Advertisement

அமைதி தந்த சிவானந்த சரஸ்வதி

இயந்திரத்தனமாக வாழும் நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டு விட்டோம். தேவைகள் அதிகமாகி கொண்டே போகின்றன. இதனால் பொருளாதார வளர்ச்சிக்காக நாம் போராட வேண்டியுள்ளது.
இதன் விளைவால் ஏற்படும் மனஅழுத்தம், நம் உடலை சோர்வடைய செய்து விடுகிறது. இதிலிருந்து விடுபடும் சிறந்த வழி, யோகாவும், ஆழ்நிலை தியானமும் தான்.இந்த 'யோக' என்ற கலையை மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தியவர், சுவாமி சிவானந்த சரஸ்வதி. ஒரு மனிதன் பிறப்பிலிருந்து எப்படி இருக்க வேண்டுமென அனுபவப்பூர்வமாக வாழ்ந்து காட்டியவர் அவர். மனித வாழ்க்கை அமைதியுடன் இருக்க, 10 கட்டளைகளையும் விவரித்துள்ளார்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. உதாரணமாக, மணப்பாறை- முறுக்கு, திருநெல்வேலி- அல்வா, மதுரை -மல்லிகை பூ. இதுபோல் நாம் விரித்து படுத்துஉறங்கும் பாய்களுக்கு பிரபலமான ஊர் பத்தமடை. இது நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரில் ஆன்மிகம், நேர்மை, ஒழுக்கம் இவற்றில் பெயர் பெற்ற பிராமண குடும்பங்களில் ஒன்று தான் வெங்கு ஐயர் குடும்பம். அவர் மனைவி பார்வதியம்மாள். இந்த உலகை உய்விக்க அவ்வப்போது பல மகான்கள் தோன்றுவர். அப்படி இந்த தம்பதிக்கு 1887 செப்.,8ல் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் குப்புசாமி. மனிதநேய மருத்துவர் ஆச்சாரமான தெய்வ நம்பிக்கை, இரக்க சிந்தனையுள்ள குடும்பத்தில் பிறந்த குப்புசாமி, சிறுவயதிலேயே பசியால் வாடும் ஏழைகள் மீது அன்பு செலுத்தினார். ஆரம்ப கல்வியை பத்தமடையிலும், உயர்கல்வியை எட்டயபுரத்திலும் படித்த அவர், தஞ்சை மருத்துவ கல்லுாரியில் பயின்று, சிறந்த மருத்துவராக விளங்கினார்.
மலேசியாவில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்கள் மருத்துவ உதவி இல்லாமல் கஷ்டப்படுவதாக கேள்விப்பட்டு, அந்த மக்களுக்கு சேவை செய்ய அங்கு சென்றார்.ஒரு முறை இரவு, ஏழைத் தொழிலாளியின் மனைவிக்கு பிரசவம் பார்த்து, அவ்வீட்டிற்கு வெளியே இரவு முழுவதும் இருந்து துணை புரிந்தார். எனவே மலேசிய மக்களிடம் 'மனிதநேய மருத்துவர்' என அழைக்கப்பட்டார், 'அம்ரேசியர்' என்ற மருத்துவ இதழையும் நடத்தி வந்தார்.

ஆன்மிகத்தில் நாட்டம் : பத்தாண்டுகள் மலேசியாவில் ஏழை மக்களுக்கு பணியாற்றிய பின், அவரது மனம் ஆன்மிகத்தில் ஈடுபட்டது. மலேசியாவில் ஈட்டிய பொருட்களை எல்லாம், ஏழைகளுக்கு வழங்கி இந்தியா திரும்பினார். இதன்பின் இந்தியாவில் தேசாந்திரியாக, பல புண்ணிய தலங்களுக்கு சென்று மருத்துவ சேவை புரிந்தார்.இந்தியாவில் பல புண்ணிய தலங்களுக்கு சென்ற குப்புசாமி, ரிஷிகேஷ் சென்றார். அங்கு விஸ்வாநந்த சரஸ்வதி என்ற சாதுவிற்கு மருத்துவ உதவி செய்தார். அவரையே தன் குருவாக ஏற்றார். அவர் தான் யோகாசன முறைகளின் முக்கியத்துவத்தை கற்றுத் தந்தார். பின் குப்புசாமிக்கு, 'சிவானந்த சரஸ்வதி'
என பெயரிட்டார். ரிஷிகேஷில் யோகாவிற்கும், ஆழ்நிலை தியானத்திற்காகவும் ஒரு
ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.

வாழ்க்கை வழிகாட்டி : ஒரு முறை, ஒரு படித்த இளைஞர், விமான ஓட்டியாக வேண்டும் என டோராடுனில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு தோல்வியை தழுவினார். இதனால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என மனக்குழப்பத்துடன் ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றார். அமைதி தேடி, அங்குள்ள சாதுக்கள் மூலமாக தன் மனக்குழப்பத்திற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா என தவித்தார். அப்போது அங்கு துாய வெள்ளை உடையுடன் காட்சியளித்த, சிவானந்தரை அந்த இளைஞர் சந்தித்தார். அவனின் மனக் குழப்பத்தையும், துயரத்தையும் கேட்டு "உன்னுடைய தலைவிதியை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் போக்கிலேயே நேர்மையாக நடைபோடு. விமானியாக வேண்டுமென்று உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்கு என்ன விதிக்கப்பட்டு உள்ளதோ அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. இத்தோல்வியை மறந்து விடு. உன்னுடைய நோக்கம் என்ன என்ற தேடலில் மூழ்கு. கடவுளின் விருப்பத்திற்கு உன்னை ஒப்படைத்து விடு," எனக் கூறினார்.தன் மனக் குழப்பத்தில் இருந்து தெளிவடைந்த அந்த இளைஞர், உற்சாகத்துடன் தன் வாழ்க்கை பயணத்தை நேர்மையுடன் தொடங்கினார். அந்த இளைஞர் தான், இந்திய ஏவுகணைகளின் தந்தையாகி, எளிமையாக வாழ்ந்து மக்களின் அளப்பரிய அன்பை பெற்ற மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம்!

10 கட்டளைகள் : அன்பு, மனித நேயம், பிறருக்கு உதவுதல், பிரதிபலன் பார்க்காமல் இயன்றதை பிறருக்கு வழங்குதல், அகச்சுத்தம், புறச்சுத்தம், அன்றாடம் யோக, தியானம் செய்தல், தான் செய்த தவறை உணர்தல், நல்லதையே நினைத்து செயல்படுவது, வாழ்க்கையில் கோபத்தை தவிர்த்து பொறுமையை கடைபிடித்தல்.இவைகளை மனிதன் தன் வாழ்க்கையில் கடைபிடித்தால் மரணம் சம்பவிக்கும் வரை அமைதி கிடைக்கும். அதை மனித வர்க்கத்திற்கு வழங்கிய சிவானந்த சரஸ்வதி, 1963, ஜூன்14ல் ரிஷிகேஷில் மகா சமாதியானார். அவர் மறைந்தாலும் அவரின் சிந்தனை, யோகா, ஆழ்நிலை தியானமும் என்றும் மக்களுக்கு அமைதியை தரும்.

- முனைவர் கே.கருணாகர பாண்டியன்
மதுரை. 98421 64097

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    பதிவிற்கு நன்றி .எனக்கும் இவர் தான் முதல் புத்தகத்தில் அறிமுகமான குரு .30 வருடம் முன்பு எனக்கு இவர் புத்தகத்தை எனது விடுதி காப்பாளர் (ஸ்வாமி துருவானந்த அவர்கள் )கதை புத்தகம் படித்த குற்றத்துக்காக தண்டனையாக இவர் புத்தகம் கொடுத்தார் .இன்றளவும் அதை போற்றி பாதுகாக்கிறேன் .

  • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

    படித்து உடல் சிலிர்த்தேன். அது என்னவோ உண்மைதானுங்க நமக்கெல்லாம் எது விதிச்சுருக்கோ அதுதான் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லிங்க. சிவானந்தர் பற்றி நெறைய படிச்சிருக்கேன் பி பிராக்டிகல் என்று எப்போதும் சொல்லுவார். அது உண்மை தான். ஆனால் பல சமயங்கள்லே இந்தமனம் தன நிலைமறந்து இஷ்டத்துக்கு பார்க்கும்போது தான் கஷ்டங்கள் அதிகம் ஆவுது

  • K.Palanivelu - Toronto,கனடா

    தஞ்சையிலே ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி காலத்திலே மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்படவே இல்லையே? அப்படியிருக்க அவர் அதிலே எப்படி தனது மருத்துவ படிப்பை படித்திருக்க முடியும்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement