Advertisement

பருவமழை அறிவோம்!

“குடை எடுத்துட்டு போங்க..”“ என்ன புதுசா..?”“இல்லீங்க… மழை வரும்ன்னு சொன்னாங்க”“இப்படி தான் புயல் மழைன்னு சொல்லுவாங்க... அப்புறம் வராது..””பருவ மழைன்னு சொன்னாங்க... அதான்..” “அதான் டிசம்பரில் பருவ மழை நல்லா பெய்து தீர்த்துடுச்சே இப்ப என்ன பருவம்.. மழைன்னு”இது எல்லா வீடுகளிலும் நடைபெறும் வழக்கமான உரையாடலாக இருக்கிறது.பொதுவாக மழை சார்ந்த அறிவு குறைந்து வருகிறது. இயற்கை சார்ந்த பற்றும் அருகி வருகிறது. மழை என்பது வளம் என்பதை மறந்து வாழ்கிறோம்.ஆறு, ஏரி, குளம், கண்மாய் இவற்றின் நீர் ஆவியாகி மேகமாக மாறி குளிர்ந்து மழையை தருகிறது என்ற அடிப்படை அறிவு தான் மழைக்கான புரிதலாக இருக்கிறது.நீர் இல்லையேல் உலக வாழ்க்கை நடைபெறாது என்பதை 'நீர் இன்றி அமையாது உலகு' என்ற குறள் மூலம் விளக்குகிறார் வள்ளுவர்.
நீருக்கு ஆதாரமாக இருப்பது மழை. : “பசும்புல் தலைக்காண்பது அரிது” என்று மற்றொரு குறளில் மழை பெய்யாவிட்டால் பசும் புல்லின் தலையையும் காண முடியாது என எச்சரிக்கை விடுக்கிறார் வள்ளுவர். சாதாரண புல் உயிர் வளரக்கூட மழை தேவை. ஆகவே தான் மழையை உயிர் வளம் என்கின்றோம்.
மழையை நம்பி... : தமிழக விவசாயமும், அதன் பொருளாதாரமும், மழையை நம்பி உள்ளது. மழையை தேக்கி வைத்தே மக்களின் குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. தமிழக விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமான மழையை, தென்மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப்பருவ மழையினால் நாம் பெறுகிறோம். தென்மேற்குப்பருவ மழை ஜூன் முதல் செப்டம்பர் வரையில் சராசரியாக 332 மி.மீ பொழிகிறது. வடகிழக்குப்பருவ மழை அக்டோபர் முதல் செப்டம்பர் வரையில் சராசரியாக 459 மி.மீ பொழிகிறது.
மனித தவறுகள் : சில நேரங்களில் பருவமழை இயல்பை விட கூடுதலாகவும் குறைவாகவும் பெய்யக்கூடும். சென்ற ஆண்டு சென்னையில் இயல்பை விட வட கிழக்குப் பருவ மழை 116 சதவீதம் (1608 மி.மீ.,) கூடுதலாக பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட அழிவுக்கு மழையை பழிப்பதை விட்டு மனிதன் செய்துள்ள தவறுகளை புரிந்து கொள்ளுதல் அவசியம். பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர், கிராமங்கள் தோறும் ஊரணிகளையும், கண்மாய்களையும், மலை ஒட்டிய நிலப்பரப்பில் ஏரிகளையும் உருவாக்கி, பராமரித்து, மழையை சேமித்து வைக்கும் இடங்களாக மாற்றினர். இன்று இந்நீர் நிலைகளை முறையாக பராமரிக்கவும், கரைகளை பலப்படுத்தவும், தவறியதன் விளைவு தான் மழையை தேக்கி வைக்க இயலவில்லை. பெருவெள்ளத்தை பேரிடர் எனவும் அறிவிக்க பழகிக்கொண்டோம்.அன்று நம் முன்னோர், ஊரணிகளுக்கும் கண்மாய்களுக்கும் அருகில் கோவில்களையும், நிலங்களையும் உருவாக்கி இருந்தார்கள். அக்கோவில்கள் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மட்டும் போற்றவில்லை. அதையும் தாண்டி ஊரணிகளையும் கண்மாய்களையும் பாதுகாக்க, பராமரிக்க உதவின. இந்நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதையும் அசுத்தங்களால் நிரப்புவதையும் கண்காணித்தனர்; கண்டித்தனர்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் : நீர்நிலைகளில் மீன்களை வளர செய்து ஏலத்திற்கோ, குத்தகைக்கோ விட்டு பராமரித்தார்கள். வருமானத்தையும் பெருக்கி கொண்டார்கள். அன்று கரையோரத்தில் முளைக்கும் குடிசையை உடனே காலி செய்ய ஊர் கூடியது. கருவேல முட்களை ஊரே ஒன்று திரண்டு வெட்டியது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் இருந்தது. நீர்வழிச்சாலைகள் குறித்த அறிவு அனைவருக்கும் இருந்தது. கண்மாய்களும், ஊரணிகளும், ஆற்று படுகைகளும், நீர்விளையாட்டுகள் விளையாடும் இடங்களாக திகழ்ந்தன. நீர்நிலைகள் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக திகழ்ந்தன. நகர விரிவாக்கம் கிராமங்களை நகரங்களைப் போல் உருமாற்றின. விளை நிலங்கள், விலைநிலங்களாக மாறின. விவசாயம் சார்ந்த கூலிகள் வேலையை தேடி நகரங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இந்த இடம்பெயர்தலில் கிராமங்கள் தன் இயல்பு குணங்களில் இருந்து விலகி தன்னை இறுக்கி கொண்டது.அதேநேரத்தில் கிராமங்களில் நீர்நிலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. கோவில் சார்ந்த நிலங்களிலும் விவசாயப்பணி முடங்கிப்போனது. திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால் பொது பிரச்னைகளுக்கு, சமூகப் பணிகளுக்கு, கூடும் ஆட்களும் குறைந்து போனார்கள். பொது விஷயங்கள் குறித்து தட்டி கேட்க ஆட்கள் இல்லாததாலும், மனிதன் சுயநலமாக வாழ பழகி கொண்டதாலும் கரையோரங்களில் குடிசைகளும் வளர்ந்தன. ஒன்று இரண்டாகியது. கடைசியில் கண்மாயே காலி ஆனது.
மனிதனின் சுயநலம் : நகரமயமாதலில் அவசரத்தில் நகர்புறங்கள் அமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய கழிவுநீர் வடிகால்கள், மழை வெள்ள நீர் வடிகால்கள், திடக்கழிவு நீர் மேலாண்மை போன்ற அடிப்படை நகர்புற உட்கட்டமைப்புகள், மனிதனின் சுயநலத்தால் ஒழுங்கற்று அமைந்து போகின. இதன் விளைவு கழிவு நீரை நீர்நிலைகளில் கலந்து அசுத்தமாக்கினோம். குப்பைகளை கொட்டி மேடாக்கினோம். மழை நீர் செல்லும் வழிகளை எல்லாம் அடைத்த பின் மழைநீர் நகரத்தை சூழ்வது இயல்பு தானே! நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போவது யதார்த்தம் தானே! தவறுகளை தனிமனிதன் செய்து விட்டு அரசையும் இயற்கையையும் பழி போடுதல் நியாயமா? இத்தவறுகள் ஏற்படாமல் தடுப்பதே இன்றைய அவசியம். நீர்நிலைகளை காப்போம். மழையை கொண்டாடுவோம்!
என்ன செய்யலாம் :
வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைகள் அல்லது வடிகால் செல்லும் பாதையில் கழிவு நீர் கலப்பதை தவிர்ப்பது. நீர் நிலைகளில், வடிகால்வாய்களில் குப்பைகளை கொட்டுதலை நிறுத்துவது.குப்பைகளை தரம் பிரிக்க கற்று கொள்வது, மறுசுழற்சிக்கு பயன்படுத்துவது, உரங்கள் தயாரிப்பது குறித்த அறிவை வளர்த்து கொள்ளுதல், வீடுகள் தோறும் மழை நீர் சேமிப்பை முறைப்படுத்துதல், பராமரித்தல் என தனிமனித முயற்சிகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.வீட்டிற்கு அருகாமையில் உள்ள கண்மாய், ஊரணி போன்ற ஏதாவது ஒருநீர்நிலைப்பகுதியில் நீரை தேக்கி நிலத்தடி நீர் மட்டம் உயர செய்யலாம். கருவேல மரங்களை வெட்டலாம்.ஒரு கை கைதட்டினால் ஓசை உண்டாகாது. என்றாலும் முதலில் நம்மில் இருந்து மாற்றத்தை உருவாக்குவோம். வீட்டுக் கழிவு நீரை வாய்க்காலில் செலுத்துவதை நிறுத்துவதில் இருந்து தொடங்குவோம். பின் ஒன்று சேர்வோம்.
- க.சரவணன்தலைமையாசிரியர்மதுரை, 99441 44263

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement