Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 41

அன்பு தோழமைகளே நலமா , "நாம் செய்யும் தொழிலைத் தெய்வீகமாகச் செய்ய நாம் பெரிய பதவிகளில் இருக்க வேண்டியதில்லை " - மார்ட்டின் லூதர் கிங். செய்யும் தொழிலே தெய்வம் என்று தொழிலின் புனிதத்தைப் போற்றுவது நம் தமிழ் மரபு. தொழிலை பிழைப்பாக மட்டுமில்லாமல் அதை நாம் அழைப்பாகவும் பார்க்க வேண்டும்.ஒரு சிற்பி சிலையைப் படைப்பதாகக் கொண்டால் சிலையானது ஆளுமையின் வெளிப்பாடு மட்டுமல்ல அவனது உயிரும் அதில் கலந்துள்ளது. இதை தான் காரல்மார்க்ஸ் கூறுவார் மனிதன் தொழிலை செய்யும் பொழுது புதியன படைப்பதோடு மட்டுமில்லாமல் தானும் புதிய பரிமாணத்தில் வளர்ச்சியடைகின்றான். நாம் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமானால் நாம் செய்யும் தொழிலை நேசித்துச் செய்ய வேண்டும்..எந்தத் தொழில் செய்கின்றோம் என்பது முக்கியமில்லை மாறாக அதை எந்த மனப்பக்குவத்தில் செய்கிறோம் என்பதே முக்கியம். நாம் செய்யும் பணியைத் தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்ததாக நாம் செய்யும் போது அதைப் பற்றி பெருமையாக உணர்வோம்.

தொழில் என்பது எது?ஏதோ ஒரு பொருளை உற்பத்தி செய்வதோ , பல பொருட்களையோ அல்லது சேவையையோ பிறருக்கு அளித்து அதன்மூலம் வருவாயைப் பெறுவதா?வெறும் கொடுக்கல் வாங்கல் மட்டுமே தொழிலாகி விடுமா?யாருடன் வணிகம் செய்கிறோமோ, யாருக்காக வணிகம் நடத்தப்படுகிறதோ, நாம் செய்யும் வணிகம் யாரையெல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் எல்லோரையும் உண்மையாய் நேசிப்பதுதான் வணிகமாகும். இதுமட்டுமில்லாமல் இந்த வணிகத்திற்கு பயன்படக்கூடிய இயந்திரங்கள், பணிபுரியும் பணியாளர்கள் , வாடிக்கையாளர்கள் மேலும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு படி மேலே சென்று அவர்களுக்காக இறைவேண்டல் செய்தால் தான் நாம் நம் தொழிலை எந்தளவு நேசிக்கின்றோம் என்பது தெரியும்.முகம் தெரியாதவர்களை எப்படி நேசிப்பது? வணிகத்தில் நேசித்தல் என்பது நாம் உணவு உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் விரும்பி உண்ணக்கூடியதாய், தூய்மையானதாய், தரமுள்ளதாய் இருக்க வேண்டும் என்று நாம் எப்படி விரும்புகின் றோமோ அதே போல் நம்மால் வழங்கப்படும் பொருளோ, சேவையோ மற்றவரைச் சென்றடையும் போது அதனால் அவருக்கு எவ்வித தீங்கும் நேராமல், விரும்பி பயன்படுத்தும் வண்ணமாய் தரவேண்டும் என்பதுதான் நேசித்தலோடு தருவதாகும்.

எது உண்மையான வணிகம்:யாரை நம்பி நாம் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோமோ அவர்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்ததாய், தரமுள்ளதாய் அவர்களுக்கு அளிப்பதுதான் உண்மையான வணிகமாகும்ஒருவர் எந்த துறையில் இருந்தாலும் அதை ஆர்வத்துடன் செய்வாரேயானால் படிப்படியாக முன்னேறமுடியும். அவர்களுக்கு வேலையில் சலிப்பு உண்டாவதில்லை. தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், தொழிலை உயிராக நேசிக்கும் ஒருவருக்கு தொழில் தோல்வி உண்டாக வாய்ப்பே இல்லை.நாம் ஈடுபட்டுள்ள தொழிலை நேசித்து வெற்றிக் கொள்ள நம் எண்ணத்தை விரைவில் முடிவாக மாற்றுவது, சவாலுக்குத் தயாராவது, ஏற்றுக்கொண்ட தொழிலை நேசித்தல் , அதன் நோக்கம் சார்ந்த செயல்பாடுகளையே முன் நிறுத்துதல், மூச்சிலும் பேச்சிலும் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் செய்ய விளையும் தொழில் பற்றியே சிந்தித்தல். குறுகிய கால திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள் வகுத்து செயலாற்றுதல் மனக்கலக்கமின்றி மேற்கொண்ட தொழில் எண்ணத்தை , சோர்வு ஏதும் தர வாய்ப்பின்றி , காலம் தாழ்த்தாமல் உடன் செய்து முடித்தல். இவ்வாறு நம் தொழிலை நேசித்து தொடர்நடை போடுகையில் எதிர்பாராத பல வாய்ப்புகள் நம்மை வந்தடையும்..

வழிகாட்டும் ஒளியாகசீனாவில் ஒருவகை மூங்கில் இருக்கிறதாம் . அதனை விதைத்த பிறகு அது மீண்டும் முளைத்து வருவது போலவே தெரியாதாம் , எந்தவிதமான அறிகுறியும் பல மாதங்களுக்கு தென்படாதாம் . பின் திடீரென்று வளர ஆரம்பிக்குமாம் . மடமட வென்று வேகமாக வளருமாம் ..அது போல் நம் உழைப்பை , நேர்மையை, தொழிலை நேசித்து செய்வதை சிலர் கண்காணிப்பார்கள் நம்மை பற்றி நல்லெண்ணம் கொள்வார்கள், ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள் , தேவை வரும் போது அழைப்பார்கள் , கொடுப்பார்கள் பெரிய அளவுகளில் .எந்தவொரு தொழிலும் முழு அர்ப்பணத்தோடும் தியாகத்தோடும் நாம் செய்யும் போது தொழில் தெய்வீகத்தன்மையைப் பெறுவதுடன் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக மாறுவோம் என்பதில் ஐயமில்லை...

ராஜராஜன் பாராட்டிய சிற்பிராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பெரிய கோவில் கட்டும் வேலை நடை பெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றார். மன்னர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் சிற்பியானவன் கண்ணும் கருத்துமாகச் சிற்பங்களைச் செதுக்குவதிலேயே கவனமாக இருந்தான். அவனைப் போன்ற பெரிய சிற்பிகளுக்கு எடுபிடி வேலை செய்ய சின்ன வேலைக்காரர்கள்/அடைப்பக்காரர்கள் அருகில் நிற்பார்கள். அவர்கள் தேவைப் படும்போதெல்லாம் வெற்றிலை, பாக்கு மடித்துக் கொடுப்பார்கள். வெற்றிலையைக் குதப்பித் துப்புவதற்கு ஒரு கலசத்தையும் ஏந்தி நிற்பார்கள். ஒரு முறை மன்னர் ராஜ ராஜன் போய் அருகில் நின்றபோது , அடைப்பைக்காரனென்று நினைத்துஏ… வெற்றிலை மடித்துக் கொடு என்று உத்தரவிட்டான் சிற்பி. உடனே ராஜராஜன் வெற்றிலை மடித்துக்கொடுத்தான்.சிறிது நேரம் கழித்து வாயில் குதப்பிய எச்சில் வெற்றிலையைப் புளிச்சென்று துப்பினான். அதையும் கலசத்தில் ஏந்தினான மன்னன். எதேச்சையாக சிற்பி நிமிர்ந்து பார்த்தபோது மன்னரிடம் இப்படி எடுபிடி வேலைகள் செய்யச் சொன்னதை எண்ணி பயந்து நடுங்கினான். ஆனால், ராஜ ராஜனோ சிற்பியின் ஈடுபாட்டையும் ஒருமுக கவனத்தையும் பாராட்டிச் சென்றான். சிற்பிக்குப் பன் மடங்கு உற்சாகம் அதிகரித்தது.செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதினான் சிற்பி. அவனுக்கு வேலையில் இருந்த கவனமும் ஈடுபாடும் அவன் அதை தெய்வீகப் பணியாகக் கருதியதைக் காட்டுகிறது. நாமும் பலனில் பற்று வைக்காமல் நமது கடமையைச் செய்தோமானால் நம் பணி சிறக்கும், நாடும் செழிக்கும்பத்தோடு பதினொன்றாய் அத்தோடு நாம் ஒன்றாய் நம் வாழ்வில் எவ்விதத் தடமும் பதிக்காது பிறந்தோம் உண்டோம் மரித்தோம் என்று எவ்வித புதிய இலட்சியமும் இன்றி வாழ்வது வாழ்வே இல்லை.. செய்யும் பணியை ரசித்து நேசித்து செய்வோம் , அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்... அடுத்த வாரம் முதல் சிறு தொழில்களின் செய்முறைகள் குறித்து காண்போம்...
- ஆ.ரோஸ்லின்aaroselinegmail.com9842073219

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement