Advertisement

விழியெதிர் காணும் தெய்வங்கள்

'ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை'
மனிதரின் தலையாய பண்பு என்பது இனிதே தொழிலை முடிக்கும் வல்லவரின் பணிகளை பாராட்டுதலேயாகும் என திருவள்ளுவர் இக்குறளில் குறிப்பிடுகிறார். விண்ணின்று காப்பது வானவராயினும், மண்ணில் காப்பது தொழிலாளர்களே. அவர்கள் தான் 'விழியெதிர் காணும் தெய்வங்கள்' என்று இறைவனுக்கு ஒப்பாக தொழிலாளர்களை மகாகவி பாரதியார் ஒப்பிடுகிறார். உலகின் முதுகுத்தண்டாகவும், வாழ்வின் ஆதாரமாயும், உயர்வுக்கு வளமாகவும் இருந்து வியர்வை எனும் ரத்தத்தை சிந்தி நாட்டுக்கு வலிமையும், நலத்தையும் தருகிறார்கள். தொழிலாளியின் பின்னே உலகம் 'இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே! இயந்திரங்கள் வகுத்திடுவீரே! கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே! கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே! அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரந்தொழில் செய்திடுவீரே! பெரும்புகழ் நுமக்கேஇசைக்கின்றேன், பிரமதேவன் கலையிங்கு நீரே! பிரம்மதேவனின் படைப்புகளில் கலையாக திகழ்பவர்கள் தொழிலாளிகளே' என்று மகாகவி பாரதியார் பாடுகிறார். கடமையை திறம்பட ஆற்றும் தொழிலாளியின் பின்னே உலகம் சென்று, உன்னத நிலையை அடைகிறது.
பெரும் தொழிலிலிருந்து கைத்தொழில் வரை செய்யும் அனைத்து தொழிலாளர்களும், சோதனைகளை சாதனைகளாக்கி காட்டுபவர்கள். அவர்களை பாராட்டுவதற்காகவே தொழிலாளர் தினம் முதன் முதலில் செப்., 5, 1882ல் நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மே மாதம் 1923ல் சென்னையில் கொண்டாடப்பட்டது.
முயற்சி இருந்தால்...
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்'
முயற்சி இருந்தால் விதியையும் வெல்லலாம் என்பதை, செயலில் உணர்த்துபவர்கள் தொழிலாளர்கள்.
'கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்து இவ்வுலகு'
இயற்கையின் சீற்றத்தால் அடிக்கடி ஜப்பான் துயர்களை அடைந்தாலும், அத்துயரை உடனே களைந்து விட்டு கருமம் சிதையாமல் தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், தன்னை தொழிலாளர்களால் வளமாக்கி கொள்ளும் நாடு. கார் தொழிற்சாலையை நிர்மானித்த ேஹாண்டா ஒரு எளிமையான மனிதர். ேஹாண்டா தன் பணம், உழைப்பு, அனைத்தையும் மூலதனமாக்கி பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்தினார். பணி முடிவடையும் நிலையில் நில நடுக்கத்தால் தொழிற்சாலை தரைமட்டமாகியது. இரண்டாம் முறை முயற்சி செய்து உருவாக்கும் போது, இரண்டாம் உலகப் போரால் மறுபடியும் தரைமட்டமாகியது. தளராத மனதோடு, விடாமுயற்சியுடன், மறுபடியும் தேர்ந்த தொழிலாளர்களை வைத்து புகழ்பெற்ற ேஹாண்டா நிறுவனத்தை உருவாக்கினார். ஒவ்வொரு தொழிலின் முன்னேற்றத்திற்கும் பின்னால் தொழிலாளர்களின் பங்குள்ளது.
யானையால் யானை பிடித்தல் : பத்து மாதம் சுமந்தால் தான் தாய் பிள்ளையை பெற்றெடுக்க முடியும். விதை முளைத்து மரமானால் தான் கனி கொடுக்க முடியும். எல்லா செயல்களுக்கும் அடிப்படை பொறுமையும் நிதானமும் ஆகும். காலம் கனிய காத்திருக்க வேண்டும். காத்திருந்து வேலையை கனிய வைப்பவர்களே தொழிலாளர்கள். உழைப்பவன் ஒரு யானை மூலம், இன்னொரு யானையையும் பிடித்து கொடுக்கும் நுட்பம் அறிந்தவன் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
'வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று'
கை கொடுக்கும் தெய்வம் : சமுதாயத்திற்கு வேண்டிய முக்கிய பொறுப்புகள் அனைத்தும் தொழிலாளர்களிடம் உள்ளது. ஆகவே சமுதாயம் அவர்களிடம் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். செய்யும் தொழிலைதெய்வமாக கருதும் தொழிலாளர்கள், தாங்களும் மேன்மை அடைந்து சமுதாயத்தையும் மேன்மையுறச் செய்வார்கள். தொழிலாளர்களுக்கு தகுந்த நேரத்தில், தகுந்த இடத்தில், தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் அவர்கள் புத்துணர்ச்சியோடும், சுறுசுறுப்பாக வேலையை மகிழ்வுடன் செய்வார்கள். தொழிலாளர்களில் இந்தியாவில் முக்கியமாக பெண் தொழிலாளர்களும், குழந்தை தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர். 60 மில்லியன் வரை குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அன்பான அணுகுமுறை இல்லாத பெற்றோராலும், குடும்பத்தின் வறுமை காரணமாகவும் குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாயிருப்பதாலும், ஆதரவற்ற குழந்தைகளாய் வளர்வதாலும் குழந்தைகள், குழந்தை தொழிலாளியாக மாற்றப்படுகிறார்கள்.குழந்தை தொழிலாளியின் அழுகுரல் எலிசபெத் பேரட் ப்ரெளிங் என்பவர் தன்னுடைய குழந்தையின் அழுகுரல் என்ற பாடலில் குழந்தை தொழிலாளியின் உள்ளுணர்வை, பிஞ்சு மனத்தின் ஏக்கங்களை தெளிவாக சித்தரிக்கிறார். குழந்தை தொழிலாளிகள் விளையாடுவதற்கு புல் வெளியை நாடுவதில்லை. துாங்காத சிவந்த கண்களோடு, நடுங்கும் கால்களோடு, ஓய்வு வேண்டி கெஞ்சும் கைகளோடு படுத்துறங்க புல்வெளியை தேடுகிறார்கள். விளையாடி இன்பம் கண்டு, தாயின் மடியில் படுத்துறங்கி, தந்தையின் அரவணைப்புடன் இருக்க வேண்டிய மழலைகள், சூழ்நிலை என்னும் பிடிக்குள் அகப்பட்டு தொழிலாளர்களாக மாறி வருகிறார்கள்.குழந்தை தொழிலாளர்களை கண்டு மிகவும் மனம் வருந்தி அன்னை தெரசா, ''இறைவன் கொடுத்த வெகுமதியே குழந்தைகள். அக்குழந்தைகள் தேவையில்லை என்றால், எங்களிடம் கொடுத்து விடுங்கள். அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை கற்று தருகிறோம்,'' என்றார். கண் கலங்கி நைந்து போன நெஞ்சத்தோடும், நடுங்கும் கை கால்களுடனும் வேலை செய்யும் குழந்தை தொழிலாளிகளின் மனநலமும், உடல் நலமும் சீர்கேடு அடைந்தால் சமுதாய நலம் பாதிக்கப்படும். டாடாவும், பிர்லாவும், பில்கேட்சும் அவர்களுடைய நுண்ணறிவையும், உழைப்பையும், பணத்தையும் முதலீடு செய்தாலும் அவர்களுடைய தொழில் நிலைத்து நிற்க, உறுதுணையாக பலமாக நிற்பவர்கள் தொழிலாளர்களே. படைக்கும் தொழிலை வியர்வையால் நிரப்பி, தடையிலா உழைப்பால் ஊக்கத்தைக் காட்டி, இடைவிடா இயக்கத்தால் உயர்வை மேம்படுத்தி, விடையாக சமுதாய வளர்ச்சி என்ற வெகுமதியை தருபவர்கள் தொழிலாளர்களே.
- முனைவர் ச.சுடர்கொடி,காரைக்குடி. 94433 63865.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • TechT - Bangalore,இந்தியா

    நல்ல கட்டுரை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement