Advertisement

பயிற்சி இல்லாத முயற்சி பலனளிக்காது -இது அலெக்ஸின் 'ஆட்டோகிராப்'

'பயிற்சி இல்லாத முயற்சி'யால் பலர் நடிப்புலகில் தோற்றுவிடுகின்றனர் என்கிறார் 'ஆட்டோகிராப்' அலெக்ஸ். திண்டுக்கல் சின்னாளபட்டிதான் இவரது ஊர். பள்ளிப்பருவத்தில் எதிர்பாராமல் 'ஒற்றை வசன' துணைநடிகரானார். பின், படப்பிடிப்புத் தள ஒருங்கிணைப்பாளராக மறுபிரவேசம் செய்து, சமீபத்திய 'தர்மதுரை' வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
அவர் கூறியது: 1980ல் 5ம் வகுப்பு படித்தபோது, 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' படப்பிடிப்பை, சினிமா விபரமே தெரியாத நான் வேடிக்கை பார்க்கச்சென்றேன். நடிக்க அழைத்தனர். சிறுவயது கதாநாயகன், பள்ளி மாணவனாக துாங்கி விழும்போது, 'வாத்தியார் பார்க்கிறார், எழுந்திருடா' என உசுப்பும் ஒரு காட்சியில் நடிக்க வைத்தனர். 'சினிமாவில் நடித்தவன்' என்று நண்பர்கள் உசுப்பேற்ற எனக்குள் இருந்த ஆர்வம் துாண்டப்பட்டது. திரைத்துறை சார்ந்த பெற்றோர், உறவினர், 'செல்வாக்கு' என எந்த அடிப்படையும் இல்லை. 1989ல், டிராவல்ஸ் நடத்தி வந்த நிலையில், ஆத்துார் பகுதியில் 'என் ராசாவின் மனசிலே' படப்பிடிப்புக்கான வாகன ஏற்பாடு, துணை நடிகர் வாய்ப்பு, வில்லன் நடிகர் நம்பிராஜன் மூலம் கிடைத்தது. 1993ல், கேமராமேன் கார்த்திக்ராஜா, 'சிந்துநதிப்பூ' படப்பிடிப்பு தள முழுமையான ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பளித்தார். இத்தொடர்பு மூலம், வாட்டக்குடி இரணியன், வெற்றிக்கொடிகட்டு, மனுநீதி படங்களில் அவ்வப்போது துணை வேடங்கள் கிடைத்தது. 2004ல், சேரனின் 'ஆட்டோகிராப்'பில் மல்லிகாவின் கணவர் வேடம் திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனரின் மனதில் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்புக்கேற்ப, தேர்வு செய்வது முக்கியம். காதல் படத்தில் 'கிடா வெட்டு', காது குத்துதல் காட்சிகள் இடம்பெற்றதைப்போன்று, நிஜத்திற்கு இணையான சூழலை ஏற்படுத்த வேண்டும். கவுதம் கார்த்திக் நடிக்கும் 'முத்துராமலிங்கன்', விக்ரம் பிரபு நடிக்கும் 'முடிசூடா மன்னன்', பார்த்திபன் நடிக்கும் 'மாவீரன் கிட்டு' போன்ற படங்களில் நடித்துள்ளேன்.
சினிமாவில் நடிக்க வேண்டுமென முயற்சிக்கும் இளைஞர்கள், போதிய பயிற்சி இல்லாததால் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர். அவர்களுக்காக ஓரிரு வாரங்களில் கூத்துப்பட்டறை துவங்கி, நடிப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன். நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது முந்தைய காலம். தற்போது, இயக்கம், இசை, கேமராமேன், இவர்களின் முந்தைய படங்கள் போன்றவற்றைக்கொண்டு, தியேட்டரில் பார்க்க வேண்டிய படத்தை தெளிவாக தேர்வு செய்கின்றனர். நல்ல கதையும், ஒருங்கிணைந்த நடிப்பும் அவசியம்.இவரைப்பாராட்ட, 94433 -31261ல் ஹலோ சொல்லுங்களேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement