Advertisement

இசை அரசர்கள் இருவர்

இசை உலகில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகம் முழுவதும் புகழ் பெறலாம் என்பதற்கு உதாரணமாக, பல இசை அறிஞர்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர். அவ்வகையில் நாதசுர இசையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய இராஜரத்தினம் பிள்ளையும், தமிழிசை உலகில் சகாப்தம் படைத்த தண்டபாணி தேசிகரும் தமிழகத்தின் இரு பெரும் இசை வழிகாட்டிகள் ஆவர். இருவருடைய பிறந்த நாளும் ஆகஸ்ட் 27.
தண்டபாணி தேசிகர் : ஞானசம்பந்தர் பாடிய 'அங்கமும் வேதமும்' என்ற தேவாரப்பாடல், ஈசனை மிக அழகாகப் போற்றும் பாடல். இப்பாடல் பிறந்த தலம் திருச்செங்கட்டாங்குடி. இத்தகு சிறப்பு மிக்க தலத்தில் உதித்தவர் தண்டபாணி தேசிகர். இவர் அழகர். அதனால் தான் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். தேசிகர் 5ம் வயதில், அன்னையை இழந்தார். தந்தை இவருக்கு அன்னையாகவும், குருவாகவும் இருந்து தேவாரம், திருப்புகழ் கற்பித்தார். தந்தையின் சகோதரரான சட்டையப்ப நாதசுரக்காரர் இவருக்கு இசையை கற்பித்தார். ஒன்பதாவது வயது முதல் இவர் தேவாரம் இசைக்கத் துவங்கினார். பூவனுார் கோவிலில் ஓதுவாராக இருந்த மாணிக்க தேசிகர் மூலம், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் அறிமுகம் கிடைத்தது. இவரிடம் நான்கு வருடங்கள் இசை பயின்றார். பிறகு லட்சுமணன் செட்டியார் என்பவரின் அழைப்பில், மதுரை தேவாரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரியத் துவங்கினார்.
மதுரையில்... : மதுரைக்கு வந்தது இவரது வாழ்வில், பல திருப்பங்களை ஏற்படுத்தியது. மதுரையில் ராஜராஜேசுவரியின் உற்சவத்தில் தேவாரம் மற்றும் கீர்த்தனைகளைச் சேர்த்து புரட்சிகரமாக நிகழ்ச்சி செய்தார். அதற்கு வந்திருந்த விளாத்திகுளம் சுவாமிகள், சுந்தரேசபட்டர், மதுரை மாரியப்ப சுவாமிகள், மதுரை பொன்னுசாமிப் பிள்ளை ஆகியோர் இவரை பாராட்டினார்கள்.தண்டபாணி தேசிகர், அங்கயற்கண்ணியின் பெயரில் பல பாடல்களைப் புனைந்துள்ளார். தினமும் அங்கயற்கண்ணியைக் காண கோவிலுக்குச் செல்வார். பொற்றாமரைக் குளத்தில் நீராடி, அருகில் இருந்த வேழவேந்தனை தரிசனம் செய்வார். அவ்வேழவேந்தனின் பெயரில் இவர் புனைந்த பாடல்தான் 'சித்தி விநாயகனே' என்று ஜகன் மோகினி ராகத்தில் அமைந்த பாடலாகும்.திருவையாறு தியாகராஜ சுவாமிகளில் உற்சவத்தில், இன்றளவும் அனைவரும் தெலுங்குப் பாடல்களையே பாடி வருகின்றனர். ஆனால் அதில் பங்கு கொண்டு, தமிழ்பாடல்களைப் பாடியவர் தேசிகர். வாய்ப்புகள் நமது வாசல் கதவைத் தட்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். உண்மையிலேயே தண்டபாணித் தேசிகரின் வீட்டு வாயில் கதவினை வாய்ப்புகள் தட்டின. வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் 'பட்டினத்தார்' என்ற திரைப்படத்தை எடுக்க விரும்பினர். இதற்காக அதன் நிறுவனர் வேலுநாயக்கர், மாரியப்பசுவாமிகளைச் சந்தித்து நடிக்கக் கோரினார். அவர் மறுத்து தேசிகர்தான் பொருத்தமானவர் என்று கூறினார். வேலு நாயக்கர், நள்ளிரவில் தேசிகரின் வீட்டு வாயில் கதவினைத் தட்டிச் சம்மதம் கேட்டார். இப்படித்தான் தேசிகர் திரைப்படத்துறையில் சேர்ந்தார். பட்டினத்தார்,வல்லாள மகாராஜா, தாயுமானவர், மாணிக்க வாசகர், நந்தனார், திருமழிசை ஆழ்வார் போன்றவை இவர் நடித்த திரைப்படங்கள்.
இசை பேரறிஞர் : 'ஓர் இரவு' படத்தில் இவர் பாடிய 'வெண்ணிலாவும் வானும்போல' என்ற பாடல் இன்றும் பலரால் விரும்பிக் கேட்கப்படுகிறது.தேசிகர் 1949 முதல் இறைவனடி சேரும் வரை தமிழிசைச் சங்கத்தில் பண் ஆய்வு செய்துள்ளார். 1957ல் இவருக்கு தமிழிசைச் சங்கம் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கியது.வானொலியின் நடுவண் அரசின் நிகழ்ச்சியிலும், தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடிய முதல் கலைஞர் இவர். பல பாடல்களைப் புனைந்துள்ளார். தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற தேசிகர், 1972 ல் மறைந்தார்.திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதசுரம் என்றதுமே நினைவுக்கு வருவது இராஜரத்தினம் பிள்ளை என்ற பெயர் தான். இசையுலகில் நாதசுரத்துக்கு, விசேஷ அந்தஸ்தை தேடியவர் இவர். 27.8.1898ல் திருவாவடுதுறை என்ற கிராமத்தில் குப்புஸ்வாமி பிள்ளை - கோவிந்தம்மாளுக்கு மகனாக பிறந்தார் இராஜரத்தினம். திருக்கோடிக்காவல் வயலின் கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டுக் கற்று, ஏழாவது வயது முதல் பாட்டுக் கச்சேரிகள் செய்யத் தொடங்கிய இராஜரத்தினம் பிள்ளை, பிற்காலம் புல்லாங்குழல் விற்பன்னராக விளங்கிய திருப்பாம்பரம் சுவாமிநாதபிள்ளையுடன் சேர்ந்து பாட்டுக்கச்சேரிகள் நடத்தி வந்தார். பின்னர் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளையிடம் நாதசுரம் பயின்றார்.சில வருடங்கள் கழித்து இராஜரத்தினம், எல்லோரும் வியக்கத்தக்க அளவில் நாதசுர வல்லுனராக ஆனார்.துரிதமான வக்கிரமான பிருகாக்கள், சுருதி சுத்தமும் வன்மையும் நிறைந்த ஒலி, ஆற்றலான பிரயோகங்கள் மணிக்கணக்கில் ராக ஆலாபனை செய்யும் திறமை ஆகியவை எல்லாம் இராஜரத்தினம் பிள்ளையிடம் தாமாக வந்து சேர்ந்தன.
புதுமை காட்டியவர் : கதர்வேட்டி, சட்டை, தலையில் குடுமி என்றெல்லாம் தான் நாதசுரத் தவில் கலைஞர்கள் காட்சி தருவது வழக்கம். அவ்விதமாகவே முதலில் இருந்த இராஜரத்தினம் பிள்ளை, 'கிராப்' வைத்து, ஷெர்வானி உடையணிந்து, ஷூ அணிந்து பழமையை உடைத்தெறிந்தார்.நாதசுரக் கச்சேரி என்றால், பங்குபெறும் கலைஞர்கள் யாவரும் நின்றுகொண்டே நிகழ்த்துவதுதான் வழக்கம். இல்லங்களில் நடைபெறும் திருமணம் போன்ற வைபவங்களின் போது மட்டுமே உட்கார்ந்து வாசிப்பார்கள். மேடை போட்டுத் தான் வாசிக்க முடியுமென்று ஒரு நிபந்தனையை உண்டாக்கி வீதியுலா, ஸ்வாமி புறப்பாடு எதுவானாலும் உட்கார்ந்து வாசிக்க தொடங்கியவர் இராஜரத்தினம்பிள்ளை தான்.அதிகமாக ஸ்வரம் அல்லது பல்லவி வாசிப்பதில் இவருக்கு விருப்பம் குறைவு. அதிலும் விவகாரமாக சுரங்கள் வாசிப்பதை இவர் தவிர்த்தார். ஒரு சில கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார். திரைப்படத்திலும் அடிவைத்த இராஜரத்தினம்பிள்ளை, 'கவிகாளமேகம்' என்ற படத்தில் பாடி நடித்தார்.தனது தோடி ராக ஆலாபனை மூலம், சாதனை செய்து உலகப் புகழ் பெற்றார். தற்போது வாசிக்கப்படுகின்ற இரண்டு கட்டை சுருதி நாதஸ்வரத்தை உருவாக்கியது இவர் தான். நாடு சுதந்திரமடைந்த போது இவருடைய இசை நிகழ்ச்சி புதுடில்லியில் நிகழ்த்தப்பட்டது.நாதஸ்வர இசையால் பண்டிதர் முதல் பாமரர் வரை லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர், 1956ல் இயற்கை எய்தினார். சமுதாயத்தில் நாதஸ்வர கலைஞர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தவர்.
- முனைவர் தி.சுரேஷ் சிவன் இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்மதுரை 94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Manian - Chennai,இந்தியா

  சிறந்த அறிவாளிகள், கலைஞர்களை விமர்சிக்க, குற்றம் குறைகளே இல்லாதவர்களாக இருக்க வேண்டும். கலைஞர்களின் திறமையை மட்டுமே பாருங்கள். மற்றவை அவர்கள் மரபணு சார்ந்தது. ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காணகிற்பின் தீது முண்டோ மன்னுயிர்க்கு 976 - சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை. னப்படும். 980 - அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும். 1074 - அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.

 • JAIRAJ - CHENNAI,இந்தியா

  இருவரைப்பற்றியும் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. மறுபக்கம் என்பது எல்லோருக்கும் உண்டு. கதா காலட்சேபம் செய்தவர்களும் ( அவர்களே தான் ) கர்நாடக வித்வான்களும் மற்றும் பலருக்கும் மறுபக்கம் உண்டு.எல்லாமே அந்த வகைதான்.தண்டபாணி தேசிகர் நன்கு பாடக்கூடியவர்தான். ஆனால், தியாகராஜ பாகவதர் போன்று பாடுபவர்கள் இன்றுவரை யாரும் இல்லை.பக்கவாத்தியங்களே வேண்டாம். எல்லாமே குழலினிதுதான்.யாழ் இனிதுதான்.அதே போன்று ராஜ ரத்தினம் பிள்ளையும் அருமையாக இசைப்பவர்தான். போட்டி குறைவு என்பதால் தனித்து தெரிந்தார்.ஆனால், இவரிடம் சிலகாலம் சிஷ்யராக இருந்த காருகுறிச்சி அருணாச்சலத்திடம் இருந்த திறமை மிக அதிகம்.என்றும் குழையும் நாதம். அவருக்கும் மறுபக்கம் உண்டு. ப்ரூஸ் லீ யைப்போன்று மிகக் குறைந்த காலம் வாழ்ந்து மறைந்தவர். சிலர் பாட ஆரம்பித்தால் ப்ருகாக்களாக வந்து விழும் என்பார்கள்.அதுபோன்று எழுத ஆரம்பித்தால் தொடர்ந்து வரும் விஷயம்.

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  எவ்ளோ பாடல்கள் எவ்ளோ கச்சேரிகள் கேட்டிருக்கேன். தென் போனர்க்குரல் சுத்தமான ஸ்ஸரிப்பு பியர் இல்லாத பிரவாகமா பாடும் திறமை தாமரைப்பூத்த தடாகமாடி மாஸ்டர் பீஸ் தேஷ் ராகத்தில் அவர்பாடிய துன்பம் நேர்கைலே பாட்டும் நந்தன் சரித்திட்டத்துலே வள பாடல்கள் அற்புதமானவை baavamaa பாடுவார் தேவாரங்கள் பாடும்போது சிவனை கண்முன்னே நிறுத்துவார் இவரின் இசைக்கு நான் அடிமை TNR என்றே தான் சொல்லுவோமாஹா தோடி க்கு ஈடு உண்டா இணையுண்டா , எங்கள் ஊர் மாரியம்மன் திருவிளக்கு கச்சேரி செய்ய வந்தார் தேரின் போதும் வாசிஸ்சுண்டே நடந்ததுதான் இன்னம் என்கண்களிலே இருக்கு (அப்போது எனக்கு வயது 7thaan , கண் மூடி பைரவி வாரணம் லே துவங்கி எங்கள் வீட்டு வாசலுக்கு வரும்போது கேதாரகௌளம் ஆலாபனை வீட்டு வாசல்லே அவ்ளோ கூட்டம் எங்காத்து தின்னாலேயும் ஜனம் உக்காந்துட்டாங்க நாங்கள் என் மாமவவீட்டுப்பெற எல்லாம் எங்கள் வீட்டு மொட்டைமாடியிலேயே உக்காந்துட்டா கேட்க , அவருக்கு மக்கள் ரசிக்குறாங்கன்னா குஷிவேறு வந்துரும் நம்பமாட்டிய்ங்க அன்று கேதாரகௌளம் ராக ஆலாபனை அண்ட்சர்குன பாளிம்ப கிருதி வாசிச்சு நிரவல் அண்ட் ஸ்வரம் ஆஹா இப்போ நெனெச்சாலும் மெய் சிலிர்க்குதுங்க . 12manikku துவங்கினார் வர்ணத்துடன் 2manilenthu 4manivarai கேதாரகௌளமே தான் இப்போது நெனெய்ப்பேன் அப்போதெல்லாம் டேப்ரிக்கார்டர் இருக்கலியேன்னு , எங்கள் விட்டு தாண்டியதும் ராமணீ சமானம் இவரு என்று கரஹரப்ரியாலே (எங்கள் வீட்டுக்கு அஞ்சாவது வீடுதான் பெரியார் வீடு , சிரிஸ்ஸுன்னே வாசிசிச்சாறு குறும்புக்கு பேர்போனவராச்சே ஜபமும் அதிகம் வரும் என்பார்கள் காரைவாய்க்கால் வாராய் சென்று அங்கே ஒரு மாரியம்மன் கோயில் உண்டு அந்தேயும் வாசிச்சுட்டு மீண்டும் நடுமாறியாமன் கோயில் வந்து மங்களம் வாசிச்சார் அப்போ மணி 53/4 .அதிகாலை அம்பாளுக்கு பூபாளம் வாசிச்சுட்டு தன நாயனத்தை அம்பாள் காலில் வச்சுட்டு சந்நிதிலேயே உட்க்கார்ந்தார் , அப்படியே துவங்கியும் விட்டார் என்று என் annaakuutave போயிட்டுவந்து சொன்னாங்க , காரைவாய்க்கால்லே ஆனந்தபைரவி அண்ட் ஆபேரி கச்சேரி வீதி வழியே வர்ரச்ச தன்யாசி தென் பிலஹரி கோயில்லே வந்து மத்யமாவதி வாசிச்சு முடிச்சார்னு சொன்னதும் நேக்கு ரொம்பவே வருத்தம் கேட்கவே முடியலே என்று அப்போதெல்லாம் பொண்ணுகளை வெளியே விடவே மாட்டாங்க பாட்டே வீட்டுக்குத்தான் வந்து ஒரு மாஸ்டர் கற்பித்தார் இந்த ரெண்டுபேரின் கச்சேரிகளை கேட்டு ரசிக்கும் பாக்கியம் கிடைத்ததே பெரிய பாக்கியம் இசை தெரிஞ்சவா உள்ள வரை இவர்களை யாருமே மரக்கமாட்டாங்க

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  ஆமாம் ராஜரெத்தினம் பிள்ளை யாரையும் மதிக்க மட்டார். தங்க குடத்தில் தான் நீர் அருந்துவார்,தங்க சொம்பில்தான் பால் அருந்துவார்,கச்சேரிக்கு சரியான நேரத்திறகு எப்போதுமே போகமாட்டார்? உடல் முழுக்க தாங்க முடியத நாத்தமருந்தை பூசிக்கொள்வார். காம களீயாட்டத்தில் கொடிகட்டி பறந்தவர், ஊருக்கு ஒரு கூத்தியாள் வைத்திருந்தார். கச்சேரியில் தெய்வத்திற்கு சமமாக இருக்கையில் தான் அமர அடம் பிடிப்பார். சுவாமி ஊர்வலத்தில கூட பல்லக்கில் அமர்ந்துதான் நாகஸ்வரம் வாசிப்பார். மொத்தத்தில் மிக அற்புத மான மனிதர். இது எல்லோராலும் அறியபட்ட இவரின் மறு பக்கம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement