Advertisement

கல்விக் கொள்கையில் கவனம் கொள்வோம்!

மத்திய அரசு, கால மாற்றத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு நவீன கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள் பாராட்டத்தக்கன. இரண்டு முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு பார்ப்போம்.பண்பாட்டின் வழி நின்று மாணவர்களை ஒழுக்கம், கலாசாரம் ஆகியவற்றில் கவனம் கொள்ளச்செய்வதும், மனிதவள மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் சக்தி மிக்கவர்களாய் இளைஞர்களை மாற்றுவதும் புதிய கல்விக்கொள்கையில் பிரதிபலிக்கின்றன. சம காலத்தின் இடைவெளிகளை பூர்த்தி செய்கிற அம்சங்களாக இவை இருப்பதால் பரவலாக வரவேற்பினை பெறும்.'கல்வி என்பது ஏராளமான தகவல்களை மனதில் நிறைத்து வைத்துக் கொள்வதல்ல, மனதை முழுமையாக்கி அதை கட்டுப்படுத்தி ஆள்வதே கல்வி' என்கிறார் விவேகானந்தர். கல்வியின் பயனாக மன ஒருமைப்பாடு நிகழ வேண்டும். சிறந்த பண்புகளை உருவாக்குகின்ற, மன வலிமையைத் தருகின்ற அறிவை விரிவடையச் செய்கின்ற, ஒரு மனிதனை சொந்தக் கால்களில் நிற்கச் செய்கின்ற கல்வியே இப்போதைய தேவை.
சுயதொழில் :தொழில் செய்யும் திறமையோடு கூடிய தொழில்கல்வி இன்று வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யும். படிப்பை முடித்துவிட்டு விண்ணப்பங்களோடு வேலை தேடி அலைகிற மாதிரி இல்லாமல் சுயமாக தொழில் செய்து பொருளீட்டக்கூடிய வகையில் கல்வியின் பயன் அமைவதே உபயோகமானதாக இருக்கும்.
வாழ்க்கை பற்றியும், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் பற்றியும் கற்றுக் கொடுக்கிற கல்விதான் உண்மையான கல்வி. பள்ளிப் பருவத்தில் மதிப்பெண்களுக்கு பயந்தும், கல்லுாரிப் பருவத்தில் கேலி கிண்டலுக்கு அஞ்சியும், வேலை செய்யும் போது மன அழுத்தம் என்று தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால், கல்வி அவர்களுக்கு நம்பிக்கையையும் தரவில்லை, பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடிய சக்தியையும் தரவில்லை என்றுதானே அர்த்தம்.தேர்வுகள் தீர்மானிக்காது இருக்கும் இடத்தில் இருந்து ஒருவனை ஒரு அடியாவது முன்னே தள்ளுவதுதான் கல்வி என்பது சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கை. ஆனால் பெரிய பெரிய பல்கலைக் கழகங்கள் எல்லாம் இப்போது தனிமனிதனை முன்னோக்கி நடத்திச் செல்வதை விட்டுவிட்டு, அவைவெறும் தேர்வுகள் நடத்தும் மையமாகவே இயங்கி வருகின்றன என்று அவர் காலத்திலேயே குறைபட்டுக்கொண்டார் சுவாமி விவேகானந்தர். தேர்வுகள் ஒருவனின் திறமையையோ, உள்ளத்தையோ தீர்மானித்துவிட முடியாது. வெறுமனே எழுத்தறிவு பெறுவது எப்படி ஒரு சிறந்த கல்வியாக முடியும்? கல்வி என்பது மனிதனின் உடல், ஆன்மா, உணர்வு ஆகியவற்றை ஊடுருவிச்சென்று உள்ளத்தை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்கிறார்
காந்தியடிகள்.:கடைக்கோடி மனிதனின் கவலைகளையும் போக்கும் விதத்தில் ஒரு நாட்டின் கல்வி முறை அமையவேண்டும். ஒரு பக்கம் சந்திரனில் குடியேற முயற்சிக்கிறோம், இன்னொரு பக்கம் முச்சந்தியில் முடங்கிக்கிடக்கும் சிலமனிதர்களின் வாழ்க்கையை தரிசிக்கிறோம். சகமனிதர்களின் வாழ்வெளியில் இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் செய்யும் வகையில் கல்வியின் பயன்பாடு அமைய வேண்டும்.சக மனிதர்களோடு தன்னையும் இணைத்துக்கொண்டு சமூக இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி அமைவது அவசியம். படித்தவர், படிக்காதவர் என்ற தளத்தில் ஒருசாரார் பிறரிடமிருந்து விலகி வேடிக்கை பார்க்கும் சூழல் இருப்பது ஆரோக்கியமானது அல்ல. இவ்வாறு படித்தவர் படிக்காதவர் என்று இரு பெரும் பிரிவுகளாக சமுதாயம் பிரிந்து கிடப்பது முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும்.மனிதவள மேம்பாடு புதிய கல்விக்கொள்கை கவனம் எடுத்துக்கொள்ளும் இன்னொரு விஷயம் மனிதவளமேம்பாடு இதுவும் பாராட்டுக்கு உரியதுதான். ஆனால் இந்த மனிதவள மேம்பாடு என்பது வெறுமனே உற்பத்தி திறனை அதிகரிப்பதாக மட்டும் இருக்கக்கூடாது. மனிதவள மேம்பாடு என்பது தனிமனிதனின் கற்பனைகள், குணநலன்கள், பண்புகள் ஆகியவற்றின் வளர்ச்சி மீது கட்டமைக்கப்பட வேண்டும்.
இதில் முக்கியமானது என்னவென்றால் இப்படிப்பட்ட கல்வி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும். மக்களின் வாழிடங்களுக்கு அருகிலேயே உயர்வான கல்வி விலையில்லாமல் அளிக்கப்பட வேண்டும்.வாழ்வதற்கு அடிப்படையான வீடு, உடை, உணவு, ஆரோக்கியமான சூழல் போன்று, தரமான கல்வியும் மக்களின் அடிப்படைத் தேவை. தரமான கல்வி பெற்ற சமூகத்தால் மட்டுமே வாழ்க்கைத்தரம், மேன்மையான சிந்தனை ஆகியவற்றை பாதுகாத்து வாழமுடியும்.
காலத்திற்கேற்ற கல்வி நவீனமான, காலத்திற்கேற்ற கல்வி தரப்படாத சமுதாயத்திற்கு,எத்தகைய வாய்ப்பு தந்தாலும் அந்த வாய்ப்புகளின் பலன்கள் உடனடியாக அதே சமூகத்தால் பறித்து எடுத்துக்கொள்ளப்படும் என்பது அவலமான நிஜம்.அறிவு பெற்ற மாணவர்களுக்கு எவ்வாறு உயர்கல்வி அவசியமோ, அதுபோலவே இதுவரை கல்வி வாய்ப்புகள் பெறஇயலாமல் போனவர்களுக்கும், கல்வி தரப்படவேண்டியது முக்கியம் அப்போதுதான் ஒட்டுமொத்த சமூகமும் அறிவார்ந்த நிலைக்கு உயரும்.
ஏற்கனவே முடிவு செய்த அச்சுகளில், குழந்தைகளை பொருத்தி வார்ப்பதாக எந்தக் கல்வியும் இருக்கக்கூடாது. மாணவர்கள் இயற்கையாக அவரவர் இயல்பு படி வளர்வதற்கு துணை செய்யும் வகையில் கற்பித்தல் பாடப்பொருள் இருக்கவேண்டும். கல்வி முறையானது மாணவர்களின் ஆர்வங்களை அடக்காமலும், அவர்களுடைய கனவுகளை நொறுக்காமலும் இருக்க வேண்டும். ஏனெனில் மாணவர்களுடைய கனவுகள் கல்வி முறையை உருவாக்குபவர்களின் கனவுகளைவிடப் பெரியவை.புதிய கல்விக்கொள்கை கவனிக்க வேண்டிய முதல்படி இதுதான்.- முனைவர்ஆதலையூர் சூரியகுமார்எழுத்தாளர், மதுரை98654 02603

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Natarajan Arunachalam - TRICHY,இந்தியா

    மக்களுக்கு எல்லாமே விலை இல்லா கல்வி, வீடு, உணவு, உடை கிடைத்திட வேண்டும்.அதுவும் வீட்டுக்கு பக்கத்திலேயே.என்ன அருமையான சிந்தனை. சோம்பேறி மக்களே நீங்கள் உருப்படுவது எப்போ ???

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    சுற்றி வளைத்து சொல்வதை விட இனிப்பு கலந்த மருந்தா, அல்லது விஷமா என்பது தான் அலசப்பட வேண்டிய விஷயம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement