Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 35

“துன்பம் தங்களைத் துன்புறுத்தும் முன்
துன்பத்திற்கு துன்பம் கொடுத்து
வாழ்க்கையையே துன்பமாக்கிக் கொள்கின்றோம்”
வருங்காலத்தைப் பற்றிய அறிவை இறைவன் வேண்டுமென்றே தான் மக்களுக்கு தரவில்லை என்று நினைக்கின்றேன் ...அப்படி ஒரு நிலை நமக்கு இருக்குமானால் வருங்காலத்தில் வளமாக இருப்போம் என தெரியவருகையில் நாம் முயற்சியுறாது பொழுது போக்காக இருந்து விடுவோம் என்றும், வருங்கால துன்பத்தை பற்றி அறிந்து கொண்டால் நம்முடைய நிகழ்காலத்தில் நமக்கு கிடைத்த அற்புதமான வாழ்க்கையை வாழாமல் வருங்காலத்தை பற்றியே நினைத்து கவலைப்படுவோம் என்பது தான் காரணமாக இருக்கும்..
இன்றைய துன்பங்கள் யாருக்கும் துன்பங்களை அவ்வளவாக கொடுத்து விடுவதில்லை . மாறாக வரப்போகும் நாளின் துன்பங்கள் தாம் அவர்களை கொல்லாமல் கொன்று சித்திரவதை செய்யக்கூடியதாக இருக்கின்றது..
இன்றைய தினம் இறைவன் நமக்கு கொடுத்த மாபெரும் பொக்கிஷமுங்க...இதை பரிசாக நினைத்து நம்முடைய கடமைகளை ஒழுங்காக செய்து வந்தாலே எந்தவித எதிர்மறை சிந்தனைகளும் நம்மை அண்டாது .இந்த எதிர்மறை சிந்தனை அண்டாமல் என்ன செய்யலாம் என்றால் நாளைய தினத்தை பற்றி கவலைப்படுவதோ அல்லது வருந்தி நிற்கவோ செய்யாது நடந்து முடிந்ததை மகிழ்ச்சி கண்களுடனும் , நடக்கப் போவதை நம்பிக்கை கண்களுடணும் கடந்து செல்வதை பழகிக் கொள்ள வேண்டும்..
இப்படி எதை குறித்தும் கவலைப்படாது கடந்து செல்ல பழகி கொண்டால் மனநிம்மதி ஏற்படுகின்றது. மன நிம்மதி இருந்தால் நம் அன்றாட நிகழ்வுகள் உற்சாக துள்ளலுடன் நடக்குமுங்க...அப்புறம் நிறைய நபர்கள் சொல்ல கேட்டிருப்போம் தூக்கமே வருவதில்லை என்று அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தாங்க..
படுக்கையில் படுத்துக் கொண்டு நாம் நம் உடலிடம், உள்ளத்திடம் லவ்ஸ் அடிக்க வேண்டும்....ஆம் நாம் நம் உடலை உள்ளத்தை நேசிக்க வேண்டும்...நம் உடலிடம், உள்ளத்திடம் பேச வேண்டும். உன்னை நேசிக்கின்றேன்..இவ்வளவு நேரம் செமையா உழைத்தாய் உன் உழைப்பு பிடிச்சிருக்கு ...நீ உழைக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருந்தாய் தெரியுமா ...செம அழகு போ...நானே கண் வைத்து விட்டேன்...மீண்டும் நாளை உழைக்க புத்துணர்ச்சி வேண்டுமல்லவா செல்லம் கொஞ்சம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி பாருங்க எப்படி தூக்கம் வருகின்றது என்று...
“உற்சாகத்தால் உந்தப்பட்டு
உழைக்கையில்
உயர்வடைகின்றான் உத்தமன்.”
ஆம் உற்சாகத்தால் உந்தப்பட்டு நாம் செயலாற்றும் பொழுது நாம் உலகத்தையே மறந்தவர்களாகின்றோம் ஆதலால் நமக்கு கிடைத்த வேலையை உற்சாகத்தோடு செய்வோம்.
நாம் விரும்பும் செயலை எவ்வளவு உற்சாகத்தோடு செய்கின்றோமோ அத்தனை உற்சாகத்துடன் நாம் விரும்பாத பணிகளை செய்ய நம்மையே நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்..விரும்பாத செயலை எப்படிங்க உற்சாகத்தோடு செய்வது என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம் ..கஷ்டமா இருக்குமே என்கின்ற எண்ணமும் வரலாம் ...இப்படி நினைப்பவர்கள் விரும்பி செய்வது போல் பாவனை செய்தாலே போதும் நாளடைவில் உற்சாகம் நம்மை தொற்றிக் கொள்ளும்...
வெற்றி தோல்வி ஆகியவற்றின் மறுபெயர்கள் என்னவென்றால் உற்சாகத்துடன் முழுமனம் வைத்து வேலை செய்வது, உற்சாகமின்றி அரை மனதுடன் வேலை செய்வது என்பது தான் ..உற்சாகமானது நாம் விரும்பும் வேலையை செய்து முடிக்குமாறு நம்முடைய ஒவ்வொரு நரம்பையும் தட்டி எழுப்புகின்றது..
சுறுசுறுப்பாக வேலை செய்வதென்றால் களைப்போடு களைப்பாக வேலை செய்வது என்று பொருள் இல்லை. களைப்பு நமக்கு வருமென்றால் நாம் கவலையை பற்றி பிடித்துக் கொண்டு வேலை செய்கின்றோம் என்று அர்த்தமாகிறது. நாம் பிடித்த வேலையை செய்ய முதலில் நாம் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... நல்ல தூக்கம் இருக்க வேண்டும்..
நான் பிடித்த வேலை செய்ய இயன்றதற்கு காரணம் நான் விரும்பும் பொழுது தூங்கி கொள்ள பழக்கப்படுத்திக் கொண்டது தான் என்று தாமஸ் ஆல்வா எடிசன் கூறுகின்றார். அவ்விதமே மகாத்மா காந்தியடிகளும் வெற்றி பெற்ற பலரும் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் தான்.
சொல்லப்போனால் ஒருவர் தான் செய்யும் வேலையில் அதிகம் களைப்படைவதில்லை மாறாக செய்யாத வேலையில் தான் அதிகம் களைப்படைகின்றார்கள். முடிக்க வேண்டிய வேலை இருந்தால் கூட ஐயோ இம்புட்டு வேலை இருக்கே என நாம் நினைக்க ஆரம்பித்த அந்த நொடியே நம்மை கவலை வந்து பற்றிக் கொள்கின்றது. கவலை வந்தவுடனே களைப்பும் வந்து விடுகிறது, அப்படிப்பட்ட நேரங்களில் அமைதியாக இருந்து விடுதல் நலம்..
எல்லா வேலைகளையும் தங்களின் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு தங்களையே தாங்கள் துன்பத்தில் ஆழ்த்திக் கொள்ள கூடாது..வேலைகளை குவிய செய்து அதன் பின் பதற்றத்துடன் செய்து எல்லாவற்றையும் குழப்பப்படுத்திக் கொள்வதை தவிர்த்தல் நலம்..
“வெற்றி இன்பத்தின் கனியல்ல
துன்பத்தின் இன்ப கனி”
வெற்றி பெறுபவர்கள் யாராகிலும் வெற்றி கிடைக்கும் வரை ஓயாது உழைப்பவர்கள் தான் ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு அவ்விதம் உழைப்பதற்கான பொறுமை தான் இல்லாமல் போகின்றது.. வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஆனால் வெற்றி பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு..
நாம் வாழும் வாழ்க்கை வேடிக்கை பொருள் இல்லை...உயிர் தொடர்பானது நம்முடைய வாழ்க்கையே போராடினால் தான் வெற்றியடையும் என்கின்ற நெருக்கடியில் எங்கிருந்து வருகின்றது என்று தெரியாமல் நம் ஆற்றல் வெளிப்படுகின்றது என்றால் விடாமுயற்சி தான் காரணம்..முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்கின்ற வைராக்கியமும் நம்மோடு இணையும் பொழுது வெற்றி நிச்சயம்..
விடிவதற்கு முன் ஒரே மையிருட்டாக இருக்கிறதோ அது போன்று நமக்கு வெற்றி ஏற்படுவதற்கு முன் நாம் அளவற்ற துன்பத்திற்கும் சோதனைக்கும் ஆளாவோம். மேற்கொண்ட செயலை விட்டுவிடலாமா என்று கூட எண்ணம் தோன்றும் இத்தகைய நேரத்தில் தான் நாம் மிகவும் உறுதியுடன் நின்று முன்பை விட வேகத்துடன் செயலாற்ற வேண்டும். இறுதி மூச்சு இருக்கும் வரை வாழ்வதற்கான வழி இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்ற நம்பிக்கையில் விடாமுயற்சியுடன் தொடர் நடைபோடுவோம்...
அன்புடன் ரோஸ்லின்
aaroselinegmail.com
Ph: 9842073219

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement