Advertisement

ஆரோக்கிய காடுகளின் அளவுகோல் யானைகளே! : இன்று உலக யானைகள் தினம்

உலக யானைகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆக.,12 ல் கொண்டாடப் படுகிறது. இந்த தினம் கொண்டாடப் படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது.இந்த படம் 2012 ஆக.,௧2ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. -அகிலத்தில் 24 வகையான யானைகள் இருந்தன. அதில் 22 வகைகள் அழிந்து விட்டன. தற்போது யானைகளில் இருவகைகள் தான் உள்ளன. ஒன்று ஆப்ரிக்க யானை, மற்றொன்று இந்திய (ஆசிய) யானை. ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, ராபோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 32 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் சுமார் ௩250 ல் இருந்து 3750 வரை இருக்கிறது. எனவே, புலிகளை போல், ஆசிய யானைகளும் உலக எண்ணிக்கையில் இந்தியாவில்தான் அதிகம். எனவே, பிற்கால சந்ததிகள் யானைகளை பார்க்க, நாம் அவற்றை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தும்பிக்கை வடிவில் மூக்கினைப் பெற்றுள்ள ஒரே விலங்கு யானை தான். பாலை வனப் பகுதி மற்றும் சதுப்பு நிலங்களை தவிர மற்ற எல்லா நிலத்தோற்றங்களிலும் புலிகளை போல் யானைகளும் வசிக்கின்றன.
சமூக வாழ்வியல் முறை : யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்டவை. யானை கூட்டத்திற்கு தலைவன் கிடையாது. தலைவி மட்டும்தான். யானைகளுக்கு அதிக உணவு மற்றும் தண்ணீர் தேவை. எனவே, போதிய உணவும், தண்ணீரும் கொண்ட காட்டுப் பகுதிகளே அவை வாழ ஏற்ற வாழ்விடமாக அமையும். யானைக்கு தந்தங்கள் உண்டு. தந்தங்கள் இல்லாத ஆண் யானையைத் தான் 'மக்னா' என்கிறோம். எனவே, யானையின் வலிமை என்பது தும்பிக்கை மற்றும் தந்தங்கள்தான். தும்பிக்கை, வாசனை உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஒரு மனிதனின் வாசனையை யானை அறிந்து கொள்ள முடியும்.
தும்பிக்கை : யானைகளின் உடலமைப்பில் தும்பிக்கை மற்றும் தந்தம் மிகவும் முக்கியமானது. யானையின் மூக்கும் மேல் உதடும் இணைந்து உருமாற்றம் பெற்ற உறுப்பு தான் தும்பிக்கை. இது எளிதில் வளையக்கூடிய, எலும்புகள் அற்ற தசை அமைப்பு. இதன் மூலம்தான் யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும் உணவையும் வாய்க்கு கொண்டு செல்கிறது. எந்த பொருளையும் பற்றிக் கொள்ள முடியும். ஆனால் சண்டைக்கு பயன்படுத்தாது. அதே நேரத்தில் இதன் நுனி மூலம் ஒரு சிறிய நாணயத்தையும் எடுக்க முடியும். தந்தம் என்பதை நாம் 'கொம்பு' என நடைமுறையில் அழைக்கிறோம். ஆனால், அது கொம்பு கிடையாது. தந்தம் என்பது மேல்வரிசை வெட்டுப் பற்களின் நீட்சிதான். சுமார் ஒரு டன் எடையுள்ள சுமையை தந்தத்தால் துாக்க முடியும். சண்டையின் போது தந்தத்தைதான் பயன்படுத்தும். ஆசிய யானையில், ஆண் யானைக்கு தான் தந்தம் உண்டு. பெண் யானைக்கும் தந்தம் உண்டு. ஆனால் மண்டையோட்டை விட்டு வெளியே தெரியாது. ஆப்ரிக்க யானையில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் இருக்கும். யானைக்கு நன்றாக காது கேட்கும். ஆனால் கண் பார்வை குறைவு. யானைகளால் நிறங்களை பிரித்து அறிய முடியாது. ஆனால், வெள்ளை நிறத்தை உடனே அறிந்து விடும். எனவே, வெள்ளை நிற உடை அணிந்து யானை முன் செல்லக்கூடாது.
கும்கி யானைகள் : யானையின் மூளை அளவு பெரியது. சிறந்த நினைவாற்றல் உண்டு. யானைகளின் சமூக வாழ்விற்கும், பரந்த காட்டில் மேற்கொள்ளும் நீண்ட பயணத்திற்கும் இந்த நினைவாற்றல் மிகவும் உதவியாக இருக்கிறது. யானைகள் விரைவாக கற்று கொள்ள கூடிய ஆற்றல் உள்ளவை. கும்கி யானைகள், இதனால்தான் விரைவில் பழக்கப்படுத்தப்படுகின்றன.ஒரு யானை சராசரியாக ௬௦ முதல் ௬௫ ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு யானை ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ உணவு உட்கொள்ளும். எனவே, ஒரு நாளில் 3ல் இரண்டு பங்கு நேரத்தை சாப்பிடத்தான் பயன்படுத்தும். ஒரு நாளைக்கு 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் தேவை. அவற்றிற்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால், தண்ணீரை தனது உடம்பை குளிர்விக்கவும் பயன்படுத்துகிறது.
ஆரோக்கிய காடுகள் : ஒரு காடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அங்கு யானைகள் வாழ்வது மிகவும் அவசியம். காடு என்ற சுற்றுச்சூழலில் யானைகளின் பங்கு அவசியம். காட்டில் தாவரங்களை உண்டு (சுமார் 120 வகை தாவரங்களின்) விதைகளை பரப்புகின்றன. வெகுதுாரம் செல்வதால் விதைகள் பல கி.மீ., துாரம் வரை பரவும். காட்டில் பல்லுயிரின பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது. யானையின் எச்சத்தில் பல வகையான பூஞ்சைகள் வளர்கின்றன. யானைகள் பல கி.மீ., நடந்து செல்வதால், காட்டில் வழிப் பாதைகளை உருவாக்குகின்றன. இன்று நம் காட்டில் இருக்கும் பல வழிகள் யானைகளால் உருவாக்கப்பட்டவை. யானையின் 'லத்தி' (சாணம்) மக்கும் போது, அதை மக்கச் செய்யும் பூச்சிகள், பல்வேறு பறவை இனங்களுக்கு உணவாகின்றன. மான் போன்ற பிற தாவர உண்ணிகளுக்கு காட்டில் உணவு கிடைக்க யானைகள் வழி வகுக்கின்றன. யானையின் உருவம் மிகப் பெரியது. இவை நடந்து சென்று உணவு உட்கொள்ளும் பொழுது, அங்கு இடைவெளி கிடைக்கிறது. இது மற்ற விலங்குகளுக்கு பயனாகிறது.
வாழ்விடங்கள் : யானையின் தும்பிக்கைக்கு, பூமிக்கடியில் நீர் இருப்பதை எளிதில் கண்டுபிடிக்கும் தன்மை உண்டு. கோடை காலங்களில் தும்பிக்கையை வைத்து பூமிக்கடியில் இருக்கும் நீரினை அறிந்து, பின் அவ்விடத்தில் உள்ள மண்ணை அகற்றி யானைகள் நீர் அருந்தும். இந்த நீர் மற்ற விலங்குகளுக்கும் பயன்படும். ஓரிடத்தில் வாழும் யானைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் ஆரோக்கிய நிலையே, அவற்றின் வாழ்விடத்தின் தகுதியை காட்டும் அளவுகோல். யானைகளுக்கான வாழ்விடங்கள், மற்ற விலங்குகளுக்கும் வாழ்விடங்களாக அமைகின்றன. எனவே, சுற்றுப்புறச்சூழலின் ஆரோக்கிய தன்மையைக் காட்டும் 'அடையாளம் காட்டி' யானைகள். யானைகள் இல்லையெனில் அது காடு ஆகாது.எனவே, யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்து எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பல்லுயிரினப் பெருக்கத்திற்கு வழிகாண, உலக யானைகள் தினத்தில் உறுதியேற்போம்.
-து.வெங்கடேஷ்மாவட்ட வன அலுவலர்,திண்டுக்கல்.-------------94425- 27373

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  படிக்கும்போது மிகத் தெளிவாக அறிய முடிகிறது. யானைகள் வளர்ப்பு விலங்கு அல்ல காடுகளில், சுதந்திரமாக இருக்க வேண்டியவைகள். ஆனால் நாம் "மதம்" சார்ந்து சிந்திப்பதால் அவற்றை கோவில்களில் வளர்ப்பு விலங்காக்கி விட்டோம். ஒரு யானைக்கு சராசரியாக 150 லிருந்து 170 கிலோ தாவர உணவும் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. அப்படி கொடுக்க முடியாதபோது அவை நல்ல ஆரோக்கியமாக வளர முடியாது. அந்த அளவிற்கு நம்மாலும் தினமும் கொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. விளைவு எத்தனையோ வளர்ப்பு யானைகள் போதுமான உணவின்றி, தண்ணீரின்றி நோய்வாய்ப்பட்டுவிடுகின்றன.முந்தைய காலங்களில், கனமான பொருட்களைத் தூக்க,வெகு தூரம் கொண்டுசெல்ல, யானைகளின் வளர்ப்பு தேவையானதாக இருந்திருக்கலாம். இப்போது எதையும் செய்வதற்கு இயந்திரங்கள் வந்த பிறகு யானைகளை அதன் போக்கில் காடுகளில் விட்டு விடலாம். தேர்களுக்கு மாற சக்கரங்களுக்கு மாற்றாக இரும்பு சக்கரங்களும், வடம் கொண்டு இழுத்து வந்த தேர்கள் தற்போது டிராக்டர் கொண்டும் இழுக்கும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் கோவில்களில் இன்னும் யானைகளை பயன்படுத்தி கோவில் சடங்குகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். யானைகளின் தேவை இப்போது எங்கும் தேவையில்லை. அவைகள் காடுகளில் மட்டுமே வாழ்வதற்க்கானவை. "யானையைக் கட்டி தீனி போடுவது போல" என்ற பழமொழி சும்மா சொன்னது அல்ல. புத்துணர்ச்சி முகாம் என்பதாக ஒரு மாதம் மட்டும் மனிதர்களுக்கான உணவுகளையும் கொடுப்பதால்... விலங்குகள் மீது... யானை மீதான அக்கறை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவு.

 • Kannan - Hyderabad,இந்தியா

  மிகவும் பயனுள்ள செய்தி. நம்மால் முடிந்தவரை வனத்தை மாசுபடுத்தாமல், ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்தாலே யானைகளை பாதுகாத்தவர்கள் ஆவோம். வன அலுவலர் திரு. வெங்கடேஷ் அவர்களின் செய்திக்கு நன்றி.

 • navin - trichy,இந்தியா

  யானை குறித்து கேள்விப்படாத நிறைய விஷயங்கள் அடங்கிய பயனுள்ள கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இக்கட்டுரை யானைகளை பற்றி மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. யானை உட்பட எல்லா காட்டு விலங்குகளும் நம்மால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால் நாம் இன்னும் அதை உணரவில்லை. விரைவில் திருந்தவேண்டும். இல்லையேல் அதற்காக வருந்தவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement