Advertisement

உடலுக்கேற்ற உணவு எது : செப்டம்பர் 1 - 7 தேசிய ஊட்டச்சத்து வாரம்

ஆரோக்கியத்தின் ஆணிவேர் நாம் சாப்பிடும் உணவில்தான் இருக்கிறது. கடந்த
கால் நுாற்றாண்டு காலமாக, நாகரிகச் சூழல் வளர வளர நம் உணவுமுறை மாறிக்கொண்டு வருகிறது. இந்தியப் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தில், மேற்கத்திய உணவுகள் குடிபுகுந்துவிட்டன. உடல் சத்துக்காக சாப்பிட்ட காலம் போய் நாக்கின் சுவைக்காக சாப்பிடுவது என்றாகி விட்டது.

துரித உணவுகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள் என்று பலதரப்பட்டவை சாலையோரக் கடைகள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை விற்கப்படுகின்றன. புரோட்டா, நாண், நுாடுல்ஸ், ப்ரைடு ரைஸ், ருமாலி ரொட்டி, தந்துாரி சிக்கன் என இதுவரை நகர மக்களை மட்டுமே வசீகரித்து வந்த துரித உணவு மோகம் இப்போது கிராமங்களிலும் காணமுடிகிறது.

இது ஒட்டு மொத்த இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தேசிய சத்துணவு வாரம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இந்த எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சமச்சீரான உணவு :

ஆரோக்கியம் காக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது முக்கியம். உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாமே இருக்க வேண்டிய விகிதங்களில் இருந்தால்தான் ஆரோக்கியம் வலுப்படும்.

இந்தச் சத்துக்கள் உள்ள உணவு கிடைக்காமல், ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுபவர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்ற நம் நாட்டில்தான், துரித உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு கலோரிகள் அதிகமாகி உடற்பருமன், இதயநோய், சர்க்கரை நோய் என்று பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பல கோடி பேர் இருக்கின்றனர்.

இரண்டாம் பிரிவினர் சமச்சீரான உணவுமுறைக்கு மாறினால் மட்டுமே ஆரோக்கியம் மீளும். இதற்கு மாவுச்சத்து 50 -- 60 சதவீதம், புரதச்சத்து 10 -- 15 சதவீதம், கொழுப்புச் சத்து 20- - 25 சதவீதம், மற்றவை 20 -- 25 சதவீதம் என்று இருக்கும்படியாக உணவைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் பலரும் விரும்பிச் சாப்பிடும் துரித உணவுகளில் மாவுச் சத்தும், கொழுப்பும் பல மடங்கு அதிகம்; வைட்டமினும் நார்ச்சத்தும் மிகக் குறைவு. அதுதான் ஆபத்தைத் தருகிறது.

ஒளிந்திருக்கும் ஆபத்துகள் :

கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த துரித உணவுகளில், கலக்கப்படும் சாயங்கள் எல்லாமே ரசாயனங்கள். பெட்ரோலியம், தார் கெசோலின் போன்ற மூலப்பொருட்களால் ஆனவை. இவை சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. புற்றுநோயை வரவேற்பவை.

துரித உணவுகளில் சுவைக்காகப் பயன்படுத்தப்படும் 'மோனோ சோடியம் குளுட்டமேட்' மற்றும் சோடா உப்பில் சோடியம் அதிகம். இது இளம் வயதிலேயே ரத்தக்கொதிப்பைக் கொண்டுவந்து விடும். உடலில் சோடியம் அதிகமானால், நீரின் அளவும் அதிகமாகும். சீக்கிரமே உடல் எடை அதிகரித்து, ஊளைச் சதை உருவாகும்.

துரித உணவுக் கடைகளில், பெரும்பாலும் பாமாயிலைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதை பலமுறை சூடுபடுத்தும்போது, இதிலுள்ள நிறைவுற்ற கொழுப்பு அமிலம், டிரான்ஸ் கொழுப்பாக மாறி, கெட்ட கொழுப்பு உடலில் சேர வழி அமைக்கிறது. இதனால் இதய நோய்கள் இளமையிலேயே வந்து ஒட்டிக்கொள்கின்றன.

புரோட்டா, நாண், நுாடுல்ஸ் எல்லாமே மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு பென்சோயில் பெராக்சைடு சேர்த்து வெண்மையாக்கப்படுவதே மைதா. இந்த வேதிப்பொருள், புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தைக் கொண்டது.

மைதாவை மிருதுவாக்கச் சேர்க்கப்படும் அலெக்சான், கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவுநோய்க்கு வழிவகுக்கக் கூடியது. இப்படி, துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள், நிறமூட்டிகள், மணமூட்டிகள் எல்லாமே ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பவை.

ஆரோக்கிய உணவு :

மண் சார்ந்த, மரபு சார்ந்த உணவுகள்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலை எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக சுக்கு மல்லி காபி, பானகம்,கிரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்கலாம். காலையில் சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, உப்புமா,வெண்பொங்கல் நல்லது. அரிசிச் சோறு என்றாலே காண்பதற்கு அது வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதில் நிற்கிறது.

அரிசியை வெண்மையாக்க, அதிக முறை பாலிஷ் செய்யப்படும்போது, அதிலுள்ள வைட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துகள் காலியாகிவிடுகின்றன என்பதும், மாவுச்சத்து மட்டுமே மிஞ்சுகிறது என்பதும் பலருக்கும் தெரிவதில்லை.மதிய உணவில், வெள்ளை அரிசிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதுதான் ஆரோக்கியம் காக்கும் முதல்படி.

அதற்குப் பதிலாக கைக்குத்தல் அரிசி சாதம், தினை அரிசி, எலுமிச்சை சாதம், வரகு சாதம், குதிரை வாலி சாதம், சீரக சம்பா பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு சக்தி கிடைப்பதோடு ஆரோக்கியமும் மேம்படும்.

அசைவப் பிரியர்கள் நம் பாரம்பரிய நாட்டுக்கோழிக் குழம்பு, மீன் குழம்பு சாப்பிடலாம். சிக்கன் சில்லி, சிக்கன் ரோஸ்ட், கிரில் சிக்கன், மீன் ரோஸ்ட் என்று எண்ணெயில் வதக்கப்படும் உணவுகள் இதயத்துக்கு ஆகாதவை. இவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலை உணவைப் போலவே, இரவிலும் சிறுதானியங்களால் ஆன உணவுகளைச் சாப்பிடலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸை, வயது வித்தியாசமின்றி எல்லோரும் விரும்புகின்றனர். வடை, பஜ்ஜி, சமோசா, பீட்சா, பர்கர், சிப்ஸ், பாப்கார்ன்,பிஸ்கட்,கேக், பேக்கரி பண்டங்கள் போன்றவற்றுக்குப் பதிலாக வேர்க்கடலை,பொட்டுக்கடலை, எள்ளுருண்டை, கடலை மிட்டாய், அதிரசம், அவல் உப்புமா, அவல் பாயசம்,சுண்டல், பயறு வகைகள், பழ சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

உற்சாக உணவுகள் :

கம்பு, கேழ்வரகு என்றாலே கூழ்; குதிரைவாலி என்றால் சோறு என்றுதான் பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை. சிறுதானியங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்துக்கு உதவும் பல பதார்த்தங்களைச் செய்ய முடியும்.

கேழ்வரகு கொழுக்கட்டை, கம்பு இனிப்பு மாவு உருண்டை, குதிரைவாலி கிச்சடி, சிறுதானியங்களால் ஆன போளி, குழிப்பணியாரம், தேங்காய் பர்பி போன்றவை ஊட்டச் சத்து நிறைந்த உணவுகள். ஐஸ்கிரீமுக்குப் பதிலாக இளநீர் ஜெல்லி, குளிர்பானத்துக்கு மாற்றாக பானகம் அல்லது பழச்சாறு அருந்துவது உடலுக்கு ஊட்டமும், மனதுக்கு உற்சாகமும் தருபவை.

அறிவியலில் நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும், ஆரோக்கியத்தைக் காக்கின்ற உணவுகளில் கவனம் செலுத்த வேண்டுமானால், நம் பாரம்பரிய உணவுகளைத் தேடிச் செல்வதே
புத்திசாலித்தனம்.

- டாக்டர் கு.கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்
gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The present days days are era of IT and mechanical life and people are accustomed eating fast food and going fast whether they go for work or just for roaming or just for time passing. As per the author of this article who will give or who will go for olden days grains like kaikuthal rice, varagu, thini, seeraga samba,nattu kozhi and fishes. I don't think this doctor eats all these grains. Even if we eats all these foods the present days pollutions caused by vehicles and factory disposed outlets and unhygienic admosphier d by slums in urban areas and most of the corporate /government hospitals unhygienic disposal of various dirty and felthy used disposable medical and surgical items and stagnate of drainage and rain water are making the public to get various types of deceases .By eating only balanced diets can't make the people to live happily without any decease. All the people must make our sourring neat and clean and always cooperate with the local bodies to maintain good healthy admosphier. Let all the youths realise that they are the future true and sttong pillers of our nation and take oath that they should not eat the unhygienic road side foods and also eat only our olden days food grains as mentioned in this article and live long with good health and lead a prosperous life. Let us all again go back to our old traditional food grains and maintain balanced diet food and lead a healthy life and live many more years .Let us all pray Almighty to give us good rain and get enough water in our rivers to make our cultivation healthy and more in order to get these food grains in market in easy way.

 • Jayadev - CHENNAI,இந்தியா

  ஊட்ட சத்து நிறைந்த உணவு என்றால், 'சோயா பீன்சின் பல வடிவங்களில் தயாராகும் உணவுவகைகளை பற்றி தென் மாவட்ட மக்களுக்கு தெரியவில்லை. அதிக புரத சத்தும் , கொழுப்பு சத்தும் கொண்ட SOYA பீன்ஸ், விவசாயிக்கு கரும்புக்கு அடுத்தபடியாக அதிக லாபம் கிடைக்கும் பருப்பு வகை., விபரங்கள் ://www.ruchisoya.com/ மூலம் மற்றும் ://www.sopa.org/ டர்ந்து கொள்ளலாம்..ஆப்ரிக்கா காடுகளில் விளைந்ததை ஆப்பிரிக்கர்கள் முக்கிய உணவாக, பலசாலிகளாக இருப்பதை தெரிந்து கொண்ட மற்ற வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளில் அதிக அளவு விளைச்சல் செய்து பயன்பெறுகிறார்கள். நம் நாட்டில் சினிமா காரர்கள் சோயா பீன்ஸ் விளம்பரத்தில் பங்கு கொண்டால் மட்டுமே மக்களுக்கு தெரிய வரும் , பயன் படுத்த துவங்குவார்கள் இருந்து ஆப்பிரிக்கா மக்களால் விரும்ப பட்டு ,அதை தெரிந்து கொண்ட மற்ற வளர்ந்த நாடுகளில் களில் அதிகம் விரும்ப படுகிறது,,

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  விவசாயம் செழித்தால் நாடு அனைத்து துறைகளிலும் மேம்படும் .அனைவரும் சேர்ந்து விவசாய நிலத்தில் வீடு கட்டுக்கிறார்கள்,ரோடு போடுகிறார்கள் .

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  ஆம் உணவில நார் சத்து குறையும் பொழுதுதான் ஜீரண உறுப்புகள் சீர் குலைய ஆரம்பிக்கின்றன, அதையே நாம் தொடர்ந்து கடை பிடிக்கும் பொழுதுதான் சர்க்கரை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தானே சாப்பிடாத ஓட்ஸ் தான் மனிதனுக்கு சிறந்தது எல்லாநோய்களையும் ஒட்டிவிடும் என்று வெளிநாட்டவன் நமது தலையில் கட்ட பல டாக்டர்களும் அதனை பரிந்துரைக்கிறார்கள் அதனைவிட பன்மடங்கு உயர்ந்த ஆனால் விலை குறைவான நம் நாட்டு சிறுதானியங்களைப் புறக்கணித்தல் நமது உடலுக்கும் இந்திய விவசாயியின் பிழைப்புக்கும் வேட்டு வைக்கும்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மக்களை சிறிது சிறிதாக மாற்றியெடுத்து வேகமான உலகின் சோம்பேறிகளாக மாற்றி விடடன நமது கல்வித்தரமும். வேலைவாய்ப்பு முறைகளும். சுயதொழில், மற்றும் தனியார் தொழில்களில் உள்ள சம்பளம் மற்றும் கஷ்டங்களுக்கு இணையாக அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவன தொழிலாளர் நிலையம் இருந்தால் எல்லாமும் மாறும். அந்நிலை வந்து கொண்டிருக்கிறது. வேகமான tholil நுட்ப வளர்ச்சியினால் வேலையிப்போர் அதிகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. கல்வியின் மீதே கூட வெறுப்பு உண்டாகும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement