Advertisement

பாரதி ஒரு பத்திரிகையாளன்!

'காரிருள் அகத்தில் நல்லகதிரொளி நீதான் இந்தப்பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சிநீதான் ஊரினை நாட்டை இந்தஉலகினை ஒன்று சேர்க்கப்பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே'என பத்திரிகையின் பேராற்றலை, மக்கள் உணரும் வகையில் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.

சமூகத்தின் காரிருளை அகற்றும் பணியையும், சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் செய்யும் பத்திரிகைத் துறையில், பாரதியார் பகலவனாக விளங்கினார். அவரைக் கவிஞர் என்றே பலரும் அறிவர். ஆனால், அவர் ஓர் சிறந்த இதழாளர்.

'நமக்குத் தொழில் கவிதை' என்ற பாரதியார் பத்திரிகைப் பணியையும் தமது தொழிலாகவே கருதினார். இந்தியா, சக்கரவர்த்தினி இதழ்களுக்கு அரசாங்கத்திடம் பதிவு செய்து கொண்ட மனுவில் 'ஆசிரியர் பெயர்,- பதவி' என்ற பத்தியில் 'சி.சுப்பிரமணிய பாரதி- இதழாளர்' என்றே குறிப்பிட்டுள்ளார். 'எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்' என்று இதழியலைக் கொண்டாடியுள்ளார்.
சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, சூரியோதயம், தர்மம் ஆகிய தமிழ் இதழ்களிலும், பால பாரதா, யங் இண்டியா என்னும் ஆங்கில இதழ்களிலும் பாரதி பணியாற்றியுள்ளார்.

இதழியல் புதுமையாளர் :

தமிழ் இதழியலில் புதுமைகள் செய்த முன்னோடி பாரதி என்றால் மிகையாகாது. சக்கரவர்த்தினி இதழில், ஆங்கில ஆண்டும் மாதமும் குறிப்பிட்டு வெளியிட்டார். இந்தியா, விஜயா (1906--1910) முதலிய இதழ்களில் தமிழ் ஆண்டு, மாதம், நாள் முதலியவற்றைக் குறித்தார். கர்மயோகி (1910) இதழில் தமிழ் ஆண்டு, மாதம், நாள் மட்டுமே குறித்தார். இவ்வாறு இதழியலில் தமிழ் ஆண்டு, மாதம், நாள் இவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதியே. புதுவை இந்தியா இதழிலும், விஜயா இதழிலும் பக்க எண்களைத் தமிழ் எண்களில் கொடுத்துள்ளார். இதன்படி இதழியலில் முதன்முதலில் தமிழ் எண்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. அதோடு, செய்தி எழுத்தின் அளவை விட சிறிது பெரிய அளவுள்ள எழுத்தைத் தலைப்பாகப் பயன்படுத்தினார். தலைப்பிடுதலை 'மகுடமிடல்' என்றே பாரதி குறிப்பிடுவார்.

இலவச இதழ் :
'இந்தியா இதழில் செய்தி எழுதும் வாசகச் செய்தியாளர்களுக்கு இலவசமாக இதழ் அனுப்பப்படும்' என பாரதி குறித்துள்ளார். இந்தியா இதழில் 'ஊர்தோறும் உடற்பயிற்சிப் பள்ளி அமைத்தால் நல்லது' என்று எழுதி, 'அவ்வாறு அமைக்கப்படும் பள்ளிகளுக்கு ஓராண்டு காலம் இலவசமாக இதழ் அனுப்பப்படும்' என கூறியுள்ளார். தர்மம் என்னும் இதழையே இலவசமாக வழங்கி நடத்தியவரும் பாரதியே.

பத்திரிகைகள் தங்களுக்கென நிருபர்களை ஆங்காங்கே நியமித்துக் கொண்டு, அவர்கள் அனுப்பும் செய்திகளுக்குப் பணம் கொடுப்பது சாதாரணமாக நடக்கும் விஷயம். ஆனால் நிருபர்கள் அல்லாத வாசகர்கள் அனுப்பும் செய்திகளுக்குக் கூட, பணம் தந்து புதுமையை நுாறாண்டுக்கு முன்பே செயல்படுத்தியவர் பாரதி.

கருத்துப்படம் :

தமிழ் பத்திரிகை உலகில் அரசியல் கருத்துப் படங்களை வெளியிட்டு மக்களை, எளிதில் அரசியல் உணர்வைப் பெறத் துாண்டியவர் பாரதி. பல பக்கங்களைக் கொண்ட ஒரு அரசியல் கட்டுரை செய்கிற சாதனையை, அரைப்பக்க அரசியல் கருத்துப்படம் விளக்கிக் காட்டும் புதுமையை, தமிழ்ப் பத்திரிகை துறையில் முதன்முதலில் புகுத்தியவர் பாரதி. அத்துடன் தமிழ் மொழியில் முதன்முதலாக 'காலம்னிஸ்ட்' எனப்படும் பத்தி எழுத்துக்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதியையே சாரும்.

பெண்கள் வீட்டுக்குள் அடிமைகளாக இருப்பதை பாரதி விரும்பவில்லை. 'பெண்கள் முன்னேற வேண்டும்' என்ற ஆர்வம் கொண்டவர். பெண்களின் எழுச்சிக்குக் குரல் கொடுக்க சக்கரவர்த்தினி இதழ் தொடங்கப்பட்டதாக (ஆகஸ்ட் 1905) பாரதி குறிப்பிட்டுள்ளார்.
கேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியரிடம் பாரதி, ஓவியம் இப்படி இருக்க வேண்டும் என தமது முகத்தில் அபிநயங்கள் காண்பித்து விடுவதுண்டு. ஓவியரின் மனதில் அந்த பாவனைகள் நன்கு பதிந்துவிடும். 'கேலிச் சித்திரங்களின் முன்னோடி' என்ற பெருமை பாரதியையே சாரும்.

புனைப் பெயர்கள் :

புனைப் பெயர்களில் எழுதிப் புதுமை செய்தவர் பாரதி. தனது பெயரை, மிகப் பொதுவாக எழுதும் போது மட்டுமே வெளிப்படையாகக் காட்டிக்கொண்டுள்ளார். இளசை சுப்பிரமணியன், வேதாந்தி, நித்தியதீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி போன்ற புனைப் பெயர்களில் எழுதியதற்குக் காரணம், அரசியல் நெருக்கடி சூழலில் சிக்கக் கூடாது என்பதற்காக எனும் போது ஆச்சரியமே மேலிடுகிறது.மாத வருமானம் 200 ரூபாய்க்கு குறைவாக உடையவர்களுக்கு ஆண்டுச் சந்தாவை மூன்று ரூபாயாகவும்; 200 ரூபாய்க்கு மேற்பட்டவர்களுக்குப் ௧௦ ரூபாயாகவும், அரசாங்கத்தார், ஜமீன்தார்கள், பிரபுக்கள் போன்றோருக்கு 30 ரூபாய் எனவும் பாரதி அறிவித்தார். கர்மயோகி இதழுக்கு, மாணவர்களுக்கு மட்டும் குறைந்த ஆண்டுக் கட்டணம் விதித்தார்.

இதழியல் அறம் :

பாரதி தனது எழுத்துக்களால் ஆங்கிலேயரைக் கடுமையாக விமர்சித்தாலும், இதழியல் அறம் தவறியதில்லை. 'மதன்லால் திங்க்கராவை ஆங்கிலேயர் துாக்கிலிட்டதால், கிளாஸ்கோ பருத்தி ஆலையில் அக்னி பகவான் புகுந்து இரண்டரை லட்சம் பவுன் மதிப்புள்ளவற்றைத் தின்று தீர்த்தார்' என்று வ.வே.சு.ஐயர் எழுதினார்.

இதை, இந்தியா இதழில் வெளியிட்ட பாரதி அடுத்தவார இதழில், இதை நாம் முற்றிலும் அங்கீகரிக்கவில்லை. 'நாமேன் இதையோர் பழிவாங்குதலைப் போல் கொள்ள வேணும்? அற்பத்துக்கெல்லாம் சந்தோஷித்துப் பழிவாங்கும் குணம் ஆசிரியர்களுடையதல்ல' (இந்தியா 7.9.1909) என்று எழுதியுள்ளார். பகைவராயினும் அவர் இதழியல் அறம் தவறாமல் நடந்தது அறியும் போது வியப்பு மேலிடுகின்றதன்றோ?

'உங்கள் ஊரில் நடக்கும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் துணிவுடன் எழுதுங்கள். உங்கள் பெயர்களை வெளியிடமாட்டோம்' என உறுதிமொழி கூறி,
பத்திரிகை தர்மத்தைக் காத்து பிற்கால பத்திரிகை உலகிற்கு வழி காட்டியவர் பாரதியாரே! இதழ்களின் நடைகளைக் கண்டு வருந்தி பாரதி எளிய நடைகளுக்கு
வித்திட்டார்.

'ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாத, தனக்கும் அதிகப் பழக்கமில்லாத ஒரு விஷயத்தை குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும், சந்தேகமில்லை. ஆனால் ஒரு வழியாக முடிக்கும்போது வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்' (சுதேசமித்திரன் 19.9.1916) என்று குறிப்பிட்டுள்ளார்.

இதழியலின் இன்றியமையாத நோக்கங்களான தெரிவித்தல், மகிழ்வித்தல், அறிவுறுத்தல், விலையாக்கல் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் பத்திரிகைகளை நடத்தி, இதழியல் துறையில் முத்திரை பதித்தவர் பாரதியார்.
'அறிஞர் தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செரிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்
நறுமண இதழியப் பெண்ணே உன்
நலம் காணார் ஞாலம் காணார்'
என்ற வரிகளை உள்வாங்கி, உணர்வுப்பூர்வமாக இதழியல் துறையில் புரட்சி செய்தவர் பாரதியே.
'முண்டாசுக் கட்டுடையான்
முழுநிலவுப் பொட்டுடையான்
பதினெட்டு மொழியுடையான்
பார்புகழும் பாட்டுடையான்
புகழை நாளும் பரப்புவோமாக!'
-பேராசிரியை பா. பனிமலர்
மதுரை,
panimalartamil75gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Solai selvam Periyasamy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

    மிக அருமையான , எளிய நடைமுறையில் விளக்கிய உங்களுக்கு எனது நன்றி..

  • JAIRAJ - CHENNAI,இந்தியா

    அவர் வாழும்பொழுது அவர் பெருமை தெரியாமலும், அவருக்கு எந்தவகை உதவியும் செய்யாமலும் இருந்துவிட்டு, இறந்தபின்பு ( பங்குகொள்ளாமல் ) இறுதி யாத்திரையை கேவலப்படுத்திவிட்டு,இன்று பூஜித்தல் தேவையா............அட மழையில் பூத்த காளான்கள்.....................

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    தங்கள் பதிவிற்கு நன்றி அய்யா .பாரதி பத்திரிகையாளன் என்பது வித்யாசமான கண்ணோட்டம் .ஒரு வரி செய்தியை ஒரு கட்டுரை ஆக்கி உள்ளீர்கள் .மிக்க நன்றி .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement