Advertisement

ஆபத்தாகும் கடற்குப்பை!

புவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் கொள்ளும் உன்னத பணியை கடல் செய்வதால் தான் வெப்பமடைவது குறைகிறது.
'ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகின் கடற்கரை மற்றும் கடற்பகுதிகளை மாசுபடுத்துகிறது. இது 29 ஆயிரம் ஏர்பஸ் (ஏர் பஸ் ஏ380) எடைக்கு சமம்' என தேசிய புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது.இவற்றில் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பேக்கேஜ் பொருட்களின் அளவு 80 சதவீதம். 46 ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகளான குப்பை, கடலின் ஒவ்வொரு சதுர மைலிலும் மிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 70 சதவீதம் மூழ்கும் தன்மைஉடையது.
உயிரினங்களுக்கு ஆபத்து
இத்தகைய பிளாஸ்டிக் குப்பை, கடல் சுற்றுச்சூழலில் 100 ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக நிரந்தரமாக இருக்கும் தன்மை கொண்டது.80 சதவீதம் குப்பை நிலப் பரப்பில் உள்ள ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகள் மூலம் கடலுக்குள் கடத்தி செல்லப்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் மற்ற மனித செயல்களால் உருவாகும் கடல் குப்பையான உலகின் சுற்றுச்சூழல், பொருளாதாரம், உயிரினங்கள், உடல்நிலை, பாதுகாப்பு மற்றும் பண்பாடு போன்றவற்றிற்கு மிகப் பெரிய தீங்குகளை ஏற்படுத்துகிறது.
கோடிக்கணக்கான கடல்
பாலுாட்டிகள், பறவைகள், ஆமைகள் மற்றும் மீன்கள் போன்றவை வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, கடல் குப்பையில் மாட்டிக்கொண்டு உயிரிழக்கின்றன.
யார் காரணம்
கடல் குப்பை மக்கள் அடர்த்தியான கடற்கரைகளில், மட்டுமல்லாமல் மனிதர் நடமாட்டம் இல்லாத தொலைதுார கடல் பகுதிகளிலும் காணப் படுகிறது. இவை கடற்கரையில் சுற்றுச்சூழலை பாழாக்குவதுடன், கடற்மேற்பரப்பில் மிதப்பதாகவும், நீர் வரிசையில் செல்வதாகவும் மற்றும் அழகான கடற்படுகைகளில் காணப் படுவதாகவும் உள்ளது. கடல் குப்பைகளுக்கு, பெரும்பாலும் மனித செயல்பாடுகளே காரணமாக உள்ளது. இக்குப்பையினை உணவாக கருதி உட்கொள்வதால் கடல் உயிரினங்களும் பலியாகின்றன. இனப்பெருக்க உற்பத்தியும் தடைபடுகிறது.
பாதிக்கும் பவளப்பாறைகள் கடல் மீன்களின் தங்குமிடமாக கருதப்படும், பவளப்பாறைகளானது கடல் குப்பையான மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் டயர்கள் மூலமாக சேதமடைகின்றன. பிளாஸ்டிக் பைகள் மற்றும் மீன்பிடி வலைகள் மூலம் கடல் தாவரங்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. கடல் குப்பை மனிதர்களையும் காயப் படுத்துகிறது.
சர்வதேச துாய்மை தினம் இக்குப்பையை துாய்மைப்படுத்தும் போது ஏற்படும், சுற்றுச்சூழல் மாற்றங்களை மறைமுக தாக்கத்திற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம்.கடல் குப்பையினை அகற்றும் முயற்சி, சுற்றுச்சூழலுக்கு தீங்கை விளைவிக்க முடியும். கடற்கரைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இருக்கும் குப்பைகள், டிராக்டர் மற்றும் பிற இயந்திர சாதனங்களை பயன்படுத்தி துாய்மைப்படுத்தும் போது நீர்வாழ் தாவரங்கள், கடல் பறவைகள், கடல் ஆமைகள் பாதிக்கப்படும்.
இதற்கு தீர்வுகாண வாஷிங்டனில் பெருங்கடல் பாதுகாப்பு என்ற ஒரு லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்பு, சர்வதேச கடற்கரை துாய்மைப்படுத்தும் தினத்தை கடைபிடிக்கிறது. செப்., 3வது வாரத்தில் உலகில் உள்ள கடற்கரைகளை துாய்மைப்படுத்தும் திட்டம், 1986 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.
இத்திட்டம் மூலம், பெருங்கடல் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்களை இணைத்து ஆண்டுதோறும் செப்டம்பர் மூன்றாவது சனியை சர்வதேச கடற்கரை துாய்மைப்படுத்தும் தினமாக கொண்டாடி வருகிறது. கடற்கரை மற்றும் நீர் நிலைகளில் இருக்கும் குப்பையை நீக்கி, கடற்கரை பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
நிலத்தடி குப்பை தொட்டி
ஒவ்வொரு ஆண்டும் 44,000 எம்3 அளவிலான கழிவுகள் வீடுகளில் இருந்தும், 440 எம்3 கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்தும் கடலுக்குள் செலுத்தப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைக்காக, தமிழ்நாடு சுற்றுலாத்துறை புதிய உத்தியை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக கன்னியாகுமரி, மாமல்லபுரம், வேளாங்கண்ணி மற்றும் ராமேஸ்வரம் உட்பட 11 இடங்களில் நிலத்தடி குப்பை தொட்டி நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் 11 இடங்களில் 275 எண்ணிக்கையிலான குழிகளை, 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.அமெரிக்காவில் உள்ள வட கரோலினா போன்ற பகுதிகளில், கடற் கரையோர திடக்கழிவு மேலாண்மை ஆணையம் (CRSWMA) மூலம் கடற்கரை துாய்மையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடற்கரை குப்பையை குறைப்பதற்கும், மாசுபாடுகளை தவிர்ப்பதற்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். மதுரை காமராஜ் பல்கலையில் இதுபோன்ற ஆய்வுகள் நடக்கின்றன. - முனைவர் மு.ஆனந்த் உதவிப் பேராசிரியர் மதுரை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement