Advertisement

போட்டித் தேர்வு என்னும் 'மாரத்தான்'

கால் காசு சம்பளம் வாங்கினாலும் அது கவர்மெண்டு காசா இருக்கணும்!
கவர்மெண்டு வேலை இருந்தா கவலையில்லாம காலத்த ஓட்டிடலாம்!
என் பெண்ணுக்கு கவர்மெண்டு உத்தியோக மாப்பிள்ளை தான் வேணும்! -இவை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் இன்றும் வழக்கிலிருக்கும் வாசகங்கள். 1991-ல் அறிமுகமான புதிய பொருளாதாரக் கொள்கையால் எண்ணற்ற துறைகளில் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து, திறமைக்கேற்ப அதிக சம்பளம் என்ற நிலை இருந்தாலும், அரசு வேலைக்கான மோகம் இன்று இளைஞர்களிடையே அதிகரித்துள்ளதற்கு காரணம் பணிப் பாதுகாப்பற்ற சூழல். இந்த நிலை தான் இன்று, பெரும்பாலான இளைஞர்களை போட்டித் தேர்வு என்னும் மாரத்தான் களத்திற்கு இழுத்து வந்துள்ளது.

போட்டித் தேர்வுகளின் தன்மை : முன்பு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு துறை ரீதியான பயிற்சியளித்து, பின்பு காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் இன்றைய பணிச் சூழலில் அதற்கான நேரம் இல்லை என்பதாலும், அரசு வேலை பெறுவதற்கான போட்டிகள் அதிகமாக உள்ளதாலும், ஒரு குறிப்பிட்ட பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் அந்த பணிக்கான பொறுப்புகள், பணிகளின் கடமைகள் என்ன என்பதை தெரிந்திருக்க வேண்டும் என்று அரசு நிர்வாகம் விரும்புகிறது. முன்பு கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு, தேர்வு நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு, பயிற்சி வழங்கி பின்பு பணிநியமனம் செய்யப்படுவர். ஆனால் தற்போது கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள் பற்றி படித்து தெரிந்திருந்தால் மட்டுமே, ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற இயலும் என பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அரசின் நிர்வாக நடைமுறைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

2000 வேலையும் 10 லட்சம் விண்ணப்பமும் : ஒவ்வொரு ஆண்டும் கலை, அறிவியல், தொழில்நுட்பம் என பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டுகிறது. அதில் பலரின் லட்சியம், ஏதேனும் ஒரு அரசு வேலை என்பதே. இதனால் தான் 2000 காலியிடங்களுக்கான அறிவிப்புக்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி., மத்திய அரசின் ரயில்வே, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன், வங்கித் தேர்வு என அனைத்திற்கும் இதே நிலைதான்.

கடும் போட்டியா? : பத்து லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்தனர் என்ற செய்தியை பத்திரிகையில் படித்தவுடன் நமக்கு ஒரு விரக்தி ஏற்பட்டு விடுகிறது; அது தவறு. ஏனெனில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, வேலை கிடைக்காது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களே, தனக்கான வேலையை அறுவடை செய்கின்றனர். உண்மையில் போட்டியாளர்கள் என்பது விண்ணப்பிக்கும் 10 லட்சம் பேர் அல்ல; ஏனெனில் அவர்களில் முழுமையாக தேர்வுக்காக கடுமையாக படிப்பவர்கள் 10-லிருந்து 20 சதவீதம் மட்டும் தான். ஆகவே உண்மையான போட்டியாளர்கள் என்பது 1முதல் 2 லட்சம் பேர் மட்டுமே. விண்ணப்பித்த அனைவரும் நமக்கு போட்டியாளர்கள் அல்ல என்பதை தேர்வர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

பாடத்திட்டம் : டி.என்.பி.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ் எனப்படும் வங்கித் தேர்வு வாரியம். ரயில்வே, எஸ்.எஸ்.சி போன்ற துறைகள் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடும் போதே அதற்கான பாடத்திட்டங்களை வெளியிடுகிறது. போட்டித் தேர்வு எழுதுபவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் வலைதளத்திலிருந்து, பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். சிலர் ஒரே முயற்சியில் வெற்றி பெறுகின்றனர்; சிலர் பலமுறை தேர்வு எழுதி தோற்று போகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், அவர்களால் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. தேவையான தகவல்கள் மற்றும் பாடங்களைத் தவிர, அதிகமான விஷயங்களை சேகரித்துப் படிப்பது தேர்வு நேரத்தில் நேர விரயத்தையும் தேவையற்ற குழப்பங்களையும் உருவாக்கும்.
பொதுவாக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள பாடப் புத்தகங்கள் தேர்வுக்கு முதன்மையானவை. அடுத்த படியாக போட்டித்தேர்வு எழுதுபவர்களின் கைகளில் இருக்க வேண்டியது நாளிதழ்கள். அவற்றில் இடம் பெறும் மாநிலம், தேசம், சர்வதேசம், விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகளைப் படித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நாளிதழ் படிக்காதவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.
பொது அறிவை வளர்க்கும் செய்திகள் மட்டுமல்ல, தேர்வுக்கு தேவையான முதன்மைப் பாடங்களின் சமீபத்திய முன்னேற்றம் பற்றிய தகவல்கள் கூட இடம் பெறலாம். முன்பு போட்டித் தேர்வுகளில் எளிமையாக விடையளிக்க கூடிய வகையில், நேரடிக் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இன்று 10-ம் வகுப்பு தரத்தில் நடைபெறும் தேர்வுகளுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்நுட்ப கல்வி படித்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்கின்றனர். இதனால், தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளிலும் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தையும் தெளிவாக படித்து புரிந்திருந்தால் மட்டுமே, அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க இயலும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பழைய கேள்வித் தாள்கள் : போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், எந்த தேர்வுக்கு நாம் தயாராகிறோமோ அதற்கு முன் அந்த தேர்வுக்கான முந்தைய கேள்வித்தாள்களை பார்க்க வேண்டும். கேள்விகள் இடம் பெற்றுள்ள வரிசைகள், அவை கேட்கப்படும் விதம், எந்தப் பாடத்தில் எத்தனைக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களை கண்டிப்பாக சேகரித்துக் கொள்ள வேண்டும். தெளிவான திட்டமிடலுக்கு பழைய கேள்வித்தாள்களை பார்ப்பது மிகவும் அவசியம்.
லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சிய கனவான அரசு வேலைக்கான பயணம் என்பது “தேர்வு குறித்து அறிந்து கொள்வது, நிபுணர்களின் ஆலோசனைகள் பெறுதல், தேர்வுக்கு விண்ணப்பித்தல், பாடங்களைக் தேர்வு செய்து படித்தல், பயிற்சி மையங்களுக்கு படையெடுத்தல், ஒரு நாளைக்கு 6 முதல் 12 மணி நேரம் படித்தல், குழு விவாதம் செய்தல், நாளிதழ் தகவல்களை குறிப்பெடுத்தல்” என பெரும் 'மாரத்தான் ஓட்டமாக' உள்ளது. கடின உழைப்பு, திட்டமிட்ட படிப்பு, சரியான பயிற்சி, நாளிதழ் படிப்பு போன்றவற்றை பின்பற்றினால், போட்டித் தேர்வு எனும் மாரத்தானில் இலக்கை எளிதாக அடையலாம்.

-முனைவர். சி. செல்லப்பாண்டியன்
அருப்புக்கோட்டை,
78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • chennai sivakumar - chennai,இந்தியா

    இன்றைய சூழ்நிலையில் government வேலையில் சம்பளமும் அதிகம். லீவு போன்றவையும் மிக அதிகம். பொறுப்பு குறைவு.( நோ accountability ) ஆனால் தனியார் துறையில் எல்லாம் ஒரு grade வரை சுமார்தான். ஒர்க் பிரஷர் அதிகம். முக்கியமாக டாண் என்று ஒன்றாம் தேதி சம்பளம் வந்துவிடும். யாருக்கையா கசக்கும் இவை எல்லாம் ?

  • Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா

    சிறப்பான பயனுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement