Advertisement

'பளிச்'சென் தெரிவதே கவர்ச்சி - கவிதை வாசிக்கிறார் காயத்ரி

வெண்பஞ்சு மேகமாய் உருவான பொன் பஞ்சு தேகம்; திராட்சை கனிகள் திரண்டு நீண்டது போல விரல்கள்; சீவிய இளநீராய் சிரிக்கும் விழிகள்; செதுக்கி வைத்த மாம்பழக் கன்னங்கள்; தேக்குமர பின்னலாய், தேவலோக மின்னலாய், இளைஞர்களின் ஏக்கப் பெருமூச்சை இழுத்து நிறுத்தும் கேரளத்து பைங்கிளி நடிகை காயத்ரி கிருஷ்ணா. 'சோலைக்காடு', 'ஜோக்கர்' படங்களில் நடித்து, திரையுலக தாரகையாக ஜொலிக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்.

* உங்களை பற்றி...!
கேரள மாநிலம் திருச்சூர் எனது சொந்த ஊர். செட்டிலானது பெங்களூருவில். அப்பா தங்கப்பன் துபாயில் இருக்கிறார். அம்மா ஓமனா குடும்பத் தலைவி. தம்பி அனிருத் பள்ளி மாணவர். பி.ஏ., ஜெர்னலிசம், இலக்கியம், மனோதத்துவம் படித்துள்ளேன். வயது 22ஆகிறது.
* சினிமா நாற்றை உங்கள் மனதில் நட்டது யாரோ?
சிறு வயதிலேயே மலையாளம், கன்னடம், தமிழ் படங்கள் பார்ப்பேன். நடிக்கும் ஆசையில் மேக்கப் போட்டு கண்ணாடி முன் கை, கால்களை அசைத்து ஆக் ஷன் செய்வேன். இதனை எனது அம்மா உற்சாகப்படுத்துவார். 'பேஸ் புக்'கில் எனது படத்தை பார்த்து, விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவான 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தில், லெனின்பாரதி இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். உடனே கடவுளுக்கு நன்றிகூறி கலைப் பயணத்தை துவக்கினேன்.
* முதல் கேமரா அனுபவம்...?
கல்லுாரியில் படிக்கும் போதே நாடகங்கள் நடித்து கேமராவில் பதிவேற்றியுள்ளேன். இதனால் கேமரா பயமோ, கூச்சமோ ஏற்படவில்லை. மேக்கப்புடன் நடிக்கும் போது புதிய உணர்வு ஏற்பட்டது, அவ்வளவு தான்.
* தமிழ் மொழியில் தடுமாற்றம் இல்லாத பேச்சுக்கு யார் காரணம்?
பெங்களூருவில் எங்கள் வீட்டை சுற்றி வசிப்போர் தமிழர்கள் தான். எனது தோழிகள் பலரும் தமிழர்கள் தான். இதனால் எனக்கு தமிழ் தாராளமாக வரும். எனது குரல் வளம், உச்சரிப்பை கேட்ட இயக்குனர்கள் சொந்த குரலில் பேசி நடிக்க வைத்தனர் என்றால் பார்த்துக்கோங்களேன்.
* கதாநாயகியாக என்ன தேவை?
நடிப்பதை பலர் சாதாரணமாக நினைக்கிறார்கள். ஒரு 'டேக்'கை பல முறை எடுப்பார்கள். நடிப்பு இயல்பாக இல்லாவிட்டால் இயக்குனர்களிடம் திட்டு வாங்க வேண்டியது வரும். பலர் முன்னால் அவமானப்பட வேண்டியதிருக்கும். கதாநாயகியாக நடிக்க அழகும், அறிவும் தேவை.
* சேலை, மாடர்ன் ஆடை. கவர்ச்சி எதில்?
பல ஆண்டுகள் மாடர்ன் டிரஸ்சில் தான் இருந்துள்ளேன். இதில் கவர்ச்சி இருக்கிறது தான். ஆனால் அதைவிட கவர்ச்சி சேலை தான்.
* கவர்ச்சி காட்டுவதில் உங்கள் கருத்து என்ன?
கவர்ச்சியாக நடிக்க நான் தயார் தான். கோவில் சிலைகளில் இருந்து அனைத்து கலைகளிலும்
கவர்ச்சி இருக்கிறது தானே. 'பளீச்'சென தெரிவதைத்தானே பார்த்து ரசிப்போம். காலத்திற்கு தகுந்த மாதிரி காட்டுவதில் தவறில்லையே.
* உங்களை கவர்ந்த நடிகை யார்?
தமிழில் வந்த சந்திரமுகியின் முன்னோடி படமான 'மணிச்சித்திர தாழ்' படத்தில் நடித்த ஷோபனா எனக்கு பிடித்தமானவர். அவரிடம் இயற்கையான நடிப்பை கற்று வருகிறேன்.
* தமிழ் நாயகர்களில் யாருடன் நடிக்க ஆசை?
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடனும் நடிக்க ஆசை தான்.
இப்படி அனைத்து மொழிகளிலும் நடிக்க கடவுள் வரம் தருவார் என நம்பிக்கை உள்ளது.
* உங்கள் அழகின் ரகசியம்?
ஷட்டில் விளையாடுவேன். சைக்-கிளிங், நடனம் ஆடுவதில் அதிகம் ஆர்வம் உண்டு. எதையும் நினைத்து கவலைப்பட மாட்டேன். அதுதான் ரகசியம்.
இ மெயில் முகவரி: gayu.krishna1993gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement