல்ல வருமானம் கிடைக்கிறது. இதில் எந்தத் தனிப்பொறுப்பும் இல்லாமல் வேலை செய்யலாம்.தொழில் எப்படி நடந்தாலும் கூலி கிடைக்கும். ஓய்வு மிகுதியாய் கிடைக்கும். விடுமுறை அதிகம், போன்றவைதான். ஆனால், அரசுப் பணிக்கான முழுத்தகுதி இருந்தும் எத்தனை பேருக்கு அது கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் சுய தொழில் முக்கியத்துவம் பெறுகிறது.தனித்திறமையும், முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சுயதொழிலில் ஈடுபடலாம். சுயதொழில் செய்பவருக்கு தன்னம்பிக்கை ஏற்படும். அவர் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. சுய வேலைவாய்ப்பில் சுயமரியாதை காக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க, மறைமுகமாக உதவி செய்கின்றனர். மற்றவர்கள் சாதிக்க முடியாத ஒன்றை அவர்கள் சாதிக்க முடிகிறது. அதனால், சமுதாயத்தில் அவர்களின் மதிப்பு உயர்கிறது.
தகுதிகள் : சுயதொழில் புரிபவருக்குச் சில தகுதிகளும், திறமைகளும் அவசியம் இருக்கவேண்டும். அப்போதுதான் எடுத்துக்கொண்ட விஷயத்தில் அவர் வெற்றிபெற முடியும். முதலில் செய்யும் தொழிலில் ஆர்வம் இருக்கவேண்டும். இரண்டாவது கடின உழைப்பு முக்கியம். இரவு பகலென்று பாராமல் உழைக்கின்ற மனநிலை வரவேண்டும். தொழில் வளர்ப்பதற்கு பணம் போதவில்லையே என்று மனம் தளரக்கூடாது. வங்கிகள் கடன் தர முன்வருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணும், எழுத்தும் இரண்டு கண்கள் என்பார் வள்ளுவர். தொழிலில் கணக்குகள், கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்வதை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு எழுத்தறிவு தேவை.
சுயதொழிலில் பெண்கள் : உலகில் போட்டி அதிகமாகி விட்டது. குடும்பச் செலவுகள் பெருகி விட்டன. ஒருவர் சம்பாத்தியம் என்பது, பற்றாக்குறை பட்ஜெட்டிற்கே வழிவகுக்கும். பொருளாதாரத்தை பெருக்க ஆண்களோடு சேர்ந்து பெண்களும் பொருள் ஈட்ட வேண்டியுள்ளது. பெண்கள் வேலை கிடைத்தால் போகலாம்தான். ஆனால், போட்டிகள் நிறைந்த இக்காலத்தில் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், வீட்டுப் பொறுப்பையும் நிர்வகித்துக் கொண்டு வெளியில் வேலைக்கு செல்வது பெரிய சுமை. அவர்களுக்கு சுயதொழிலே வசதியானது. சில பெண்கள் தையல், பொம்மைகள் செய்தல், கூடை முடைதல் போன்ற தொழில்களை செய்கின்றனர். ஏற்கனவே பெண்களுக்கு தலைக்கு மேல் வீட்டு வேலைகள் இருக்கிறது. அதனுடன் குழந்தை பராமரிப்பும் சேர்ந்து கொள்கிறது. எனவே பெண்கள் சுயதொழில் கற்றுக் கொண்டால், கிடைக்கிற நேரத்தில் அதனை செய்ய ஏதுவாயிருக்கும்.தொடங்கும் முன் ஒரு முதலாளியின் வெற்றிக்கு அடிப்படை அஸ்திவாரமே தொழில் தேர்வுதான். தொழில் தொடங்குபவர்கள் தனக்கு விருப்பமுள்ள தொழிலாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிடில் தொழிலில் ஆர்வம் குன்றி எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியை தழுவ நேரிடலாம். தொழில் முனைவோர் மாவட்டத் தொழில் மையங்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது அறிவுப்பூர்வமானது. தொழிலின் தன்மையைப் பொறுத்து அதற்கு ஏற்ற இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் தொழில் அமைப்பதே நன்மை பயக்கக் கூடியது. உற்பத்திப் பொருட்களை கொண்டு வரவும், மூலப்பொருட்களை இறக்கவும், போக்குவரத்து வசதி அவசியம். தொழில் துவங்க மூலதனமே ஆணிவேர்.தொழில் துவங்கும் முன் வேண்டிய மூலதனத்தை திரட்ட முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். சரியான கட்டட வசதி, தொழில் நுட்ப வசதிகளோடு கூடிய இயந்திரங்களை பயன்படுத்துதல், தரமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்தல் போன்றவை வெற்றிக்கு பக்கபலமாக அமைகிறது. மேலும், பொருட்களை தரமானதாக உற்பத்தி செய்யும் கடமையிலிருந்து தொழில் புரிவோர் தவறி விடக்கூடாது. தரமற்ற உற்பத்தி பொருட்கள் காலப்போக்கில் சந்தையில் விலை போகாமல் வீழ்ச்சியடைந்து விடும்.நாடு சுயதொழில் புரிபவரைத்தான் கைகூப்பி வரவேற்கிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள், சுயவேலை வாய்ப்பு திட்டங்களை பயன்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். வீட்டின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் சுயதொழில்களின் எழுச்சியில் தான் உள்ளது.
- எல்.பிரைட், எழுத்தாளர்தேவகோட்டை. 96980 57309

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • razik - bangkok,தாய்லாந்து

    பிரைட் அவர்களின் ஆலோசனைகள் ரொம்ப பிரைட், தனி மனிதனுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யும் நல்ல வழிகாட்டுதல்கள்

  • Maya - MADURAI,இந்தியா

    நன்று....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement