Advertisement

நிழல் தான் என்றாலும் நிஜம்! - இன்று உலக புகைப்பட தினம்

ஆயிரம் பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தை அரைப் பக்க புகைப்படம் உணர்த்திவிடும். நம் வசந்த வாழ்க்கையின் நினைவுகளை, தனிமையில் கூட ரசிக்க வைக்கும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. நமது வீட்டில் நடந்த ஒரு விழாவை பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதனைப் பார்த்து மகிழ்வதற்கு நமக்கு உதவுவது புகைப்படங்களே. நமது குழந்தைப் பருவம், திருமணம் உட்பட பல மறக்க முடியாத காலங்களை திரும்பி பார்க்கும் போது நமது மனம் அந்த இளமைக் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும். புகைப்படம் எடுப்பதற்கான கருவியை உருவாக்குவதற்கான முயற்சி 13 வது நுாற்றாண்டிலேயே தீவிரம் அடைந்தது. அப்போது கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறியதும், பெரியதுமாக பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெரிய முன்னேற்றம் 1825 ல் ஏற்பட்டது. பிரான்சை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டடத்தின் புகைப்படத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த பிம்பம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது. யோசெப் நிசிபோர் நியெப்சு ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்ற வகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவராகிறார். யோசெப் நிசிபோர் 1765 மார்ச் 7ல் சாவோன் எட் லொய்ரோயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். 1825ல், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் 17 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படம் எடுத்த உலகின் முதலாவது நபர் ஆனார். இவரால் 1826 ல் எடுக்கப்பட்ட இன்னொரு படம். இது சாளரத்தினுாடாகத் தெரியும் ஒரு காட்சி. இயற்கைக் காட்சியொன்றை உள்ளடக்கிய உலகின் முதல் ஒளிப்படம்.அவரது காலத்தில் ஊசித்துளைப் படப்பெட்டியின் அடிப்படையில் அமைந்த ''இருட்டறை''என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் பிம்பத்தை விழச்செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினார்.
புகைப்பட தினம் எப்படி : 1829ல் இவர் லுாயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். இவர்களுடைய கூட்டு 1833 ம் ஆண்டில் நியேப்சு இறக்கும் வரை நீடித்தது. டாகுவரே தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு சற்று மாறுபட்ட புதிய முறை ஒன்றை உருவாக்கினார். இதற்கு அவர் தன்னுடைய பெயரைத் தழுவி ''டாகுவேரியா வகை'' எனப் பெயரிட்டார். 1839 ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் அன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.1839 ல் ஜான் ஹெர்சல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார். இது கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ''ஒளியின் எழுத்து'' என்பதாகும். 1880 களில் செல்லுலாய்ட் பிலிம்களை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் தயாரித்தனர்
பாக்ஸ் பிரவுனி கேமரா : 1888 ல் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து 1900 ல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913ல் ஆஸ்கர் பர்னாக் வடிவமைத்தார். இது புகைப்படத் துறையையே புரட்டிப்போட்டது. இவர் ஒளிப்படங்களின் விளக்கத்துடன் கூடிய நுாலினை வெளியிட்ட முதல் நபராக கருதப்படுகிறார். ஒளிப்படம் ஒன்றை உருவாக்கிய முதல் பெண்மணியும் இவரேயாவார்.
முதல் டிஜிட்டல் கேமரா : முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981ல் தயாரித்தது. ஒரு தலைமுறையின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் ஒரு வழிகாட்டியாக புகைப்படம் விளங்குகிறது. ஒரு புகைப்படம் என்பது நான்கு எல்லைகளுக்குள் அடங்கி விடுகிறது. ஆனால், அது பல கதைகளையும் பல தகவல்களையும் கொடுக்கக் கூடியதாக அமைகிறது.
உலகை புரட்டிய படங்கள் தெற்கு வியட்நாம் போட்ட ''நாப்பாம்'' குண்டினால் தாக்குதலுக்குள்ளான சிறுமி உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஓடிவரும் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கதிகலங்க உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்து பார்த்தது. 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது. அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட். அந்த புகைப்படங்களை பிரின்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர்.பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது. கெவின் கார்ட்டர் என்ற புகைப்படக் கலைஞர் சூடான் நாட்டில் நிலவிய பஞ்சத்தை நேரில் காண 1993ல் சென்றார். அவர் தெற்கு சூடானில் அயோடு என்னும் கிராமம் அருகில் கண்ட காட்சியை 20 நிமிடங்கள் காத்திருந்து புகைப்படம் எடுத்தார். பசியினால் உடல் மெலிந்த சிறுமி, ஐக்கிய நாடுகள் சபையின் உணவளிக்கும் கூடாரத்திற்கு தவழ்ந்து சென்று கொண்டிருந்தாள். அச்சிறுமியின் உயிர் எப்போது பிரியும், அவளை இரையாக்கிக் கொள்ளலாம் என ஒரு வல்லுாறு காத்திருப்பதை சேர்த்துப் படம் எடுத்தார். இது சூடான் பஞ்சத்தை எடுத்துரைக்கும் படமாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. இந்தப் புகைப்படம் உலகையே உலுக்கியது. அந்த புகைப்படத்திற்காக இவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அந்தச் சிறுமியை காப்பாற்றாத குற்ற உணர்ச்சி கெவின் கார்ட்டருக்கு இருந்தது. அவர் மன அழுத்தத்தால் 3 மாதத்திற்குள் தற்கொலை செய்துகொண்டார்.
சிறந்த புகைப்படம் : சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் சதுக்கத்தில், அரசுக்கு எதிரான போராட்டம் 1989 ஏப்ரல் 15 முதல் ஜூன் 4 வரை நடந்தது. இந்த போராட்டம் மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஒடுக்க பீரங்கிகள் அணி வகுத்து வந்தன. இதனை ஒரு மாணவர் வழி மறித்து தடுத்து நிறுத்தும் காட்சியை பால்கனியில் இருந்து ஜெப் வைட்டனர் என்பவர் புகைப்படம் எடுத்தார். இது 20 ம் நுாற்றாண்டின் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட போது, அந்த அழிவின் சாட்சியங்களாக இன்றும் புகைப்படங்கள் நிலைத்துள்ளது. சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு ''வேர்ல்டு பிரஸ் போட்டோ'' ,''டைம்'' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.ஒவ்வொரு படத்தின் பின்னணியிலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலை, மரபு உண்டு.
- முனைவர். பெ. சுகுமார் புகைப்பட இதழியலாளர்மதுரை. 94430 75995.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement