Advertisement

எதையும் முழுமையாக செய்யுங்கள்!

எந்த ஒரு செயலையும் முழுவதுமாக செய்வது வெற்றிக்கு அடிப்படை. ஒரு நிறுவனத்தில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்முகம் நடந்தது. வந்திருந்த பலரில் அடிப்படை தேர்வு முறையில் பத்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குள்ளும் இருவரை தேர்ந்தெடுக்க வேண்டி நிறைவாக ஒரு போட்டி நடந்தது. நிர்வாக மேலாளர் சொன்னார், 'உங்கள் ஒவ்வொருவரிடம் ஒரு தாள் கொடுக்கப்படும். அதில் நீங்கள் உடனே செய்ய வேண்டிய பத்து சிறு சிறு வேலைகள் இருக்கும். பத்து நிமிடங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்' என்றார். ஒவ்வொருவர் கையிலும் ஒரு தாள் கொடுக்கப்பட்டது. அதில், உங்கள் தாய், தந்தையின் பெயரை எழுத வேண்டும். வரவேற்பு அறையில் எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணிச் சொல்ல வேண்டும். அதில் எத்தனை பேர் வெள்ளை உடை அணிந்திருக்கிறார்கள்? அருகில் நிர்வாகியின் அறையில் இருக்கிற புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து தரவேண்டும். இந்த ரீதியில் பத்து வேலைகள் குறிப்பிட்டிருந்தன. பத்து நிமிடங்களுக்குள் யாரும் அந்த வேலைகளை செய்து முடிக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் பத்தாவது வேலையை படித்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. பத்தாவது என்ன வேலை தெரியுமா? 'இந்த பேப்பரை கிழித்து குப்பை கூடையில் போட்டு விடுங்கள். நீங்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை இதுதான்'.பரபரப்பும், பதட்டமும், கவனக்குறையும் ஒரு வேலையை முழுமையாக செய்யவிடாமல் தடுத்து விடுகின்றன. ஏனோதானோ என்ற மனப்பான்மை நம்மை ஏதேனும் படுகுழியில் தள்ளிவிடும்.முழுமையை நோக்கி முழுமை என்பது மேதைகளின் குணமாகும். மேதைமை என்பது அளவற்ற அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒரு கலை. பொதுவாக காணப்படும் பிரச்னை என்னவென்றால், மோசமான வேலைகளை செய்துவிட்டு நல்ல பயனை எதிர்பார்க்கிறார்கள். மலிவு விலையென்று சொல்லி மக்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்.'கிட்டத்தட்ட' என்பது ஒரு அபாயகரமான வார்த்தை. கிட்டத்தட்ட, ஏறக்குறைய என்ற வார்த்தையால் வெற்றி படியில் இருந்து வீழ்ந்த மனிதர்கள் எவ்வளவு தெரியுமா? வீழந்த நிறுவனங்கள் எவ்வளவு தெரியுமா?ஒரு இளைஞன் ஒரு பிரமுகரின் சிபாரிசு கடிதத்தோடு ஒரு நிறுவனத் தலைவரை சந்தித்து வேலை கேட்டான். 'வேலை கொடுத்தால் சரியாக செய்வாயா?' என கேட்டார். 'கிட்டத்தட்ட சரியாக செய்வேன் என்று நினைக்கிறேன்' என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். 'கிட்டத்தட்ட உன்னைவிட முழுமையாக செய்கிறவன் தான் எனக்கு வேண்டும். நீ போகலாம்' என்றார் நிறுவனத்தின் தலைவர். எமர்சன் கூறுகிறார், 'ஒரு மனிதன் அடுத்தவரை விட ஒரு நல்ல எலிப்பொறி செய்பவராக இருந்தால், அவர் நடுக்காட்டுக்குள்ளே வசிப்பவராக இருந்தாலும் பலர் அவரை தேடிச் செல்வார்கள்'. ஒரு நிறுவனத்திற்கு தன்னம்பிக்கை சொற்பொழிவாற்ற நான் சென்றிருந்தபோது, அங்கு அதன் உரிமையாளர் அறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்னை பெரிதும் சிந்திக்க வைத்தது.'இங்கே மிகச்சிறந்தவை மட்டும் நல்லவை'இதுதான் நமக்குள் ஒளிர வேண்டும்.
கவனக்குறைவால் ஆபத்து : பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் உயிர் காக்கும் படகொன்றில் அடிப்பகுதியில் கசிவு ஏற்பட்டது. அதில் மூழ்கிச் சிலர் இறந்தனர். அந்த படகை உருவாக்கியவர்கள் கவனக்குறைவாக ஒரு சுத்தியலை அடிப்பகுதியில் விட்டு விட்டார்கள். படகின் அசைவில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சுத்தியல் அடிப்பலகையை சேதப்படுத்தியிருக்கிறது.நமது ஊர்களிலேயே சில சம்பவங்களை பார்க்கிறோம். நோயாளிக்கு வயிற்றில் அறுவைசிகிச்சை செய்த மருத்துவர், கத்திரிக்கோலை நோயாளியின் வயிற்றுக்குள்ளேயே பத்திரப்படுத்தியிருந்த செய்தி நாம் படித்ததுதானே! வலது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை இடது காலில் செய்த புண்ணியவான்களும் உண்டு. வலிக்கிற பல்லை விட்டு வலிக்காத பல்லை பிடுங்கிய பலசாலி மருத்துவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.வெற்றிக்கு அடிப்படை தேவைகளில் ஒன்று, செய்வதை முழுமையாக செய்யும் ஆவல். ஒரு பெரிய பணியை செய்யும் அதே ஆர்வத்தை, அக்கறையை சிறிய காரியத்திலும் காட்டுவது. வெற்றியாளன் எதையும் சாதாரணமாக செய்வதில் திருப்தி அடைவதில்லை. சரியாக செய்வதில், நேர்த்தியாக செய்வதில் மட்டுமே திருப்தி அடைகிறான்.
தரத்திற்கு உத்தரவாதம் : தரத்துக்கு நிகரான விளம்பரம் வேறு எதுவும் கிடையாது. சில நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் நம்பகத்தன்மை பெற்றிருப்பதற்கு இதுதான் காரணம். கிரஹாம், டாம்பியன் போன்ற பெயர்கள் ஒரு காலத்தில் தொழில் திறமைக்கும், சந்தேகமற்ற தரத்திற்கும் உத்திரவாதமாக திகழ்ந்தவை.
கிரீன் வீச்சில் உள்ள கடிகாரம் கிரஹாமினால் உருவாக்கப்பட்டது. அவரும் டாம்பியனும், தங்களுடைய தொழில் நுட்பத்திற்காகவும், போலிகளை உற்பத்தி செய்து விற்காமல் இருந்ததற்காகவும் உலகப்புகழ் பெற்றனர்.இப்போது ஒரு பொருளை உண்மையானது என்று நம்பி வாங்க முடிகிறதா?உயரமான இடங்களில் இருந்து பாதுகாப்பாக கீழிறங்க பயன்படும் 'பாராசூட்' வாங்க ஒருவர் கடைக்கு போனார். ஒரு பாராசூட் பையை எடுத்துக்கொண்டு 'ஆபத்து நேரத்தில் உயரத்தில் இதை விரித்தால் சரியாக விரியுமா?' என கேட்டார். 'கவலையே படாதீங்க! அப்படி சரியாக விரியாமல் போனால் கொண்டு வாருங்கள். மாற்றித் தருகிறேன்' என்றார் கடைக்காரர். மாற்றி வாங்கிக்கொள்ள வாங்கிய மனிதர் இருந்தால்தானே!
வேலையில் முழுமை : 'பாகுபலி' படத்தில் 'சிவலிங்கத்தின் மீது நுாறு குடம் தண்ணீர் ஊற்றினால் உச்சி குளிரும். உன் மகனுக்கு நல்லது' என்று தாய்க்கு ஒரு மகான் ஆலோசனை தருவார். அவளும் ஒவ்வொரு குடமாக நீரை சுமந்து வந்து ஊற்றிக்கொண்டிருப்பாள். தாய் சிரமப்படுவதை பொறுக்க முடியாத மகன், சிவலிங்கத்தை அப்படியே பெயர்த்தெடுத்து ஓர் அருவியின் கீழே வைத்து விடுவான். இப்போது எப்போதும் அபிஷேகம்.ஒரு அற்புதமான வேலையை முழுமையாக செய்து முடித்த பிறகு, எவ்வளவு உயர்வான பெருமிதமான உணர்வு கிடைக்கிறது தெரியுமா? புத்துணர்வு சுரப்பதை புதிய பாதைக்கு வழி தெரிவதை உணரும்போது ஏற்பட்ட சிலிர்ப்பை அனுபவித்திருக்கிறீர்களா? படைப்பாளர்களுக்கும் இது பொருந்தும். சிறந்த முழுமை பெற்ற படைப்புகளே சிகரங்களை தொட்டிருக்கின்றன. முழுமைக்குள் மூழ்கிய இசைவாணர்களே முதல் வரிசையில் இருக்கிறார்கள். முழுத்திறனை காட்டியவர்களே விளையாட்டில் வித்தை புரிந்திருக்கிறார்கள்.
வழிகாட்டுதல் : நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, வயதான காலத்தில்கூட அதிகாலையில் நாதஸ்வரம் வாசித்து சாதகம் செய்வாராம். 'இந்த வயதிலும் இது தேவையா?' என்று கேட்டபோது, 'தேவைதான். ஒருநாள் சாதகம் செய்யாமல் கச்சேரிக்கு போனால் சின்ன சின்ன குறைபாடுகள் எனக்கே தெரியும். இரண்டு நாட்கள் சாதகம் செய்ய வில்லை என்றால், என்னை போன்ற வித்வான்களுக்கு தெரியும். மூன்றுநாட்கள் சாதகம் செய்யாமல் போனால் விஷயம் புரிந்து ரசிகர்களுக்கு அது தெரிந்துவிடும். கலைஞன் என்பவன் தொடர்ந்து சாதகம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்' என்றாராம். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு வழிகாட்டுதல்.அரைகுறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டே ஒருவர், 'நான் அமிர்தவர்ஷினி பாடினால் மழை வரும். நீலாம்பரி பாடினால் துாக்கம் வரும். புன்னகவராளி பாடினால் பாம்பு வரும்' என அலட்டிக் கொண்டிருந்தார். கேட்டு கொண்டிருந்தவர், 'நீங்கள் பாடும்போது சில நேரங்களில் கல் வருதே! அது என்ன ராகம்?' என்று கேட்க, பாடியவர் ஓடியே விட்டார்.
செயலில் முழுமை : ஆதரித்தால் முழுமையாக ஆதரியுங்கள். எதிர்த்தால் முழுமையாக எதிர்த்திடுங்கள். விட்டு கொடுத்தால் முழுமையாக விட்டுக்கொடுங்கள் சமாதானம் என்றால் முழுமையாக சமாதானம் செய்யுங்கள். தியானம் செய்தால் முழுமையாக செய்யுங்கள்ரசித்தால் முழுமையாக ரசியுங்கள் . விளையாடுவதானால் முழுமையாக விளையாடுங்கள்முழுவதுமாக செய்வதற்கும் முழுமையாக செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. நாம் எல்லாவற்றையும் முழுவதுமாக செய்துவிட முடியாது. ஆனால், எடுத்துக்கொண்ட ஒரு செயலை முழுமையாக செய்ய முடியும். பிறகென்ன! நீங்களும் வாகை சூடலாம்.
- முனைவர் இளசை சுந்தரம்
எழுத்தாளர், மதுரை
98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • JAIRAJ - CHENNAI,இந்தியா

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்...? நேர்கோடாக ஆரம்பித்து வளைந்து நெளிய ஆரம்பித்து விட்டீர்கள். உங்கள் உரை கல்வெட்டில் அமர்ந்து பேசி பொழுதுபோக்க உதவும். தற்காலத்தில் பேஸ் புக்கில் பதிவு செய்து பகிர்ந்தளிக்கலாம். சொல்கிறார்கள் என்ற தலைப்பில் சொல்ல விஷயமா இல்லை. அட தண்ணீர் பாம்புகளே..................

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement