Advertisement

மன அமைதிக்கு என்ன வழி

ஒவ்வொரு தனிமனிதருக்கும் பாகுபாடின்றி ஆன்மிகத்தின் உட்பொருளையும், அதனை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தவர். அனைவரும் ஆன்ம மலர்ச்சியும் ஆனந்தமும் பெற துறவுடன், தளராத தொண்டும் ஆற்றிய, இறையனுபூதி பெற்ற மாமனிதர் சுவாமி சின்மயானந்தர். எழுச்சி மிக்க சொற்பொழிவுகளால் பகவத்கீதையை உலகெங்கும் அறியச் செய்தபெருமையும் இவரைச் சாரும்.

கல்வியும், துறவும் : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1916 மே 8ல் பிறந்தார். பாலகிருஷ்ணன் எனப்பெயரிடப்பட்டார். திருச்சூரில் பட்டப்படிப்பும், லக்னோ பல்கலையில் ஆங்கிலம் மற்றும் சட்டத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அப்பொழுது நடந்த இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு சிறையிலடைக்கப்பட்டு, உடல்நலம் குன்றிய காரணத்தால் காவலர்களால் சாலையோரம் துாக்கிவீசப்பட்டார். உயிர் பிழைத்தவர் வாழ்வின் உயர்பயன் உணர்ந்தார். சட்டம் பயின்றவராக இருந்தாலும் எழுத வேண்டுமென்ற தணியாத ஆர்வத்தினால் “தி நேஷனல் ஹெரால்டு” பத்திரிகையில் பத்திரிகையாளராக பணியினை துவங்கினார். கூர்மையான அறிவும், தேடலும், சந்தேகமும், நாத்திக சிந்தனைகளில் நாட்டமும் கொண்டிருந்த அவர், தேசத்திற்கு பயனின்றி, பொய்வேடமிட்டு வாழும் துறவிகளை தன் கட்டுரைகள் மூலம் உலகிற்கு தோலுரித்து காட்ட எண்ணினார். இமயத்திலுள்ள ரிஷிகேசம் சென்றார். அங்கு தன் துாய்மையினால் துறவிற்கே பெருமை சேர்த்து, அனைவரையும் அன்பினால் அரவணைத்து வாழும் சுவாமி சிவானந்தரைக் கண்டார். அவரால் ஈர்க்கப்பட்டு அகமாற்றம் கொண்டு, துறவறம் பூண்டார். பின் உத்திரகாசி சென்று சுவாமி தபோவனம் என்ற மகானிடத்தில் வேதாந்தக் கல்வி பெற்று அவரது சீடரானார். தான் கண்டுணர்ந்த வேதாந்த உண்மைகள் இமயத்தின் குகைகளிலேயே புதைந்து கிடப்பதால் எந்தப்பயனும் இல்லை. ஒட்டுமொத்த மனித குலமும் இதன் பயனைப்பெற வேண்டுமென்று எண்ணி, தனியொருமனிதராக தன் புனிதப் பயணத்தைத் துவங்கி ஆன்மிக போதனைகளை பரப்பி வந்தார். பின்னாளில் அதுவே மாபெரும் சின்மயா இயக்கமாக உருவெடுத்தது.

குழந்தைகளே எதிர்காலம் : “நமது குழந்தைகளே நமது எதிர்காலம்” என்றுணர்ந்தவர் சுவாமிஜி. நமது நாகரிகக் கல்வி, குழந்தைகளை அறிவுஉடையவர்களாக உருவாக்குகிறது. அதுபயன்தரும் கல்வி என்பதில் ஐயமில்லை. ஆனால் அது நம் குழந்தைகளுக்குரிய பாதுகாப்பு கல்வி அல்ல. பயன்தரும் கல்வி வேறு. பாதுகாப்பளிக்கும் கல்வி வேறு. ஒன்று மதிக்கத்தக்கது. மற்றொன்று வணங்குதற்குரியது. “குழந்தைகள் ஏட்டுக்கல்வியை மட்டுமே நிரப்பும் வெற்றுப் பாத்திரங்கள் அல்ல , அவர்கள் சுடர் விட்டு ஒளிரும் பொருட்டு ஏற்றப்பட வேண்டிய தீபங்கள்” எனக் கருதினார். அதற்கான கல்விச் சாலைகளையும், ஆன்மிக விஷயங்களை போதிக்கும் மையங்களையும் உருவாக்கினார்.
பெற்றோர்கள் ஒருமுறை சுவாமிஜியிடம் “நம் குழந்தைகளுக்கு பண்புகளை எப்பொழுது போதிக்க வேண்டும்” எனக் கேட்டனர். சுவாமிஜி “குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே” என வேடிக்கையாகக் கூறினார். கேட்டவர்கள் விழித்தனர். சுவாமி சிரித்துக் கொண்டே “முதலில் அப்பண்புகளின் இருப்பிடமாக நீங்கள் திகழ வேண்டும். அவர்கள் நாம் கூறுவதை ஒருபொழுதும் கேட்பதில்லை. நம் நடத்தையையே பின்பற்றுகின்றார்கள்” என்றார்.
பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னோடியும், முதல் ஆசானும் ஆவர். ஆகவே பெற்றோர்கள், நம் பாரம்பரியத்தை உணரும் விதமாக, பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தினார்.

இளைஞர் ஆற்றல் : ஒருநாடு வலுப்பெற வேண்டுமெனில், இளையசமுதாயத்தின் சிந்தனைகளை சீர்படுத்த வேண்டும். அவர்களிடமுள்ள அபரித ஆற்றலை நெறிப்படுத்த வேண்டும்.
“இளைஞர்கள் பயனற்றவர்கள் அல்ல. சரியாகப் பயன்படுத்தப்படாதவர்கள். அவர்கள் கவனமற்றவர்கள் அல்ல. சரியாகக் கவனிக்கப்படாதவர்கள்” - இதுவே சுவாமிஜியின் திடமான நம்பிக்கை. அவர்களுடைய வேகத்தை குறைப்பது விவேகமல்ல. அவ்வேகத்தை நல்ல திசையினில் செலுத்த நாம் உதவ வேண்டும். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்காக அதிக நேரம் செலவிட்டார். அவர்களில் ஒருவரானார்.

இந்தியர் விழிப்பு : “சின்மயா யுவ கேந்திரா” துவங்கியது. கம்பன்தரும் காட்சி, பாரதி எனப் பல தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களை அரங்கேற்றினர். “இந்தியர் விழிப்பே இந்தியாவின் விழிப்பு” என்னும் தேச பெருமை போற்றும் புத்தகத்தை, மூன்று கோடி மாணவர்களுக்கு வினியோகம்
செய்தனர். பொருள் நாட்டம் உடையோரைக் காட்டிலும், இறைநாட்டம் மிக்க
பெண்களே இல்லறத்தின் கண்கள். “இல்லறப் பெண்கள் ஆன்மிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தால் குடும்பச் சூழல் வளமடையும். அக்குடும்பம் நல் உபதேசங்களைக் கேட்க எவரையும் நாடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மாறினால் குடும்பச் சூழல் மாறும். தாயும், பாதை காட்டும் விழியும், குருவும் நீங்களே” என உரையாற்றினார்.வீட்டுக் கதைகளிலே காலத்தை வீணடிக்காது வேதாந்தத் தத்துவங்களை பெண்களும் ஆர்வத்துடன் படித்து, அதன் உண்மைகளை அறிய வேண்டுமென விரும்பினார். அதற்காக உருவாக்கப்பட்ட “சின்மய தேவிகுழுக்கள்” ஆன்மிக மையங்களாக புதியதோர் உலகம் படைத்தது.

உபதேசம் : மனிதர்களுடைய ஆசைகளுக்கும், செயல்களுக்கும் காரணமாக இருப்பது, மனிதனின் ஆழ் மனதில் புதைந்திருக்கும் சிந்தனைப் பதிவுகளே. ஏற்கனவே ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்ட விஷயங்கள் மீண்டும் ஒலிப்பதுபோல, எண்ணப்பதிவுகளே நல்ல, தீயசெயல்களாகவும், நம்பிக்கையாகவும் மாறுகின்றன. எதை நாம் தீவிரமாகச் சிந்திக்கிறோமோ, விடாது செய்து பழகுகிறோமோ அதுவே ஆழ்மனப்பதிவுகளாக மாறுகிறது.
ஆகவே நல்லன சிந்திக்கவும், செய்யவும் மனதைப் பழக்க வேண்டும். அவை சுயநலமற்றிருந்தால் நம்மனதைத் துாய்மையாக்கும். துாயமனதில் தேவையற்ற பழைய பதிவுகள் நீங்கும். மனம் அமைதி அடையும். அமைதியான மனமே இறைநிலை அனுபவத்தைப்பெறும். அகந்தை அழியும். அந்நிலையே மனிதப் பிறவியின் நோக்கம் முற்றுப் பெறும் உயர் நிலை.
தவம் சுவாமிஜியின் வாழ்க்கை வெறும் பயணமல்ல; புனித தவம். அது
அதிசயங்களின் தொகுப்பல்ல; அடிமுடி காண இயலாத உண்மையின் ஆழ்நாதம். மெய்வருத்தம் பாராது 78 ஆண்டுகள் வரை தேசப்பற்றுடன், சமுதாய மேம்பாட்டிற்காக அவர் செய்த பணிகள் மகத்தானவை. தன்னைப் போலவே பலரை உருவாக்கிய அவர் ஓர் அழிவற்ற விதை. 1993ல் இதே நாளில் இவ்வுடல் விட்டு அகன்றார். அவருடைய நுாற்றாண்டினை முன்னிட்டு இந்திய அரசு அவரது உருவச்சின்னம் பொறித்த பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது. மகான்களின் அடிச்சுவடுகளை மனம் பற்றிநடப்போம்! இன்புற்று வாழ்வோம்!

- சுவாமி சிவயோகானந்தா
சின்மயாமிஷன், மதுரை

94431 94012

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • ganapati sb - coimbatore,இந்தியா

    சின்மயானந்த அவர்களின் சொற்பொழிவுகள் அருமையானவை. அவர்களின் mission இன்றும் பல பள்ளிகளில் சென்று பகவத் கீதை ஒப்புவிக்கும் போட்டிகள் நடத்தி பல குழந்தைகளை நன்னெறி பற்றி பயில ஊக்குவிக்கின்றனர். தொடரட்டும் அவர்களின் சேவை.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    நல்ல பதிவு. என் பிள்ளை சென்னையில் உள்ள சின்மயாவில் படித்தான் ( +1, +2). நல்ல அறிவுரைகள் வழங்கினார்கள். நன்கொடை கிடையாது, சரியான ஆண்டு கட்டணம். வாழ்க இவர் தொண்டு.

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    பதிவிற்கு நன்றி சுவாமி சிவயோகானந்தா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement