Advertisement

96 வயதில் 352 பக்க புத்தகம் எழுதிய மதுரை வெங்கட்ரத்னம்

'வெங்கட்ரத்னம்' படைப்புலகிலும் ரத்தினமாய் மிளிர்கிறார். ஓராயிரம் நட்சத்திரங்கள் மின்மினிகளாய் ஒளிர்ந்தாலும் இளையோருக்கும், முதியோருக்கும் நம்பிக்கை தரும் அரிதான துருவநட்சத்திரம் இவர்.அப்படி என்ன சாதித்து விட்டார் என கேட்போரை வியக்க வைத்துவிடும் ஆற்றல் பெற்ற மனிதராய், மதுரையில் வலம் வருகிறார். வயது 96. வரலாற்று எழுத்தாளர். 94 வயதில் 730 பக்கங்களை கொண்ட 'உலகத்தின் தோற்றமும் வரலாறும்' என்ற முதல் புத்தகத்தை எழுதியுள்ளார். இது வெளியானதின் உற்சாகமும், உத்வேகமும் இப்போது 96 வது வயதில் 352 பக்கங்களை கொண்ட 'இந்தியாவின் தோற்றமும் வரலாறும்' என்ற அடுத்த புத்தகத்தை படைக்க வைத்துள்ளது.எலக்ட்ரிக்கல் நிறுவனம் நடத்தியும், அதில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்தும் காலத்தை நகர்த்திய இவர், 90 வயதிற்கு பின் எழுத்தாளராக வளர்ந்த கதை பற்றி சுவாரசியமாக பேசுகிறார்...மனைவி வசந்தசேனா. நான்கு மகன்கள், ஒரு மகள். சிம்மக்கல்லில் 'ஜெனரல் அப்ளையன்ஸ்' என்ற எலக்ட்ரிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தேன். தெரிந்த தொழில் எலக்ட்ரிக்ல். அந்த காலத்தில் பத்தாண்டு அனுபத்தின் அடிப்படையில் வழங்கப்படும் 'லைசன்ஸ் எலக்ட்ரிக்கல் என்ஜினியர்' என்ற பட்டம் பெற்றவன்.85 வயது வரை நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் நீங்கள் வீட்டில் ஓய்வு எடுங்கள் என பிள்ளைகள் அன்புக் கட்டளையிட்டனர். ஒரு நிமிடம் கூட சும்மா இருந்து பழக்கப்படாத எனக்கு ஏதாவது செய்யணும் என தோன்றியது. அப்போது எனது யோகா பயிற்சியாளர் டி.எஸ்.கிருஷ்ணா, ''வாழும் காலத்தில் பணம் எந்த வழியிலாவது சம்பாதிக்கலாம். ஆனால் பெயரை சம்பாதித்து வைக்க வேண்டும். அதற்காக ஏதாவது முயற்சி செய்'' என சொல்வார். அது என் மனதில் பேசிக்கொண்டே இருந்தது. அதன் எதிரொலியாக வரலாற்று புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். அதில் 'ஒல்கா முதல் கங்கை' வரை என்ற புத்தகம் தான் என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.ஒரு கட்டத்தில் நாமும் எழுதுவோமே என்ற எண்ணம் வந்தது. அப்போது எனக்கு வயது 89. எல்லோரும் கிண்டல் செய்தனர். ஆனால் எனது முயற்சிக்கு மதுரை எழுத்தாளர் கர்ணன் கொடுத்த ஊக்கம் தான் இன்று இரண்டு புத்தகங்களை எழுத வைத்துள்ளது. இரு புத்தகங்களையும் சென்னை கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. இப்போதும் 3வது புத்தகமாக 'மனிதனின் தோற்றமும் வரலாறும்'; 2 லட்சம் ஆண்டுகளில் மனித வரலாறு படங்களுடன் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இப்படி எழுதுவதற்கு இன்னொரு அனுபவம் எனக்கு கைகொடுக்கிறது. இளமையில்ஒவ்வொரு ஆண்டும் நான் வடமாநிலங் களுக்கு குறிப்பாக கைலாயமலை, குருஷேத்திரம், காசி, இமயமலை இப்படியான இடங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். இந்தியாவில்செல்லாத மாநிலங்கள் இல்லை.என்னைப் போல் படிப்பறிவு குறைவானவர்களுக்கும் வரலாறுகள் தெரியவேண்டும் என்ற எண்ணத்திலும், உண்மையான வரலாறுகள் உலகிற்கு தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதுகிறேன். வரலாறு தொடர்புடைய தகவல்கள் 4 வரிகள் இருந்தாலும் அதை ஆராய்ந்து படிப்பேன்.இப்போதும் யோகா செய்கிறேன். சாய்பாபா பக்தர். இரவு சாப்பிடுவதில்லை. நீராகாரம் மட்டும் தான். மதியம் சாப்பிடுவேன். இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே என்னில் உள்ளது, என்கிறார்.வாழ்த்த 96982 10717 ஹலோ சொல்லாலம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement