Advertisement

இசையில் இறைவன்!

இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த மானிடர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் கூட இசைக்கு பணிவதை காண்கிறோம். வேய்ங்குழல் இசைக்கு பசுக்கூட்டமும், மகுடியின் இசைக்கு நாகமும் மயங்குவதை பார்க்கிறோம். சர்க்கஸ் கூடாரங்களில் தாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு யானை, குதிரை, குரங்கு போன்ற விலங்குகளும் ஆடுவதை பார்க்கிறோம். எனவே இசை என்பது அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து இழுக்கக்கூடிய காந்த சக்தியாக திகழ்கிறது.
பாரம்பரிய இசை : நமது நாட்டில் மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரங்களுக்கு ஏற்றவாறு இசைக் கருவிகளை இசைத்துப்பாடுகிறார்கள். ஆனால் இந்த இசைகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருப்பது நமது நாட்டின் பாரம்பரிய இசையான கர்நாடக சங்கீதம். எந்த பாடலைப் பாடினாலும் அதற்கு மூல காரணமாக விளங்குகிறது. ராகம், தாளம், சுருதி, குரல்வளம், இவை நான்கும் சரிவர அமையாமல் இசைக்கப்படும் பாடலை எவருமே ரசிக்க முடியாது. இசையை ரசிப்பதற்கு இசை ஞானம் தேவையில்லை. நல்ல பாடலைக் கேட்கும் போது இசை ஞானமே இல்லாத பாமர மனிதன் கூடத் தலையை ஆட்டித் தாளம் போட்டு ரசிப்பதை காண்கிறோம். ஆனால் இவருடைய ரசிப்பு ஆழமற்ற, தற்காலிக ரசிப்பாகும். ஒருவர் ஒரு பாடலை ஆழ்ந்து ஞானத்துடன் ரசிப்பதற்கும் பயணம் செய்கின்ற போது, பேருந்தில் ஒலிக்கின்ற பாடலை கேட்டு விட்டும் படியிறங்கிச் செல்வதற்கும் வேறுபாடு உண்டல்லவா.
இசையில் தகவல்கள் : இப்படிப்பட்ட இசையானது மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் பங்கு பெறுகிறது. அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட இசையை ரசிக்கிறது. குழந்தையை தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் போது தாய் தாலாட்டுப் பாடல் பாடுகிறார். அந்தப் பாடலைக் கேட்டு குழந்தை அழுவதை நிறுத்தி விட்டு அயர்ந்து உறங்குகிறது. அந்த தாய் கர்நாடக இசையை முறைப்படி பயின்று வந்தா பாடுகிறாள்? அவள் பாடிய அந்த தாலாட்டுப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது என்பது கூடத் தெரியாது. இந்த இடத்திலிருந்து தான் மானிடப் பிறவிக்கும் இசைக்கும் தொடர்பு ஏற்படுகிறது. தொட்டில் குழந்தையை தாலாட்டும் போது பாடுவது நீலாம்பரி என்னும் ராகத்திலிருந்து தொடங்குகிறது. ஒருவன் வளர்ந்து வாலிப வயதை அடைந்து, திருமணநாளில் மங்கல வாழ்த்து என்பது ஆனந்த பைரவி என்னும் ராகத்தில் பாடப்படுகிறது. முந்தைய அரசர்கள், போர்க்காலங்களில் போர்க்களத்திற்கு செல்லும் போது, கம்பீர நாட்டை என்னும் ராகம் இசைக்கப்படுகிறது. மனித வாழ்வின் இறுதிநாளில் அவலச்சுவையாக முகாரி என்னும் ராகத்தில் ஒப்பாரிப்பாடல் இடம்பெறுகிறது. இவ்வாறு பாடப்பெறும் பாடல்களுக்கான அடிப்படை கர்நாடக இசைதான். இந்த இசை அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து மயங்கச் செய்வதால் தான், நமது பாரம்பரியமான இசை வெளிநாடுகளிலும் பெயர் பெறுகிறது. அதனால் தான் இசையால் மயங்காத இதயம் எது? என்றும் கல்லும் இசையால் கனியாகும், முள்ளும் இசையால் மலராகும் என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்.
இசை ஞானிகள் : கர்நாடக இசைக்கு உயிரூட்டி வளர்த்த சங்கீத மும்மூர்த்திகள், தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகள். இந்த இசை ஞானிகள், மூன்று மேதைகளும் தோன்றியிராவிட்டால் நமது பாரம்பரிய இசையான கர்நாடக இசையும் இராது.எந்தெந்த கடவுள்களை என்னென்ன ராகங்களில் பாடித்துதிக்க வேண்டும் என்பது சங்கீத மும்மூர்த்திகளால் வகுக்கப்பட்ட முறை. முதற்பொருள் என்றும் மூலப்பொருள் என்றும் நாம் அனைவரும் போற்றி வணங்குகின்ற விநாயகரை, நாட்டைக்குறிஞ்சி என்னும் ராகத்தில் பாடித் துதிக்க வேண்டும். கர்நாடக சங்கீத மேடைகளில் சங்கீத வித்வான்கள் முதலில் இந்த நாட்டை என்னும் ராகத்தைபாடிய பின் தான், இசைக் கச்சேரியை தொடங்குவார்கள்.அடுத்தாக தமிழ்கடவுள் முருகபெருமானுக்கு உகந்த ஷண்முகப்பிரியா ராகம். முருகனாகிய சண்முகனுக்கு பிரியமான ராகம் என்பதால் சண்முக பிரியா என்ற பெயரானது. முத்தொழில்களுக்கும் முதல்வனான சிவபெருமானை துதித்து வணங்க ஏற்ற ராகம் காம்போதி என்னும் ராகம். இலங்கை வேந்தன் ராவணேஸ்வரன் சிறந்த சிவபக்தன். அது மட்டுமல்லாது வீணை மீட்டுவதில் அவனுக்கு நிகரானவர் எவரும் இல்லை. வீணை இசையின் வல்லமையை எடுத்துக்காட்டும் விதமாக, தனது நாட்டுக் கொடியில் வீணையின் சின்னத்தை பொறித்தான். இவன் தனது வீணையின் இசையில் காம்போதி ராகத்தை இசைத்ததால், சிவபெருமான் இவனுடைய இசையின் லயிப்பில் இவனுக்கு காட்சி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இசையும் பக்தியும் : ஒரு முறை ராவணன் சிவபெருமானை நேரில் வரவழைக்க, தனது வீணையில் காம்போதி ராகத்தை இசைக்கத் துவங்கினான். இவனது இசையை கேட்டு ஈஸ்வரனும் உமையவளும் மெய்மறந்து அமர்ந்து விட்டார்கள். வெகுநேரமாகியும் இறைவன் காட்சி கொடுக்காதததால் இலங்கேஸ்வரனும் வீணை இசைப்பதை நிறுத்தவில்லை. காலையில் வீணை இசைக்கத் தொடங்கியது மாலை வரையிலும் தொடர்கிறது. ராவணனுடைய விழிகளிலும், விரல்களிலும் குருதி கொப்பளிக்கிறது. எனினும் இசையை நிறுத்தவில்லை. வீணையில் உள்ள கம்பிகள் அறுந்து ஒவ்வொன்றாக சுருள்கின்றன. கடைசிக் கம்பியும் அறுந்துவிட்டது. அனைத்து கம்பிகளும் அறுந்து சுருண்ட போதிலும், ஆன்மிக உள்ளம் கொண்ட வேந்தன், சிவனை கண்ணால் கண்டு தரிசிக்காமல் விடமாட்டேன் என்ற வைராக்கியத்தினால், தனது வயிற்றை கிழித்து குடலை வெளியே இழுத்து, தனது இடதுகை விரல்களால் வரிசையாக கோர்த்து இழுத்துப்பிடித்து அதில் தொடர்ந்து காம்போதி ராகத்தை இசைத்தான். அவனுடைய தீவிரமான பக்தியை கண்டு சிவபெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
பாட்டும் ராகமும் : ஈஸ்வரனைப்பாடித் துதிக்க காம்போதி ராகம் மட்டுமல்லாது, கரகரப்பிரியா, சங்கராபரணம், சகானா ஆகிய ராகங்களில் பாடலாம். உமா மகேஸ்வரியாக பார்வதி தேவிக்கு உகந்த ராகம், பைரவி, ஆனந்த பைரவி, சிந்துபைரவி, அடானா, கல்யாணி ஆகிய ராகங்களில் பாடலாம். ஸ்ரீமந்நாரணனை பூபாள ராகத்தில் பாடித் துதி செய்து மத்தியமாவதி ராகத்தில் நிறைவு செய்ய வேண்டும். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை தோடி, தன்யாசி, ரஞ்சனி ஆகிய ராகங்களில் பாடி துதி செய்ய வேண்டும்.
தெய்வீக இசை : தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விழாக்களில் கிராமியக் கலையாகிய இசை நாடகங்கள் நடத்தப்படுகின்றன. வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா போன்ற நாடகங்கள் முக்கியமானவை. இந்த இசை நாடகங்களில் எந்தெந்த காட்சிகளில் என்னென்ன ராகங்களில் பாட வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. வள்ளி திருமணம் நாடகத்தில் வேலன் தோன்றுகின்ற கழுகாசலக் காட்சியில் ஆரபி அல்லது தேவகாந்தாரி ராகத்தில் பாடலைப் பாட வேண்டும். நாடகத்தின் இறுதிக் காட்சியில் வள்ளி நாயகியிடம் மானின் அடையாளம் கூறுகின்ற போது பைரவி ராகத்தில் பாடலை தொடங்கி காப்பி ராகத்தில் நிறைவு செய்ய வேண்டும். இதே போன்று அரிச்சந்திரா நாடகத்தில் மயான காண்டம் மட்டுமே நடத்தப்படுமானால் அரிச்சந்திரன் முகாரி ராகத்தில் பாடி வரவேண்டும்.இசைக்கும் இறைவனுக்குமான தொடர்பை தெய்வங்களின் கைகளில் உள்ள இசைக்கருவிகளை கொண்டு அறியலாம். சிவபெருமான் கையில் உடுக்கையும், கண்ணனின் கையில் புல்லாங்குழலும், சரஸ்வதியின் கையில் வீணையும், நாரதரின் கையில் தம்புராவும், சிவகணங்களின் கைகளில் சங்கும் இருப்பதை காண்கிறோம். இப்படிப்பட்ட இசை கருவிகளை கொண்டே இறைவனும் இசையும் பிரிக்க முடியாத ஒன்று என்பதை அறியலாம்.
- தி.அனந்தராமன்
இசைநாடக ஆசிரியர்மானாமதுரை. 99409 69616.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

 • nagarajan - Triplicane,இந்தியா

  தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதான் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருகுறட்பாவிற்கு ஒரு வரலாற்று சம்பவம் தேடினேன். இராவணன் வீணை இசைத்து சிவபெருமான் தேவியுடன் திருக் காட்சி அளித்தனர். அத்துடன் மேலும் பல உபயோகமான தகவல் தெரிந்து கொண்டேன். படைப்பாளருக்கு மிக்க நன்றி.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  அருமையான கட்டுரை. கர்னாடக இசையில் எந்த தெய்வத்துக்கு என்ன ராகம் என்பது எனக்கு புதிய தகவல்.நன்றி. மக்களின் மனதை மயக்கும் ஒருமுகப்படுத்த வைக்கும் இசையை கற்றவர்கள் உலகம் முழுக்க அங்கீகாரம் பெறுகின்றனர். அணைத்து தெய்வங்களும் இசைக்கருவி வைத்திருப்பதாக நம் முன்னோர்கள் சித்தரித்திருப்பதே இசையின் தெய்வீக தன்மையை உணர்த்துகிறது. உலக மக்களை இந்திய யோகா கலையால் இணைக்கும் முயற்சி செய்வது போல அறிவுப்பூர்வமான இந்திய இசையாலும் இணைக்கும் முயற்சிகளை செய்யலாம்.

 • சுவாதி - kumbakonam,இந்தியா

  ராகத்தின் பெயர் தவறாக உள்ளது. ஹரஹர பிரியா என்று ராகம் இல்லை கரகரப்ரியா ராகம்தான் இருக்கிறது.

 • abu lukmaan - trichy,இந்தியா

  வீணை, கிடார் போன்ற நரம்பு மூலம் இசைக்கும் கருவிகளில் உள்ள அந்த அந்த நரம்புகள் ஆட்டு குடலில் இருந்தும், மாட்டு குடலில் இருந்தும் தயாரிக்க படுகிறது. இறைவன் வேறு .தெய்வங்கள் வேறு. தெய்வங்களும் இறைவனின் படைப்புகளே .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement