Advertisement

யார் மக்கள்? யார் மாக்கள்?

பிறவியில் உயர்ந்தது மக்கள் பிறவி. அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பார் அவ்வையார். மக்கள் என்போர் யார்? அவர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு நலன் யாவை? மக்கள் என்ற சொல் யாரை குறிக்கிறது.
'மக்கள் தாமே ஆறறிவுயிரே' என்பார் தொல்காப்பியர். ஓரறிவு உயிர் என்பது உடம்பினால் அறிவது (மரம்). ஈரறிவு உயிர் என்பது உடம்பிலானும் வாயினாலும் அறியப்படுவது (சங்கு, நத்தை). மூவறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும் அறிவது (எறும்பு). நாலறிவு உயிரானது உடம்பினாலும்,வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும் அறிவது (நண்டு, தும்பி). ஐந்தறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது (நாலு கால் விலங்குகள்). ஆறறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது (மக்கள்). பண்புடைய மக்கள் மக்களுக்கும், மாக்களுக்கும் என்ன வேறுபாடு என்பதை வள்ளுவர் குறளில் அங்கங்கே வேறுபடுத்தி காட்டுகிறார். வாழ்க்கை துணை நலம் என்னும் அதிகாரத்தில்,
'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு'என்ற குறளில் 'நற்குணம் உடைய மனைவியின் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாகும். நல்ல மக்களை பெறுதலே அந்த இல்லறத்திற்கு சிறந்த அணிகலனாகும்' என்கிறார். மக்கட்பேறு என்ற அதிகாரத்தில், 'நாம் பெறக்கூடிய பேறுகளில் நல்லறிவுடைய மக்களை பெறுவதை காட்டிலும், பண்புடைய மக்களை பெற்றால், ஏழு பிறப்புகளிலும் துன்பம் இல்லை' என்கிறார்.தாம் பெற்ற மக்களின் சிறிய கைகளால் பிசையப்பட்ட உணவானது பெற்றோருக்கு அமுதத்தை விட இனிமை உடையதென்றும், மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்றும், மக்கள் என்ற சொல்லை குழந்தை என்ற பொருளில் கையாள்கிறார். அவ்வாறு குழந்தை என்ற பொருளில் குறித்தாலும் எல்லா குழந்தைகளையும் குறித்து விடாமலிருக்க நன்மக்கட் பேறு, அறிவறிந்த மக்கட்பேறு, பண்புடைய மக்கள் என நன்மை, அறிவு, பண்பு ஆகிய குணங்களை அடைமொழியாக பயன்படுத்தியுள்ளார்.
அறிவறிந்த மக்கள் 'அறிவறிந்த மக்கள்' என்று கூறும் வள்ளுவர் எத்தகைய அறிவினை பெற்றிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக்குகிறார். அறிவு அழிவிலிருந்து காக்கும் ஆயுதம். 'நன்றின்பால் செலுத்துவது அறிவு. மெய்ப்பொருளை காண்பது அறிவு' என, அறிவின் சிறப்பினை கூறி, 'இத்தகைய அறிவினை பெற்றவர்களே மக்கள்' என கூறுகிறார். 'பண்பு என்பது எளிமை, அன்பு, நற்குணங்கள், இன்னா செய்யாமை ஆகும்' என, பண்பிற்கு விளக்கம் தந்து, 'இப்பண்பினை பெற்றவர்களே மக்கள் என்ற சொல்லுக்கு உரியவர்' என கூறுகிறார். மனித நேய பண்பு
'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண் பில்லா தவர்'என்ற குறள் வழி மக்கட் பண்பினை பெறாமல் அரம் போன்ற கூர்மையான அறிவினைப் பெற்றவராக இருந்தாலும், அவரை மக்கள் என்ற சொல்லுக்குள் அடக்காமல் ஓரறிவு உடைய மரமாகவே காட்டுகிறார். எனவே, 'எத்தகைய அறிவினை பெற்றவராக இருந்தாலும், மனிதநேய பண்பு இல்லையெனில் அவர் மக்களாக மாட்டார்' என்கிறார்.
உள்ளமும் ஊக்கமும்
'உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு'என்ற குறளில் உறுப்புகளால் ஒத்திருப்பவர் அனைவரும் மக்களாக மதிக்கப்படுவதில்லை. 'உருவத்தால் மட்டுமே ஒருவரை மனிதராக ஏற்று கொள்ள கூடாது. உருவம் ஒன்றாக இருந்தாலும் உள்ளத்தை கொண்டே முடிவு செய்ய வேண்டும்' என்கிறார் வள்ளுவர்.
'உரமொருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார்மரமக்கள் ஆதல் வேறு'
என்ற குறளில், 'மக்கள் என்றாலே மன ஊக்கம் இருக்க வேண்டும். மனதில் எண்ணுவதெல்லாம் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும்' என காட்டி, 'இவைகள் இல்லாதவர் மக்கள் என ஆகமாட்டார்' என புறந்தள்ளி விடுகிறார். பகுத்தறிவு எந்த கருத்தை யார் யார் சொன்னாலும், அவற்றுள் உண்மையான கருத்தை காண வல்ல அறிவை, அரிய கருத்துக்களின் நுட்பத்தினை அறிந்து கொள்ள செய்யும் அறிவை, எது செய்தால் எப்படியாகும் என்பதை முன் கூட்டியே அறியும் அறிவை, தரக்கூடிய நல்ல நுால்களை கற்ற பகுத்தறிவு உடையவரையே, 'மக்கள்' என்று வள்ளுவர் பெருமைப்படுத்துகிறார்.
'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநுால்கற்றாரோ டேனை யவர்'
இக்குறள் வழி, 'நல்லறிவு பெற்றவர்கள்தான் மக்கள் என்ற சொல்லுக்கு உரியவர்' என்று வலியுறுத்துகிறார்.
மக்களுள் பதர் : 'பலருக்கு சினம் உண்டாகும்படியும், நன்மை தராததாகவும், வெற்று சொற்களை விரிவாகவும், பண்பற்றதாகவும், திரும்ப, திரும்ப பயனில்லாத சொற்களை சொல்பவனை மகன் என்று சொல்லாதே. மக்கள் என்ற சொல்லில் அடக்காதே. அவனை 'மக்களுள் பதர்' என்று சொல்' என்கிறார்.
'பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி எனல்'
என்ற குறள் வழி, பயனுள்ள சொற்களை சொல்பவனையே, 'மக்கள்' என்ற வரம்புக்குள் வைக்கிறார் வள்ளுவர். 'நன்மை, தீமை பற்றி கவலைப்படாதவராகவும், விரும்பியதை விரும்பியவாறு செய்பவராகவும், தாம் மேம்பட்டவர் என்று இறுமாந்து திரிபவராகவும், ரகசியங்களை தாமே வலியச்சென்று சொல்பவராகவும், பொறாமையால் பிறர் மீது வீணான குற்றங்கள் சுமத்தி திரிபவராகவும் உள்ள கயவர்கள், மக்களை போன்ற உருவமுடையவராக இருந்தாலும், அவர்களை மக்களாக ஏற்று கொள்ள கூடாது' என்கிறார் வள்ளுவர்.
'மக்களே போல்பவர் கயவர் அவரன்னஒப்பார் யாம்கண்ட தில்'
என்ற குறளில், 'கயமை குணம் உடையவரை அடையாளம் கண்டு அவர்களை மக்கள் என்ற நிலையிலிருந்து நீக்குங்கள்' என்கிறார்.
நன்னெறி : 'அறச்செயல் எதுவென்றால் எந்த உயிரையும், கொல்லாத தன்மை, கொலை செய்தல் என்பது எல்லா தீவினைகளையும் செய்வதற்கு நிகரானது. நன்னெறி என்று சொல்லப்படுவது எந்த உயிரையும் கொல்லாமல் பாதுகாப்பது. பிற உயிர்களை கொல்பவரை மக்கள் என்று சொல்லாதீர்கள். மாக்கள் என்று இழித்தும், பழித்தும் கூறுங்கள்' என்கிறார் வள்ளுவர்.
'கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவார் அகத்து'என்ற குறளில், 'மாக்கள்' என்ற சொல்லை பயன்படுத்துகிறார். மக்களாக இருந்தாலும் மக்கட் பண்பில்லாத இவர்களை மாக்கள் என்று சொல்லி, கீழ்மையானவர்கள் என்று அடையாளம் காட்டுகிறார்.
வள்ளுவம் காட்டும் வேறுபாடு
நற்பண்பு, நற்செயல், நல்லறிவு உடையவர்களே 'மக்கள்' என்ற சொல்லுக்கு உரியவராகின்றனர். நல்லன அல்லாதவற்றை செய்பவர்கள் 'மாக்கள்' என்ற அடைமொழிக்குள் அடக்கப்படுகின்றனர். இவ்வாறு மக்களையும், மாக்களையும் வள்ளுவர் வேறுபடுத்தி காட்டுகின்றார். அவர் வழி நின்று நாம் அனைவரும் மக்களாக வாழ்வோம்.
-எம்.பாலசுப்பிரமணியன்,செயலர், வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவை, காரைக்குடி. 94866 71830

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Arunkumar K - kasaragod,இந்தியா

    யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அனல் தற்பொழுது தமிழகத்தில் ஜாதியாம் படித்தவர்கள் அரசில் அதிகாரம் உள்ளவர்களிடம் அதிகம் உள்ளதால் மனிதாபிமானம் மக்கிப்போய் தமிழன் சக தமிழனை விலங்குகளை விட குறைவாக என்னும் நிலை உள்ளது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement