Advertisement

தொலைபேசியில் தொலைந்து போகாதீர்கள்!

'காலம் பொன் போன்றது' என்று சொல்வது சரியா? காலம் மதிப்புமிக்கது என்று அர்த்தத்தில் அது சொல்லப்பட்டது. ஆனால், போனால் கிடைக்காது என்ற அர்த்தத்தில் பார்த்தால் இது பொருந்தாது. மீண்டும் பொருள் கிடைக்கும் போது பொன்னை வாங்கிவிடலாம். ஆனால், இழந்த நேரத்தை வாங்க முடியாது. காலம் உயிர் போன்றது.
நேரத்தை சேமித்து வைக்க எந்த வங்கியும் கிடையாது. ஆனால், ஒரு வழி உண்டு. அதுதான் நேரத்தை புத்திசாலித்தனமாய் செலவழிப்பது. அதாவது நேரத்தை முறையாக முதலீடு செய்வது. உங்களை தேக மனோரீதியாக செம்மைப்படுத்திக்கொள்ள, உங்களது திறமையை மேம்படுத்திக்கொள்ள நேரத்தை உரிய விதத்தில் செலவிட வேண்டும்.
'எனக்கு நேரமில்லை. என்ன பண்ணட்டும்' என்று புலம்புகிறவர்களுக்கு, ஒரு வார்த்தை அதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டிருந்தால் அவர்கள் புலம்ப மாட்டார்கள். சுறுசுறுப்பான நபர்களுக்கு மட்டும் எப்படியோ நேரம் கிடைத்துவிடுகிறதே? அவர்கள் எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பத்தோடு பதினொன்றாய் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் உங்களுக்கு காரியம் உடனே நடந்தாக வேண்டும் என்றால், அதை 'பிஸி'யானவர்களின் கையில் ஒப்படையுங்கள்.
யார் அந்த சுறுசுறுப்பு பேர்வழி? நேரத்தை ஒழுங்குப்படுத்திக்கொண்டு அதை சிக்கினமாக செலவழிக்கிறார்கள். அவருக்கு நேரம் விலைமதிப்புள்ள பொருள். நேரத்தை முறையாக பயன்படுத்தி ஒழுங்கு செய்வது அவசியம் என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். நேரம் இல்லை என்று சொல்கிறவர் அதை ஒழுங்கு செய்து கொள்வதும் இல்லை என்றுதான் அர்த்தம்.தயக்கம் காரணமா சிலருக்கு எதையும் சட்டென்று தீர்மானிக்க இயலாது. இப்படியா, அப்படியா என்று ஊசலாட்டம் அவர்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அத்தகையவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். வாய்ப்புகளை இழக்கிறார்கள். நிறையவே தலைவலிகளை வரவழைத்து கொள்கிறார்கள். முடிவெடுக்க இயலாதவர்தான் தமது காரியத்தை தள்ளிப்போடுவார். எதையுமே செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வது நல்லது. எது நல்லது என்று தீர்மானிக்க முடியாதவரால்தான், முடிவெடுக்க இயலாமல் போகிறது. முடிவு எடுப்பவர் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் இது. பெரிய காரியத்திற்கு குறைவான நேரத்தை ஒதுக்குவதும், அற்ப காரியத்துக்கு அதிக நேரம் ஒதுக்குவதும் தவறு.விருந்துக்கு புறப்படுகிறீர்கள். எந்த உடை அணிந்து போவது? ஆட்டோவில் போவதா, பஸ்சிலா? இதற்கெல்லாம் முடிவெடுக்க சில நிமிடங்கள் போதும். மாதம் எவ்வளவு மிச்சம் பிடிப்பது, எந்த வகையில் சேமிப்பது? யாரிடம் முதலீடு செய்யலாம்? இப்படிப்பட்டவற்றிக்கு அதிக நேரம் தேவைப்படும். இவை யோசித்து முடிவெடுக்கப்பட வேண்டியவை.
எது சரியான நேரம் : நேரம் தன்னை பயன்படுத்திக்கொள்ளாதவருக்கு பகையாகி விடும். நெப்போலியன் சொன்னான், 'வாய்ப்புகளுக்காக காத்திருப்பவன் கோழை. நான் வாய்ப்புகளுக்காக காத்திருப்பதில்லை. அவற்றை உருவாக்கி கொண்டு விடுகிறேன்' என்று. 'சரியான நேரம் வரட்டும்' என்று காத்திருப்பவர், வாழ்க்கை முழுவதும் காத்திருக்கும்படி ஆகும். 'உரிய நேரம்' என்பது வெகு அரிதாகவே வருகிறது. பெரும்பாலானவற்றில் அது இந்த நிமிடமாகவே இருக்கிறது.
விருப்பம் முக்கியம் : ஒரு விஷயத்தை நம்மால் மறுக்க முடியாது. விருப்பமுள்ள காரியத்தை செய்ய எப்படியும் நேரத்தை கண்டுபிடித்து விடுகிறோம். விருப்பமற்ற காரியத்தை செய்ய வேண்டிய நிலையில்தான் நேரமில்லை என்கிறோம். காரியம் முக்கியமானதாயின் அதன் மீது ஒரு விருப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு செய்வது நல்லது. அப்போது அதைச்செய்வதற்கான நேரம் தன்னால் கிடைத்துவிடும்.
காலவிரயம் : நாம் நேரத்தை எப்படி செலவிடுகிறோம்? என்பதை பற்றி சில நிமிடமாவது சிந்தித்தால் நீங்கள் செய்கிற காரியம் இன்னும் நன்றாகவே அமையும். நமது நேரத்தை எதுவெல்லாம் வீணடிக்கிறது என்பதை இனம் காண வேண்டும். ஒரு காரியம் அரைகுறையாக நின்று போவதற்கும் அறவே செய்யாமல் விடப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை கண்டறியுங்கள். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்று செய்த காரியங்கள் எது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டி பாருங்கள். இவை எல்லாம் உங்களால் முடிகிறபோது, நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று நம்பலாம்.
இலக்குகள் : 'ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்வதும், அதை அடைவதற்கு பாடுபடுவதும் நேர நிர்வாகத்தில் ஒரு அம்சம்தான். என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதபட்சத்தில், எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாததுதான். எது முக்கியம் என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருந்தால் நிகழ்வுகள் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இல்லையேல் நிகழ்வுகளின் கட்டுப்பாட்டில் நீங்கள் முடங்கி போவீர்கள். கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தில் எப்படி செய்யலாம் என்பதை திட்டமிடுங்கள்.
இனம் காணுங்கள் : செய்ய வேண்டிய வேலைகளின் தன்மையை ஆராயுங்கள். எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். உங்கள் முன் காத்திருக்கும் வேலைகளை பட்டியலிடுங்கள். என்ன செய்வது, என்னென்ன தேவை என்பதை மனதில் கொண்டு நேரம் ஒதுக்குங்கள்.
நேரத்தை எப்படி திட்டமிடுவது
* எது உங்களுடைய பொறுப்பு. எது உங்களுடைய பொறுப்பாகாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.* இலக்கு பற்றி தெளிவாக இருங்கள்.* எவற்றுக்கு முக்கியத்துவம் என்பதை இனம் காணுங்கள்.* அன்றைக்கான காரியத்தை அறிந்து கொள்ளுங்கள்.* எது அவசரமானது, எது முக்கியமானது என்பதை பிரித்து அறியுங்கள்.அன்றைக்கு செய்ய வேண்டிய காரியங்கள், பட்டியலில் இடம் பெற வேண்டும். அவற்றில் சிலவற்றை செய்து முடித்தும் அலுத்து போவீர்கள். மேற்கொண்டு ஒரே ஒரு காரியத்தை செய்யவும் ஆர்வம் இருக்காது. சில சமயம் ஒரு காரியத்தை மூன்று நாட்கள் கிடப்பில் போட்டிருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.செய்யப்பட வேண்டிய வேலைகளை நேரத்தோடு வரிசைப்படுத்துங்கள். சின்ன சின்ன சமாச்சாரத்துக்கு எல்லாம் 'லிஸ்ட்' தேவையா என சிலர் நினைக்கலாம். தேவைதான். உங்களால் எத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? அதிகபட்சம் ஒரு பத்து. அதற்கு மேல் உங்களது ஞாபகசக்தி அனுமதிக்காது. ஒவ்வொரு வேலையையும் முடித்த பின் 'டிக்' அடிக்கும்போது சாதித்த உணர்வு ஏற்படும். நேரத்தை சேமியுங்கள்
நேரத்திற்கு மதிப்பில்லை - அதை உபயோகிப்பதற்கு முன்பு.நேரத்திற்கு மதிப்பில்லை - அதை வீணடித்து விட்ட பின்பு. பகட்டுக்கும், ஊதாரித்தனத்திற்கும் அதிக நேரம் செலவிடாதீர்கள். தொலைபேசியில் தொலைந்து போகாதீர்கள். அது அவசர செய்திகளை பரிமாறிக்கொள்ள ஏற்பட்ட சாதனம். அதில் அன்றாட வாழ்க்கையை சம்பவங்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பது அவசியமா? இரு தரப்பினருக்குமே நேரம் விரயமில்லையா? ஒரு பெண் வீட்டு போனை எடுத்தால், மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். கணவன் கண்டித்தாலும் கேட்பதில்லை. அன்றைக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பை 10 நிமிடங்களில் பேசி முடித்துவிட்டார்கள். ஆச்சரியப்பட்ட கணவன் காரணம் கேட்க அந்த அம்மா சொன்ன பதில், 'இது ராங் கால்'. இதற்கே பத்து நிமிடங்களா?நேரம் போகவில்லை என்பவர்கள் சோம்பேறிகள்.நேரம் போதவில்லை என்பவர்கள் வெற்றியாளர்கள்.
- முனைவர் இளசைசுந்தரம்எழுத்தாளர், மதுரை98430 62817.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  மிக சரி என்று நினைக்கிறேன். பணம்,பொருள் அனைத்தும் பிறகு வாங்கி கொள்ளலாம். ஆனால் நேரம் போனால் போனது தான் .அடுத்தவர்களிடம் நேரில் பேசுவது சண்டை போட மட்டும்தான் .மற்ற அனைத்தும் தொலைபேசியில் தான். விரைவில் BSNL க்கு அனைவரும் போக போகிறோம். இவ்வளவு வெள்ளத்திலும் சென்னையில் BSNL மட்டும் வீடு /அலுவலகத்தில் வேலை செய்தது நினைவு கூற வேண்டும் .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அலை பேசியில் அளந்து அளந்து அழிந்து போகாதீர்கள் இளைய சமுதாயமே.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  ஒரே வீட்டில் இருப்பவர்கள் நேருக்கு நேர் பேசிக்கொள்வதில்லை. நான்கு பேரும் நான்கு இடத்தில் அமர்ந்துகொண்டு chat பண்ணிக்கொள்கிறார்கள். தொலைபேசியில் தொலைத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனாலே விபத்து பெருகி விட்டது. கழுத்துல சுளுக்கு போல் ரொம்ப பேரு பைக் ஓட்டுறாங்க இந்த வீணா போன அலைபேசியால்.

 • razik - bangkok,தாய்லாந்து

  முனைவர் இளசைசுந்தரம் அவர்களுக்கு நன்றி. உங்கள் ஆக்கம் படித்து ஆக்கமும் ஊக்கமும் பெற்றேன். உங்கள் கட்டுரை படித்துக் கழிந்த காலப்பொழுதுகள் கூட பயனுள்ள ஆரம்பம்தான். இனி தொலைபேசியில் தொலைத்திடேன் ,நோக்கியா நோக்குவதே நோக்கமாகுமா? வாட்ஸ்ஆப்பிலேயே வாழமுடியுமா ? சாம்சங்கு அது சமயம் கொல்லும் சாவுச் சங்கு என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன் தெளிவு தரும் ஆக்கங்களை தேர்தெடுத்து தினம்தரும் தினமலருக்கும் நன்றிகள் பல

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  நல்லகாலம் என்னிடம் இந்த தொலைபேசி இல்லீங்க. வச்சுக்கவே இல்லே , வீட்டுக்குள்ளியே கமியூனிகேஷனே இல்லிரிங்க பல சண்டைகள் இதனால் neruthu என்பதே உண்மை , வைத்திருக்கும் என் உறவுகளும் கூட கிச்சன் லே வேலை என்றால் இந்த தொல்லையை தீண்டுவதே இல்லேன்னு முடிவாகவே இருக்காங்க , சமையல் முடியும்வரை நோ நோ தான் எந்த காலுக்கும் , இந்த தொல்லையால் நேரும் தப்புகள் சில நேரம் உப்பு போடா மறப்பது ஆர் ரெண்டுதரம் உப்புகாரம்னு சேர்த்துட்டு தவிப்பதை தவிர்க்கவே , சிலர் முக்கியம் தவிர இந்த தொல்லையை சீந்துவதே இல்லே என்பதும் உண்மை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement