Advertisement

'கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா...' இன்று எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் கோபுரத்தில் இருந்து, 'மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா' என்ற ராஜாஜியின் பாடல், மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் குரல் வாயிலாக ராக மாலிகையாக, தென்றல் காற்று, இசையை அழைத்து வர, வலதுபுறம் திரும்பினால், பெரியாழ்வார் 'பல்லாண்டு' பாடிய 'மெய்காட்டிட்ட பொட்டல்'. இப்பகுதியில் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் ஒரு இசைக் கோயில் உள்ளது.

அது, உலகம் முழுதும் இசையால் புகழ்பெற்ற சுப்புலட்சுமியின் இல்லம். இன்றும், வீட்டின் மேல்முகப்பில் வீணை வடிவம் உள்ளதை காணலாம்.ஒரு இசைக்கலைஞரால் சில பாடல்கள் புகழ்பெறலாம். ஆனால், பல திருக்கோயில்களும், பல சபாக்களும் பல விருதுகளும் புகழ்பெற்றன என்றால் அது, 'எம்.எஸ்.,' என்ற இரண்டெழுத்தினால் தான்.

'கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா' எனத் தொடங்கும் 'வேங்கடேச சுப்ரபாதம்' முதன்முதலாக பாடப்பட்டு, திருப்பதி திருக்கோயில் புகழ் அடைந்ததில் 'எம்.எஸ்.,'-க்கு பெரும் பங்கு உண்டு. அதனால் தான் திருப்பதி பேருந்து நிலையத்தில், தம்புராவுடன் கூடிய எம்.எஸ்.-, சிலை அமைக்கப்பட்டுள்ளது. அன்னமாச்சார்யாவின், 'ஷிராப்தி கன்யகு' என்ற குறிஞ்சி ராகக் கீர்த்தனையும், 'மறலி மறலி ஜெயமங்களமு' என்ற ராகமாலிகையும் உயிர் பெற்றது, எம்.எஸ்.,சின் குரல் வளத்தால் தான்.

மகாலட்சுமி தங்கும் வீடு தமிழகத்தில் உள்ள கர்நாடக சங்கீத வித்வான்களுக்கே சவாலான பல பாடல்கள், எளிய மக்களுக்கு சென்றடைந்தது எம்.எஸ்.,சின் இசை வழியே தான்.அவற்றில் சில:- ஆதி சங்கரர் பாடல்கள்

''ப்ருகிமுகுந்தேஹி -
பஜகோவிந்தம் - ராக மாலிகை
கனகதாரா ஸ்தோத்திரம் - ராகமாலிகை”
முத்துசாமி தீட்சிதரின் ஸ்ரீ வரலஷ்மி (ஸ்ரீராகம்) மற்றும் மகாலஷ்மி கருணா ரஸ (மாதவமனோகரி ராகம்) என்ற இரு க்ருதிகளும் நம் இல்லங்களில் ஒலித்தால் மகாலட்சுமி நம் வீட்டிலேயே இசை வடிவில் தங்கி விடுவாள்.

மேலும் இளங்கோவடிகளின் 'வடவரையை மத்தாக்கி' சிலப்பதிகாரப் பாடலும், 'கைத்தல நிறை கனி' - திருப்புகழும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'வண்டாடும் சோலை' பாடலும் 'காற்றினிலே வரும் கீதம்' பாடலும் தமிழகத்தின் இசை மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. அதோடு
அண்ணாமலை ரெட்டியாரின் 'மஞ்சு நிகர் குந்தல மிக' காவடிச் சிந்து கடல் கடந்து தமிழிசை மணம் பரப்பியது.

பாரதியாரின், 'நெஞ்சுக்கு நீதியும்', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா' படைப்புக்கள்
கேட்போரின் மனதில் இசைவழியே உறுதியை, தேசபக்தியை விதைத்தன. அம்புஜம் கிருஷ்ணாவின் 'வருக வருகவே' தமிழிசைப் பாடல், இசை அரங்கில் வரவேற்பை பெற்றதும்
எம்.எஸ்.,சின் இசை வளத்தால் தான்.

திரைப்படத்தில் எம்.எஸ்., சுதந்திர வேள்வியில், பலவித போராட்டங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கதர் இயக்கம் முதன்மை வகித்தது. அதில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ஆவேசமிக்க சுதந்திர கீதங்களை இசைத்தவாறே கதர் விற்கும் பணியை புரிந்துள்ளார் சதாசிவம். அதன் மூலமாக ராஜாஜி அவர்களின் நட்பு கிடைத்தது.

இசையை வேள்வியாகவே நினைத்து பாடி வரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை கொண்டு, அன்னை கஸ்துாரிபா நினைவு நிதிக் கச்சேரிகள் செய்யுமாறு, ராஜாஜி கேட்டுக் கொண்டதன் பேரில், மகாத்மா காந்தியே சதாசிவம் தம்பதியருக்கு இந்த உன்னதப் பணி தொடர தன் மனமார்ந்த ஒப்புதலையும், ஆசிகளையும் வழங்கினார். எம்.எஸ்., குரல் வழியே “மன்னும் இமயமலை எங்கள் மலையே....” “பாரததேசம் என்று பெயர் சொல்லுவார்...” “வைஷ்ணவ ஜனதோ,” “ரகுபதி ராகவ ராஜாராம்...” போன்ற தேசபக்தியைப் போற்றும் பாடல்கள், இன்னும் பல்லாண்டுகள் அவரது தேசாபிமானத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

கானக்குயில்

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டிற்கு யாராவது விமர்சனம் எழுத முயற்சித்தால், அமரர் கல்கியின் விமர்சனத்தினை நினைவுபடுத்திக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அமரர் கல்கி எழுதினார்,

'சுப்புலஷ்மியின் ராக ஆலாபனை கானக் குயில்களின் ஆரவாரம்; மழைத்துளிகள் தந்த
சந்தோஷம். கலாபமயிலின் களி நடனம், அருவியின் கம்பீர ஓசை, அலைகளின் ஆர்ப்பரிப்பு, பசியாறிய ஏழையின் முகத்தில் ஏற்பட்ட நிறைவு அனைத்தையும் நினைவுபடுத்தியது' என்று பற்பல உவமைகளால் அந்த இன்ப உணர்வை விளக்க முயற்சித்தார்.

அந்த இசையரசிக்கே உரிய பாணி, பாடாந்திரம், எந்த கீர்த்தனையை எந்த காலப்ரமாணத்தில் பாட வேண்டும், எந்த வரிக்கு எப்படிப்பட்ட சங்கதிகள் சோபை தரும், தன் குரலின் அழகை எங்கு வெளிப்படுத்தலாம், வல்லின, மெல்லின ஏற்ற இறக்கங்கள், எப்படி வார்த்தைகளைப் பிரித்தால் சாஹித்ய பாவம் கெடாமல் பாடலாம்.

எங்கு நிறுத்தி எங்கு மூச்சுப்பிடித்துப் பாடினால் சிரமம் இன்றிப்பாடலாம், எந்த இடத்தில் குரலின் வளமையினை, நாபியில் இருந்து வெளிப்படும் நாதத்தின் மகிமையைக் காட்டலாம், எந்த ராகத்தைச் சுருக்கமாக, விரிவாகப் பாடினால் கச்சேரி சோபிக்கும்.எப்படி பக்கவாத்தி
யங்களை அனுசரணையாகவும், சுறுசுறுப்பாகவும் மாற்றி கச்சேரியை நடத்திச் செல்லலாம், வந்தது வராமல் ஸ்வர மழை எப்படிப் பொழியலாம் என்று எம்.எஸ்.,ஐ வைத்து, ஒரு விளக்க உரை எழுத வைத்தால், அது 'என்சைக்ளோபீடியா' பக்கங்களை மிஞ்சும் என்று எதிர்பார்க்கலாம்.

விருதுகள்

இசை உலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அறுபதாண்டு கால சாதனைகளைப் பாராட்டி,
பாரதத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டுள்ளது (1998). இந்த விருதினைப் பெறும் முதல் இசைக் கலைஞர் எம்.எஸ்., என்பது நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய
செய்தி. பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கான, ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்ட 1954-ம் ஆண்டிலேயே, இசைத் துறையின் தலைசிறந்த கலைஞர் என்கிற
அடிப்படையில் 'பத்ம பூஷன்' விருதினை முதல் ஆண்டிலேயே பெற்றவர் எம்.எஸ்.

இவரது 'மீராபஜன்' பாடல்களில், தன்னையே மறந்து உள்ளம் உருகியவர் அண்ணல் காந்தி. ''நானொரு சாதாரண பிரதம மந்திரி, இவரோ இசை உலகின் பேரரசி! பேரரசியின் முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?” என்று நேருவால் புகழாரம் சூட்டப்பட்டவர். இவரின் இசையில் மனதைப் பறிகொடுத்த சரோஜினி நாயுடு, தனது 'இசைக்குயில்' பட்டத்தை எம்.எஸ்.,க்கு தாரை வார்த்துத் தந்தார்.

1966-ல் ஐ.நா., பொதுச் சபையில் பாடி உலகப் புகழ் அடைந்தார். இங்கிலாந்தில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், சோவியத் ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, நமது இசைக் கொடியை உலகத்தின் பார்வைக்கு உயர்த்திப் பிடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

ஆசியாவின் பெருமைக்குரிய முதல் நிலை விருதான 'ரேமான் மகசேசே விருது', 'இந்திராகாந்தி விருது' உள்ளிட்ட ஏராளமான விருதுகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியை தேடி வந்தடைந்து
தங்களை பெருமைப்படுத்திக் கொண்டன.

- முனைவர் தி.சுரேஷ்சிவன்
இசைத்தமிழ் அறிஞர்
மதுரை-, 94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  திருமதி எம் எஸ் அம்மா அவர்களை ஒரு முறை அவரின் பிறந்த நாளில் சந்தித்து ஆசி பெற்றது என் வாழ்நாளில் மறக்க முடியாதது

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  இசை மேதை புரந்தர தாசரை பற்றிக்குறிப்பிட மறந்து விட்டீர்களே? அவருடைய தத்துவ பாடல்கள் பல MS அவர்கள் பாடியுள்ளார்.அதில் "நாராயண நின்ன நாமத ஸ்மரணயா ."முதலானவை.

 • naresh kumar k m - tamil nadu,இந்தியா

  இவர் பாடிய சுப்ரபாதம் ஒலிக்காத கோவிலே இல்லை என்று சொல்லலாம் . நன்றி அம்மா.... உங்கள் இசை என்றும் அழியாத காற்றனில் வரும் கீதம் அம்மா

 • K.KRISHNAMURTHY - TIRUPUR.,இந்தியா

  நமஸ்காரம். நமது சுப்புலக்ஷ்மி அம்மா பிறந்து இன்றோடு 100 வருடங்கள் கடந்து சென்றாலும் இன்றும் அவர்களது பாட்டுக்களை கேட்டால் மெய் மறந்து போகலாம். நமது தமிழ் நாட்டில் பிறந்ததால் நாம் தமிழர்கள் அனைவரும் அம்மாவை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். காற்றினிலே வரும் கீதம், குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா போன்ற பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவை. உலகம் உள்ளளவும் உங்கள் நினைவும் மற்றும் உங்களது பாடல்களும் நிலைத்து நிற்கும். ஒரு முறை நமது அம்மா அவர்கள் ஸ்ரீ புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் பாபா முன்பு " குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா " என்ற பாடலைப் பாடினார்கள். அந்த பாட்டை பாபா மிகவும் ரசித்து கேட்டவுடன், கீழ் கண்டவாறு நமது அம்மாவிடம் சொன்னார்கள். " இங்கு என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் எல்லாம் என்னிடம் ஏதாவது குறைகளை சொல்லி ஆசி வாங்கி செல்கின்றனர். ஆனால் முதன் முதலாக நீ மட்டும்தான் என்னிடம் குறை ஒன்றும் இல்லை சொல்லி ஆசி வாங்குகிறாய். நீ என்றுமே குறை ஒன்றும் இல்லாமல் வாழ்வாய் என்று பாபா அவர்கள் அம்மாவிற்கு ஆசி கூறினார். ஜெய் ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்கு ஜெய். சாய் ராம்.

 • Nagaraj - Doha,கத்தார்

  திருமதி M.S. அவர்களின் புகழை பாராட்ட எனக்கு தகுதி இல்லை . ஆனால் அவரின் தேனினும் இனிய பாடல்களை கேட்டு லயிப்பதில் முழு உரிமை உண்டு

 • RGK - Dharapuram,இந்தியா

  இவர் பாடிய சுப்ரபாதம் ஒலிக்காத கோவிலே இல்லை என்று சொல்லலாம் . நன்றி அம்மா....

 • Jaya Ram - madurai,இந்தியா

  நான் பிறக்கும்முன்னரே பத்மபூஷன் பட்டம் பெற்ற இசை அரசியின் ஒலி வடிவங்களை வீட்டிலே சுவாமி கும்பிடும்போது கேட்டுக்கொண்டு சுவாமி கும்பிடுவேன் , மனம் லேசாகிவிடும், எனக்கு இசை சம்பந்தமான அறிவு என்பது சிறிதும் கிடையாது ஆனால் திருமதி எம் எஸ் அவைகளின் குரலினிமையும் தமிழ் உச்சரிப்புகளும் என்னை எங்கோ பறக்க வைத்துவிடுகின்றன என்ன ஒரு துரதிர்ஷ்டம் நானும் மதுரை காரனாக இருந்தும் அந்தம்மாவை காணும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை, எனது 62 வயதில் அந்தம்மாவின் அபிராமி சந்ததியே மாலை நேர இசை இன்பம் என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாதவர்களில் அவரும் ஒருவர்

 • Sampath Kumar - chennai,இந்தியா

  உங்கள் இசை என்றும் அழியாத காற்றனில் வரும் கீதம் அம்மா

 • Senthil Rajan.D - Palladam,இந்தியா

  இந்த மண்ணுலகம் உள்ளவரை எம் எஸ் அம்மாவின் ரீங்காரமிடும் குரல் வலம் வந்துகொண்டே இருக்கும் ....தெய்வ கடாட்சம் நிறைந்த இசைப்பேரரசியின் ஆத்மாஎன்றும் நம்முடன் இருக்கும் ..

 • JSS - Nassau,பெர்முடா

  தெய்வ களை உள்ள அவரது முகத்தை பார்த்தாலும் தெய்வத்தின் குரலை கேட்டாலும் நாள்முழுதும் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இந்த அனுபவம் மற்றவர்களை (ஆணோ அ பெண்ணோ ) பார்த்தால் ஏற்படுவதில்லை. எம் எஸ் எம் எஸ் தான் . ஈடு இணையற்றவர் .

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  கல்கண்டின் என்தோற்றம் கசக்கும்னு சொல்லமுடியுமா அதே போல மிஸ் அம்மாவின் எல்லா இசையும் என்றும் இருக்கும் ஜீவநதி

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  நல்ல பதிவிற்கு நன்றி அய்யா .

 • s t rajan - chennai,இந்தியா

  எம் எஸ் அம்மா "கலை நிறை கணபதி" என்று நீ முதல்வனை அழைப்பாய். அவன் உடனே தலை அசைத்து வந்து தடைகள் களைவான். சாவேரியில் "முருகா முருகா" என்று இசைப்பாய். கந்தன் பறந்தோடி வந்து நல்வழி சமைப்பான். "சரணம் ஐயப்பா" என்று ரேவதியில் முழங்க "இந்தா என் அபயகரம்" என்று ஐயன் அருள் பொழிவான். "பராத்பரா பரமேஸ்வர" என்பாய். உன் வாசஸ்பதிக்கு அந்த பசுபதி ஆடி நெகிழ்வான். "தேவி நீயே துணை" என்று பதம் பணிவாய், தென் மதுரை மீனாள் (உன்) முன் தோன்றுவாள். "மறவேனே என்னாளிலும்" என்று அகம் குழைவாய். கிரிதாரி நவநீதம் கொணர்வான். "மஹாலக்ஷ்மீ" என்ற உன் சங்கராபரண அழைப்பிற்கு கனகம் பொழிவாள் அந்த ஜெகன்மாதா. "எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதெந்தன் நாவிலே" என்ற உன் ஆணைக்கு "பாரதி" உட்படுவாள். தோடியில் "எங்கெல்லாம் உன் ராம நாம" "ஆத்ம" கீதம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் அஞ்சனை செல்வனை நானும் காண்பேன். நீ "வேயுறு தோளி பங்கன்" என்றால் நவகோள்களும் "மிக நல்ல"னவே செய்தென்னைக் காக்கும். "இரை தேடுவதோடு இறையையும் தேடு" என்றார் பாம்பனார். ஆனால் இசை தேவதை நீயோ இறையை மட்டுமே தேடி, கண்டு, அதுவும் நீயே ஆகி விட்டாய். எங்கள் கண் கண்ட நவயுக பக்த மீரா தேவியே, காற்றினிலே வரும் உன் கீதம் என்னையும் கடைத்தேற்றும் சத்தியம். உன் கண்டத்தால் கண்டங்களை இணைத்த மாபெரும் இசை தேவதை நீங்கள். கயற்கண்ணி அளித்த கலைவாணி உனக்கு தமிழக அரசு சரியான மரியாதை செய்ய வில்லையே என்று சற்று வருத்தம் தான் அம்மா. ஈதலும் இசைபட வாழ்ந்து காட்டிய அன்னையே நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற பெருமை கொள்கிறோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement