Advertisement

நலமாய் வாழ மூன்று மந்திரங்கள்

''நான் வியக்கும் ஒரே இனம் மனித இனம். தன் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, செல்வத்தை சேர்க்க ஓடுகிறான். பின் ஆரோக்கியத்தை சீர்படுத்த சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து, இழக்கிறான்'' என மார்டின் லுாதர் கிங் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்''
''சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்''என ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி பல பொன் மொழிகள் இருந்தாலும், இயந்திர கதியில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இவை வெறும் பொன் மொழிகளாக மட்டுமே இருப்பது வேதனைக்குரியது.

நோய்களுக்கு குறைவில்லை

குழந்தைகள் முதல் முதியவர் வரை பலவித குறைபாடுகள், நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய், காச நோய், சிறுநீரக பாதிப்பு என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்தல், பெண்கள் மாதவிடாய் கோளாறு, குழந்தை பேறின்மை, எலும்பு பலவீனமடைதல் என அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

மனிதனும், மாத்திரையும் பிரிக்க முடியாத இணைப்பாகி விட்டது. அதிலும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட ஞாபகத்திறனுக்கும், உடல் வளர்ச்சிக்கும் மாத்திரைகளை கொடுத்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.

'பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்' என தமாஷாக சொல்வது போலத்தான் பலரும் நடமாடிக் கொண்டிருக்கிறோம். அடித்தளத்தை செப்பனிடாமல், மேலே விழும் கீறலுக்கு மட்டும் மருத்துவம் செய்து வந்தால், என்றாவது ஒரு நாள் பெரிய பூகம்பத்தில் நம்மை நிறுத்தி விடும் என்பதே உண்மை.

வாழ்க்கைமுறை

''நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்''

நோயின் தன்மையை ஆராய்ந்து, அந்நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதை தீர்க்கும் வழியை ஆராய்ந்து, உடலுக்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும். ஒவ்வொரு படைப்புக்குள்ளும் அவற்றை பராமரிக்கும் ஆற்றலும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. காட்டில் வாழும் விலங்குகள், நோய் வாய்ப்படுவதில்லை.பல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பலவித நோய்கள், குறைபாடுகளுக்கு காரணம் 'வாழ்க்கை முறை மாற்றம்' என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நலமாக வாழ, மூன்று மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.
1. தேவையான உடற்பயிற்சி,
2. ஆரோக்கியமான உணவு,
3. மனநலம்.

தேவையான உடற்பயிற்சி


'தேவையான' என்ற வார்த்தையை அழுத்தமாக பிரயோகிக்க வேண்டும். ஏனென்றால், சமீபத்தில் என்னிடம் முதுகு வலி சிகிச்சைக்கு வந்த ஒருவரை, பரிசோதனை செய்தபோது, அவருடைய தினசரி வேலைகளை கேட்டறிந்தபொழுது, அவர் தினமும் நடை பயிற்சியுடன், பலவித ஆசனங்களையும் செய்து வருவதாக கூறினார்.

அதில் சில ஆசன வகைகள், அவருடைய முதுகு வலிக்கு ஏற்றதல்ல என்பதைக் கூறி, வேறு சில பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினேன். ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டதாக கூறினார். இங்கு இதை வலியுறுத்த காரணம், அனைத்து பயிற்சிகளும் அனைவருக்கும் பொதுவானது அல்ல. மூட்டுவலி, குதிகால் வலி உள்ளவர்கள் அந்த வலியை குறைத்த பின்னரே நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சிலவகை பயிற்சிகளை செய்யக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு, பெண்களுக்கு, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு என தனித்தனி பயிற்சி உள்ளன. அதனால் யார், என்ன பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதை, தகுந்த இயன்முறை மருத்துவரிடம் (பிசியோதெரபிஸ்ட்) கேட்டு தெளிவு பெற்ற பின்னர் செய்வது நல்லது.

'யோகா' கற்றுக்கொள்ளும் போதும், உடல் அமைப்பியல் (அனட்டாமி), உடல் இயக்கவியல் தேர்ச்சி பெற்று யோகா கற்று கொண்டவர்களிடம் கற்பது நல்லது.

அளவான உணவு

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு'

அதாவது உடலுக்கு மாறுபாடில்லாத உணவை தேவையறிந்து அளவோடு உண்டால், உடம்பில் உயிர் வாழ்வதற்கு இடையூறான துன்ப நோய் இல்லை. நம் நாட்டின் கால நிலைக்கும், நம்
உடலுக்கும் ஒவ்வாத உணவை உட்கொண்டு பலவித நோய்களை இலவசமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொருவரின் வயது, உடல்நிலை, செய்யும் வேலையின் தன்மையை பொறுத்து தேவைப்படும் கலோரிகள் மாறுபடும். அதற்கேற்றார்போல் நாம் நம் உணவு பட்டியலை தயார் செய்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சரிவிகித உணவாக இருப்பது அவசியம்.

உணவில் கார்போ ைஹட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் என அனைத்தும் குறிப்பிட்ட அளவில் எடுத்து கொண்டால், நம் உடலில் நோய் பறந்து விடும் என்பது உண்மை.

மன நலம்

மன நலம் மிகவும் இன்றியமையாதது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதாவது மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். மனதை நாம் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றால்,
1. நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
2. மனிதர்களை, நல்ல உறவுகளை சம்பாதிக்க பழகுங்கள்.
3. தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்.
4. வாழ்க்கையை ரசிக்க பழகுங்கள்.
5. அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். முடிந்தவரை உதவி செய்யுங்கள்.
6. உற்சாகத்துடன் பேசுங்கள். இல்லையென்றால் உற்சாகத்துடன் பேசுபவர்கள் மத்தியில் இருங்கள். (தேவையற்ற அரட்டை அடிப்பவர்களை பற்றி கூறவில்லை.)
7. முடியும் என்பதை முடியும் என்றும், 'கண்டிப்பாக முடியாது' என்பதை
முடியாது என்றும் சொல்லி பழகுங்கள்.
8. தினமும் கற்று கொள்ளும் ஆர்வம்.
9. நேர்மறை செயலுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.
10. பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண பழகுங்கள்.

உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய, தினமும் அரைமணி நேரத்தை ஒதுக்குங்கள். மேற்கூறிய மந்திரங்களை பின்பற்றினால் நாம் 'மார்க்கண்டேயனாக' வாழ்வது உறுதி.

---------- ஆர்.கோகிலா, பிசியோதெரபிஸ்ட்
காரைக்குடி. 94421 55456----------

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sivakumar - Bangalore,இந்தியா

    மிகவும் அவசியமான தகவல்.

  • ராஜா - chennai,இந்தியா

    பயனுள்ள கட்டுரை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement